முடிவின்றித் தொடரும் துயரம்
ஈழப் படுகொலையின் 25வது ஆண்டை இலங்கை இனவெறி அரசு மிகக் கொடூரமான முறையில்
கொண்டாடிக்கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்கவும் அவர்களது
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கவும் நடத்தப்படும் போர் எனக் கூறிக்கொண்டு ஈழத்
தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொன்றுகுவிக்கிறது இலங்கை ராணுவம். 25
ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்துவரும் தமிழ் மக்கள் இப்போது
நடைபெற்றுவரும் தாக்குதல்களால் நிலைகுலைந்து மற்றுமொரு இடப்பெயர்வுக்கு
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். 2001, செப்டம்பர் 11க்குப் பிறகு ஈழத்
தமிழர்களைச் சந்தேகக்கண்கொண்டு நோக்கும் சர்வதேசச் சமுதாயம் புகலிடம் நாடிவரும் ஈழ
அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கத் தயங்கும் இச்சூழலில் தமிழக மக்களிடமிருந்து ஆதரவான
குரல்கள் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது.
1991இல் நடைபெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் இலங்கை இனச் சிக்கல்களைக் குறித்து வெளியிடப்படும் மிகவும் சாதாரணமான ஒரு கருத்துங்கூட ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவானதாகப் பார்க்கப்பட்டது. தமிழக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈழத்