தரையில் சிதறும் தானியங்கள்
‘சொல் எனும் தானியம்’ என்ற வார்த்தைக் கூட்டம் பல்வேறு வகையான அர்த்த தளங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்லக்கூடியது. தானியம் என்ற பதமே இனப்பெருக்க வீரியம், அறுவடை, உறக்கம், புத்துயிர்ப்பு போன்ற அர்த்த சாயைகளை உள்ளடக்கியது. (பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே’ என்ற தொல்காப்பிய வரியை இங்கு நினைவு கூரலாம்). சொற்களை மடியில் ஏந்தி நிற்கும் தானியக்காரி ஆகக் கவிஞர் சக்தி ஜோதி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ‘என்னிலிருந்து துவங்குகிற என் காதல் / பறவையைப் போல் திசை எங்கும் பறந்து / அன்பின் முதிர் தானியத்தை விதைக்கிறது’ என்றும், ‘பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட தானியங்களையே நாம் உண்ணுகிறோம்’ என்றும் தொடர்ந்து சொற்களை விதைத்துச் செல்கிறார் சக்தி ஜோதி.
இந்தக் கணத்தில் சொல் விதை என்ற உருவகத்தை அதன் இறுதிவரை கவிதைபோல் நீட்சிகொள்ளச் செய்த ஒரு ஆளுமையைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மத்தேயு தமது சுவிசேஷத்தில் 13ஆவது அதிகாரத்தில் பதிவு செய்வதாவது: ‘இவைகளை எல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினால