ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் இடையில்
இலங்கையின் மூத்த தமிழ்த் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், 30 ஜூன் 2024 இல் காலமானார். அவருடைய மறைவு, தமிழரின் அரசியலில் வெற்றிடத்தையும் தொடரும் அரசியலில் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. முக்கியமாக இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தனுடைய மறைவையடுத்துத் தமிழ் அரசியற் பரப்பிலும் இலங்கை அரசியல் வெளியிலும் வெளிப்படுத்தப்பட்டு வரும் மதிப்பீடுகள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
இவை இரண்டு வகையானவை.
1. சம்பந்தனுடைய வழிமுறையை ஆதரிப்பவை.
2. அவருடைய அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவை.
சம்பந்தனுடைய மறைவுக்குப் பின்னர் மட்டுமல்ல, அதற்கு முன்பே இந்த ‘ஆதரவு – எதிர்ப்பு’ப் போக்குத் தமிழ்ப் பரப்பில் காணப்பட்டது. இதனால் அவர் வாழ்ந்த காலத்திலேயே தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்கு அதிகமான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டவராகவும் இருந்தார். இதனுடைய பிரதிபலிப்பே அவருடைய மறைவின்போது ஒரு தரப்பு மதிப்புடன் அஞ்சலி செய்தது; மறுதரப்பு கேவலப்படுத்தி நிந்தித்தது – கொண்டாடியது.
யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தேசியக் கொடியோடு சம்பந்தன் உட்பட சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள்.
இனவிடுதலையை மையப்படுத்திய ஈழத் தமிழரின் ‘தமிழ்த்தேசிய அரசியல்’ இருநிலைப்பட்டுள்ளதன் வெளிப்பாடே இது. இது சம்பந்தனுடைய தலைமைத்துவத்துக்கு முன்பே – விடுதலைப் புலிகளின் காலத்திலேயே – இருந்தது. ஒன்று, மென்னிலையிலான தமிழ்த்தேசிய அரசியல். இது இலங்கை அரசுடனும் சிங்களத் தரப்போடும் பொருத்தமான - நியாயமான இணக்கப்பாட்டுக்குச் செல்வதே சாத்தியமானது என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. குறிப்பாக இலங்கை – இந்திய உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்ட 13ஆவது திருத்தத்தை, இந்தியாவின் அனுசரணையோடு நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் படிப்படியாகப் பெற்றுக்கொள்வதாகும். இதனை எட்ட வேண்டுமானால், சிங்களத் தரப்பை எதிர்நிலைக்குத் தள்ளாமல், அதை மென்னிலை உறவில் கையாள வேண்டும் எனக் கருதுவது; முடிந்த அளவுக்கு ஜனநாயகத் தன்மையோடு இயங்க முற்படுவது; இது உடனடிச் சாத்தியமோ இலகுவானதோ இல்லையாயினும் இதைத் தவிர, வேறு வழி இல்லை என நம்புவது. அதாவது இதற்கும் ஒரு நீண்டகால உழைப்பும் நிதானமான அணுமுறையும் தேவைப்படுகிறது. அதற்காக இது இயலாமையினாலோ சிங்களத் தரப்பிடம் சரணடைவதாகவோ இல்லை. பதிலாக இலங்கையின் வரலாற்றுரீதியான பன்மைத்துவ அடிப்படையில் தீர்வை எட்டுவதாகும்.
