புனைவின் நிறங்கள்
சுரேஷ்குமார இந்திரஜித் தன்னுடைய மொத்தக் கதைகளின் தொகுப்பான ‘மாபெரும் சூதாட்ட’த்தின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார். ‘ஒரு எழுத்தாளனின் மொத்தக் கதைகளை மொத்தையாகப் பார்ப்பது அலுப்பாகவே இருக்கிறது. உதிரியாகப் படிக்கும்போது பிடித்த கதைகள் மனதில் அதிகமாகத் தங்கும். மொத்தமாகப் படிக்கும்போது பிடித்த கதைகள் பிடிக்காத கதைகள் ஆகியவற்றின் கலப்பு ஏற்படுத்தும் மாறுதலுக்கு மனம் தயங்குகிறது.’
ஆனால் என் வாசிப்பு அனுபவம் இதற்கு மாறாகவே இருக்கிறது. சராசரியான கதை படிக்கும் வாசகனாக அல்லாமல் கவனமான வாசகனாக வாசிக்கும்போது இந்த வரிகளை மறுக்கவே தோன்றுகிறது. சுரேஷ்குமார இந்திரஜித் கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவருகிறார். ஏறத்தாழ எழுபது கதைகள்வரை எழுதியிருக்கலாம். இந்த எழுபது கதைகளை மொத்தமாகச் சார்ந்தே அவரைப் பார்க்கவோ மதிப்பிடவோ முடிகிறது. அவருடைய எழுத்தியல்பு, அவர் சித்திரிக்கும் உலகம், அதில் நேர்ந்திருக்கும் மாற்றங்கள் ஆகியவற்றை வகுத்துக்கொள்ள முடிகிறது. உதிரியாகப் படித்த கதைகள் அழுத்தமாக மனதில் தங்குவதில்லை. மாறாக அவரது மொத்த உலகமே மனதில் பதிகிறது. இந்தத் தொ