நிதிச் சந்தை: சிதறுண்ட முதலாளித்துவக் கற்பனைகள்
பங்குச்சந்தை அதிபாரமான பொருள். இந்தக் கனமான விஷயம் பற்றிப் பேச எதையுமே மெலிதாக்கும் இரண்டு வர்த்தக சினிமாக்களுடன் தொடங்குகிறேன். குப்பைப் படங்களிடையே சில கொழுத்த செய்திகளைப் பொதுக் களத்தில் இலகுவாக்கும் சாதுரியம் வணிகப் படங்களுக்கு இருக்கிறது. ஒன்று ஓலிவர் ஸ்டோன் இயக்கிய ‘Wall Street’. இதில் மைக்கல் டாக்கிலசின் கதாபாத்திரம் சந்தையின் உன்னதம் பற்றிச் சின்னப் பிரசங்கம் செய்யும். அதில் வரும் ஒரு வசனம்: ‘Greed, lack of better word is good’ இது நிதி நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களின் வேதவாக்கியமாக இந்தப் பங்குச் சந்தைச் சரிவுக்குமுன் கொண்டாடப்பட்டது. நேரம் இருந்தால் இதை You tube இல் பாருங்கள். மற்றது மணிரத்னத்தின் ‘குரு’. இதிலும் குருபாய் பாத்திரத்தில் வரும் அபிஷேக் பச்சன் விசாரணைக் குழு முன். ‘எழுந்து நிற்பதற்கும் லைசன்ஸ் வேண்டுமா?’ என்று பழைய லைசன்ஸ் ராஜை நினைவூட்டிய நக்கலுடன் சொற்பொழிவைத் தொடங்குவார். குருபாய் பேச்சின் சாரம்: அரசு இயற்றும் ஒழுங்குகளும் சட்டங்களும் நாடு முன்னேறுவதற்குத் தடையாக இருக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு அரசின் குறுக்கீடுதான் முட்டுக்கட்டை. நாட்டின் அபிவிருத்தி தனியார் கூட்டுநிறுவனங்களின் கையில்தான் இருக்கிறது. தேசிய அரசின் இறையாண்மையைச் சவாலுக்கு அழைப்பது போல் ஆணைக்குழு அங்கத்தினரைப் பார்த்து குருபாய் இப்படிக் கத்துவார்: ‘இந்த நாட்டை நிறுத்தும் சக்தி உங்கள் யாருக்கும் கிடையாது. எந்தச் சட்டத்தினாலும் முடியாது’.
இன்றைய பண நிறுவனங்களின் சரிவுக்கு ஊடகங்கள் பொதுச் சொல்லாடலில் பிரதானப்படுத்திய பேராசையும் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்ட வணிகமுமே காரணங்களென இந்த இரண்டு சினிமாக்களும் சித்தரிக்கின்றன.
இதுவரை சந்தை என்றால் காய்கறி விற்கும் கடைத் தெரு என்று நினைத்திருந்த என்னைப் போன்றவர்களை மேலும் குழப்ப, பயமுறுத்த, பொருளாதார விமர்சகர்கள் கடினமான சொற் பட்டியலொன்றை ஊடகச் சொல்லாடலில் புகுத்தியிருக்கிறார்கள். சர்வதேசச் சந்தை எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்க இந்தப் பதங்கள் ஊடகங்களில் பரவலாகப் பாவிக்கப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை: sub-prime, short-selling, securitization, de-leveraging, recapitalization. கிரேக்கம் படிப்பிக்கும் எனக்கே இது கிறக்கமாயிருக்கிறது. எகிப்திய hieroglyphicsயைக் கட்டுடைத்துவிடலாம். ஆனால் இந்த வார்த்தைகளை விளங்கிக்கொள்வது கடினமாயிருக்கிறது. நிதிச் சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பது அதில் முழுதாக ஈடுபட்டவர்களுக்கும் இந்த விஷயங்களில் நிபுணத்துவம் உடையவர்களுக்குமே புரியாத சங்கதி. ஆகையினால் நம் கவனத்தை வேறுபக்கம் திருப்புவதே சரி என்று எனக்குப் படுகிறது. இந்தப் பண நெருக்கடி, வங்கி திவால்கள் தந்த சில அரசியல், கலாச்சார, இலக்கிய வெளிப்பாடுகள் பற்றிச் சந்தையின் ஓரத்திலிருந்து பதிவுசெய்யலாம் என்று நினைக்கிறேன். ஆம் இலக்கியம்கூட. இது கட்டுரையின் கடைசிக்கு முந்திய பகுதியில் வரும்.
