இஸ்மாயில் கதாரே
ஓவியம்: ரவி பேலட்
கவிதையே,
என்னை அடைவதற்கான வழியை
எப்படிக் கண்டுபிடித்தாய்?
என் அம்மாவுக்கோ
அல்பேனிய மொழி
அவ்வளவு நன்றாகத் தெரியாது.
அவர் அரகொன் போல
காற்புள்ளிகளும் இடைவெளிகளும் இல்லாமல்
கடிதங்களை எழுதுவார்.
என் தந்தையோ
தனது இளமைப் பருவத்தில் கடல்களில் சுற்றித்திரிந்துகொண்டிருந்தார்.
ஆயினும்
நீ வந்தாய்,
என்னுடைய அமைதியான
கல் நகரத்தின்
நடைபாதையில் நடந்து,
இலக்கம் 16இல்,
என் மூன்றுமாடி வீட்டின் கதவைத்
தயக்கத்துடன் தட்டினாய்.
வாழ்க்கையில் நான்
விரும்பியதும் வெறுத்ததுமான
பல விஷயங்கள் உள்ளன,
நானோ நிறைய சிக்கல்களை
அனுமதித்த நகரமாக இருந்தேன்
எப்படி இருந்தாலும்...
தன்னுடைய இராக்கால அலைச்சல்களால்
களைத்துச் சோர்ந்து,
இரவில் நேரம் கழித்து
வீடு திரும்பும் இளைஞனைப் போல,
இதோ நானும்
மற்றொரு சாகசத்திற்குப் பிறகு
தளர்ந்து போனவனாக
உன்னிடம் திரும்பி வருகிறேன்.
மேலும்
என் துரோகத்தை
எனக்கு எதிராக உயர்த்தாமல்
என் தலைமுடியை
மென்மையாக வருடித் தந்தாய்.
எனது கடைசிப் புகலிடம்,
கவிதை
நீயே.
மின்னஞ்சல்: mohankrangan@gmail.com