இரண்டாவது, தீவிரத் தமிழ்த்தேசிய அரசியல். இதை நேரடியான எதிர்ப்பு அரசியல் எனக் குறிப்பிடலாம்; அல்லது இன ஒடுக்குமுறையை இனத் திரட்சியின் மூலமாக எதிர்கொள்ளல் எனலாம். ஏனென்றால், வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் இலங்கை அரசையும் சிங்களத் தரப்பையும் நம்பவே முடியாது. அது ஒருபோதும் தமிழ் மக்களுக்கு உரிமை களைத் தரப்போவதுமில்லை; ஒடுக்குமுறையை நிறுத்தப்போவதுமில்லை. புதிது புதிதாக மேலும் மேலும் ஒடுக்குமுறையைத் தொடருமே தவிர பிரச்சினையைத் தீர்க்காது. பிராந்திய சக்தியாகிய இந்தியாவையும் சர்வதேசச் சமூகத்தையும்கூட ஏமாற்றிவரும் சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சிந்தனையில் மையங்கொண்டுள்ள இலங்கை அரசும் சிங்கள மக்களும் நீதியாக நடப்பதற்கான சாத்தியம் இல்லை. ஆனால் இலங்கையின் புவிசார் சூழமைவின்படி இனப்பிரச்சினை சர்வதேசக் கவனிப்புக்குரிய விடயமாகியிருக்கிறது. இந்தச் சூழமைவினால்தான் அது திம்புவிலிருந்து ஒஸ்லோவரையில் பேசப்பட்டது. ஆகவே, இதை வாய்ப்பாகக் கொண்டு, தமிழரசியலைச் சமரசமும் விட்டுக்கொடுப்புமின்றி இனவிடுதலை நோக்கித் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அடுத்த கட்டத்தில் அதனைச் சர்வதேச மயப்பட்ட இராசதந்திரப் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துவது. இது இனவாதத்தை இனவாதத்தினால் முறியடிப்பது என்ற அடிப்படைக்குக் கிட்டவானது.
முதலாவது நிலைப்பாட்டையும் அணுகுமுறையையும் பின்பற்றியவர் சம்பந்தன். இரண்டாவது நிலைப்பாட்டில் அவருக்கு உடன்பாடில்லை. ஆயுதப் போராட்டத்திலும் தீவிரத்தன்மையிலும் நம்பிக்கையற்றவராக சம்பந்தன் இருந்தார். தீவிரத் தன்மை தீர்வுக்கு ஒருபோதும் உதவாது. அது இனவாதமாகி, மேலும் மேலும் நெருக்கடியை உண்டாக்கிப் பிரிவினையை, பிரச்சினையை வளர்க்குமே தவிர, விடுதலைக்குப் பயனளிக்காது, அதனால் இனவாதிகள்தான் பிழைத்துக்கொள்வர் என்று சம்பந்தன் நம்பினார். இதனால் இந்தியாவையோ சர்வதேசச் சமூகத்தையோ காண்பித்துச் சிங்கள மக்களைப் பயமுறுத்தக் கூடாது எனக் கருதினார். இதற்காகவே அவர் இறுதிக் காலத்தில் இந்தியாவுடனும் சர்வதேசச் சமூகத்துடனும் நெருக்கம் காட்டுவதைத் தவிர்த்தார். இவற்றுடன் கொண்டிருந்த நெருக்கத்தினால் எந்தப் பயனும் இல்லாமல் போனதையும் அனுபவரீதியாக உணர்ந்தும் இருந்தார். அவற்றுடன் காட்டப்படும் நெருக்கம், சிங்கள மக்களை மேலும் சந்தேகிக்க வைக்கும். ஆயுதப் போராட்டம் சிங்கள மக்களைப் பகைநிலைக்குத் தள்ளிப் பெரும் இடைவெளியை உண்டாக்கிவிட்டது. எனவே சிங்கள மக்களைத் தொடர்ந்தும் பகைநிலைக்குத் தள்ளாத அரசியல் வழியைப் பின்பற்ற வேண்டும்; இதற்கு முஸ்லிம்கள் உட்படச் சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது அவசியம். ஆயுதப் போராட்டம் முடிவுபெற்ற பின், இனப்பிரச்சினைக்கான தீர்வைச் சிந்தித்தால், அதற்குச் சிங்கள, முஸ்லிம் மக்களின் சம்மதம் தேவை என்ற யதார்த்தத்தைக் கருதினார். எனவே சிங்கள, முஸ்லிம் மக்களை அரவணைத்துக்கொள்ள வேண்டும். அவர்களிடத்திலிருக்கும் பகை யுணர்வையும் அச்சங்களையும் தவறான கற்பிதங்களையும் நீக்க வேண்டும் என்று தீர்மானித்தார் சம்பந்தன்.
