மிருகம்
ஓவியங்கள்: மணிவண்ணன்
அதிகாலையில் வரும் வாட்ஸப் குறுஞ்செய்திகளின் கீச்சிடல்கள் எரிச்சலைக் கிளப்பத் தொடங்கியிருந்தன. அவை எதைப் பற்றியதாக இருக்கும் என்று லஸண்ட்ராவுக்குத் தெரியும். அப்பார்ட்மண்ட்டின் அசோஸியேஸன் குழுமத்திற்கென்றே தனியாகப் பிரித்து எலி சத்தமிடுவதைப் போலக் கீச்சிடும் ஒலியைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள்.
காலையிலேயே அதைப் பார்த்து அன்றைய தினத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தவளாகப் படுக்கையை உதறி எழுந்தாள். வானம் மேகமூட்டமாயிருந்தது. இரவில் வரைந்து வைத்திருந்த அக்ரலிக் ஓவியத்தைப் பார்த்தாள். கருப்பு, மஞ்சள், சாம்பல் வண்ணங்களில் தீட்டப்பட்ட அரூப உருவங்கள் பின் இருக்க, முன்னே மரத்தாலான ஒரு பழைய நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள். அது ஒருவிதமான ரஸ்டிக் தன்மையுடன் நன்றாக வந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.