தேர்தல் ஜனநாயகம் 2014
நடாளுமன்றத் தேர்தலில் தான் பெற்றிருக்கும் அமோக வெற்றியை நரேந்திர மோடியே எதிர்பார்த்திருக்கமாட்டார். இந்த வெற்றி அவரது ஆதரவாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒரே சமயத்தில் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மோடியை முன்நிறுத்தித் தேர்தலைச் சந்தித்த பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறுவோம் என்று நம்பியதே தவிர ‘வரலாறு காணாத வகையில்’ வெற்றி பெறுவோம் என்று கிஞ்சித்தும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. கட்சிக்குள் மோடியின் விமர்சகர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், எம்.எம்.ஜோஷி போன்றவர்கள் தேர்தல் நாட்களில் மோடி மீது காட்டிய இளப்பத்தையும் வெற்றிக்குப்பின் காட்டும் தழுதழுப்பையும் பார்த்த யாரும் இதை எளிதில் உணர முடியும். மோடி எதிர்ப்பாளர்களும் ஒருவேளை அவர் வெற்றி பெற்று ஆட்சியமைக்கலாம் என்று ஊகித்திருந்தார்களே தவிர தங்கள் அடையாளத்தையே காணாமல் போக்கடிக்கும் வெற்றியைப் பெறுவார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மோடி அலை என்பது ஒரு மாயை என்று கவனக் குறைவாக இருந்ததும் அதனால்தான்.
இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சிக்குக் கிடைத்திருக்கும்
கேள்விக்குட்படுத்த முடியாத வெற்றி இது. பெரும்பான்மையான வட இந்திய மாநிலங்களின்
எதிர்க்கட்சிகளுக்குப் பெயரளவுக்குக்கூட வெற்றி கிடைக்கவில்லை. இதைத் தேர்தல் வெற்றி,
மக்கள் தீர்ப்பு என்று குறிப்பிடுவதைவிடவும் நமது ஜனநாயக அமைப்பின் விநோதம் என்றே
சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் முன்னணியின் பத்தாண்டுக் கால ஆட்சியின் துரோகங்கள், கார்ப்பொரெட்டுகளின் பங்கு, ஊடகங்களின் இடைவிடாத பரப்புரை, வளர்ச்சியை அவாவும் மக்களின் தேர்வு என்று மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதையொட்டிய விவாதங்களும் அனல் பறக்கின்றன. 31 விழுக்காடு மக்களே நரேந்திர மோடியை ஆதரித்தவர்கள், எஞ்சியவர்கள் அவரை விரும்பாதவர்கள் எனக் கணக்குகள் சகிதம் வாதிக்கப்படுகின்றன. இதையே ஜனநாயக அமைப்பின் விநோதம் என்று அழைக்கிறோம். ஆனால் எஞ்சிய 69% மக்களின் சமாதான சக வாழ்வுக்கும் பொறுப்பேற்பவராகவே நரேந்திர மோடியை நமது அரசியல் அமைப்பு அங்கீகரித்திருக்கிறது.
பிரதமர் பதவிக்குத் தனது பெயர் முன்மொழியப்பட்ட பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் நரேந்திர மோடி அளித்திருக்கும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதைப் பொறுத்தே அவரது எதிர்காலமும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டின் எதிர்காலமும் அமையவிருக்கிறது. மோடியின் இடம் மூன்று செயல்பாடுகளில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொருத்தே பொருள்படவிருக்கிறது. அவருக்கு இன்று அளிக்கப்பட்டிருக்கும் ‘மீட்ப’ரின் பிம்பமும் இந்த மூன்று செயல்பாடுகளையொட்டியே கட்டமைக்கப்பட்டது. எனவே இவை முக்கியமானதாகின்றன.
2002 குஜராத் படுகொலைகளுக்கு அவரே மூல காரணம் என்ற கறை அவர்மீது படிந்துள்ளது. அதை நீக்கிக்கொள்ளும் வகையில் பொதுமன்னிப்புக் கோரும் தார்மீக நடவடிக்கைக்கு அவர் இதுவரை ஆயத்தமானதே இல்லை. குறைந்தபட்சம் அந்த நரவேட்டைக்கு வருத்தம் தெரிவித்ததுகூட இல்லை. அவருக்குத் தத்துவப் பின்னணியாக இருக்கும் இந்து அடிப்படைவாத அமைப்புகளின் கட்டளையை மீறி அவர் செயல்படுவது முதலாவது நடவடிக்கை. ஏனெனில் அவரது மாபெரும் வெற்றி மதச் சிறுபான்மையினரைப் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. மிகச் சிலர் தற்காப்பு என்ற பெயரில் மீண்டும் அறிவீனமாகப் பயங்கரவாதத்தை நாடக்கூடும். அந்த அச்சத்தைக் களையும் பொறுப்பு பிரதமர் மோடிக்கு இருக்கிறது.
வளர்ச்சியின் நாயகனாக உருவகப்படுத்தப்பட்டவர் மோடி. இந்த வெற்றிக்கும் அந்தப் படிமம் உதவியிருக்கிறது. ‘குஜராத் மாதிரி’ வளர்ச்சியின் முழுப் பயன்கள் சென்று அடைந்திருப்பது சாதாரண மக்களை அல்ல. மாறாகப் பெரும் முதலீட்டு நிறுவனங்களையே. நாடு முழுமைக்கும் அந்த வளர்ச்சியையே தீர்வாகக் கருதினால் அது பெரும்பான்மை மக்களை வறுமைக்கும் வாழ்நிலையின் கீழ் மட்டத்துக்கும் தள்ளிவிடும். தான் முன்வைக்கும் வளர்ச்சி யாருக்கானது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் நரேந்திர மோடிக்கு உள்ளது.
மோடியின் அமோக வெற்றி பன்முகத் தன்மையுள்ள இந்திய வாழ்க்கையை ஒற்றைத்தன்மையானதாக
மாற்றும் அளவுக்கு உள்ளது. மதம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் வேறுபட்ட இந்தியச்
சமூகங்களை இதுநாள்வரை ஒன்றிணைத்தது அதன் மதச் சார்பின்மையும் வேற்றுமையில் ஒற்றுமை
காணும் மானிட இணக்கமும்தான். தமது அகண்ட பாரதக் கனவை நடைமுறைப்படுத்தும்
திட்டத்துக்காக அடிப்படைவாத அமைப்புகள் முன்னிலைப்படுத்தியிருக்கும் கருவியே
நரேந்திர மோடி என்பது ரகசியமல்ல. அந்த நிலையில் மோடியின் செயல்பாடு என்னவாக
இருக்கும் என்பதே முதன்மையான கேள்வி. ஐந்தாண்டுகளுக்கு இந்திய மக்களின் சுக
துக்கங்களை நிர்ணயிக்கும் வாய்ப்பு நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்
உருவாக்கப்போவது பாரதமா? இந்தியாவா?
திமுக ஆட்சியில் நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தல் நமது தேர்தல் ஜனநாயத்தின் செயல்முறைகளில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று காலச்சுவடு தலையங்கத்தில் (பிப்ரவரி 2009) சுட்டிக்காட்டினோம். இந்த இடைத்தேர்தலை அமெரிக்க அரசு கவனித்து இதே கணிப்பைப் பதிவு செய்தமை பின்னர் விக்கிலீக்ஸ் வழி தெரியவந்தது. அந்தத் தலையங்கத்தை இவ்வாறு முடித்திருந்தோம்.
