ஜல்லிக்கட்டுக்குத் தடை: விளையாட்டும் இன அழிவும்
மாடு என்னும் சொல்லுக்குச் ‘செல்வம்’ என்று பொருளுண்டு. மாட்டுக்கும் மனிதர்களுக்குமான உறவுகள் பற்றிப் பல செய்திகள் வரலாறு நெடுகிலும் உள்ளன. மாடுகளைப் பழக்கி வேளாண்மையில் ஈடுபடுத்தியதாலேயே மனிதன் நிலைகொள்ள முடிந்தது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு மாடுகளும் அவற்றின் உழைப்பும் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பசுக்களும் எருமைகளும்கூட வேளாண் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டன எனினும் அவற்றின் முதன்மையான உற்பத்திச் செயல்பாடு பால் வழங்குவதுதான். இன்றைக்கும் பால் பெரும் விற்பனைப் பொருள்களுள் ஒன்று.
எருமைக் கிடாக்கள் உழவுக்கு இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. எனினும் உழவு, ஏற்றம், வண்டி, தாம்பு முதலிய வேலைகளுக்குக் காளைகளே ஏற்றவை. காயடிக்கப்பட்டபின் எருது என்னும் பெயர் பெறும் அவற்றின் உழைப்பை எல்லாக் காலத்திலும் பயன்கொண்டதோடு போற்றியும் வந்திருக்கிறது மனித சமூகம். பதின்பருவத்து ஆண்மகனைக் காளை, மிடல், ஏறு என்றெல்லாம் அழைப்பதுண்டு. மாட்டு மந்தையின் அளவை வைத்து ஒரு குழுவின் செல்வத்தை அளவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒரு குழு மற்றொரு குழு வோடு போர் தொடங்குகிறது என்றால் முத