மண்ணில் புதையும் முழக்கங்கள்
சில முழக்கங்களால் தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார் பிரதமர் மோடி. மக்களின் கவனத்தில் பதிகிற மாதிரி சில கவர்ச்சி அம்சங்களையும் அதனோடு சேர்க்கிறார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘தூய்மை இந்தியா’ ஆகியன அவருடைய செயல் திட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது அனுபவ உண்மைகளால் நாம் அறிந்திருக்கிறோம்- முழக்கங்களால் இந்தியா வென்றதில்லை. மோடியின் அவசரத் திட்டங்கள் முன் வரலாற்றினைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அவருடைய இரண்டு திட்டங்களும் அனுபவச் செறிவு கொண்டவை அல்ல; இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ புதிய பொருளாதாரக் கொள்கையின் கடைசி இதயத் துடிப்பாக இருக்கக்கூடும். ராஜீவ் காந்தி புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வழியமைத்ததில் இருந்து மொத்த இந்தியாவும் பெரிய கனவுகளைக் கண்டுவந்துள்ளது. அது மன்மோகன் சிங்கின் உலகமயமாக்கலில் விசுவரூபம் கொள்ள எத்தனித்து ஊழல் பரவசங்களில் அடங்கியது. இந்தியாவின் துலக்கமில்லாத ஆட்சியாளர்கள் பலி பீடங்களை உருவாக்கிய பின்னர் புதிய திட்டங்களை அமல் செய்கிறார்கள். மோடி சர்வதேச முதலீட்டாளர்களை ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கு அழைத்தபோது தன் பங்குக்கு அவரும் அந்தப் பழைய பாதையைத்தான் தேர்வு செய்திருக்கிறார். வேளாண்மைத் தொழிலிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வேலை வாய்ப்பில்லாமல் நாடு முழுவதும் சிதறிக் கிடக்கிற உதிரிகளைத் தன் திட்டத்துக்கான சூதாட்டக் காய்களாக வரித்துக் கொண்டார். நெறி சாராத வணிகத்துக்காக எப்போதும் ஏங்கிக்கிடக்கும் முதலீட்டாளர்கள் தங்களின் தேவையை முன்னுரைக்கும் முன்னரே, மோடி அவர்களுக்கான சலுகைகளைப் பிரகடனப் படுத்தினார். தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தம், சுங்கவரி- கலால்வரி- ஏற்றுமதி வரிகளைக் கைவிடுவது, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கான சலுகைகள், விசாரணைகள் இல்லாத தொழில் நடைமுறைகள், ஒற்றைச் சாளர அனுமதி என மடை திறந்தாற்போன்ற அறிவிப்புகள் ஏராளம். ஆனால் கட்டமைப்புகளில் உள்ள பற்றாக்குறை கணக்கில் கொள்ளப்படவில்லை; உபரியாக இருப்பது மனித வளம் மட்டும். எல்லாவற்றையும் வாரி வழங்கிய பின்னர் இந்தியாவுக்கு என்ன மிஞ்சும் என்கிற கவலை நமக்கு மேலிடுகிறது. இதன் ஆரம்பம் கருகல் நெடி அடிக்கக்கூடியதாக இருக்கிறது.
மோடி இப்போது அறிவித்ததற்கு மாறான தொழில் நடைமுறைகள் இந்தியாவின் வளர்ச்சியை முடக்கிப்போடுவதாக அவர் கருதுகிறார். வரம்பற்ற லாபத்திற்கு எதிரான தங்குதடைகள் இருந்த இந்தியாவே பொலிவிழந்து கிடக்கும்போது கட்டுப்பாடில்லாத இந்தியா எப்படி உய்த்தெழும்? கருப்புப்பணம் மொத்தம் எவ்வளவு என்று எவருக்கும் தெரியாது என்று பிரதமரும் வருந்தித் தோயும் நிலை இன்று. கட்டுப்பாடுகள் இருந்ததாக மோடி நினைக்கும் காலங்களில் உருவான கருப்புப்பணம் பிரதமருக்கு காட்சி கொடுக்க மறுக்கிறது. கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்னர் என்னாகுமோ? இந்தியா ஒரு சீனா அல்ல; பலவிதமான கட்டுப்பாடுகளும் அசைக்கமுடியாத அரசும் இருக்கும் சீனாவையும் சர்வதேச முதலீடுகள் ஏய்த்து வருவது நிஜம். நிர்வாகத் திறனில் கறார்த்தன்மை இல்லாத இந்தியா பன்னாட்டு நிறுவனங்களின் தந்திரங்களுக்கு இரையாகிவிடும் ஆபத்தை மலிவாக எடைபோடக்கூடாது.
கவனிக்க வேண்டிய அம்சங்கள் பல உள்ளன. மோடி விஸ்தீரணமான அழைப்பை விடுத்தபோதும் சர்வதேச முதலீடுகள் இன்னும் வராமல் சுணக்கம் கொள்கின்றன. 2008இல் பீடித்த பொருளாதார நோயிலிருந்து இன்னும் மேலை நாடுகள் சொஸ்தமடையவுமில்லை. இந்தியாவைச் செல்வக்குவியலுக்குள் புரட்டிப்போட்டு விடலாம் என்று மனப்பால் குடித்த மோடியும் அவரது ஆலோசகர்களும் இந்த நிலையைச் சற்றும் பரிசீலிக்காதது ஏன்? வரக்கூடிய முதலீடுகளும் உற்பத்தித் துறையை நாடாமல் சூதாட்டக்களமான பங்குச்சந்தை நோக்கி வருகின்றன. நாம் எவ்வாறு ஒவ்வொன்றையும் திட்டமிடுகிறோம் என்பதை அனைத்துநாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன. மோடி அரசின் பலவீனம் அவர்களின் பலமாக மாறிவிடும். இதனுடைய அடுத்த கட்டத்தை அவர்கள் சிறப்பாக ஆடிவருகிறார்கள். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மோடியை பிரம்மாண்டமாகக் கட்டமைப்பதும், அவர் சிறப்பாகச் செயல்படுகிறவர் என்று மேலையப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டுவதும் அவற்றின் சூட்சுமம் ஆகும். கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தோமானால் முன்னாளைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இந்தக் குழி வெட்டப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம். அவர் அதில் விழுந்தார்; அவர் விழுந்ததால் இந்தியாவும் வீழ்ந்தது. எனவே இவற்றில் கவனமாக இருக்கவேண்டியது மக்களின் பொறுப்பு.
மோடி அரசின் ஊகப்படி 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பாக இருக்கவேண்டும். ஆனால் இதற்கான தெளிவு அரசிடம் இல்லை. இந்தப் பேராசையின் விளைவை முன்வைத்து நாம் மோடியின் மற்றொரு திட்டமான ‘தூய்மை இந்தியா’வை நோக்குவது நல்லது. ஏற்கெனவே இந்தியா பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டையில் குப்பைக்கிடங்காக மாறியுள்ளது. எந்த அரசின் அக்கறையிலும் பதியாத போபால் விஷவாயுக் கழிவுகள் நம்நாட்டின் அவமானச் சின்னமாகும். போபால் மக்களை உருக்குலைத்து அது நமக்கு விடுத்த சவால்களை நாம் எதிர்கொள்ள இயலாமல் தவித்து வருகிறோம். நம் இயற்கை வளங்கள் அத்தனையும் பன்னாட்டு நிறுவனங்களின் இரையாகி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளின் கழிவுப்பொருட்கள் தூத்துக்குடி உள்ளிட்ட பல துறைமுகங்களுக்கும் திருட்டுத்தனமான பெயர்களில் வந்து இறங்குகின்றன. அவை இரகசியமாகக் கண்காணாத இடங்களில் பல கண்டெய்னர்களில் வைத்துப் புதைக்கப்படுகின்றன. அதனால் இந்தியா வளர்ந்துவரும் வேகத்தில் அங்கக் குறைபாடுள்ள நாடாக மாறி வருகிறது.
‘தூய்மை இந்தியா’ மோடியின் குஜராத் மாநிலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். குஜராத் மாநிலத்தின் அலாங்க் துறைமுகம் இந்திய வளர்ச்சிப் பாதையின் முதல் அழிவுக் கேந்திரமாகும்; அல்லது முதல் குப்பைத் தொட்டி. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்தான் குப்பைத் தொட்டியில் இடப்பட்ட முதல் கழிவுப்பொருள்கள். உலக வல்லரசுகள் கழித்துக் கட்டும் அணுஆயுதக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை அலாங்க் துறைமுகத்தில் பாகம் பிரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக ஆண்டுக்கு அறுபதுக்கும் மேற்பட்ட அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். கதிர்வீச்சு கொண்ட ரசாயனங்கள், பாதரசம், ஆர்சனிக், ஆஸ்பெஸ்டாஸ் போன்றவற்றின் தாக்குதலில் நம் இந்தியர்கள் புற்றுநோய், தொழுநோய், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். மண்வளம் மாய்ந்துபோயிற்று. கடல்வாழ் உயிரினங்கள் குறித்து தனியே சொல்லப்பட வேண்டிய அவசியம் என்ன? தில்லியைத் தூய்மை செய்ய பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் முன் மோடி நடத்திக்காட்டிய செயல்முறையை அலாங்க் துறைமுகத்தில் செய்துகாட்டியிருப்பாரேயானால் அவரின் துணிச்சலுக்காக நாமும் அவரோடு கைகோர்த்திருக்கலாம்.
மோடியின் கனவுக்கு உத்வேகம் கொடுக்கும்பொருட்டு தில்லியில் நம் அதிகாரிகள் நகரைத் தூய்மை செய்த விதம் நம் நாட்டின் அவலட்சணங்களுக்கு ஒரு சான்று. அங்கு அதிகாரிகள் விளக்குமாற்றை கையில் எடுக்கும்முன் அதிகாலையில் அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதாவது, இந்தியாவைத் தூய்மைப்படுத்துமுன் அதனைக் குப்பைமயமாக்குங்கள் என்பதுதான் முதல் தாரக மந்திரம். வாளைத் தலைகீழாகச் சுழற்றி இந்திய அதிகார வர்க்கம் செய்த அதே பழைய சாகசங்கள் கண்டிப்புக்குப் பேர்போன மோடியின் முன்னாலும் நடந்துவருகின்றன. இப்போது புரியும், ’இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதும் ‘தூய்மை இந்தியா’ என்பதும் பிறப்பில் முரண்பட்டிருப்பதை! இந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்த அழைத்த முகவர்களும் சொல்லிவைத்ததுபோல அனைவரும் கையில் விளக்குமாற்றுடன் மட்டுமே இன்முகம் காட்டுகிறார்கள். மலக்குழிகளைச் சுத்தம் செய்து அதன்வழியாக இந்தியாவைத் தூய்மைப்படுத்திய தேசபக்தர்களாக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஒன்பது முகவர்களையும் பார்க்கமுடியவில்லை. மலக்குழிகளுக்கும் சாக்கடைகளுக்கும் அப்பால் இருக்கிறது தூய்மை இந்தியாவுக்கான அழைப்பு. திட்டத்துக்கு வேறு பாய்ச்சல் முறைகள் இல்லை.
பள்ளிக்கூடங்களில் இன்னும் கழிப்பறைகள் இல்லை; தண்ணீர் இல்லை. திறந்த வெளிகள் அனைத்திலும் ஆண்களுக்குக் கிடைத்த வரம் பெண்களுக்குக் கிட்டவில்லை. இருக்கின்ற கழிப்பறைகள் நம் நிர்வாக அலட்சியத்தின் மைல் கற்கள் போன்றவை. பொது இடங்களில் கழிப்பறைகளை அண்டாதிருப்பதின் மூலம் ஒருவர் தன் சுகாதார நடைமுறையில் அக்கறை படைத்தவராய் இருக்கிறார். கழிப்பறை இல்லாத கல்விநிலையங்களை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து நாம்தான் அவர்களைத் திறந்த வெளிக்கு மலம் கழிக்க அனுப்பி வைக்கிறோம். அதன் எதிரே ‘திறந்த வெளியில் மலஜலம் கழிக்காதீர்’ என்று ஒரு விளம்பரப் பலகையை வைத்துவிட்டு நம் வெற்றியைக் கணக்கில் எழுதுகிறோம்.
முன்னர் நடந்த விபரீதங்களைக் கணக்கில் கொள்ளாமல் புதிய அரசை மோடி சமைத்துக் காட்டலாம். அதிகார மேட்டிமைகளைக் கசக்கிப் பிழியலாம். ஆனால் வெற்றியின் முகாந்திரங்கள் இவை அல்ல. தெளிவும் எதிர்காலப் பலாபலன்களும் இன்னதென்று புரிந்துகொள்ளாமல் இந்தியா தூய்மையாகாது. தயாரிப்புத் துறையில் மேன்மை அடையாது.