அல்லாவே கருணை காட்டும்
ஓவியங்கள்: பி.ஆர். ராஜன்
ரெக்ஸ் சினிமாவை விட்டு வெளியே வந்தபோது பிரம் மாண்டமான கையொன்று என் பின்கழுத்தை நெருக்கிப் பிடித்தது. உடனேயே என் உள்ளுணர்வுக்கு அது யார் என்று தெரிந்துவிட்டது. ‘அல்லாவின் நாமத்தால் என்னை மன்னித்து விடுங்கள்,’ நான் மன்றாடினேன். உசாமா சித்தப்பாவின் அகலமான கை என் கன்னத்தில் பாரமாக விழுந்து என்னைத் தடுமாறச் செய்தது. ‘வாயைப் பொத்து, வேசைக்குப் பிறந்தவனே,’ அவர் கத்தினார். என்னுடன் வந்த இரண்டு நண்பர்களும் வேகமாகச் சனத்துக்குள் மறைவதைக் கண்ணீர் ஒழுகும் கண்களால் பார்த்தேன்.
சித்தப்பாவின் நீண்ட விரல்கள் என் கழுத்துத் சதையையும் எலும்பையும் சேர்த்து இறுக்கின. ‘அல்லாவின் பெயரால் என்னை விட்டுவிடுங்கள், நான் கெஞ்சிக் கேட்கிறேன், இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்,’ என்று விக்கல்களுக்கிடையில் ஒரு மாதிரிச் சொன்னேன். தாங்க முடியாத வலி தலையில் தொடங்கியது. சித்தப்பாவின் கிடுக்கிப் பிடியில் என் கால்கள் வலுவிழந்தன. என்னுடைய வலியை உணர்ந்ததாலோ என்னவோ கழுத்துப் பிடியை விட்டுவிட்டு என் முழங்கையைப் பற்றி இழுத்துப்போகத் தொடங்கினார்.
அவருடைய வேகமான நடைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இழுபட்டு அவர் செருப்பின் மீது என் பாதங்கள் பட்டன. அவர் செருப்பில் கால் இடறும் ஒவ்வொரு முறையும் எனக்கு அடி விழுந்தது. ஆடு மேய்ப்பவர்கள், ஆடுகளைப் புழுதித் தெருவில் பிடித்துச் செல்வதுபோலச் சித்தப்பா என்னை வேகமாக இழுத்துப்போனார்.
“ஐயா, என்னை விடச் சொல்லுங்கள், ஐயா, என்னை விடச் சொல்லுங்கள்,” என்று தெருவில் போனவர்களிடம் நான் கெஞ்சியபோது அவர்கள் அதைச் சட்டை செய்யாமல் வினோதமாகப் பார்த்தபடி நகர்ந்தனர். என்னுடைய சித்தப்பாவின் வாட்டசாட்டமான உடல்வாகு வேறு ஒருவர் எங்கள் விசயத்தில் தலையிடுவதைத் தடுத்தது. அங்கேயுள்ள பழக்கடைக்காரருக்கும் உணவு விற்பனை செய்பவர்களுக்கும் ரெக்ஸ் சினிமா வீதியில் ஒரு பையனை இழுத்துப் போகும் காட்சி புதியதல்ல. ஏனென்றால் ‘சொங்கோ’ தெருவின் உத்தியோகப்பூர்வ நல்பழக்க அதிகாரி என் சித்தப்பாதான். பெற்றோர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளைத் தண்டிக்க அவரைத்தான் அழைப்பார்கள். பிஞ்சுத் தோலில் அழியாத வடு உண்டாக்கும் தன்னுடைய புகழ்பெற்ற சவுக்கை விசுக்கியபடி அவர் வருவார். தலைமையாசிரியராகிய உசாமா சித்தப்பா இந்தச் சேவையை இலவசமாக வழங்கினார். தன் மக்களைச் சுரண்டும் கொடூரர்களைத் தண்டிக்கும் முகமூடி அணிந்த மாட்டுச் சவுக்கு வீரனான ‘சோர்ரோ’ என்ற பட்டப் பெயர் அவருக்கு அப்படித்தான் கிடைத்தது. சித்தப்பாவுக்குத் தனக்கு அப்படி ஒரு பட்டப் பெயர் இருப்பது தெரியும். அது குழந்தைகளிடம் ஏற்படுத்தும் அச்ச உணர்வை அவர் ரசித்தார். அவர் உணர்ச்சிவயப்பட்டு அற்பத்தனமான காரியம் செய்யத் தயங்க மாட்டார். அரிதாகச் சிரிப்பார். பலர் அவருடைய நடத்தை படிப்பாலும் புத்திக்கூர்மையாலும் வந்தது என நினைத்தார்கள். பன்னிரண்டு வயதான நான் அவரை வித்தியாசமாகப் பார்த்தேன். சித்தி அசிபி, அவரை அசாதாரணமாக அடிமைப்படுத்தியவர். நான் அங்கே அவர்கள் வீட்டில் அராபிக் பாடம் படிக்கும்போது நடக்கும் வாக்குவாதத்தில் அஞ்சா நெஞ்சரான சித்தப்பா அடிமைபோலச் சுருண்டுபோவதைக் கண்டிருக்கிறேன். அவர் மனைவிக்கு அடங்கியொடுங்கும் தன்மைதான், இப்படி வன்முறைகள் வெடிக்கவைக்கும் ஒருவராக அவரை மாற்றியிருக்கிறது என்று சிறுவனான எனக்கே தெரிந்திருந்தது. எனக்கு அதில் சந்தேகமே இல்லை.
“நீ வாயை மூடாவிட்டால் வீடு சென்றதும் உன் தண்டனை மூன்று மடங்காகக் கூடும்” என்று சொல்லியபடியே பொரித்த கிழங்கு விற்பவர்கள், ரொட்டிக்காரர்கள் விற்பனையை முடித்துவிட்டுப் பாயை இழுத்துச் சுருட்டும் மருந்து விற்பனைக்காரர்கள் மத்தியில் என்னை இழுத்துப்போனார்.
சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒளித்து விளையாடும் எரிபொருள் விற்பனை நிலையம் வழியாக நாங்கள் நடந்தோம். ரெக்ஸ் சினிமாவில் 8.30 மணி படம் பார்க்கக் குவியும் உற்சாகமான நகரத்து மக்களையும் தாண்டினோம். வாசலில் கூடியிருக்கும் பெரிய மனிதர்களிடம் நான் கெஞ்சுவதைத் தவிர்ப்பதற்காகச் சித்தப்பா பாதையை இடது பக்கமாக மாற்றினார். அது பாதி வெளிச்சம் உள்ள சந்துகள் வழியாக, குடியிருப்பு வளாகத்தின் பின்பக்கம் எங்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தது.
சித்தப்பா மேலும் வேகமாக நடந்தார். அவருடைய வியர்வை என்மேல் தெறித்து என் கண்களை எரியவைத்தது. பாதி வழியில் எங்கள் தெருவில் வசிக்கும் சீனத்தா ஆச்சியைக் கண்டோம். அவர் எங்களைப் பார்க்க முன்னர் சித்தப்பா என் கைப்பிடியைத் தளர்த்தினார். என்னுடைய பெரும் பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு இதுதான் அருமையான வாய்ப்பு என்று எனக்குப்பட்டது. பெருங்குரல் எடுத்து அலறத் தொடங்கிய என்னை நிறுத்துவதற்காகச் சித்தப்பா மணிக்கட்டை நசுக்கினார். ஆனால் அந்த வலி என் அலறலை இன்னும் கூட்டியது. ‘ஓ அல்லா, அல்லா’ என ஓலமிட்டேன்.
“நல்ல மாலை,” என்றார் சித்தப்பா. சீனத்தா ஆச்சியும் “நல்ல மாலை” என்றார். “இந்தக் காலப் பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தவர்கள். அவர்களைப் பொறுமையாகக் கையாள வேண்டும்,” என்று அவர் தன் நடுங்கிய குரலில் சொன்னார். சித்தப்பா அதற்குப் பதில் சொல்லத் தொடங்கினார். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட எனக்கு விருப்பமில்லை. அவர் தன் வாக்கியத்தை முடிக்க முன்னர் சந்துக்குள் நுழைந்துவிட்டேன். அந்தக் கிழவிக்கு முன்னால் சித்தப்பா என்னைத் துரத்த மாட்டார் என்பது எனக்குத் தெரியும். நல்ல ஓட்டக்காரனின் உத்வேகத்துடன் என்னுடைய செருப்புகள் பட்பட்டென்று என் இருதயத்துக்குப் போட்டியாக அடிக்க, வேகமாக ஓடினேன். குடியிருப்பை அணுகியவுடன் எங்கள் வீட்டுக்கு நேராகப் போனேன். அம்மாவும் அவருடைய ஆருயிர்ச் சிநேகிதியும் நைலோன் பாய்களில் உட்கார்ந்திருந்தனர். என்னுடைய அப்பா அடிக்கடி பயணம் செய்வதாலும், மமா சாக்கியாவின் கணவர் அவரைக் கவனிக்காததாலும், இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். ஏதாவது விசயம் இருந்தால் பேசுவார்கள். இல்லாவிட்டால் மௌனமாக அருகருகே அமர்ந்திருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் ஏதோ பிரார்த்தனைபோல இரவு நட்சத்திரங்களை உற்றுநோக்குவார்கள். அம்மா தன் கணவர் பக்கத்தில் இருந்தால் எத்தனை சுகம் என எண்ணியிருக்கலாம். மமா சாக்கியா தனக்கு அல்லா ஒரு பிள்ளையைக் கொடுத்திருந்தால் நல்லாயிருக்கும் என நினைத்திருக்கலாம். இறுதியில் ஒருவர் தூங்க ஆரம்பித்ததும், ஒருவருக்கு ஒருவர் மன்னிப்புச் சொல்லியபடி தங்கள் தங்கள் படுக்கைகளுக்குச் செல்வார்கள். நான் அம்மாவின் கையைப் பிடித்தபடி அவர் பக்கத்தில் அமர்ந்தேன். “ஏதோ சரியில்லையே, என்ன நடந்தது?” என்று அம்மா கேட்டார். “ஒன்றுமில்லை, நான் வெளியே விளையாடினேன்,” என்றேன். அம்மாவுக்கு நான் கள்ளமாகச் சிநேகிதர்களுடன் சினிமா பார்க்கச் சென்றது தெரியாது. அம்மா என்னுடைய தலைமயிரை ஆதரவாக அளைந்தார். என்னுடைய இருதயம் தொடர்ந்து வேகமாக அடித்தாலும் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன். சித்தப்பாவை மடையனாக்கிவிட்டுத் தப்பியோடியதற்கு அவர் பொருத்தமாகப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். அன்று மாலையிலிருந்து ஏதாவது சின்னத் தப்பு செய்தாலும் எனக்குப் பெரிய தண்டனை கிடைக்கும். சில நிமிடங்களுக்குப் பிறகு, உயரத்தில் கட்டப்பட்டிருந்த சித்தப்பா வீட்டுக் கொசுவலைக் கதவு அடித்து மூடப்படும் சத்தம் கேட்டது. குடியிருப்பிலிருந்த அத்தனை சிறுவருக்கும் அது எலிக்குக் கேட்ட பூனையின் மியாவ் சத்தம்தான். சித்தப்பா வெளியே புறப்படும் சத்தம் என்றால் நாங்கள் உயிரைக் காப்பாற்ற ஓட வேண்டும். அவர் வீட்டுக்குள்ளே நுழையும் சத்தம் என்றால் நாங்கள் ஆசை தீர வெளியே விளையாடலாம். தொடர்ந்து ஒரு வாரமாக நான் மிக ஒழுக்கமாக, அப்பழுக்கில்லாத நடத்தையுடன் இருந்தேன். இரவு உணவு முடிந்ததும் சித்தப்பா வீட்டுக்குச் சென்று அவருக்கும் சித்தி அசிபிக்கும் நான் அன்று காலை வாங்கி வந்த ரொட்டி மென்மையாகவும் புதியதாகவும் இருந்ததா என்பதைக் கேட்டு உறுதிசெய்தேன். இரண்டு மாதம் கழித்து, அதிர்ஷ்டமில்லாத ஓர் இரவு நான் வாங்கிய ரொட்டி சித்தப்பாவின் அதியுயர்ந்த ருசிக்குக் கிட்டவும் வரவில்லை. அவர் ரொட்டியைப் பிதுக்கிக் காற்றை வெளியே விட்டு மணந்து பார்த்தபின் அதை என் முகத்தை நோக்கி எறிந்தார். “இது ஒரு கிழமைக்கு முன்னர் தீயில் சுடப்பட்டது,” என்று கத்தினார். “இது பழசாய்ப்போய் கட்டைபோல இருக்கிறது. காசு கொடுக்கும் முன்னர் ரொட்டியைச் சோதித்துப் பார்க்கவில்லையா?” உடனே போய் ரொட்டியைக் கடைக்காரரிடம் கொடுத்துக் காசைப் பெற்று, அவருக்குப் பிரியமான லோயர் ஹவுசில் புது ரொட்டி வாங்கிவரச் சொல்லி உத்தரவிட்டார். நான் சரியான இடத்தில்தான் ரொட்டியை வாங்கினேன் என்று சொல்ல வாயைத் திறந்தேன், ஆனால் அவர் கோபம் இன்னும் கூடிவிடும் என்ற பயத்தில் உடனேயே மூடிவிட்டேன். நிலத்தில் கிடந்த ரொட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினேன்.
செரிக்கி வீதியை நான் அடைந்தபோது ரொட்டிக் கடைக்கார மனுஷி ரொட்டியைத் தான் திரும்ப எடுக்கப் போவதில்லை, காசும் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னார். “நான் அதை திருப்பி எடுப்பதற்கு என்ன முட்டாளா?” என்றார். அவர் ரொட்டியை என்னை நோக்கி எறிய, அது நிலத்தைத் தொட முன்னர் எட்டிப் பிடித்தேன். சித்தப்பாவின் பிசைதலும், ரொட்டிக்கடை மனுஷியின் எறிதலும் ரொட்டியைச் சிதிலமாக்கியது. நான் வெறுங்கையோடு போனால் எனக்குக் கிடைக்கும் தண்டனையை நினைத்து அழுகை வந்தது. கால்களால் தரையை உதைத்தேன்.
முதலில் ரொட்டிக்கடை மனுசி என்னைக் கண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நான் அங்கே அழுதுகொண்டு நிற்பது அவர் வியாபாரத்துக்கு நல்லதல்ல என்பதைக் கண்டுகொண்டார். நான் வாடிக்கையாளர்களை விரட்டியடித்துக்கொண்டிருந்தேன். “இதோ பார், உன் பேயோட்டும் வேலை எல்லாம் இங்கே வேண்டாம்,” என்று கத்தினார். என்னை நோக்கித் தன்னுடைய விரல்களை நீட்டி, “உங்கள் இனமே இப்படித்தான். இந்த இடத்தை விட்டு உடனே போ. உன்னை எச்சரிக்கிறேன். இன்னொருமுறை சொல்கிறேன் கேள். நான் காசைத் திருப்பி இன்றைக்குத் தர மாட்டேன். நாளைக்குத் தர மாட்டேன். நாளை மறுநாளும் அப்படியே.” என்னைத் தன் மேசையிலிருந்து தூரவாகத் தள்ளிவிட்டார். நான் தடுமாறியபோது தினப் பத்திரிகையில் சுற்றிவைத்திருந்த ரொட்டி சத்தமில்லாமல் புழுதித் தரையில் விழுந்தது. நான் கத்தியபடி அதை விரைந்து எடுத்த பின்னர் இன்னும் பலமாக அழ ஆரம்பித்தேன். சகலதும் என்னை மீறிவிட்டது எனக்குத் தெரிந்தது.
