பாரதி தோன்றிய காலம் பாரதி குறித்து க.நா.சு.
பாரதி எழுதியதை விடவும் பாரதியின் படைப்புகளைப் பற்றி எழுதப்பட்ட பிரதிகள்தாம் அதிகம். பாரதிக்குப் பிறகு எழுத வந்தவர்கள் அவரது தாக்கம் இல்லாமல் இயங்குவது அசாத்தியமான ஒன்று. ஏதோவொரு வகையில் பாரதி தொடர்ந்து நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருக்கிறார். அவ்வகையில் க.நா. சுப்ரமண்யம், பாரதி பற்றி எழுதிய கட்டுரைகளை அவருடைய தீவிர வாசகர் துரை. லட்சுமிபதி தொகுத்து, ‘பாரதி தோன்றிய காலம்’ நூலாக வெளியிட்டிருக்கிறார்.
இந்நூல் உருவாக்கத்திற்குப் பின்புலமாக எழுத்தாளர் சுந்தர ராமசாமி இருந்திருக்கிறார். சுந்தர ராமசாமி, க.நா.சு. பற்றி எழுதிய நினைவோடையில், “பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை, சொன்னதும் இல்லை. அதுபோல் பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை, எழுதினதும் இல்லை” (57:2003) என்று கூறியிருக்கிறார். சு.ரா.வின் இக்கருத்தை க.நா.சு.வை மதிப்பிட்ட பலரும் அப்படியே எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சு.ரா.வின் இக்கூற்றே துரை. லட்சுமிபதிக்கு இப்படியொரு தொகை நூலை உருவாக்கக் காரணமாக இருந்திருக்கிறது.