ஒரு தற்கொலை: சில குறிப்புகள்
உறக்கமும் உறங்க முடியாத மனதின் தவிப்பும் கலந்த இரவு. நீர்க்குமிழி ஒன்று மூக்கிலிருந்து வெளியேறியது. மெல்ல மெத்தென்று தண்ணீருள் மூழ்கும் லேசான உடல். பயமற்று மூழ்குதல் எவ்வளவு அழகு. இச்சையின் மடிப்புகளைப் போல நீரின் பாதை. ஏரியின் மடி கடல்பாசிபோலச் சில்லென்று மிருதுவாய் உடலை வாங்கிக் கொண்டது.
மீன்குஞ்சுகள் சிதறி ஓடி மீண்டும் நெருங்கிவந்து தேகமெங்கும் முத்தமிட்டன. உடைகளற்ற வெற்றுடல்மீது நீர்க்கொடிகள் ஓடிச் சிலிர்ப்பேற்படுத்தின. சூரியன் எங்கோ உலகின் எதிர் எல்லையில் உதிக்க, உக்கிரமான அந்தக் கிரணம் வெளிதாண்டி, வான்தாண்டி நீர் ஊடுருவி ஆழத்தில் மூடியிருந்த விழிகளைத் தொட மெல்ல விழித்தது உடல். ஏரியின் மடியில் திளைத்துக் கிளர்ந்து நீந்துகிறது உடலைக் கொஞ்சும் கொடிகளுடன் விளையாடி... வாயில் வெளியேறுகிறது நீர்க்குமிழி...
மருத்துவமனைக்குப் பின்புறம் மரங்களால் சூழப்பட்ட பிண வறை. மாலை வெயிலில் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. சிமெண்டுத் தூண்கள் தாங்கிய கருப்புக் கடப்பாக் கற்களாலான மூன்று பெஞ்சுகள் மரத்தடியில். பத்துப் பதினைந்து பேர் சிதறி நின்றிருந்தார்கள். புதிதாய் வரும