அதிர்ஷ்டவசமாக என்னுடைய நாடகம் அவ்வழியில் போன சிலர் பார்வையில் பட்டு அவர்கள் என்ன சங்கதி என்று விசாரித்தார்கள். நான் என் பங்குக் கதையை ஓர் உயரமான தசை முறுகிய மனிதரிடம் சொன்னேன். அவருடைய வலுவான தோற்றம் என் சித்தப்பாவை நினைவூட்டியது. ஆனால் இவர் கருணையான மனிதராகத் தெரிந்தார். என்னுடைய கதையை அவர் கவனத்துடன் கேட்ட அதே சமயம் ரொட்டிக்கடை மனுசி கோபத்தில் வசைகளை முணுமுணுத்தார். நான் கதையை முடித்தவுடன் ரொட்டிக்கடை மனுசி தொடங்கினார். “ஐயா சொல்லுங்கள். இந்த மாதிரி அபத்தம் நடக்க நீங்கள் அனுமதிப்பீர்களா? ஒருவர் உங்களிடம் ரொட்டி வாங்கி அதைத் தொட்டு அழுக்காக்கிவிட்டுத் திருப்பித் தந்தால் பெற்றுக்கொள்வீர்களா? இந்த ரொட்டியை நான் மறுபடியும் எடுத்தால் இதை என்னிடம் யார் வாங்குவார்கள். இதைப் பாருங்கள்.” அந்த மனிதர் பதில் சொல்லவில்லை. அவர் யாருக்கு ஆதரவு தர வேண்டும் என்பதில் குழப்பம் வந்துவிட்டது. “இந்தப் பையன் ரத்தமாக அழுதாலும் நான் ரொட்டியைத் திருப்பி எடுக்க மாட்டேன். உன்னுடைய நாடகத்தை வேறு எங்காவது காட்டு. ஓடு, என்னுடைய மேசைக்கு கிட்டவாக நிற்காதே.”
நான் தொடர்ந்து அழுதுகொண்டு நிற்க மேலும் சிலர் கடைக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் அணிந்திருந்த வெள்ளை அங்கி, நீண்ட ஆட்டுத் தாடி, மெலிந்த உயரமான தோற்றம் அவர் கேயோ முஸ்லிம் என்று என்னை ஊகிக்கவைத்தது. வேறு இரண்டு நடுத்தர வயதுப் பெண்களும் வந்தார்கள். அவர்களிடமிருந்து வீசிய மணம் அவர்களை மீன் விற்பவர்கள் எனக் காட்டியது. “கேளுங்கள், அவன் சிறு பையன். அவனை இந்த வேலைக்கு அனுப்பியவர்கள்தான் பிழை விட்டிருக்கிறார்கள். அவன் உங்கள் மகனாயிருந்தால் இந்த நேரத்தில் அவனை வெளியே அனுப்புவீர்களா? அவன்மேல் இரக்கம் காட்டுங்கள்,” என்றார் கேயோக்காரர். “ஐயா கேளுங்கள். நான் உங்களை மதிக்கிறேன். உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். என்னிடம் மன்றாடினாலும், கடவுள் வந்தாலும்கூட நான் ரொட்டியைத் திருப்பி எடுக்க மாட்டேன்.”
இதைக் கேட்டதும் என்னிடம் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் உறைந்துபோனது. சிறிது நேரம் கழிந்ததும் கேயோ மனிதர் என்னிடம் உடைந்த ஹௌசா மொழியில் எவ்வளவு காசு என்று கேட்டார். நான் சிறு பொய் விக்கலுடன் “5 செடிக்கள்” என்றேன். அவர் அங்கியின் பக்கவாட்டுப் பையுக்குள் கையை நுழைத்து ஒரு புதிய 5 செடிக் காசுத்தாளை எடுத்து என் கையில் கொடுத்து “விசயம் முடிந்தது” என்றார். ரொட்டியை என்னிடமிருந்து பெற்றுக் கடைக்கார மனுசியின் மேசையில் வைத்தார். அவர் உடனேயே அதை எடுத்துக் குப்பைத் தொட்டியினுள் வீசிவிட்டு, “உன்னுடைய துரதிர்ஷ்டத்தை என்னிடம் விட்டுப் போகாதே,” எனக் கத்தினார். அவருடைய அவமதிப்பு முஸ்லிம்களுக்கு எதிரானது. அது எனக்கு மாத்திரமில்லை, அந்த நல்ல கேயோ மனிதருக்கும்தான். அந்த மனுசி எங்களைச் சண்டைக்கு அழைப்பதுபோல ஒரு காலில் இருந்து மற்றக் காலுக்குத் தன் பாரத்தை மாற்றினார். அப்படியொரு சண்டைக்கு நான் தயாரில்லை. எனக்குக் காசு கிடைத்துவிட்டது; அதுதான் முக்கியம். நான் வீடு வரும்வரைக்கும் நிற்காமல் ஓடினேன். அந்த அவசரத்தில் கேயோ மனிதருக்கு நன்றிகூற மறந்துவிட்டேன்.
நான் சித்தப்பா வீட்டுக்குத் திரும்பியபோது அவர் மத நூல் ஒன்றில் மூழ்கியிருந்தார். அநேகப் பிரதேசங்களிலிருந்து பலவிதமான அறிஞர்கள் பைபிளில் விடுபட்டிருந்த முக்கியமான தகவல்களைச் சித்தப்பாவுடன் விவாதிப்பதற்காக வந்திருந்தனர். ரொட்டிக் கடையில் நடந்ததைச் சொல்வதற்காகச் சித்தப்பா தலையை நிமிர்த்தும் தருணத்திற்காகக் காத்திருந்தேன். ஒரு நிமிடம் மௌனத்தில் கடந்தது. கண்களைப் புத்தகத்திலிருந்து அகற்றாமல் திடீரென்று “எங்கே ரொட்டி,” என்று கத்தினார். “நான் பணத்தை மீண்டும் பெற்ற சமயம் எல்லாக் கடைக்காரர்களும் கடைகளை மூடிவிட்டுப் போய்விட்டார்கள்,” வாய் குழறச் சொன்னேன். “அப்ப இந்தப் பெரிய குமாசி நகரில் ரொட்டி இல்லை என்று நீ சொல்கிறாய்,” என்னை நிமிர்ந்து பார்த்தபடி சத்தமிட்டார். “நேரம் கடந்து போனபடியால் ஒரு ரொட்டிக்கடைக்காரரும் அகப்படவில்லை. ஒரு கருணையான வழிப்போக்கர் உதவியால் மட்டுமே என்னால் காசைத் திரும்ப பெற முடிந்தது,” என்று சொல்வதற்கு முயன்றேன்.
ஆனால் நான் வாய் திறக்க முன்னர் கொடூரமான ஓர் அடி வலது கன்னத்தில் என் பற்களை அசைத்தபடி விழுந்தது. என்னுடைய நாக்கால் ரத்தத்தை ருசிக்க முடிந்தது. கால்கள் அப்படியே செயலிழந்தன. பக்கத்தில் கிடந்த சாய்கதிரை மரக் கைப்பிடியில் என் தலை அடிபட்டது. சித்தி அசிபி எனக்காகக் கதைக்கவோ பரிதாபப்படவோ இல்லை. அவர் குழந்தையை மடியில் கிடத்தி அதற்குப் பாலூட்டினார். என் தலைச்சுற்றலைப் பொருட்படுத்தாமல் எப்படியோ எழும்பி அடுத்த அடி கிடைக்க முன்னர் அறையை விட்டு வெளியே பாய்ந்து கேட் வழியாக ரோட்டுப் பக்கம் ஓடினேன். சிறுவர்கள் பலர் மாலை விளையாட்டுகள் விளையாடிக்கொண்டிருந்தனர். என்னுடைய வாயிலும் முகத்திலும் உணர்ந்த வலியை மறக்க முயன்றேன். சந்துகளில் இப்போது சனம் இல்லை. சிறிது தூரம் அந்த வழியாகச் சென்ற பிறகு அச்சம் வரக் கொஞ்சம் பின்வாங்கினேன். ஒரு வாரத்துக்கு முன்னர் வதந்தி ஒன்று உலவியது நினைவில் வந்தது. சிறுவர்களைப் பிடித்து நைஜீரியா வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். அவர்களைப் பலிகொடுத்து வியாபாரிகள் உடனுக்குடன் பெரும் செல்வந்தர் ஆகிவிடுகிறார்கள். அது மாத்திரமல்ல, அங்கே சந்து முடிவில் ஆகாயத்தைப் பார்த்தபடி தலையை உயர்த்தி நடக்கும் டான் சமாடோ பைத்தியக்காரன், தடித்த அட்டைகளால் உருவாக்கிய ஒரு குடிசையில் வசிக்கிறான்.
குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த என் தோழர்கள் என்னையும் அவர்களுடைய அன்றைய கடைசி விளையாட்டில் சேரும்படி கெஞ்சினார்கள். நான் அவர்களைப் பொருட்படுத்தாமல் காக்காசாடி இருக்கும் பகுதிக்கு ஓடினேன். அங்கே என் பாட்டி இருக்கிறார். அவர் ஒருவர்தான் சித்தப்பாவின் சவுக்கிலிருந்து அன்றிரவு என்னைக் காப்பாற்றக்கூடியவர். என்னுடைய அம்மாவுக்குச் சித்தப்பாவை மீறிய அதிகாரம் கிடையாது. என்னுடைய அப்பா இல்லாத காரணத்தால் உசாமா சித்தப்பா அந்த அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.
என்னுடைய கதையைக் கேட்ட பின்னர் காக்காசாடி என்னிடம் சொன்னார், “நீ இங்கேயே இரு. நான் போய் அவருடன் பேசுகிறேன்.” காக்காசாடிக்கு, எனக்கும் சித்தப்பா அவரது மகன் ஹவிசுக்கும் கொடுக்கும் தண்டனை அதிகம் என்று தெரியும். ஆனால் அவரும் என் அப்பாபோல அடிக்கடி வெளியூர்ச் சந்தைகளுக்குப் போய்விடுவார்.
காக்காசாடி திரும்பிவந்து சொன்னார் “இந்த முறை உன்னை மன்னித்துவிடும்படி உன் சித்தப்பாவுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் நாளை காலைமுதல் வேலையாக நேரே லோயர் ஹவுசுக்கு போய் அவருக்கு ஒரு புதிய ரொட்டி வாங்கிக்கொடு, சரியா?” சரி என்று தலையாட்டினேன். “இப்ப உன் அம்மாவிடம் ஓடு. அவர் உனக்காகக் காத்திருக்கிறார்.”
வழக்கம்போல அம்மா பாயில் கால்களை நீட்டிக்கொண்டு சாக்கியாவுக்கு முன் உட்கார்ந்திருந்தார். எங்கள் தாழ்வாரத்தில் இருந்து பார்த்தால் முழுக் குடியிருப்பும் தெரியும். அம்மா அங்கேயிருந்தபடி அன்று மாலை நடந்த சம்பவம் முழுவதையும் பார்த்திருப்பார் என்பது நிச்சயம். எனக்கு விழுந்த அடியின் சத்தமும், சாய்கதிரையில் அடிபட்டு விழுந்த சத்தமும் அவருக்குக் கேட்டிருக்கும். என்னுடைய ஊகம் சரிதான். அம்மா சடுதியாக எழுந்து, சாக்கியாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு என்னை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார். என் முகத்தைப் பார்த்ததும் அம்மாவின் கண்களில் நீர் பெருகியது. ஒரு வார்த்தையும் பேசாமல் நோவுக் களிம்பை எடுத்து என் சித்தப்பாவின் விரல் அடையாளம் பட்ட என் கன்னத்தில் தடவினார். என்னுடைய நாக்கினால் ஒரு வட்டம் என் பற்களைச் சோதித்துப் பார்த்தேன். இன்னும் ரத்தத்தின் வாசனை தெரிந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஒரு பல்லும் உடைந்திருக்கவில்லை. “என்னை மன்னித்துவிடு குஞ்சு” என்று அம்மா ஏதோ தான்தான் பிழை செய்ததுபோலப் பேசினார்.
அடுத்தநாள் காலை சூரியனின் முதல் கிரணங்கள் வீட்டுக்குள் நுழையும்வரை குர்ஆனை ஓதினேன். ஆறு மணியானதும் லோயர் ஹவுசுக்குச் சித்தப்பாவின் ரொட்டியை வாங்குவதற்காகச் சென்றேன்.
அடுத்து வந்த வாரம் முழுவதும் ஒரே பதற்றம்தான். என்னைக் காப்பாற்றும் வல்லமை இல்லாத அம்மா, எப்பொழுது சித்தப்பா வீட்டுக் கதவு அடித்து மூடும் சத்தம் கேட்டாலும் அவரைப் பற்றி வசை பாடத் தொடங்கினார். இரண்டு மூன்று நாட்கள் அவரைப் பார்த்து அம்மா வணக்கம் சொல்லவில்லை. பின்னர் அவருடைய உதாசீனமும் சண்டைக் குணமும் என் நிலையை மேலும் மோசமாக்கும் எனப் பயந்தார். வேண்டுமென்னும்போது கொஞ்சம் சிநேகபாவத்தைக் காட்ட முயன்றார். அத்துடன் அவரை நேருக்குநேர் சந்திக்காமலும் பார்த்துக்கொண்டார். ஒருநாள் அவர் சாக்கியாவுக்கு இப்படிச் சொன்னது என் காதுகளில் விழுந்தது. “இன்னொருவரின் பிள்ளைகளை அவர் இப்படி நடத்துவதை என் இருதயம் எப்படி தாங்கக்கூடும். அல்லாவே, காஜி தன் சகோதரனிடம் இதுபற்றிப் பேசாவிட்டால் நானே அந்த உதவாத மனிதரிடம் பேசுவேன். அவர் என் மகன்மேல் கைவைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அவர் என்மேலும் கைவைக்க வேண்டி வரும்.” அந்த வாரம் அம்மாவுக்கும் சித்தி அசிபிக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது. அசிபிக்கு எப்படியோ அம்மாவின் வசவுகள்பற்றித் தெரிந்துவிட்டது. சித்தப்பாவும் எப்படியோ இதை ஊகித்துவிட்டார். எனக்கு மேலும் பல வேலைகள் கொடுத்துத் தொந்தரவு செய்தார். அப்படியாவது நான் ஏதாவது பிழை விட்டால் என்னைத் தண்டிக்கலாம் என்ற எண்ணம்தான்.
நான் இதை உணர்ந்து என் பணிகளில் பிழை விடாமல் செய்தேன். கால் பந்தாடுவதை முற்றிலுமாகத் தவிர்த்தேன். மிக அருமையான புது ரொட்டிகளை மாலையில் வாங்கி அவருக்குக் கொடுத்தேன். அம்மாவும் என்னை அராபிக் பாடம் முடிந்த பின்னர் வெளியே போய் விளையாட வேண்டாம் என்றார். “அவருடைய வலையில் விழுவதற்கு ஒரு சந்தர்ப்பமும் நீ கொடுக்கக் கூடாது,” என்றார்.
அம்மாவின் இந்தப் புது மனோபாவம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சாந்த குணத்துக்கும் பொறுமைக்கும் அவர் நன்றாக அறியப்பட்டிருந்தார். ஆனால் அவருடைய ‘நான் போருக்குத் தயார்’ என்ற குணாதிசயம் ஆச்சரியமாக இருந்தது.
ஒரு சிறுவனை நல்லொழுக்கம் கற்பிக்கத் தண்டிக்கும் பெரியவரை ஒரு தாய் எதிர்க்கும் வழக்கமே கிடையாது. நான் என்னுடைய அம்மாவைப் பெரிதும் மதித்தாலும் இது ஒரு பெரும் வாய்ச்சண்டையில் கொண்டுபோய் விட்டால் அது மிக மோசமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பது எனக்குத் தெரியும். சித்தப்பா என்னையும் என் அம்மாவையும் எங்கள் குடியிருப்பில் பகிரங்கமாக நிறுத்திக் கசையடி கொடுக்கவும் தயங்க மாட்டார். நான் இந்தச் சண்டை முடிவுக்கு வர வேண்டுமென அல்லாவிடம் பிரார்த்தித்தேன். இரண்டு வாரம் சென்று சிறிது சமாதானம் உண்டானது. காக்காசாடி என் அம்மாவையும் அசிபியையும் அழைத்துத் தன் முன்னே இருத்தி இந்தச் சில்லறைத்தனத்தை நிறுத்திவிட்டுப் பொறுப்புடன் நடக்கச் சொல்லி அறிவுரை வழங்கினார். சித்தப்பாவுடன் அவர் பேசவே இல்லை. ஆனாலும் நான் மிக அவதானத்துடன், எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய மண்வீட்டுக் குடிசையில் வசிப்பதுபோல உணர்ந்தேன். உசாமா சித்தப்பாவோ எல்லாம் மறந்ததுபோலவே காணப்பட்டார். ஒரு பின்மதியம் அவர் எனக்கும் ஹவிசுக்கும் எண்ணெய்ப் பணியாரம் வாங்கிக் கொடுத்தார். அவர் அபூர்வமாகவே அப்படி ஒன்றைச் செய்வதுண்டு. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் சித்தி அசிபியிடம் முட்டை பொரித்து, நான் வாங்கும் உயர்தர ரொட்டியில் வைத்து எங்களுக்குக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
சித்தப்பா தொடர்ந்து நல்ல குணத்துடன் நடந்ததால் மதரஸாவில் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் அவர் நல்லவராக மாறிவிட்டார் என்றே நினைத்தார்கள். ஒரு முழுமாதக் காலம் அவர் ஒரு சிறுவனைக்கூடச் சவுக்கினால் அடிக்கவில்லை. அவர் சிவப்பு, கறுப்பு, பழுப்பு கலரில் நீள அங்கி அணியாமல் வெள்ளை நிறத்தில் அதிகமாக அணிய ஆரம்பித்தார். எனக்கு உட்பட எல்லாச் சிறுவர்களுக்கும் இந்த மாற்றம் பெரும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. எங்கள் பிரார்த்தனைப் பலத்தில் உண்மையில் உசாமா சித்தப்பா நல்லவராக மாறிவிட்டார் என நம்பினோம்.
இப்படியான நல்ல சந்தர்ப்பத்தில்தான் நானும் ஹவிசும் தைரியத்துடன் சித்தப்பாவிடம் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடுவதற்கு அனுமதி கேட்டோம். ஆச்சரியமாக அனுமதி கிடைத்தது. அத்துடன் எங்களுக்குப் பயணக் காசு தந்ததுடன், சிற்றுண்டிக்கும் குளிர்பானத்துக்கும் கூடக் கூடுதலாகப் பணம் கிடைத்தது.
முதல் தடவையாக அவருக்கு முன் நின்றபோது என் இருதயம் வேகமாக அடிக்கவில்லை. நான் ஏதோ குற்றம் செய்துவிட்டேன் என்ற பதைபதைப்பு இல்லை. ஒரு புதுவிதமான தன்னம்பிக்கை பிறந்தது.
நாங்கள் அங்கே கழித்த இரண்டு மணிநேரமும் என் கண்கள் நீச்சல்குள மணிக்கூட்டின் மேல் இருந்தன. நீச்சல்குளம் வழக்கமாக மாலை 5 மணிக்கு மூடும். காவல்காரர்கள் 4.30க்குக் கடைசி நீச்சல் என எச்சரிக்கை கொடுப்பார்கள். நான் லொறி ஸ்டேசனுக்கு அள்ளிவரும் கூட்டத்துக்கு முன்பாகப் போக வேண்டும் என நினைத்தேன். எப்படியும் ஆறு மணிக்கு முன்பாக, மாக்ரிப் தொழுகைக்கு நேரம் பிந்தாமல் போக வேண்டும் எனத் திட்டமிட்டேன். ஹவிசைத் தண்ணீரை விட்டு வெளியே கிளப்புவது பெரும் பாடாகிவிட்டது. எப்படியோ குளித்து உடை மாற்றி லொறி நிறுத்தத்தை நோக்கி நடந்தோம்.
ஹவிசும் நானும் குடியிருப்பை அணுகியபோது சித்தப்பா கைகளைப் பின்னே கட்டியபடி பக்கத்து நுழைவாயிலில் நின்றார். மாக்ரிப் தொழுகைக்கு இன்னும் 30 நிமிடத்துக்கு மேல் இருந்தது.
எனக்குக் கிடைத்த திடீர்ச் சுதந்திரத்தைப் பார்த்துப் பொறாமையால் வெந்துகொண்டிருக்கும் என் நண்பர்களுக்குப் பெருமையுடன் கையைக் காட்டினேன். எனக்குப் பின்னால் குறைந்த வேகத்தில் நடந்து வந்துகொண்டிருந்த ஹவிசும் தோழர்களுக்குக் கை காட்டினான். அத்தனை தூரத்துக்கு என்னுடன் ஹவிசை அனுப்பிவைத்ததால் நான் என்னைப் பெரிய பையனாக உணர்ந்தேன். வாசலிலிருந்து மூன்றடித் தூரம் இருக்கும்போதே நான் முழங்காலில் உட்கார்ந்து எங்கள் பாரம்பரிய வழக்கப்படி சித்தப்பாவுக்கு மரியாதை அளிக்கத் தயாரானேன். நான் முன்னுக்குச் சாய்ந்தபோது என் தலையிலும் கழுத்திலும் பலமான அடி விழுந்ததை உணர்ந்தேன். முகம் குப்புற விழுந்தாலும் சுதாரித்துக்கொண்டு சீக்கிரமாக எழுந்து சித்தப்பாவுக்கு முகமன் கூறினேன். அப்பொழுதுதான் நான் பயங்கரமாகத் தாக்கப்பட்டது எனக்குத் தெரிந்தது.
சித்தப்பா தன் மாட்டுச் சவுக்கை முதுகுக்குப் பின் ஒளித்து வைத்திருந்தார். ஹவிஸ் ஏற்கெனவே ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்திருந்ததால் எனக்குப் பின்னால் நேரம் கடத்தியபடி தொடர்ந்திருக்கிறான். குடியிருப்பை அணுகியபோது என்னைச் சவுக்குத் தொட்டதும் அவன் மறைந்துவிட்டான். ஒரு வாரமாக அவனை நான் காணவில்லை.
முதலாவது அடியைத் தொடர்ந்து இன்னும் பல கொடூரமான அடிகள் விழுந்தன. ஒவ்வொரு அடியும் இடிமுழக்கச் சத்தம்போல ஒலித்தது. ஆறாவதோ ஏழாவதோ அடி என்னை நிலத்தில் விழுத்தியது. ஆனால் சித்தப்பாவோ அடியை நிறுத்தவில்லை. ஒருவரும் கிட்ட நெருங்க மாட்டார்கள் என்று தெரிந்தும் உதவி கேட்டுக் கூவி அழைத்தேன். பாட்டிகள் சொன்னால் மாத்திரம் சித்தப்பா கேட்பார். ஆனால் அவர்கள் மாக்ரிப் தொழுகை ஆயத்தத்தில் மும்முரமாக இருந்தார்கள். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது; சித்தப்பா திட்டமிட்டுத்தான் என்னைத் தண்டிப்பதற்கு இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று. அப்பொழுது இன்னொருவிதமான உணர்ச்சி, இதற்குமுன் நான் அனுபவிக்காதது, எனக்கு ஏற்பட்டது. வழக்கமாகச் சித்தப்பா அடிக்கும்போது எனக்குப் பயம் அதிகமாகும். ஆனால் இம்முறை கோபம்தான் கூடியது. இது நியாயமில்லை என்று மனது சொன்னது. நான் கத்துவதையும் மன்றாடுவதையும் நிறுத்தினேன். மயங்கியதுபோலக் கைகளை விரித்துப் படுத்துக் கிடந்தேன். அப்படிச் செய்தால் அவர் அடிப்பதை நிறுத்திவிடுவார் என நினைத்தேன். அப்படி ஒரு நாடகத்தை நடத்த எப்படித் திட்டமிட்டேனோ தெரியாது. அது பல மோசமான விளைவுகளைக் கொண்டுவந்திருக்கும். ஆனால் அன்று கோபத்தில் சித்தப்பாவிடம் அடி வாங்கிச் சாகவே விரும்பினேன். அப்பொழுதாவது அவர் ஓர் உயிரைக் கொலைசெய்த வலியை அனுபவிப்பார். மரணம் இன்னும் சுகமாக இருக்கும். இன்னொரு அடி என் நெஞ்சில் விழுந்து சட்டையைக் கிழித்துத் தோலையும் உரித்தது. “லா இலாஹ் இலா இலாஹ்” என்று வாய் உச்சரித்தது. சொர்க்கத்திலுள்ள ஆப்பிரஹாம் கூடத்தில் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் இருக்கும் காட்சி மனதில் தோன்றியது. குமாசி விளையாட்டுத் திடலில் சனம் நெருக்கி இறந்துபோன உறவினனான முன்சுலுவுடன் நான் அங்கே மகிழ்ச்சியாகக் காலத்தைக் கழிப்பேன்.
