நரேந்திர மோடி - இடம் பொருள் ஏவல்
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முழுநேர அரசியலில் இருக்கும் எனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிந்த போது நரேந்திர மோடி பிரதமராகக்கூடிய வாய்ப்புகள் பற்றிப் பேச்சு வந்தது. அடுத்த முறை பாரதீய ஜனதா கட்சியிலிருந்து யாருக்காவது பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது எனில் அது மோடியே என்று நண்பர் வாதிட்டார். அதை முழுமையாக மறுத்த நான் மோடி போன்றதொரு தலைவர் ஒருக்காலும் இந்தியாவின் பிரதமராக முடியாது என்று பின்வரும் காரணங்களை அடுக்கினேன்.
2002 கலவரத்தில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருக்கும் பங்கு அவருக்கு மிகப் பெரும் தடையாக இருக்கும். பாஜக, சிவசேனா, அகாலி தளம் கட்சிகள் தவிர்த்த பிற கட்சிகள் சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காகவாவது அவரை நிராகரிக்கும். மேலும் அவர் சர்வாதிகாரப் போக்குக் கொண்டவர். இயக்கத்தை, கட்சியை விடத் தன்னையே முன்னிறுத்துபவர். ஆகவே அவர் பாஜகவின் அகில இந்தியத் தலைவராகவோ அல்லது பிரதமராகவோ ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பாது. மேலும் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளின் முக்கியத்துவத்தை மோடி தனது மாநிலத்தில் பெருமளவு குறைத்துவிட்டார். ஆகவே சங் பரிவார அமைப்புகள் அவர் ஆதிக்கம் பெறுவதை விரும்பாது. மேலும் பாஜகவிலேயே பல தலைவர்கள் அவரை அஞ்சும், வெறுக்கும் நிலையில் அவர் அக்கட்சியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட மாட்டார். ஒருக்கால் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கின் காரணமாகக் கட்சியின் தலைமையைக் கைப்பற்ற முடிந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவது என்பது அடுத்த சில பத்தாண்டுகளுக்கு நடக்கப்போவதில்லை. ஆக, ஆர்.எஸ்.எஸ்.இன் விருப்பமின்மை, பல பாஜக தலைவர்களின் எதிர்ப்பு, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு, பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலை என இத்தனை தடைகளையும் தாண்டி மோடி பிரதமராக வேண்டும் என்றால் ஏதாவது அதிசயம்தான் நடக்க வேண்டும் என்றேன்.
இத்தனையையும் பொறுமையாகக் கேட்ட நண்பர், ‘அரசியலில் ஓரிரு ஆண்டுகளே நீண்ட காலம். அதற்குள் என்னென்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. மோடி செயல்திறன் மிக்கவர். பிரதமர் கனவைத் தன்னுள் கொண்டிருப்பவர். தனது கனவுகளை நனவாக்கிக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். ஆகவே அடுத்த பத்தாண்டுகளுக்குள் மோடி பிரதமராவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன’ என்றார். பார்க்கத்தானே போகிறோம் என்று விவாதத்தை முடித்துக்கொண்டேன். ஆனால் இவ்வளவு விரைவில் மோடி பிரதமராவதைப் பார்க்கப்போகிறேன் என்று ஒரு கணமேனும் நினைத்ததில்லை.
சரியான மனிதன்; சரியான இடம்; சரியான நேரம் என்பது சிலரின் பிரம்மாண்டமான, அசாதாரணமான வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லப்படும் சூத்திரம்: தர்க்கபூர்வமாக யோசித்துப் பார்க்கிறபோது இந்தச் சூத்திரத்திற்குப் பொருத்தமான மனிதராக மோடி இருப்பது தெரிகிறது.
