மாற்றுப் பதிப்பகம்: பிரிக்க முடியாத மதிப்பீடுகள்
மாற்று என்ற சொல் ஆங்கிலத்தின் Alternative என்பதன் தமிழாக்கம்; பிரதானமான போக்கிற்கு மாற்று என்பது பொருள். தமிழில் இன்றைய காலகட்டத்தில் பிரதானமான போக்கு அல்லது மையப்போக்கு என்பது லாப நோக்கம் கொண்டது. லாப நோக்கம் கொள்வது பிழை அல்ல. லாபம் வளர்ச்சிக்குத் தேவையானது. லாபம் இன்றி எழுத்தாளனுக்குக் காப்புரிமை வழங்க முடியாது. ஆனால் மையப்போக்கு லாப நோக்கத்தை மட்டுமே கொண்டது. பண்பாடு பற்றி அது கவலை கொள்வதில்லை. மொழி பற்றிய அக்கறை அதற்கு இல்லை. மதிப்பீடுகள் இல்லை. செயல்பாட்டில் ஒரு செம்மை இருப்பதில்லை. தயாரிப்பில் கவனம் இருப்பதில்லை. உலகப் பதிப்பகச் சூழல் பற்றிய விழிப்புணர்வு அதனிடம் இல்லை.
தமிழ் வாசகன் பற்றிய இந்த மையப்போக்கின் கணிப்பு மட்டமானது. வாசகனுக்குப் பிழையான மொழி பற்றிய அக்கறை இல்லை என்பது அதன் கணிப்பு. மோசமான தயாரிப்பு போதுமானது என்பது மற்றொன்று. மொழிபெயர்க்கும் போது பிழை மலிந்திருப்பினும் குற்றமில்லை என்பதும் அதன் கணிப்பு. வணிகப் போக்கின் அக்கறையின்மைக்கு வணிகக் காரணமும் உண்டு. ஒரு நூலின் மீது கொள்ளும் அதிகப்படியான கவனம் செலவுகளை ஏற்படுத்தி லாபத்தின் விகிதத்தைக் குறைத்துவிடும். மேலும் நூல்களின் தயாரிப்பு வேகத்தைக் குறைத்து, ஆண்டின் மொத்த உற்பத்தியை அது மட்டுப்படுத்திவிடும்.
மாற்றுப் பதிப்பகத்திற்குப் பல பண்புகள் அவசியமானவை. எழுத்தாளனுக்கு மரியாதை. அவனுடைய உழைப்பிற்கு மரியாதை. அவனுடைய படைப்பாற்றலுக்கு மரியாதை. மொழி பற்றிய ஆழ்ந்த அக்கறை. தமிழகப் பதிப்பகச் சூழலின் இன்மைகள் பற்றிய கவலை. அதை நிறைசெய்வது பற்றிய கவனம், ஆர்வம். மாற்றுப் பதிப்பாளருக்குப் புத்தகம் ஒரு பண்டம் அல்ல. அச்சடித்த பக்கங்களின் தொகுப்பு அல்ல. ஒவ்வொரு நூலும் ஒரு படைப்பு. இந்தப் படைப்பின் உருவாக்கம் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
அதற்கு முன்னர் என்னுடைய பார்வையில் தமிழ்ச் சூழலில் எது மாற்றுப் பதிப்பகம் என்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மாற்றுப் பதிப்பகத்தின் சுழிகளாக இருக்க வேண்டியவை . . .
1. மாற்றுப் பதிப்பகம் எழுத்தாளனிடம் பண உதவி பெற்று நூல் வெளியிடக் கூடாது. இரண்டு காரணங்கள். ஒன்று: மாற்றுப் பதிப்பகத்தின் நோக்கம் தமிழ்ப் பண்பாட்டிற்குப் பங்களிப்பது. தமிழ் இலக்கியப் பண்பாடு மேன்மைபெற முதல் தேவை தம் எழுத்தில் வாழும் எழுத்தாளர்களின் உருவாக்கம். எழுத்தாளனைச் சுரண்டி நூல் வெளியிடுவது இதற்கு நேர்மாறானது. இரண்டு: மாற்றுப் பதிப்பகத்திற்குத் தான் வெளியிட விரும்பும் நூல் பற்றிய கறாரான பார்வை தேவை. தமிழ்ப் பண்பாட்டில் தான் ஏற்படுத்த விரும்பும் தாக்கம் என்ன என்ற அடிப்படையில் அந்தப் பார்வை அமைய வேண்டும். பணம் வாங்கி நூல் வெளியிடும்போது இந்தப் பார்வையைச் செயல்படுத்த முடியாது.