சித்தப்பா திடீரென்று நிறுத்தினார். ஒன்றுமே நடக்காததுபோல, நான் உண்மையில் மயங்கி கிடந்தேனா என்பதைக்கூடச் சோதிக்காமல், திரும்பிப் பார்க்காமல் நடந்துபோனார். கண்களை மூடிக்கொண்டு அங்கேயே கிடந்தேன். சிறிது நேரத்தில் குரல்கள் கேட்டன. நான் பெருமையாகக் கை அசைத்துவிட்டுப் போன விளையாட்டுத் தோழர்கள் என்னைச் சுற்றி ரகஸ்யமாகப் பேசியபடி நின்றனர். இறுதியில், எவ்வளவு நேரம் என்று தெரியாது, நான் மெல்ல எழுந்து உட்கார்ந்தேன். அந்தத் தெருவின் சிவப்புப் புழுதியால் என் உடல் மூடியிருந்தது. என்னுடைய கன்னத்திலிருந்து ரத்தம் ஒழுகியது. கைகள், கழுத்து, முதுகுக் காயங்களில் வழிந்த ரத்தம் என் மேலாடையைச் சிவப்பாக மாற்றியிருந்தது. எனக்குக் களைப்பாக இருந்தாலும் முயற்சிசெய்து எழும்பி நின்றேன். எங்கோ தூரமாக விழுந்து கிடந்த என் குளியல் உடுப்புப் பையை நண்பன் ஒருவன் எடுத்துத் தந்தான். வலியால் துடிக்கும் என் மண்டைக்குள் ஒரு கேள்விதான் இருந்தது. “ஏன் எங்களுக்கு அனுமதி தந்தார். நாங்கள் செய்த பிழை என்ன?”
நான் குடியிருப்புக்குள் நுழைந்தபோது எல்லாக் கண்களும் என் பக்கம் திரும்பின. அம்மா எங்காவது தென்படுகிறாரா என்று துரிதமாகத் தேடினேன். அவர் தாழ்வாரத்திலும் இல்லை; பொதுச் சமையல் கட்டிலும் இல்லை.
அம்மா அழுதபடி உள் அறையில் மேலும் கீழும் நடந்துகொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் என்னைக் கட்டி அணைத்துவிட்டு, பின் தூரத் தள்ளி என் உடம்பை ஆராய்ந்தார். என்னுடைய நெற்றிக் காயத்தைப் பார்த்து அரண்டுபோய் நீலக்கதிரையில் உட்காரச் சொன்னார். பின்னர் வெளியே ஓடிச் சிறிது நேரத்தில் பாத்திரத்தில் சுடுநீருடன் திரும்பினார். அதில் துணியை நனைத்து முறுக்கிக் கிருமிநாசினியைப் பயன்படுத்தி என் முகத்தையும் நெஞ்சையும் முதுகையும் ரத்தமும் தூசியும் போக நன்றாகத் துடைத்தார். காயத்துக்குக் கட்டுப்போட்டு, புதுச் சேர்ட்டும் கால்சட்டையும் அணியத் தந்தார். பின்னர் தண்ணீரை வீச வெளியே சென்றார்.
என்னுடைய தலைப்பாரம் கடுமையாக இருந்தது. பார்வை விட்டு விட்டுத் துடித்தது. அம்மாவின் கை என் நெஞ்சில் பட்டது. நான் எழுந்து உட்கார்ந்தேன். “ஏன் அழுகிறாய்?” அம்மா கேட்டார். “தாத்தா இமாம்,” என்றேன், கண்ணீரைத் துடைத்தபடி. ‘‘எங்கே அவர்?” அம்மாவின் கண்கள் பயத்தில் அகல விரிந்தன. தன் கையை என் கைமேல் வைத்து “ரகஸ்யம், ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்,” என்றார். அவர் என்னைத் தூக்கி அறையைச் சுற்றி வட்டமாகச் சென்றார். பேயை ஓட்டுவதுபோலச் சுற்றிச் சுற்றிப் போனார். அப்படிச் செய்தபோது அழுதார். பின்னர் சடுதியாக என்னை நாற்காலியில் இருத்திவிட்டு வெளியே ஓடினார்.
அடுத்து காக்காசாடி உட்பட ஆறு, ஏழு பெண்கள் என்னைச் சுற்றி நின்றனர். கடும் வெக்கைதான் என்னுடைய நிலைமைக்குக் காரணம் என்றார்கள். இன்னும் சிலர் நான் குற்றம்செய்து அம்மாவை ஏமாற்றி அடுத்த நாள் பள்ளிக்கூடம் போகாமலிருக்க ஏதோ செய்கிறேன் எனச் சொன்னார்கள். .
என்னுடைய நெற்றியிலும் கைகளிலும் காயங்கள் அப்பட்டமாகத் தெரிந்தாலும் அந்தப் பெண்களுக்கு என்னுடைய பரிதாபமான நிலைமை சித்தப்பாவால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. எங்கள் குடும்ப விவகாரத்தில் நுழையக் கூடாது என்ற எச்சரிக்கையாகவும் இருக்கலாம். அத்தோடு உசாமா சித்தப்பாவைக் குற்றம் சொல்ல யாருக்குத் தைரியம் வரும்?
என்னை அம்மாவுடன் விட்டுவிட்டு அவர்கள் போனால் நல்லது என விரும்பினேன். என்னுடைய அப்பா இருந்தால் சொங்கோ தெருவில் எல்லோரும் பயப்படுவதுபோல அவரும் சித்தப்பாவுக்குப் பயப்படுவாரா என்று கேட்க விரும்பினேன். என்னுடைய அப்பா ஏன் சித்தப்பாவைக் கேட்க முடியாது?
ஒரு மாமி அறைக்குள் ஏதோ களிம்பை அவசரமாக எடுத்து வந்து என் முகத்திலும் உடம்பிலும் அப்பித் தேய்த்தார். அந்த அறை முழுக்கக் களிம்பின் நெடி பரவியது. அதன் பின்னர் அம்மா ஒரு பாத்திரத்தில் அத்தனை நேரமும் தயாரித்த கருவாட்டு மிளகு சூப்பைக் கொண்டுவந்தார். அது எழுப்பிய மனதைக் கவரும் வாசனை என் உடல் வலி எல்லாவற்றையும் மறக்கவைத்தது. என்னுடைய எண்ணெய் முகத்தைப் பார்த்த அம்மா சில பெண்களைக் கையால் தள்ளிவிட்டு என்னை அணுகினார்.
“அவர்கள் என் பிள்ளையைக் கொல்ல முன்னர் அவனுக்கு உணவு கொடுக்க விடுங்கள்” என்று அம்மா ஆற்றாமையுடன் கத்தினார். அந்தப் பெண்கள் திகைத்துவிட்டார்கள். அவர் சொன்ன வார்த்தைகளால் அல்ல, அவர் காட்டிய கோபத்தால். அவர் வழக்கமாக அப்படி நடப்பவர் அல்ல. “நான் எதிர்ப்புக் காட்டாவிட்டால் அவர்கள் என் மகனைக் கொன்றுவிடுவார்கள்” என்று சொன்னபடியே சூப் பாத்திரத்தை என் முகத்துக்குக் கிட்டவாகப் பிடித்தபடி அழுதார். அந்தப் பெண்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். காக்காசாடிமாத்திரம் தங்கினார். நான் அம்மாவை இந்தக் கோலத்தில் பார்த்தது கிடையாது. அவர் எனக்குத் தந்த பாதுகாப்பு மிகவும் பிடித்தாலும் அவருடைய முகம் பழைய மாதிரி மாறுவதையே விரும்பினேன்.
“அவனுக்கு ஏபிசி மருந்து கொடுத்து, சற்றுப் பொறுத்து மெந்தலினை உடம்பில் தடவு” என்றார் காக்காசாடி. அம்மா தலையை ஆட்டிவிட்டுத் தொடர்ந்து எனக்கு உணவூட்டினார். பாட்டிக்கு மாத்திரம் உண்மை புரிந்தது. என்னுடைய நிலைமைக்குக் காரணம் ஒரு துர் ஆவியல்ல, சித்தப்பாவின் கொடூரமான அடிதான். சில நேரம் கழித்து காக்காசாடி மெதுவாக அறையை விட்டு வெளியேறினார். கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் அம்மா பெரிய பெருமூச்சு ஒன்றை விட்டார். தன் சேலைத் துணியால் என் முகத்திலிருந்த களிம்பை அகற்றியபடி “உனக்குச் சீக்கிரம் குணமாகும்” என்று மெள்ளச் சொன்னார். என் இளமைக் காலத்தில் நான் அனுபவித்த அருமையான இரவு அதுதான். உசாமா சித்தப்பாவின் முகத்தைப் பார்க்கத் தேவையில்லை என்பது எனக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனாலும் யார் அவருக்கு ரொட்டி வாங்கிக் கொடுப்பார்கள் என்ற கேள்வி எனக்கு இருந்தது.