‘திமுகவின் குடும்ப அரசியல்வாதிகள் திருமங்கலத்தின் வழி இந்திய ஜனநாயகத்திற்குச் சொல்லும் செய்தி, ஊழலில் மக்களைப் பங்காளிகளாக மாற்றுங்கள் என்பதுதான். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதைவிட ஒரு மோசமான செய்தி இருக்க முடியாது.’ இதன் பின்னர் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா திமுக ஊழலில் மக்களைப் பங்காளிகளாக மாற்ற முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். ஆனால் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியும் அரசும் தமிழகத்தைத் திருமங்கலமாக்குவதில் பெருமளவுக்கு வெற்றி கண்டுள்ளன. ஊழலில் மக்களைப் பங்காளி ஆக்கும் திமுகவின் திருமங்கலம் திட்டத்தை இன்றைய அரசு முழுத் தமிழகத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது. இதைச் செயல்படுத்தத் தமிழகக் காவல்துறை முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது என்பது அரசியல் நோக்கர்களின் உறுதியான தெளிவு. குறைந்த தொகை, நடைமுறைப்படுத்தியதில் ஊழல் - ஊழல் பணத்திலேயே ஊழல்! - எனப் பல ‘குறைபாடுகள்’ இருந்தாலும் இந்தத் திட்டம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஆக விரிவான, ‘காசுக்கு ஓட்டு’ வாங்கும் முயற்சி என்பது உறுதி. 2009 பாராளுமன்றத் தேர்தலில் திமுக மேற்கொண்டதைவிடவும் மிக விரிவானது இது. இதைவிட விரிவான திட்டத்தை, தமிழகத்தின் ஒவ் வொரு குடிமகனுக்கும் பல ஆயிரங்கள் வழங்கி வெற்றி பெறும் திட்டத்தை, திமுக 2012 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ளத் தயாரான நிலையில் தேர்தல் கமிஷன் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்துவிட்டது. அன்று ஆட்சி மாறும் சூழ்நிலையில் தேர்தல் கமிஷனால் தமிழக அதிகார வட்டத்தைச் செயல்படத் தூண்ட முடிந்தது. இம் முறை இன்னும் சில ஆண்டுகள் ஆட்சி பாக்கியிருக்கும் நிலையில் அதிகாரவர்க்கம் ஆளுங்கட்சிக்குச் சார்பாகவே இயங்கியது.
உண்மையில் அதிமுகவுக்கு வெற்றிப்பெற இந்தப் பணப் பட்டுவாடாவின் தேவை இருக்கவில்லை. வெற்றியின் வீச்சு இதைத் தெளிவுபடுத்துகிறது. சில தொகுதிகளில் கணிசமான தொகையைப் பட்டுவாடா செய்த காங்கிரஸ், திமுக, பாஜக கட்சிகள் வெற்றி பெற முடியவில்லை. கடைசிக் கட்டத்தில் வந்த ஊடகங்களின் தேர்தல் கணிப்புகள் ஏற்படுத்திய பதற்றமே அதிமுக பணப்பட்டுவாடாவில் இறங்கக் காரணமாக இருந்திருக்கலாம். ஒருக்கால் வெற்றியின் இடைவெளியை அதிகரிக்க பணப்பட்டுவாடா உதவியிருக்கலாம். 2ஜி ஊழலில் சேர்ந்த கோடிகளில் பங்குதர திமுக தயாரில்லை என்ற மக்களின் ‘அறச்சீற்ற’மும்கூட திமுகவின் படுதோல்வியை உறுதிப்படுத்தியிருக்கலாம். காலச்சுவடு தலையங்கத்தில் (ஜனவரி 2014) “தமிழக அரசியல் சூழல் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகத் திரும்பி வருகிறது. நால்முனைப் போட்டியை நோக்கியே அரசியல் நகர்வு ஏற்பட்டுவருகிறது. ஓட்டுகள் சிதறச் சிதற அதிமுக 30லிருந்து 40 சீட்டுகளை நோக்கி நடைபோடும்” என எழுதியதை இங்கே கவனத்தில் கொள்ளலாம்.