தாழ்ப்பாள்களின் அவசியம்
அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம்.
ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வரவேற்பு அறையில் விருந்தாளிகள் உட்கார்ந்து சம்பாசணை செய்யும்போது அவர்களுடைய குளிர்சாதனப் பெட்டியும் கலந்துகொண்டத