உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நவீன அறிவியல் நமக்களித்த ஒரு தொழில்நுட்பத் தீர்வுதான் (technological solution) பசுமைப் புரட்சி. அப்படியென்றால், உணவுப் பிரச்சினை பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை என்ற முடிவில்தான் இப்படி ஒரு தீர்வை முன்வைத்திருக்க வேண்டும். அந்தத் 'தீர்வின்' பலன்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது அடுத்த கட்டம். முதலில், இந்த முடிவின் அடிப்படை அனுமானங்களைக் கேள்விக்குட்படுத்தப்போகிறோம்.
இதுவரையில் நாம் ஆழமாகப் பார்த்ததுபோல, இந்திய மண் வளமிழந்தது உண்மைதான். போதிய (எருவாகிய) சாணம் கிடைக்காமல், மண்ணுக்குச் சேர வேண்டிய பிண்ணாக்குகள் ஏற்றுமதியாகி, கால்நடைகளுக்குப் போதிய உணவில்லாமல், பயிர் சுழற்சி கைவிடப்பட்டு, கால்நடைகள் லட்சலட்சமாய் மாண்டுபோய், மேல்மண் அரித்துக்கொண்டு, கரைச்சுவர்களினால் நிலங்கள் உப்பாகி, கால்வாய்களும் கிணறுகளும