சரியான மனிதன்
கூட்டணி கட்சிகளைப் பொருத்தவரை எது மோடி பிரதமராகப் பெரும் தடையாக இருந்திருக்குமோ
அதுவே சங் பரிவாரத் தொண்டர்களிடையே அவரைத் தன்னிகரற்ற தலைவராக உயர்த்தியது. 2002
கலவரத்தை உடனடியாக ஒடுக்கத் தவறியதற்காக மன்னிப்புக் கேட்காவிட்டாலும் அதில்
ஏற்பட்ட ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்காக வருந்துவதாகக்கூட அவர் ஒருபோதும்
கூறவில்லை (எனது காரில் ஒரு நாய்க்குட்டி அடிப்பட்டு இறந்தால்கூட வருந்துவேன் என்று
சமீபத்தில் ராய்ட்டர் நிருபரிடம் கூறியதைத் தவிர்த்து). பாபர் மசூதியை
இடிப்பதற்காகவே ஒரு ரதயாத்திரையை நடத்தி, அயோத்தியில் பெரும் கூட்டத்தைக் கூட்டிய
அத்வானி, மசூதி இடிக்கப்பட்ட அந்த நாள் எனது வாழ்க்கையின் வருத்தம் மிகுந்த நாள்
எனப் போலித்தனமாகப் பேசியதோடு ஒப்பிட்டால் மோடி மிகவும் வேறுபட்டவர் என்பது
தெரியும். மோடியின் இந்த ‘உறுதியான’ அணுகுமுறை அவர் எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்.
சித்தாந்தத்தில் ஊறியவர், உறுதியானவர் என்பதையும் இந்தக் கலவரம் அவரது நேரடியான
அல்லது மறைமுகமான ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது என்பதையும் சங் பரிவாரத்தின்
தொண்டர்களுக்குத் தெளிவாக உணர்த்தியது. இதன் விளைவாக சங் பரிவாரத்தின் வேறு
எந்தவொரு தலைவரையும்விட மோடி நாடு முழுவதிலுமுள்ள ஹிந்துத்துவா தொண்டர்களுக்கும்
அனுதாபிகளுக்கும் அணுக்கமானவரானார். ஆகவே 2002 கலவரமே இவரை வாஜ்பாய், அத்வானிக்கு
அடுத்தபடியாக நாடு முழுவதிலும் உள்ள பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின்
ஒருமித்த ஆதரவைப் பெற்ற ஒரே தலைவராக்கியது. விளம்பர யுக்திகளால் தனது சாதனைகளை
ஊதிப் பெருதாக்கிப் பரப்புவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் குஜராத்தில் பின்பற்றிய
சிறு கும்பல் முதலாளித்துவம் (குரோனி கேப்பிடலிஸம்) மற்றும் கொள்ளைக்கார
முதலாளித்துவம் (அமெரிக்காவின் 19ஆம் நூற்றாண்டு ராபர்பேரன் வகை) அவரைப் பெரு
நிறுவனங்களின் உள்ளம் கவர்ந்த கள்வனாக்கியது. இந்த வகைகளில் அவர் ஒரு ‘சரியான
மனிதர்’.
சரியான இடம்
குஜராத் போன்ற தொழிற்துறையில் நன்கு வளர்ச்சியடைந்த, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
முதலீடுகள் அதிகம் வர வாய்ப்புள்ள ஒரு மாநிலத்திற்கு முதல்வராக இருக்க அவருக்குக்
கிடைத்த வாய்ப்பு. அதன் மூலம் அவர் தன்னைப் ‘பொருளாதார வளர்ச்சிக்கான மனிதன்’ என்ற
பிம்பத்தை எழுப்பிக்கொள்ள முடிந்தது. (இவரது அரசியல் குருவான கேசுபாய் படேல்
முதல்வராக இருந்தபோது அவரைக் கீழிறக்க இவர் பயன்படுத்திய துருப்புச்சீட்டு
ஹிந்துத்துவா. கேசுபாய் படேல் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்,
ஹிந்துத்துவா கொள்கைகளை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே மோடி
தில்லியிலிருந்த தலைவர்களிடம் வைத்த முக்கியக் குற்றச்சாட்டு.) ஒரு அகில இந்தியக்
கட்சியில் இருந்ததும் தொழிற்துறையில் முன்னேறிய மாநிலம் ஒன்றில் இருந்ததும் அவர்
சரியான இடத்தில் இருந்ததைக் காட்டுகிறது.
