மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒருநாள்
விழிப்பதற்கும் எழுந்துகொள்வதற்கும் இடையில் உள்ள அந்தக் காலமற்ற அரை மணி நேரம், பரிச்சயமான ஆடையைப் போல் ஆலிஸை அணைத்துக்கொள்கிறது. கற்பனையான ஒரு கருவறையில் மிதந்து கொண்டு அவள் புதிய நாளை நோக்கி அமிழ்ந்து அமிழ்ந்து நகர்கிறாள். படுக்கையின் வெதுவெதுப்பான மடிப்புகளில் அவள் உடல் தளர்கிறது. அவள் தசைகளும் மூட்டுகளும் எடையற்று இருக்கின்றன. அவள் மனம் வெறுமையாக இருக்கிறது. ஜூல்ஸின் வாசனை - ஆவியாகிப்போன மதுவின் வாடை, ஜாதிக்காய், வயோதிகன் இவையெல்லாம் - கருநிழலாய் அவளுக்குப் பின்னால் கிடக்கிறது. எப்போதும்போல் சமையலறையில் காலையுணவைத் தயார் செய்துகொண்டிருக்கிறார் அவர்; அவள் நினைவுக்குத் தெரிந்து வீட்டு வேலைகளில் அவரது ஒரே பங்களிப்பு. ஒவ்வொரு நாள் காலையிலும் சரியாக எட்டு மணிக்கு அவர் இந்தச் சடங்கைத் துவங்குகிறார். காபியின் நறுமணம் படுக்கையின் வாசனைகளை மீறிப் பரவும்போது, அவள் எழுந்துகொள்கிறாள். நடந்திருந்த நல்ல விஷயங்களை அசை போடுவதற்குப் போதுமான நேரத்தை அவள் செலவழித்திருக்கிறாள். படுத்திருந்த நிலையிலிருந்து மிகவும் சிரமப்பட்டு எழும்போது தன் இடுப்பு, தொடைப் பகுதிகளின் தோல் இழுத்துக் கட