2. மாற்றுப் பதிப்பகம் வெகுஜனப் பண்பாட்டு நுகர்வுக்கான நூல்களை வெளியிடுவதாக அமையக் கூடாது. இந்தப் பார்வை வெகுஜனப் பண்பாடு பற்றிய அசூயையிலிருந்து பிறப்பது அல்ல. தமிழின் மையப்போக்கு என்பது வெகுஜன நுகர்வுக்கான நூல்களை வெளியிடுவதுதான். அந்தப் போக்கோடு போட்டியிடுவது மாற்றுப் பதிப்பகத்தின் பணி அல்ல. இதன் பொருள் மாற்றுப் பதிப்பகத்திற்கு மையப்போக்கோடு உறவு இல்லை என்பதும் அல்ல. இன்றைய மாற்றுச் செயல்பாடு வெற்றிகரமாகச் செயல்படும் போது மையப்போக்கால் அபகரித்துக்கொள்ளப்படும். மாற்றுப் பண்பாடு மையப் பண்பாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது அதன் வெற்றி. வெகுஜனப் பயன்பாட்டிற்கான நூல்களை வெளியிடுவதன்வழி அந்தத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. பின்நவீனத்துவத்தின் வருகைக்குப் பிறகு தமிழ்ச் சூழலில் ஏற்பட்டிருக்கும் வெகுஜனப் பண்பாடு பற்றிய மயக்கங்கள் மாற்றுப் பதிப்பாளருக்குத் தேவையில்லை. வெகுஜனப் பண்பாட்டையும் நசிவுப் பண்பாட்டையும் பிரித்துப் பார்க்க வேண்டியதும் அவசியம்.
3. மாற்றுப் பதிப்பகத்தின் தேர்வுகளில் ஒரு பார்வை வெளிப்பட வேண்டும். அந்தத் தேர்வுகள் எவ்வளவு பரந்துபட்டவையாக, பன்முகப்பட்டவையாக இருப்பினும், அதன் புத்தகப் பட்டியலில் ஒரு இசைவு வெளிப்பட வேண்டும். முன்னர் அரசு கால்நடை மருத்துவமனையில் ஒரு களம் இருக்கும். மாடுகளைக் கட்டிப்போட ஒரு பக்கம் மட்டும் திறந்திருக்கும் ஒரு கம்பிக்கூண்டு இருக்கும். ஒரு பொலிவுடைய காளை இருக்கும். மாடுகளைச் சினைப்படுத்த விரும்புகிறவர்கள் குறிப்பிட்ட தொகையை அடைத்து விட்டால், காளை கட்டவிழ்க்கப்படும், மேளம் கொட்டப்படும், காரியமும் கைகூடிவிடும். மாற்றுப் பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்குமான உறவு இத்தகையதாக இருக்க முடியாது.
4. மாற்றுப் பதிப்பகத்தின் வழி புதிய எழுத்து, புதிய கருத்து, புதிய கலை, புதிய எழுத்தாளன் ஆகியவை வெளிப்பட வேண்டும்.
5. மாற்றுப் பதிப்பகத்தின் செயல்பாடுகளிலிருந்து மதிப்பீடுகளைப் பிரிக்க முடியாது. வாசகனை ஏமாற்றும் எந்தச் செயல்பாட்டையும் அவர்கள் மேற்கொள்ள முடியாது. வாசகனை ஏமாற்றும் அறிவிப்புகள், செயல்பாடுகள் மாற்றுப் பதிப்பகத்தின் லட்சணம் அல்ல. எழுத்தாளனுக்கு மாற்றுப் பதிப்பகம் அளிக்கும் மரியாதை அவனுடைய படைப்பாற்றல் மற்றும் சிந்தனை வளம் சார்ந்தது. அவன் கொண்டுவந்து குவிக்க இருக்கும் வசூல் அடிப்படையிலானது அல்ல. எழுத்தாளனுக்குக் காப்புரிமை அளிப்பது என்பது மாற்றுப் பதிப்பகத்தின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
6. மாற்றுப் பதிப்பகம் காப்புரிமையை மட்டுமல்ல எழுத்தாளனின் அறிவுடைமையையும் மதிக்க வேண்டும். வெகுஜனப் பண்பாட்டில் வெளிவரும் பெரும்பான்மையான நூல்கள் அறிவுடைமை மீறலின் வழி உருவாக்கப்படுபவை. சுயமான ஆய்வு, சுய அனுபவம், சுயசிந்தனை ஆகியவற்றை வளர்த்தெடுப்பது, ஊக்குவிப்பது பற்றிய எந்தக் கடப்பாடும் இன்றி அதிகமும் ஆங்கில நூல்களிலிருந்து உருவப்பட்ட செய்திகளிலிருந்து தயாரிக்கப்படுபவை பெரும்பான்மையான வணிக நூல்கள். ஒரு நூலை அப்படியே நகல் செய்வதுதான் தமிழில் திருட்டாகப் பார்க்கப்படுகிறது. பல மூலங்களிலிருந்து திருடி உருவாக்கப்படுபவற்றைத் திருட்டாக நிறுவுவது கடினம். இணையத்தின் வருகை இத்தகைய நூல் பண்ட உற்பத்தியைத் துரிதப்படுத்தியிருக்கிறது. மாற்றுப் பதிப்பகங்கள் இந்தப் போக்கை முற்றாகப் புறமொதுக்க வேண்டும். 'டவுன் லோட்' இலக்கியத்தையும் 'டவுன் லோட்' எழுத்தாளர்களையும் அண்டவிடாத உறுதிப்பாடு அவற்றிடம் இருக்க வேண்டும்.
n
ஒரு நூலின் படைப்பாக்கம் பற்றிப் பேசும்போது 'காலச்சுவ'டின் இன்றைய நிலை மனநிறைவு தருவதாக இல்லை என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். மனத்தில் உருவாகும் எண்ணங்களைச் செயல்படுத்த பொருளாதாரத் தட்டுப்பாடும் மனிதவளத் தட்டுப்பாடும் கடுமையாக உள்ளன. பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு நூலும் ஒரு படைப்பாக வெளிவர இவை தடைகளாக உள்ளன. இந்தச் சுயமதிப்பீட்டுடன் 'காலச்சுவ'டில் நூல்கள் உருவாக்கம் பெறும் நிலைகளைப் பார்க்கலாம்.
1. நூல்படிகள் இரண்டு விதங்களில் கிடைக்கப் பெறுகின்றன. கேட்டுவாங்குவது, அனுப்பப்படுவது. அனுப்பப்படும் நூல்கள் அவற்றின் பொருள் சார்ந்து 'காலச்சுவ'டின் தேர்வுக்குழுவின் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன. தேர்வுக்குழு என்று இறுக்கமான வட்டம் எதுவும் இல்லை. நூல் பொருளும் சந்தர்ப்பமுமே தேர்வாளர்களைத் தீர்மானிக்கின்றன. பொதுவாக விருப்பு வெறுப்பு மனோபலம் உள்ளவர்களைத் தவிர்த்து, பரந்துபட்ட பார்வையும் நிதானமான போக்கும் கொண்டவர்களுக்கே நூல்படிகள் அனுப்பப்படுகின்றன. பல சமயங்களில் இரு தேர்வாளர்களின் கருத்துகள் வேண்டப்படுவதும் உண்டு.
2. தேர்வுபெற்ற நூல் கணினியில் ஏற்றப்படுகிறது. கைப்படியுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்ட பிறகு முதல் மெய்ப்பு எடுக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் நூல் மெய்ப்பு மட்டும் பார்க்கப்பட்டால் போதுமா அல்லது எடிட் செய்யப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். மொழிநடை சார்ந்தும் உள்ளடக்கம் சார்ந்தும் ஒரு நூலுக்கு எடிட்டிங் தேவைப்படலாம். அந்தத் தேவையை எழுத்தாளர்களுடன் கலந்தாலோசித்து இணைந்து பூர்த்திசெய்வது முக்கியம். பல சமயங்களில் எடிட்டிங் பணிக்குத் தயக்கத்துடன் சம்மதிக்கும் எழுத்தாளர்கள் இணைந்து செயல்படத் தொடங்கியதும் உற்சாகமடைவது உண்டு. எடிட்டிங் தேவைப்படும் ஒரு பிரதி எடிட் செய்யப்படுவதை எழுத்தாளர்கள் மறுத்தால் பதிப்பாளர் அதைப் பிரசுரிக்க மறுக்கலாம். ஆனால் எழுத்தாளரை மீறி எடிட் செய்யக் கூடாது.