இதற்காக அவர் யாழ்ப்பாணத்தில் அரசுத் தலைவர்களோடு இணைந்து இலங்கையின் தேசியக் கொடியைப் பகிரங்கமாகவே ஏந்தினார். அதாவது, தமிழர்களுடைய அடையாளமாகக் கருதப்பட்ட புலிக்கொடிக்குப் பதிலாகச் சிங்களக்கொடி எனச் சொல்லப்படும் சிங்கக் கொடியை ஏந்தினார். அத்துடன் போர் முடிவடைந்த பின்னான காலப்பகுதியில் முடிந்த அளவுக்குப் பல விட்டுக் கொடுப்புகளோடு அரசுடன் இணங்கிச் செயற்பட்டார்.
இதனால் சம்பந்தனுக்கு அரசு உட்படச் சிங்களத் தரப்பிலும் முஸ்லிம் களிடத்திலும் மதிப்பும் நெருக்கமும் ஏற்பட்டது. சமவேளையில் சர்வதேச மட்டத்திலும் சம்பந்தனு டைய அணுகு முறைக்கு வரவேற்பு இருந்தது. காரணம், உலகப் போக்கை அனுசரிக்கும் விதமாகவும் உள்நாட்டு யதார்த்ததின் படியுமான அணுகு அணுகு முறையை அவர் கைக்கொண்டிருந்ததுமாகும்.
சம்பந்தனுடைய அணுகு முறையைச் சிங்களத் தரப்பினரும் அரசும் வரவேற்று அதைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான பொறுப்பு அரசுக்கும் சிங்களத் தரப்புக்கும் உண்டு. நீண்ட கால ஒடுக்குமுறையை மேற்கொண்டதற்கும் அதனால் உண்டாகிய விளைவுகளுக்குமான பொறுப்புக்கூறலை அரசு செய்யத் தவறியது. அரசுக்கு வெளியில் சிங்களத் தரப்பிலிருந்தும் இதற்கான வலியுறுத்தல்கள் ஏதும் நிகழவில்லை. யுத்தத்துக்குப் பிந்திய அரசியலை முன்னெடுக்கும் கடப்பாடு அரசுக்கு இருந்தது. பொறுப்புக் கூறல், பகை மறப்புக்கான நடவடிக்கைகள், மீள நிகழாமையை உறுதிப்படுத்தல், நீதிப்பரிகாரம், சமாதானம், நிரந்தர அமைதி எனப் பல பணிகள். ஐ.நா உள்ளிட்ட சர்வதேசச் சமூகமும் இவற்றை வலியுறுத்தியது. ஆனால் அரசும் சிங்களத் தரப்பும் இவையெதையும் செய்யவில்லை. இதெல்லாம் நிகழும் என்று நம்பிப் பல வாக்குறுதிகளைத் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் வழங்கினார். குறைந்தபட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முறையான நிவாரணம்கூடக் கிடைக்க வில்லை. காணாமலாக்கப்பட்டோர், அரசியற் கைதிகள் போன்ற பிரச்சினைகளுக்குக்கூட சம்பந்தனால் தீர்வைக் காண முடியவில்லை. இதனால் சம்பந்தனுடைய வழிமுறை பலவீனமாகத் தமிழ் மக்களால் கருதப்படும் சூழல் உருவானது; கூடவே தீவிரமான தமிழ்த்தேசிய வாதிகளை இந்த வழிமுறை பலப்படுத்தியது.
ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டமும் அதற்கு முன்னும் பின்னுமான அரசியற் போராட்டங்களும் இன ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கானவையே. ஆகவே அரசும் சிங்கள மக்களும் ஒடுக்குமுறையையும் இனப் பாரபட்சத்தையும் கைவிட்டுச் சமாதானத்துக்கும் அதிகாரத்தைப் பகிர்வதற்கும் முன்வந்திருக்க வேண்டும். முக்கியமாகப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அந்தப் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளோடு, அவர்களுக்கான நீதியை வழங்கியிருக்க வேண்டும். அதன்மூலம் சம்பந்தனையும் அவருடைய வழிமுறையையும் பலப்படுத்தியிருக்க முடியும். மட்டுமல்ல, இலங்கைத் தீவில் அமைதியை உண்டாக்கி, இனப்பிளவிலிருந்து மீட்டெடுத்துப் பொருளாதாரரீதியில் முன்னேற்றியிருக்க முடியும். இதற்கு சம்பந்தனுடன் முஸ்லிம் தலைமைகளும் மலையகத் தமிழ்த் தலைமைகளும் இணைந்து நின்று அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்திருக்க வேண்டும். உரிய பொறிமுறையை வகுத்திருக்க வேண்டும். ஒடுக்குமுறைக்குள்ளாகி நிற்கும் தமிழ், முஸ்லிம், மலையகச் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு வரலாற்றில் கிடைக்கும் அபூர்வமான சந்தர்ப்பங்களை அவை உரிய முறையிற் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அதற்காக ஒன்றிணைந்து நிற்பது அவசியம். அதற்கான வாய்ப்பும் சூழலும் 2020க்கு முன்னர் இருந்தது. குறிப்பாக 2015 – 2020 வரையான காலப்பகுதி, எல்லாத் தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட்ட சூழலாகும். அரசு, எதிர்க்கட்சி இரண்டும் ஒன்றிணைந்த நிலையில் இருந்தன. தமிழ், சிங்கள, மலையக, முஸ்லிம் தலைமைகள் ஒருங்கிணைந்து செயற்பட்டுத் தீர்வைக் கண்டிருந்தால் நாடு இன்றைய பொருளாதார நெருக்கடியில் – தொடரும் இனமுரணில் - சிக்கியிராது.
இது நிகழாதபடியால் சம்பந்தன் தோற்றுப்போனார்; மெய்யாகச் சொன்னால், சம்பந்தன் தோற்றுவிடவில்லை; இலங்கை மக்கள்தான் தோற்றுள்ளனர். சம்பந்தனையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதாக – தோற்கடிப்பதாகக் கருதித் தம்மையும் நாட்டையும் தோல்விக்குள் தள்ளிவிட்டுள்ளனர் சிங்கள ஆட்சியாளர்கள். ஆனாலும் தன்னுடைய நம்பிக்கையையும் உறுதியையும் சம்பந்தன் இறுதிவரையில் கைவிடவில்லை. அது ஒன்றுதான் அரசியல் தீர்வுக்கான வழி என்ற ஆழமான நம்பிக்கையே இதற்குக் காரணம்.
இதற்காக அவர் தமிழ்ச் சமூகத்தில் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி வந்தது. இதைத் தமக்கான வாய்ப்பாகக் கொண்டு தீவிரத் தமிழ்த்தேசியத் தரப்பினர் சம்பந்தனைக் கடுமையாக எதிர்த்து, விமர்சனம் செய்து கேலிப்படுத்தினர்; மட்டுமல்ல, அவர் தலைமை தாங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் வெளியேறிச் சென்றனர். இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இல்லை என்ற நிலைக்குள்ளாகி, அவருடைய தமிழரசுக் கட்சியே மிஞ்சியது. இதில் சம்பந்தனுடைய அணுகுமுறைத் தவறுகளும் உண்டு.
2009இல் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்லது ஈழப்போராட்டத்தின் முடிவுக்குப் பிறகு ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவராக சம்பந்தனே இருந்தார். இலங்கைத் தமிழர் அரசியற் தலைமைப் பொறுப்பில் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தியவர்கள் பிரபாகரனும் சம்பந்தனுமே. இது சம்பந்தனுக்குக் கிடைத்த வரலாற்று வாய்ப்பாகும். அப்பொழுது அவருடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான தரப்பாக இருந்தது. அடுத்துவந்த 2015 – 2020 காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை குறைந்தாலும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய வாய்ப்பு சம்பந்தனுக்குக் கிடைத்தது. இவற்றை வைத்துக்கொண்டு அவர் தன்னுடைய வழிமுறையிலான தீர்வை நோக்கி உழைப்பதற்கான அணியைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். புலம்பெயர்ந்திருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்புகளையும் பங்கேற்பையும் உள்ளெடுக்கக்கூடிய பொறிமுறைகளை – அணுகுமுறை களை – வகுத்துச் செயற்பட்டிருக்க வேண்டும். இதற்கென சுமந்திரன், விக்னேஸ்வரன், சத்தியலிங்கம், சி.வி.கே. சிவஞானம் (வடமாகாணசபையின் சபை முதல்வர்) போன்றோரை உள்ளீர்த்திருந்ததுண்டு. இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, வடக்கின் முதலமைச்சரானதோடு சம்பந்தனின் எதிர்த்திசைக்குச் சென்றுவிட்டார் விக்னேஸ்வரன். சுமந்திரனும் ஏனையோருமே மிஞ்சினர்.
இப்போது சம்பந்தன் இல்லை; ஆனால் அவர் தலைமை தாங்கி முன்னெடுத்த மென்னிலைத் தமிழ்த்தேசியவாத அரசியலை முன்னெடுப்பதற்கான தலைமை இனி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சம்பந்தனின் மறைவைத் தமக்கான வெற்றிக் கொண்டாட்டமாக எடுத்துக்கொண்ட தீவிரத் தமிழ்த் தேசியவாதிகள், நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். இது தமிழர்கள் மேலும் தோற்றுப் பலவீனப்படும் தற்கொலை அரசியலுக்கு ஒப்பானது. குறைந்தபட்சம் ஒடுக்குமுறையைச் சந்திக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்புகளுக்கான பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்த முடியாத அளவுக்குத் தான் இந்தத் தரப்பின் அரசியல் சிந்தனையும் உபாயங்களும் உள்ளன.
2009 முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், தமிழ்ச் சமூகம் கொந்தளிப்பான – தீவிர உணர்ச்சிகரமான உளநிலையிலேயே உள்ளது. அதனை ஆற்றுப்படுத்தக்கூடிய வழிகளை அரசும் செய்யவில்லை; அரசுக்கு அப்பாலான சிங்களத் தரப்பு, பிராந்திய சக்தியாகிய இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சமூகமும் செய்யவில்லை. எனவே மறுபடியும் தமிழர்கள் மூர்க்கமாகச் சிங்கள அரசை எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதிகொள்கிறார்கள். இந்தியாவின் மீதும் சர்வதேசச் சமூகத்தின்மீதும் கசப்படைந்துள்ளனர்.
சம்பந்தனுடைய மறைவின்போது இரங்கலுரையாற்றிய சிங்களத் தலைவர்கள் (ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட) அனைவரும் ஒரு விடயத்தை ஒப்புக்கொண்டனர், “சம்பந்தனுடைய காலத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டோம். தீர்வுக்காக அவரளவுக்குப் புரிந்துணர்வுடன் இணங்கிய வேறு தலைவர்கள் இல்லை. ஆகவே அவருக்குச் செலுத்தும் மரியாதையாக அனைவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண வேண்டும்.”
அந்த அளவுக்கு சம்பந்தன் சிங்களத் தரப்பை – தலைவர்களை - குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இது அவருக்கு, அவருடைய வழிமுறைக்குக் கிடைத்த வெற்றியாகும். இதிலிருந்தே அடுத்த கட்டத் தொடர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். ஒடுக்குமுறையாளரின் குற்றவுணர்ச்சியைத் தூண்டுவதன் வழியே, அவர்கள் தொடர்ந்தும் குற்றமிழைப்பதை, ஒடுக்குமுறையை மேற்கொள்வதைத் தடுக்க முடியும். மேலும் ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட விளைவுகளுக்கான பரிகாரத்தையும் அதற்கான தீர்வையும் காண முடியும். சம்பந்தனுடைய வழிமுறை அதை ஏற்படுத்தியுள்ளது. இதுவே சம்பந்தன் பெற்றுள்ள – பெற்றுத் தந்துள்ள வெற்றி. இதைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது, அவருடைய வழிமுறையைத் தொடர விரும்புவோரின் பணி.
இலங்கையில் பல தரப்பிலும் திரட்சியடைந்திருக்கும் இனவாதத்தை எளிதாக முறியடித்துவிட முடியாது. இனவாதத்தை முறியடிக்கும் விதமான அரசியலைச் செய்வோர் தோற்கடிக்கப்பட்டுக் கேலிப்படுத்தப்பட்டதே வரலாறாகும். சம்பந்தனும் இதற்கு விலக்கல்ல. ஆனால், அவருக்கான இடத்தை வரலாறு அளித்தே தீரும்.
மின்னஞ்சல்: poompoom2007@gmail.com