அரசியல், சமூக, கலாச்சார வெளிப்பாடுகள்
அமெரிக்கா இனிமேல் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கு முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மகிமை பற்றி அறிவுரை ஆற்றுமுன் சற்று மறுயோசனைசெய்ய வேண்டியிருக்கும். இதுவரைக்கும் முதலாளித்துவத்தின் முக்கிய குணங்களான கட்டற்ற சந்தை (free market), தீர்வையற்ற வர்த்தகம் (free trade), தனியார் துறை (private sector) போன்ற கோட்பாடுகள் உலகத்தை உய்விக்கும் மாய சக்திகள் என்று மற்ற நாடுகளுக்கு உபதேசம் செய்த அமெரிக்கா இப்போது தன்னுடைய ஆன்மீக அதிகாரத்தையும் தார்மீக உரிமையையும் இழந்திருக்கிறது.
பழைய விக்டோரியன் ஏகாதிபத்தியத்தின் நற்செய்தி கிறித்தவம். இது இருளில் இருந்தவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முயன்றது. புதிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுபச்செய்தி தடையில்லா வணிகம். இது பொருளாதாரத்தில் தேக்கமடைந்த நாடுகளுக்கு சுபிட்சம் தரும் எனப் பரப்புரைக்கிறது. பழைய சுவிஷேசத்தைப் பரப்பியவர்கள் விக்டோரியன் மதகுருமார்கள். புதிய செய்தியின் தூதர்கள் சர்வதேசக் கூட்டுநிறுவனங்கள். பேணல் கொள்கையை நீக்குதல், அரசுடமை வங்கிகளையும் பண நிறுவனங்களையும் தனியார்மயமாக்கல், பணப் புழக்கத்தைச் சுதந்திரமயமாக்கல், பங்குச் சந்தையின் கட்டுப்பாடுகளை நீக்குதல், வணிகத் தடைகளை அகற்றுதல் போன்றவை அமெரிக்கா என்ற புதிய ஏகாதிபத்தியத்தின் முக்கியக் கூறுகள். இன்றைய வங்கிகள் முறிதலுக்கும் பணமுடைமைக்கும் காரணம் முதலாளித்துவம் ஊக்குவித்த இந்தப் பொருளாதார அடிப்படைவாதமாகும். சந்தையின் வளர்ச்சிக்கு அரசின் குறுக்கீடு தடங்கலாக இருக்கிறது என்ற சுதந்திரச் சந்தை ஆதரவாளர்கள் இப்போது அதே அரசின் தலையீட்டை எதிர்பார்க்கிறார்கள். தேசியமயமாக்கல் ஒரு கெட்ட வார்த்தை என்று எண்ணியவர்களின் கண்ணுக்கு முன்னாலேயே வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மறைமுகமாக அரசின் உடமைக்குள்ளாகியிருக்கின்றன. பலவிதமான கட்டுப்பாடுகளுக்காகப் போராடிய நிதி நிறுவனங்கள் வலுவான அரசின் செயல்பாட்டுமுறைகளுக்குள் வந்திருக்கின்றன.
இடதுசாரிச் சிந்தனையாளர்களிடையே முக்கியமாக ஆங்கில அறிஞர்களிடையே பங்குச் சந்தை பற்றிய எண்ணங்களில் ஒரு மந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. மயானத்திற்குச் சமனான மௌனம் அவர்களுடைய சிந்தனையில் காணப்படுகிறது. இந்த வியாபார மன்றங்களின் நெருக்கடி பற்றிப் பொதுவுடைமைக் கொள்கையாளர்களிடையே எதிர்வினையான மறுப்பு எழுத்துப் பதிவுகள் மிக அபூர்வமானவை. இந்த நிசப்தத்திற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, தாட்சர் உருவாக்கிய நுகர்வுத்துவம். இந்த நுகர் கலாச்சாரத்திற்கு எதிராக இன்னும் மார்க்சியவாதிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. இரண்டாவது, பெருங்கதையாடல்களின் முறிவு. பின்நவீனத்துவத்தின் துரதிர்ஷ்டங்களுள் ஒன்று பெரும் கூறுமுறைகளின் அகன்ற பார்வை சிதறிவிட்டது என்பதாகும். இதனால் பரந்த அளவில் பெரும் கேள்விகளை எழுப்புவதில் தயக்கமிருக்கிறது. மூன்றாவது, 9/11க்குப் பிறகு எண்ண இயல் புவிப்பரப்பில் ஏற்பட்ட பெரும் மாற்றம்.
அல்-கைதாவின் இஸ்லாமிய எழுச்சியின் காரணமாக இதுவரை இடதுசாரிக் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டிய பல அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள் இப்போது தங்கள் கவனத்தையும் ஆற்றலையும் மேற்கத்திய விழுமியங்களைப் பேணுவதிலும் அவற்றின் மேன்மைகளை வலிறுத்துவதிலும் செலுத்துகிறார்கள். இடதுசாரிக் கலாச்சார அவதானி கிறிஸ்டொபர் ஹிச்சின்ஸ்கூட புஷ் ஆதரவாளராக மாறியினார். எழுத்தாளர்களில் இடதுசாரி எண்ணங்களைக் கைவிட்டு விட்டுச் சமீபத்தில் வலதுசாரிக் கருத்துப்பாங்கைத் தழுவியவர்கள்: மார்டின் எமீஸ், இயன் மக்கீவன், சல்மான் ருஷ்டி. ஒன்று மட்டும் நிச்சயமாகிறது. வலதுசாரிகளின் ‘சந்தை சாதகமானது’ ‘அரசு தீமையானது’, இடதுசாரிகளின் ‘அரசு நல்லது’ ‘சந்தை கெட்டது’ என்ற பழைய எதிரிடு கொள்கைகள் இன்றைய இருண்மையான, தெளிவில்லாத சூழ்நிலையில் செல்லுபடியாகாது. உலகமயமாக்கப்பட்ட, தவிர்க்கவியலாத, தடுக்க முடியாத சந்தைச் சக்திகளின் பரவலின் முன்னால் இந்த இரு கருத்தியல்களும் இன்னும் சில பாரம்பரியக் கொள்கைகளை இறுக்கி அணைத்துக்கொண்டு அவற்றில் தேக்கமடைந்துபோயிருக்கின்றன. கட்டுப்பாடற்ற சந்தைக்கு வேண்டியது ஒழுக்கமும் கண்காணிப்பும். சந்தை அறமற்றது. ஆகையினால் அறம் சார்ந்த சட்டங்களும் ஒழுங்குமுறை விதிகளும் எந்தக் கருத்துநிலையாளர்களிடமிருந்து வந்தாலும் சரிதான்.