சரியான நேரம்
2001 அக்டோபரில் கேசுபாய் படேலுக்கு எதிராக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல்வரான மோடி 2002 கலவரத்தால் குஜராத் மக்களிடையே உயர்ந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பி சட்டசபையைக் கலைத்துவிட்டு 2002 ஜூலை மாதம் நடத்திய தேர்தலில் பெரும் வெற்றி பெற்று அரச நீதியிலிருந்து வழுவிவிட்டதாகத் தன்னைக் குற்றம்சாட்டித் தனது பதவி விலகலைக் கோரிய வாஜ்பாய்க்குப் பாடம் கற்பித்தார். அதன் மூலம் 2012இல் மூன்றாம் முறையாகத் தேர்தெடுக்கப்படும் முதல் பாஜக முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார். ஓரிரு ஆண்டு தாமதித்திருந்தாலும் மோடிக்குப் போட்டியாக ஷிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் ராமன் சிங் உருவாகியிருப்பார்கள். மேலும் பெரும் ஊழல்கள், விலைவாசி உயர்வின் காரணமாக ஐ.மு.கூ. மக்களின் அதிருப்தியைப் பெருமளவு சம்பாதித்திருந்த வேளையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மற்றொரு சரியான நேரம். 2009 தேர்தலில் இதே வாய்ப்பு மோடிக்குக் கிட்டியிருந்தாலும் அன்றைய தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இருந்திருக்காது. ஆக 2012இல் மூன்றாம் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பெற்றதும் 2014இல் பிரதமர் வேட்பாளராக இருக்க வாய்ப்பு பெற்றதும் சரியான நேரங்கள்.
ஆகச் சரியான மனிதன், சரியான இடம் மற்றும் சரியான நேரம் என்ற கலவையே மோடியை இன்று பிரதமராக்கியிருக்கிறது. ஆனால் வெற்றி பெற்றவன் புத்திசாலி என்று நினைக்கும் சமூகத்தில் அவர் இன்று அசாதாரணமான மனிதராகக்கூட அல்ல அதிமனிதராகக் காட்டப்படுகிறார். வறுமை மிஞ்சி, தாழ்வுற்று, பாழ்பட்டிருக்கும் இந்திய தேசத்தை மீட்க வந்த ரட்சகராக, எம்மானாக ஊடகங்களால் சித்திரிக்கப்படுகிறார். அவரது ‘குஜராத் மாதிரி’ இந்தியாவின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வாகக் காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு உத்ராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானவர்கள் எல்லாச் சொத்துக்களையும் இழந்து இடம்பெயர்க்கப்பட்டனர். அப்போது சில்வெஸ்டர் ஸ்டாலன் பாத்திரமான ராம்போவை ஏற்ற மோடி வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான குஜராத் மாநிலத்தவர்களை நேரடியாகக் களத்தில் இறங்கிக் காப்பாற்றியதைப் போன்ற, அதாவது அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரால்கூடச் சாதிக்க முடியாததை மோடி சாதித்திருப்பதைப் போன்றதொரு பிம்பத்தை ஊடகங்களில் உருவாக்க மோடி ஆதரவாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அது எப்படிப்பட்ட கேலிக் கூத்தான அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதை உடனடியாகச் சில பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தியதால் மோடியின் அந்த வீரசாகசம் வரலாற்றில் அழியா இடம்பெறும் வாய்ப்பை இழந்தது. மோடியின் விளம்பர யுக்திகள் எத்தகையவை என்பதற்கான ஒரு சிறு உதாரணம் இது.
தொழிற்துறை வளர்ச்சியிலும் உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதிலும் இந்தியாவின் முதல் மூன்று நான்கு மாநிலங்களுள் ஒன்றாக எப்போதும் குஜராத் இருந்துவந்திருக்கிறது. பல பத்தாண்டுகளாகவே இதுதான் நிலை. நரசிம்ம ராவ் - மன்மோகன் சிங் 1990களில் கொண்டுவந்த தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கலை மேலும் தீவிரமாக அமல்படுத்திய மோடியின் ஆட்சிக்காலத்தில் இத்துறைகளில் மேலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. ஆனால் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வகுத்த வளர்ச்சிக் குறியீடு, மனித வளர்ச்சிக் குறியீடு உட்பட பல்வேறு அடிப்படைகளில் அளவிடுகிற போது கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றைவிட குஜராத் மிகவும் பின்தங்கியிருப்பது மட்டுமல்ல முதல் பத்து மாநிலங்களுக்குள் இடம்பிடிக்கவே திணறுவதை ஜான் ரீஸ் போன்ற பொருளாதார நிபுணர்கள் மறுக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கின்றனர். ஆனால் இந்த உண்மைகள் கார்ப்பொரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களில் குறிப்பாகத் தொலைக்காட்சிகளில் இடம்பெறுவதில்லை என்பதால் மக்கள் மத்தியில் ‘குஜராத் மாதிரி’ உண்மைக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. அதன் பலனை இன்று மோடி பெற்றிருக்கிறார்.
இதுநாள் வரை தங்களைக் கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக்கொண்டிருந்த பல அறிவுஜீவிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மோடியின் வெற்றியை வரவேற்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களது முக்கியமான வாதங்களுள் ஒன்று 2002க்குப் பிறகு குஜராத்தில் எந்தக் கலவரமும் நடக்கவில்லை என்பதால் மோடியின் ஆட்சியில் அது ஒரு பிறழ்வு மட்டுமே. மோடி பிரதமராகும் பட்சத்தில் அகில இந்திய அளவிலும் நிலைமை இப்படியே தொடரும் என்பதற்கு அது சாட்சி என்கின்றனர். ஆனால் இவர்கள் இரண்டு விஷயங்கள் மறந்துவிடுகிறார்கள். ஒன்று, 2002 கலவரத்தின் மூலம் குஜராத்தில் தனது அரசியலதிகாரத்தை முழுமையாகப் பலப்படுத்திக்கொண்ட பின்னர் மோடிக்கு இன்னொரு கலவரம் தேவையிருக்கவில்லை. இரண்டாவது, இந்தக் கலவரம் உலக அளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததாலும் பல நூற்றுக்கணக்கான மனித உரிமைப் போராளிகள் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஓயாது போராடி வருவதாலும் சமீபகாலம் வரை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளால் மோடி பெரிதும் புறக்கணிக்கப்பட்டதாலும் இன்னொரு கலவரத்தை நிகழ்த்திவிட்டு மோடி நிம்மதியாக இருக்க முடியாது என்பது அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நன்கு தெரியும். எந்த நீதிமன்றமும் அவரைத் தண்டிக்கவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் அவரை நவீன நீரோ என்று அழைத்ததை மறந்துவிட முடியாது. இதுபோன்ற விஷயங்களில் ஒரு முதலமைச்சரின் குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிப்பது அவ்வளவு எளிதல்ல (உலகுக்கே தெரியும் போபர்ஸ் விவகராத்தில் பணம் கைமாறியது என்பது. வருமான வரித்துறையினரிடம்கூட அதற்கான ஆதாரம் இருந்தது. ஆனாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாததால் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் போபர்ஸ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது). ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்கு அளித்த நற்சான்றிதழ் எவ்வளவு குயுக்தியானது, நேர்மையற்றது என்பதைப் பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா எழுதிய (The Fiction of fact-finding) புத்தகம் மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தியிருக்கிறது. தி இந்து மற்றும் பிரண்ட்லைன் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதும் ராகவன் இதுவரை அதை மறுத்து எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை.
இவர்களது மற்றொரு வாதம் இந்தியக் குடியரசும் அதன் நிறுவனங்களும் மிகவும் வலிமையானவை. மோடியால் இந்திய ஜனநாயகத்திற்கோ அல்லது மதச்சார்பின்மைக்கோ எந்த ஆபத்தும் வந்துவிடாது என்பது. இந்திரா காந்தியை முற்றிலுமாக மறந்துவிட்ட ஒருவரால்தான் இந்த வாதத்தை வைக்க முடியும். இன்று இந்தியாவில் மக்களாட்சி நிறுவனங்கள் ஓரளவேனும் வலிமையாக இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் மோடிக்கு நேரெதிரான விழுமியங்களைக் கொண்டிருந்த காந்தி, நேரு, ராஜாஜி, ஆசாத், அம்பேத்கர் முதலிய தலைவர்கள் மக்களிடம் கொண்டிருந்த செல்வாக்கும் அவர்களது சிந்தனை அரசியல் சட்டத்தில் பிரதிபலித்ததும்தான். இன்று மதச்சார்பின்மை ஓரளவேனும் வலுவாக இருப்பதற்கும் இந்தத் தலைவர்களும் இடதுசாரிகளும் தான் காரணம். இன்றைக்கு மோடியைத் தீவிரமாக எதிர்ப்பவர்கள் இவர்களது வழித் தோன்றல்களே. ஒரு மோசமானத் தலைவர் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றால் உச்சநீதிமன்றத்தையே வளைக்க முடியும் என்பதற்கு இந்திரா காந்தி உதாரணம். ஒரு மாபெரும் கட்சியை எப்படிக் காக்கைக் கூட்டமாக மாற்ற முடியும் என்பதைக் காட்டியவர் அவர். ‘‘அரசியல் சட்டம் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் அதை அமல்படுத்துகிறவர்கள் மிக மோசமானவர்களாக இருந்தால் அரசியல் சட்டமும் மோசமானதாகவே ஆகும்’’ என்ற அம்பேத்கரின் வரிகளை இவர்கள் மறந்துவிடுவது நல்லதல்ல.
பாஜக ஆட்சிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த கலவரங்களைவிடக் காங்கிரஸ்
ஆட்சிகளில் நடந்த கலவரங்கள் பல மடங்கு அதிகம் என்பது இவர்களது மற்றொரு வாதம்.
மறுக்க முடியாத உண்மை. இதற்குக் காரணம் காங்கிரஸைவிடப் பாஜக நல்ல கட்சி என்பதல்ல.
மாறாக, பாஜகவை விடக் காங்கிரஸ் மத்தியிலும் மாநிலங்களிலும் பல மடங்கு அதிக காலம்
ஆட்சியிலிருந்திருப்பதுதான். சங் பரிவாரத்தின் முதன்மையான திட்டமே ஹிந்துத்துவா
என்றால் காங்கிரசைப் பொருத்தவரை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பெரும்பான்மை அல்லது
சிறுபான்மை அடிப்படைவாதிகளை ஆதரிப்பது என்பது வாக்கு வங்கி அரசியலுக்கானது. 1984
சீக்கியப் படுகொலையை நிகழ்த்திய காங்கிரஸ் 2002 பற்றிப் பேச துளியும் அருகதையற்ற
கட்சி என்பதும் மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் இவையெதுவும் மோடியைப்
பரிசுத்தவானாக்கிவிடாது என்பதை இந்தப் போலி லிபரல் அறிவுஜீவிகள் வசதியாக
மறந்துவிடுகின்றனர். இன்றும் முஸ்லிம்கள் எந்த அளவு குஜராத்தில் பாகுபாட்டிற்கு
உள்ளாகின்றனர் என்பதற்கு அகமதாபாத் நகரின் உள்ளூர் அகதிகளான முஸ்லீம்கள் மட்டும்
வாழும் ஜுகாபுரா பகுதி ஒரு உதாரணம். மிக ஏழ்மையான முஸ்லிம்கள் மட்டுமே வசித்துவந்த
இந்தப் பகுதியில் 2002க்குப் பிறகு உயிர் பாதுகாப்பைக் கருதி ஏராளமான பணக்கார
முஸ்லிம்களும் குடி பெயர்ந்தனர். மிக ஆதாரமான அடிப்படை வசதிகள்கூட அளிக்கப்படாது
இன்றும் அர சாங்கத்தால் ஜுகாபுரா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது.