அடி வாங்கிய பின்னர் வந்த முழு வாரமும் என்னை வெளியே போக அம்மா அனுமதிக்கவில்லை. என்னுடைய பள்ளி ஆசிரியரிடம் எனக்குச் சுகமில்லை என அம்மா அறிவித்துவிட்டார். உசாமா சித்தப்பாவுக்கும் அது தெரிந்துவிட்டதால் அவர் ரொட்டி வாங்குவதற்கு என்னை எதிர்பார்க்க மாட்டார். அத்துடன் அராபிக் படிப்புக்கும் என்னால் போக முடியாது. நண்பர்களும் உறவுக்காரர்களும் என்னைப் பார்க்க வந்து உற்சாகப்படுத்தினார்கள். இது எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத வாரம், ஏனென்றால் நான் எனக்குப் பிடித்ததை எல்லாம் செய்யக்கூடியதாக இருந்தது. என்னுடைய கதைப் புத்தகங்கள் அனைத்தையும் திரும்பவும் படித்தேன்.
எனக்கு விருப்பமான எல்லா உணவு வகைகளையும் அம்மா சமைத்துத் தந்தார். பொரித்த வாழைப்பழம், பாம் சூப், ஆட்டு சூப் அனைத்தையும் என்னைப் பார்க்க வந்த நண்பர்களுடன் பகிர்ந்து உண்டேன். எப்படி ஹவிஸ் ஆறு மைல் தூரம் ஓடிப்போனான் என்ற மர்மம் ஒருவருக்கும் தெரியவில்லை.
நான் வீட்டில் பாதுகாப்பாக இருந்த ஆறாவது நாள் பாட்டி கால்நடையாக ஆறு மைல் தூரம் நடந்து வந்து ஹவிசுக்காக மன்னிப்புக் கேட்டார். அந்தக் கிழவிக்குத் தெரியும் அவர் அப்படி மன்னிப்புக் கேட்காவிட்டால் உசாமா சித்தப்பா தன் மகனுக்கும் அதே அளவு அடி கொடுக்காமல் விட மாட்டார் என்று. நான் உணவைப் பகிர்ந்து கொடுத்த உளவாளிகள், அராபிக் பாடத்தின்போது உசாமா சித்தப்பா ஹவிசுக்கும் அதே அளவு தண்டனை கொடுக்கப் போவதாகச் சொன்னதை என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால் அம்மா அவருடைய பிரகடனத்தை நம்பவில்லை. “அவர் ஒரு பொய்யர். தன்னுடைய அவமானத்தை மறைக்க அதைச் சொல்கிறார். நீ பொறுத்திருந்து பார். அந்த உதவாத மனிதர் ஹவிசை தொடப்போவதில்லை.”
சித்தப்பாவை அப்படி ‘உதவாத மனிதர்’ என்று என் முன்னால் சொன்னது அம்மா எவ்வளவு கோபமாயிருக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. எனக்கும் கோபம்தான். ஆனால் அது என் சித்தப்பாவின் மீது அல்ல; என்னுடைய அப்பாமீதுதான். சித்தப்பாவுக்குக் கோபம் வந்தால் அவர் சவுக்கினால் அடிப்பதை நிறுத்த ஒருவராலும் முடியாது. என்னுடைய அப்பா எப்போதும் வெளியே பயணம் போனதால்தான் இது நடந்தது. ஹவிசுக்குத் தண்டனை கிடைக்காதது எனக்கு வெறுப்பைக் கொடுத்தது, ஆனால் அது எனக்கு ஆறுதலையும் தந்தது. சித்தப்பாவின் கொடூர நடத்தை அவனை ஏற்கெனவே பயந்தாங்கொள்ளியாகவும் பதைபதைப்புக்காரனாகவும் மாற்றியிருந்தது. சத்தங்கள் கேட்டுப் பயப்பட்டான், அத்துடன் திக்குவாய்க்காரனாகவும் மாறியிருந்தான். பள்ளிக்கூடப் பிள்ளைகள் அவனைக் கேலிசெய்தனர். பைத்தியம் என்று அழைத்தனர். சித்தப்பிரமை என்றும் சொன்னார்கள். எனக்கு அந்த வார்த்தைக்குப் பொருள் தெரியாது. ஆனால் அது நல்ல வார்த்தை இல்லை என்பது தெரியும்.
எனக்கு ஒன்பது வயதும் ஹவிசுக்கு ஏழு வயதும் ஆனபோது அவன் கண்ணுக்குத் தெரியாத மனிதர்களுடன் கதைக்கத் தொடங்கினான். காக்காசாடி பேய்கள் அவன் புத்தியில் விளையாடுகின்றன என்றார். மற்றப் பிள்ளைகளுடன் விளையாடும்போது ஹவிஸ் வசைபாடுவான். அவனால் மட்டுமே பார்க்கக்கூடிய மற்றப் பிள்ளைகளை உதைக்கவும் அடிக்கவும் செய்தான். உசாமா சித்தப்பா அல்லாவின் 99 நாமங்களையும் பொறித்த தாயத்துச்செய்து அதை முதலைத் தோலில் மறைவாகத் தைத்து அவன் உடலில் எப்போதும் அதைத் தரிக்கவைத்தார்.
இதனால் ஏற்பட்ட நன்மை என்னவென்றால் அவனுடைய பள்ளித் தோழர்கள் பழிப்பதை அவன் அறிய மாட்டான். அவன் ஒரு தனி உலகத்தில் வாழ்ந்தான். இறுதியில் ஆவியின் விளையாட்டா அல்லது சித்தப்பாவின் தாயத்தா ஏதோ ஒன்று வேலைசெய்து அவன் பழைய நிலைமைக்குத் திரும்பினான். அந்த நாளிலிருந்து நான் ஹவிசைப் பாதுகாத்தேன். அவனுக்கு ஒன்றும் நடக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்தேன்.
நான் வீட்டில் அடைபட்டுக் கிடந்த ஏழாவது நாள் ஹவிஸ் பள்ளிக்கூட மதிய உணவு நேரத்தில் எங்கள் குடியிருப்புக்கு வந்தான். நான் அடி வாங்கிய அன்றுதான் பாட்டி வீட்டுக்கு எப்படித் தப்பித் தனியாக ஓடிப்போன கதையைச் சொன்னான். சித்தப்பா தன்னைத் தேடிப் பிடித்துவர நாலு தடியர்களை அனுப்பியதாகவும் தான் அவர்களிடம் பிடிபடாமல் தப்பியதாகவும் சொன்னான். “ஆனால் அவர்களுடைய வேகம் என்னுடைய மின்னல் வேகத்துக்குக் கிட்டவும் வரவில்லை” என்றான். அவன் கூட்டிச் சொல்கிறான் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் அவன் சொன்ன இன்னொரு விசயத்தில் என் மனதை நிறுத்தினேன். உசாமா சித்தப்பா வியாபார விசயமாக அக்ராவுக்குப் போய்விட்டார். அன்று மாலைதான் அவர் திரும்பி வருகிறார். அவனை நம்புவதா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் அவருக்கு மதராசாவைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அத்துடன் சித்தப்பாவுக்குப் பயணம் பிடிக்காது. பல வருடங்களாக அவர் குமாசியை விட்டு வெளியே போனதில்லை. அவர் பயணம் சென்ற கதை எனக்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்னுடைய வீட்டுச் சிறையை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்தேன். அல்லாவின் கருணையால் வெளி உலகம் அருமையாக இருந்தது. அன்று மாலை நாங்கள் மைதானத்தில் பலவிதமான விளையாட்டுகளை விளையாடினோம். முதல்முறையாகச் சிறுவர்கள் விளையாடுவதுபோல ஒருவிதக் கட்டுப்பாடுமின்றிச் சுதந்திரமாக விளையாடினோம். நாங்கள் மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் பெரியவர்கள் அங்கே ஒன்று கூடினதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். பெண்கள் அவசர அவசரமாகத் தலை முக்காடு இல்லாமல் அங்குமிங்கும் அலைந்தபடி கூடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் கூடி அது பெரும் சனத்திரளாக மாறியது. அவர்கள் முகங்களில் இருந்த துக்கச் சாயலும், ரகசியப் பேச்சுக்களும் ஏதோ அசம்பாவிதம் நடந்ததை ஊகிக்கக்கூடியதாக இருந்தது. திடீரென்று ஒரு பெண்ணின் கிரீச் என்ற குரல் எழுந்தது. பின்னர் அவர் “இன்னா லிலாஹி” என்று ஓதத் தொடங்கினார். அதன் பொருள் எனக்குத் தெரியுமாதலால் அப்படியே உறைந்துபோனதுபோலச் சனக்கூட்டத்தில் நின்றேன். மரண ஓலத்தைத் தொடர்ந்து பெண்களின் அவலக்குரலும் சிறுவர்களின் அழுகையும் அந்த இரவை நிறைத்தன.
நான் இப்பொழுது ஹவிசுடனும், வேறு ஐந்து சிறுவர்களுடனும் நின்றேன். நாங்கள் இன்னொரு மூலையில் நின்ற வேறு சிறுவர்களிடம் ஓடினோம். ஒருவருக்குமே இறந்தவர் யாரென்று தெரியவில்லை. குமாசியிலிருந்து அக்ரா போகும் வழியில் நடந்த கார் விபத்துப்பற்றிப் பெரியவர்கள் பேசினார்கள். அப்போழுது என் மூளையில் சித்தப்பா அக்ராவுக்குப் பயணம் செய்தது நினைவுக்கு வந்தது. இப்படி பெரிய கூட்டம் சொங்கோ தெருவில் பிரபலமான சித்தப்பா ஒருவருக்கு மட்டுமே கூடும். ஆனால் உசாமா சித்தப்பா சாக முடியாது. அவருடைய பலம் அப்படி.
சித்தப்பா எப்படி இறந்தார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த மோசமான விபத்துப்பற்றி அவர்கள் ரகசியமாகப் பேசியது மட்டுமே எனக்குத் தெரியும். எங்கள் முற்றம் மரண வீட்டுக்கு வருகை தருபவர்களால் நிரம்பியது. சிலர் குழந்தைகள்போல விம்மி விம்மி அழுதார்கள். இன்னும் சிலர் அழுபவர்களைத் தேற்றினார்கள். வேறு சிலர் குர்ஆன் வரிகளை உசாமா சித்தப்பாவின் நினைவுக்காக, மேன்மைக்காக ஓதினார்கள். நான் ஹவிசைப் பார்த்தேன். அவன் முகம், யாருடைய மரணம் என்று தெரியாததுபோல, உணர்ச்சியற்று இருந்தது. நானும் அழவில்லை. என்னிலும் வயது குறைந்த சிறுவர்கள் மரணம் என்றால் என்னவென்று தெரிந்ததுபோல வெறிபிடித்து அழுதார்கள்.
ஆனால் எனக்கு என்ன காரணமோ ஒருவித உணர்ச்சியும் எழவில்லை. கொஞ்சம் குற்ற உணர்வு மட்டுமே ஏற்பட்டது. மதரஸாவில் எங்களுக்குக் கற்பித்தது நினைவுக்கு வந்தது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இறந்தவர்களை, அவர்கள் உங்கள் விரோதியாக இருந்தாலும், நிந்தனை செய்யக் கூடாது. இறந்தவர்களுக்கான பிரார்த்தனை எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப் பட்டிருந்தது. அல்லாவிடம் அவர்களுக்காக மன்னிப்புக் கேட்கவும், அல்லாவின் கருணைக்காகவும், தீர்ப்பு நாளில் அவர்களுக்கு நல்ல பேறு கிடைக்கவும்தான் அந்தப் பிரார்த்தனை. நான் கசப்பான நினைவுகளை மனதிலிருந்து அகற்றினேன். ‘அல்லாவே அவரிடம் கருணை காட்டும்’ நான் திரும்பத் திரும்ப மன்றாடினேன். அந்த வார்த்தைகள் தடையை உடைத்ததுபோலக் கண்களில் நீர் வழிந்தது.
என்னைக் கண்டதும் ஹவிசும் அலறி அழத் தொடங்கினான். அவன் கண்களில் கண்ணீர் இல்லை. பாட்டி சாடி மாமாவை அனுப்பி எங்களைத் தன்னிடம் வரவழைக்கும் மட்டும் நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அழுதோம். “தேவதைகள் பிரார்த்தனைக்கு மட்டுமே செவி சாய்ப்பார்கள். கண்ணீரை நிறுத்திவிட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்,” என்றார் பாட்டி கடுமையான குரலில். ஆனால் ஹவிசைப் பார்த்த ஒவ்வொரு தடவையும் என் கண்களில் நீர் வழிந்தது. “அல்லாவே கருணை காட்டும்,” நான் மறுபடியும் சொன்னேன். என்னுடைய அழுகையும் பிரார்த்தனையும் சித்தப்பாவுக்கு அல்ல, அவை ஹவிசுக்கு என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அல்லாவின் கருணை, துர் ஆவிகள் ஹவிசை அணுகாமல் விரட்டும். துர் ஆவிகள் ஹவிசை நெருங்காமல் விரட்டுவதற்கு இப்பொழுது எங்களிடம் உசாமா சித்தப்பா இல்லை.
மொஹமட் நசீகு அலி புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். கானா நாட்டில் பிறந்த இவர் நியூ யோர்க் பல்கலைக் கழகத்தில் புனைவு இலக்கியம் கற்பிக்கிறார். இவர் எழுதிய ‘The Prophet of Zongo Street’ (2016) சிறுகதைத் தொகுப்பு யாருடைய கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து ஒரு நாவலும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் எழுதியிருக்கிறார். இவை அச்சில் இருக்கின்றன.
இவர் பல இலக்கிய இதழ்களில் தொடர்ந்து சிறுகதை களும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இதுவரை நியூ யார்க்கர் பத்திரிகையில் இவருடைய மூன்று சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. அத்துடன் ‘The Best American Short Stories’ (2016) தொகுப்பில் இவருடைய சிறுகதை ஒன்று தேர்வாகி வெளிவந்திருக்கிறது.
இருபது வருடங்களாக இவர் என்னுடைய நண்பர். சமீபத்தில் இவருடைய சிறுகதை ‘Allah Have Mercy’ ஏப்ரல் 2024 இல் நியூ யார்க்கரில் வெளியானபோது இவரைத் தொடர்புகொண்டு அதை மொழிபெயர்க்கச் சம்மதம் கேட்டேன். வழக்கமாக நியூ யார்க்கரில் சம்மதம் பெறுவதென்றால் மூன்று மாதக் கால அவகாசம் எடுக்கும். இவர் அவர்களிடம் உடனேயே சம்மதம் பெற்றுத் தந்தார்.
இவருடைய ஆதர்சம் வி.எஸ். நைப்பால் என்று அடிக்கடி கூறுவார். இந்தக் கதை அவருக்கு எப்படித் தோன்றியது என்று கேட்டேன். இதன் கரு தனக்கு 2012இல் உருவானதாகவும் இத்தனை வருடங்களாக அதை மனதிலே போட்டு உருட்டிக் கொண்டிருந்ததாகவும் சொன்னார். கதையை 30 தடவைக்கு மேலே திருத்தி எழுதியிருக்கிறார். அந்தக் காரணத்தினாலோ என்னவோ அதை நியூ யார்க்கருக்கு அனுப்பியபோது அவர்கள் ஒரு சொல்லைக்கூட மாற்றவில்லை என்றார்.
பல்கலைக்கழக மாணவர்களுடன் விவாதிப்பதற்காகத் தான் பல சிறுகதைகளை வருடாவருடம் தேர்வு செய்வதாகச் சொன்னார். எதிர்வரும் வருடம் மாணவர்களுக்காக, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தமிழ்ச் சிறுகதையை (என்னுடைய சிறுகதை அல்ல, ஏதாவது தங்களுக்குப் பிடித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று) தேர்வு செய்யுங்கள் என்றேன். சரி என்றார். பொறுத்திருந்து பார்ப்போம்.)
- அ. முத்துலிங்கம்
மின்னஞ்சல்: amuttu@gmail.com