இந்த நிதி நிறுவனங்களின் சிக்கலினால் இரண்டு அரசியல்வாதிகள் லாபமடைந்திருக்கிறார்கள். ஒருவர் ஆங்கிலப் பிரதமர் பிரவூன். மற்றவர் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஒபமா. பண நிறுவனங்களின் சரிவு ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கும் முன் தொழிற் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து பிரவூனை நீக்குவதற்கான வேலையில் அவருடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே இறங்கியிருந்தார்கள். ஆனால் பிரவூன் எடுத்த சில நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளும் அவரது நீண்ட கால நிதி அமைச்சக அனுபவமும் அவரை வாக்காளர்களிடையே இந்த நெருக்கடியான காலகட்டத்திற்குப் பொருத்தமானவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. தேக்கமடைந்திருந்த ஒபமாவின் தேர்தல் பிரசாரம் இந்தப் பங்குச் சந்தை, வணிகக் கூட்டமைப்புகளின் சரிவினால் துரிதமடைந்திருக்கிறது. சமீபத்திய பொதுசன வாக்கெடுப்புப் புள்ளியில் மகெயினைவிட ஒபமாவின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு புஷ்ஷின் கறைபடிந்த பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என்கிறார்கள். இங்கேதான் ஒரு விளங்காத புதிர். இன்றைய பணச்சந்தைச் சரிவுக்குப் பிரவூனின் பங்கும் சரிசமமானது. ஆனால் அவரின் நிதி நிர்வாகத்தில் ஆங்கிலேய மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதேவேளையில் தங்கள் பணத்தைப் பராமரிக்கக் குடியரசுக் கட்சியை அமெரிக்கர்கள் நம்பத் தயங்குகிறார்கள். அடுத்த பத்திக்குப் போகும் முன் இன்னும் ஒரு செய்தியையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் பங்குச் சந்தை விவகாரம் ஊடகத்தை ஆக்கிரமித்ததில் நன்மை அடைந்திருப்பவர்களில் இஸ்லாமியரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஊடகங்களுக்கு எதிரி தேவை. இதுவரை ஆங்கில ஊடகங்களுக்கு இஸ்லாமியர் ‘நல்ல’ எதிரியாக இருந்திருக்கிறார்கள். இப்போது பங்குச் சந்தை சூதாடிகள், பண மதிப்பீட்டாளர்கள், நிதி நிறுவன ஆட்சியர் போன்ற புதிய எதிரிகள் தற்காலிகமாக ஊடகத்திற்குக் கிடைத்திருக்கிறார்கள். இந்தப் பங்குச்சந்தை அமளி ஓயும்வரை இஸ்லாமியர்கள் கொஞ்சம் ஆறுதலாகயிருக்கலாம்.
இந்தப் பணத்தொய்வு புதிய கவலையைத் தருகிறது. தங்கள் காசு, வீடு, வேலையை இழந்த கீழ்மட்ட வெள்ளையர்களிடையே காணப்படும் அதிருப்தியையும் ஏக்கத்தையும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. இந்தப் பணநெருக்கடி அப்படி ஒன்றும் புதியதல்ல. 1930களில் இதே போன்ற நிலைமை ஏற்பட்டதாக வரலாற்றுப் பதிவர்கள் ஞாபகமூட்டிவருகிறார்கள். அந்தப் பொருளாதார மந்த நிலை சில நாவல்களுக்குப் பின்புலனாக இருந்திருக்கின்றது. அவற்றில் ஒன்று; அதிகம் பிரபலமடையாத ‘It Can’t Happen Here’ என்ற ஸிங்கிளேர் லூயிஸின் நாவல். பங்குச்சந்தைச் சரிவு பொதுமக்களிடையே ஏற்படுத்திய அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக்கித் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் வாஷிங்டன் ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதை இந்த நாவல் சித்தரிக்கிறது. இது எதிர்கால உணர்ச்சியுடன் எழுதப்பட்ட புதினம். சமகால நடப்புக்குச் சில படிப்பினையைத் தரலாம்.
மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளைச் சித்தரிக்கும் இலக்கியங்கள் உண்டு. ஆனால் பங்குச் சந்தைகளின் அமைப்பையும் அவற்றின் செயல்பாட்டுமுறைகளையும் சித்தரிக்கும் புதினங்கள் மிகக் குறைவு. வணிகக் கழகங்கள், பங்குச் சந்தைகளில் வேலைசெய்கிற வியாபார உய்த்துணர்வாளர்கள், பண மதிப்பீட்டாளர்கள், வங்கிச் சூதாடிகளின் ஆணவம், அகந்தை, துடுக்குத்தனம், உள்ளெழுச்சிகள், நெளிவுசுளிவுகள் பற்றி நாவல்கள் உண்டு. அவற்றில் Tom Wolfe எழுதிய The Bonfire of Vanities, Martin AmisC¡ Money போன்றவை சட்டென்று நினைவுக்குவருபவை. இவற்றுடன் Don DeLillo புதினமான Cosmopolisசையும் சேர்த்துக்கொள்ளலாம். 2003இல் எழுதப்பட்ட நாவல் தீர்க்கதரிசனமானது. நாணய வணிகர் ஒருவரின் அளவுக்கு அடங்கா ஆசை, அவர் பணத்தைப் பணயம் வைத்து எடுக்கும் உயர் அபாயங்கள் பற்றிய கதை இது.
நான் மேல் சொன்ன நாவல்களெல்லாம் வணிகச் சந்தையில் வேலை செய்கிறவர்களின் தனிமனிதச் செருக்கு, சாகசத்தனம், அவர்களின் தாழ்நிலை மக்களைப் பற்றிய பரிகாசத்தையே பதிவுசெய்கின்றன. ஆனால் டவ் ஜொன்ஸ், நீக்கே, சென்செக்ஸ் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் புள்ளிகள் எப்படி ஏறுகின்றன, எப்படிச் சரிகின்றன என்பதைப் பற்றியோ அல்லது ஹெஜ்பண்ட்ஸ் எப்படி இயங்குகின்றன என்றோ அல்லது பரிமாற்ற விகிதங்கள் எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறன்றன என்றோ விபரம் தரும் நாவல்கள் மிக அரிதானவை. இந்தப் பகுதியை முடிக்க முப்பதுகளின் அமெரிக்கப் பொருளாதார மந்த நிலையைப் பின்னணியாகக் கொண்ட, பரவலாகப் பேசப்படும் John Steinbeck இன் The Grapes of Wrathஇல் வரும் ஒரு வாசகத்தைத் தருகிறேன். இன்றைய உடனிகழ்வுகளை எப்படி முன்கூட்டிச் சொல்லியிருக்கிறது என்று பாருங்கள். உங்கள் வங்கிப் பணியாளர் தொந்தரவு கொடுத்தால் அவரை மடக்க இந்த வசனம் உதவியாயிருக்கும்: ‘The bank is something more than men, I tell you. It’s a monster. Men made it, but they can’t control it’.
கடைசியாக, பொதுவுடைமைக் கொள்கையின் விவாதத்திற்குரிய செம்பொருளான மறுபகிர்வு இப்போது முதலாளித்துவத்தினால் தழுவப்பட்டிருக்கிறது. ஆனால் இது தாறுமாறான பிரித்தளிப்பு. வங்கிகளின் நிதி நிறுவனங்களின் பணநெருக்கடியை மீட்கப் பெரும் தொகையான பணத்தை மேற்கத்திய நாட்டு அரசுகள் நாணயச் சந்தையில் புரளவிட்டிருக்கின்றன. முதலில் அமெரிக்க அரசு 700 பில்லியன் டாலரை உட் செலுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து மற்றைய மேற்கத்திய அரசுகளும் பொதுப் பணத்தை அள்ளி வழங்கி, திவாலான பண நிறுவனங்களை நிலை நிறுத்தியிருக்கின்றன. சாதாரண மக்கள் வரியாகக் கட்டிய பணம் இப்போது பணக்காரரைப் பிணை எடுக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது தலைகீழான மறு பகிர்ந்தளிப்பு. இந்த நடவடிக்கை லெனின் எழுதிய ஒரு வாசகத்தை ஞாபகமூட்டுகிறது. லெனினின் கருத்துகளை நல்லவர்களின் சன்னிதானத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்வதற்குத் தயங்கும் இந் நாள்களில் அவரின் மதிக்கூர்மையான வாக்கியத்துடன் முடிக்கிறேன்: ‘Capitalists can buy themselves
out of any crisis, so long as they make the workers pay’. l