3. 'காலச்சுவடு' எடிட்டர்களை எவ்வாறு தேர்வு செய்கிறது? 'காலச்சுவ'டின் எடிட்டர்கள் தமிழில் புலமை மட்டும் கொண்டவர்களாக இருப்பதில்லை. அத்தோடு நவீனத் தமிழிலக்கியப் பரிச்சயமும் 20ஆம் நூற்றாண்டின் இலக்கியப் பிரதிகளின் வழி உருவாகிவந்திருக்கும் நவீன இலக்கிய மொழி பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் இலக்கணம், நடை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் 'காலச்சுவடு' குறைத்து மதிப்பிடுவதில்லை. ஆனால் எடிட்டரின் பணி இலக்கணம் என்ற புனித தேவதைக்குப் பணிவிடை செய்வதல்ல. பிரதியை வாசகனின் வாசிப்புக்கு ஏற்றதாகத் துலக்கம்பெறச் செய்வது. பிரதியின் உள்கட்டுமானத்திற்கு ஏற்ப இலக்கண விதிகளின் நெகிழ்ச்சியை அது வேண்டும்போது அத் தேவையை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் எடிட்டருக்கு வேண்டும். இலக்கணத்திற்காகப் பிரதியை வெட்டலாகாது. நவீனக் கவிதையை அறியாத எடிட்டருடன் கவிஞரும் புனைவு மொழியை அறியாத எடிட்டருடன் படைப்பாளியும் நவீனச் சிந்தனையோடு பரிச்சயமற்ற எடிட்டருடன் கட்டுரையாளரும் பணியாற்ற முடியாது. எடிட்டர்களின் தேர்வு படைப்பை முன்னிறுத்திச் செய்யப்பட வேண்டும். படைப்பை மட்டுமல்ல, படைப்பாளியை முன்னிறுத்தியும் செய்ய வேண்டும். எழுத்தாளருக்கும் எடிட்டருக்கும் சரியான ஒத்திசைவு இல்லையெனில் எடிட்டிங் பணி துலக்கம் பெறாது.
4. எடிட்டிங் மூலம் 'காலச்சுவடு' அடைந்த பயன் என்ன? எடிட்டிங் பணியில் முதல் பயன் பெறுவது எழுத்தாளன். அவன் படைப்பு எடிட்டிங் வழி துலக்கம் பெறுகிறது. வாசகனுடன் அவன் உறவு வலுப்பெறுகிறது. வாசகனும் பயன் பெறுகிறான். அவனுடைய வாசிப்புக்கு எடிட்டிங் ஒத்திசைவை ஏற்படுத்துகிறது. பிரதிக்கும் அவனுக்கும் நெருக்கத்தைக் கூட்டுகிறது. எடிட்டிங் வழி மொழியும் பயன்பெறுகிறது. அதில் கலக்கும் மாசு குறைகிறது. நடை கூர்மைப்படுகிறது. பதிப்பகமும் பயன்பெறுகிறது. முதலில் நன்றாக எடிட் செய்யப்பட்ட பிரதி ஏற்படுத்தும் மனநிறைவு. இரண்டாவதாக எழுத்தாளனுக்கும் பதிப்பகத்திற்குமான உறவு வலுப்பெறுகிறது. ஒருமுறை எடிட்டிங்கின் சிறப்பை ருசித்துவிட்ட எழுத்தாளன் அதை மறப்பதில்லை, மறுப்பதுமில்லை.
எடிட்டிங் தமிழில் மாற்றுப் பதிப்பக அடையாளங்களில் ஒன்றாக வேண்டும். வணிகச் சூழல் மொழியைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி: நாய் விற்ற காசு குரைக்குமோ என்பதுதான். நாய் விற்ற காசைக் குரைக்கத் தூண்டுவதுதான் மாற்றுப் பதிப்பகத்தின் பணி. தமிழ்ப் புத்தகப் பண்பாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதே மாற்றுப் பதிப்பகத்தின் தொலைநோக்காக இருக்க வேண்டும். றீ
(31.08.2008 அன்று அசிசி ஆஸ்ரமம், பாம்பன்விளையில், காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய சுந்தர ராமசாமி நினைவு எடிட்டிங் பயிலரங்க உரையின் கட்டுரை வடிவம்.)