இன்றைய மோடி அலைக்கான காரணம் இந்தியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதும் அதை நிறைவேற்றும் செயல் திறன் மிக்கவர் மோடியே என்று அவர்கள் நம்புவதும்தான் என்பது இவர்களது மற்றொரு வாதம். இதில் உண்மையிருக்கிறது. ‘வளர்ச்சிக்கான மனிதர்’ என்று மோடியைப் பற்றிக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஊடகங்களின் அமோக ஆதரவால் மறுக்க முடியாத உண்மை என்பதாக வெற்றிகரமாக நிறுவப்பட்டிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இவர்களது எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. 1960கள் 70களைப் போல ‘வறுமையே வெளியேறு’ போன்ற கோஷங்கள் ஓட்டுகளைப் பெற்றுத்தராது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் உருவாகிவரும் வல்லரசு இந்தியா என்பதை உண்மை என்று நம்பும் படித்த நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதி சீனாவுக்கு இணையாக நம்மைக் கொண்டுசெல்லக் கூடிய ஒரே தலைவர் மோடி என்று நம்புகிறது. பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் நாம் படும் அவமானங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வல்லமை படைத்தவர் மோடி என்று இவர்கள் நம்புகின்றனர். சர்வதேச அரசியல் சூழல் பற்றிய அறியாமை, இந்தியாவின் பொருளாதாரத் தகுதி பற்றி மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் இந்த நம்பிக்கைக்கான காரணங்கள். தேசிய வெறியைத் தூண்டித் தங்களது தேசபக்தியை நிரூபிக்க முற்படும் ஊடகங்கள் இந்தத் தவறான நம்பிக்கைக்குத் தூபம் போடுகின்றன. செங்கோட்டையில் மோடி கொடியேற்று வதற்கான பாதையைச் செப்பனிட்டுத் தந்திருப்பது காங்கிரஸ். இவ்வளவு மோசமான ஆட்சியைக் காங்கிரஸ் தந்திருக்காவிட்டால் மோடிக்கான ஆதரவு இந்த அளவு அதிகரித்திருக்காது. உதாரணமாக, 2009இல் அத்வானிக்குப் பதில் மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்திருந்தாலும் அன்றைய தேர்தல் முடிவுகளில் ஏறக்குறைய எந்த மாற்றமும் இருந்திருக்காது. ‘‘வாழைப்பழக் குடியரசில் மாங்கா மனிதர்கள்’’ என்று திமிராகப் பேசிய சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதராவுக்கும் மலைக்க வைக்கும் ஊழல்களில் ஈடுபட்ட காங்கிரஸுக்கும் வேண்டுமானால் இன்றைய தீர்ப்பு நல்ல பரிசாக அமையலாம். ஆனால் இந்தியாவும் இந்தியர்களும் மோடியைப் போன்ற தலைவரைப் பெறும் சாபத்திற்கு உரியவர்கள் அல்ல.
ஜகதீஷ் பகவதி, சுர்ஜித் பல்லா போன்ற வலதுசாரி நிபுணர்கள் போற்றும்
‘பணக்காரர்களுக்குப் பொதுவுடைமை ஏழைகளுக்குத் தனியுடைமை’ என்ற ‘அற்புதமான’ சந்தைப்
பொருளாதாரத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மோடி, காங்கிரஸைவிடத்
தீவிரமாக அமல்படுத்துவார். அதன் விளைவாகப் பில்லியனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இவர்கள் போற்றும் ‘பொருளாதார வளர்ச்சி’ அதிகரிக்கும் எனில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான முதலீடாக அது இருக்கும். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது இஸ்லாமியத் தீவிரவாதம் அல்லது பாகிஸ்தான், சீனா ஆபத்து. இவற்றில் ஏதாவது ஒன்று கைகொடுக்காதா என்ன?
நம்பிக்கையோடு இருக்கிறார் மோடி.