லெ க்ளேஸியோ: ஒரு புதிய மானுடத்துக்கான தேடுதல் வேட்டை
2008ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு ழான்-மரி குஸ்த்தாவ் லெ க்ளேஸியோ (Jean-Marie Gustave Le Clézio) என்ற நீண்ட பெயருக்குச் சொந்தக்காரரான பிரெஞ்சு எழுத்தாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கு இரண்டெனப் பெயர்கள் (ழான்-மரி, குஸ்த்தாவ்) அவருக்கு உண்டென்றாலும், லெ க்ளேஸியோ (Le Clézio) என்ற குடும்பப் பெயரிலேயே சுருக்கமாகப் பிரெஞ்சு இலக்கிய உலகில் இவர் அறியப்பட்டிருக்கிறார். முதல் நாவல் 'Le Procès-Verbal' (The Interrogation) 1963ஆம் ஆண்டு வெளிவந்தபோது இவருக்கு இருபத்துமூன்று வயது. அந்த ஆண்டிற்கான ரெனொதொ இலக்கியப் பரிசினை (Prix Renaudot) அந்நாவலுக்காக வென்றார். அன்றிலிருந்து கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அயர்வுறாமல் எழுதிவருகிறார். இன்றைய தேதியில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளென்று ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகள். நோபெல் பரிசுக்கு முன்பாகப் பிரெஞ்சு இலக்கிய உலகத்தின் ஆறு முக்கியப் பரிசுகளை வென்றிருக்கிறார்.
சராசரி பிரான்சு நாட்டுக் குடிமகனிடம் லெ க்ளேஸியோவைத் தெரியுமாவென்று கேட்டால், ஓரளவு புவியியல் ஞானம் இருக்குமானால் பிரெத்தோன் மாகாண