பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பொது விசாரணை வாயில்லாதோர், கதியில்லாதோர், ஆதரவில்லாதோர் கிடைத்துவிட்டால் ஆழ்மனதில் பதுங்கிக் கிடக்கும் எத்தனை குரூரங்கள் வெளிப்படுகின்றன! அதிலும் அவர்கள் பெண் குழந்தைகளாகவும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்துவிட்டால் வக்கிரங்கள் எடுக்கும் அவதாரங்களுக்கு எல்லையோ எண்ணிக்கையோ இல்லை. பலியானவர்களுக்கு அன்றி, குற்றவாளிகளுக்குச் சாதகமான சாதி-வர்க்க-சட்ட-அரச-அதிகாரச் சூழல் குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு ஆயிரம் கதவு களைத் திறந்து வைத்திருக்கிறது.
தெரியாத தகவல் அல்ல; உறைந்துபோன உண்மைதான். ஆயினும் ஒரே அரங்கில், ஒரே நேரத்தில், கண் முன்னால் அணிவகுக்கும் போது, குதறிச் சிதைக்கப்பட்ட சின்னஞ் சிறுமியர் ஒவ்வொருவருக்கும் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்துப் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் குமுறியபோது, சில வழக்குகளில் அந்தச் சிறுமியரே தங்களுக்கு நேர்ந்த அவலங்களை விவரித்தபோது, கண்ணீர் வற்றி, வெறித்த அந்தக் கண்களை நேரிட்டுப் பார்க்க அரங்கத்தில் யாருக்குத் துணிவிருந்தது? செயல் எனதல்ல; ஆனால் இந்தச் சூழலை வளர்ந்து தழைக