கௌரவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்
கடந்த மாதம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் என்ற ஊரில் தான் காதலித்த தலித் இளைஞனை மணக்க விரும்பிய வட்டார பெரும்பான்மை சாதியை சேர்ந்த விமலாதேவி என்ற பெண்ணை அக்குடும்பத்தினரே கௌரவக் கொலை செய்ததாகப் புகார் எழுந்தது. இப்போது அவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இம்முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தின் வெவ்வேறு இடங்களிலும் இரண்டு கௌரவக் கொலைகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அந்த அளவிற்குத் தமிழகத்தில் கௌரவக் கொலைகள் இயல்பாகிவிட்டன. கடந்த 20 மாதங்களில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மட்டும் 32 கௌரவக் கொலைகள் நடந் திருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. புனையப்பட்ட சாதிப் பெருமிதத்திற்காகப் பெற்று வளர்த்த வாரிசு களையே கொல்லலாம் என்று நம்முடைய சாதியமைப்பு கற்றுத் தந்திருக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கைத் தேவைகளுக்காக இடம் பெயர்ந்து வாழவேண்டிய பல் அடையாள சூழலில் சொந்தக் குழுவை சாதியைத் தாண்டிய மணவுறவு போன்றவை பெரும் திட்டங்களில்லாமல் இயல்பாக நடந்தேறுகின்றன. நவீன வசதிகள்மீது ஆசைப்படும் நம் குடும்பங்களும் சாதியமைப்புகளும் நவீன வாழ்வின் இயல்பான மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் சாதியமைப்பில் ஏற்படும் விரிசல்களை மட்டும் ஏற்க மறுக்கின்றன. இன்றைய சமூக அரசியல் புரிதல்களும் உலகளவிலான பொருளாதார மாற்றங்களும் நம்வாழ்வின் புறத் தேவைகளையும் தாண்டி சமூகத்தின் அகக் கட்டுமானம்மீது தாக்கம் செலுத்துவதால் நம்முடைய சாதி அதிகார மையங்கள் அதிர்ச்சி கொள்கின்றன. அதனாலேயே அக்கட்டுமானத்தின் அசலான பிரதிநிதியான சாதியைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய அக மண முறையைக் காப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் எதார்த்தம் அவர்களின் கைகளில் இல்லை. மாறிவரும் காலம் அவர்கள் கட்டுப்பாட்டிலும் இல்லை. இதனால் ஏற்படும் பதற்றம்தான் கொலைகளாகவும் மோதல்களாகவும் வெளிப்படுகின்றன. குடும்ப அமைப்பின் பதற்றத்திற்கும் பயத்திற்கும் சாதி அமைப்புகளின் குரல்கள் தற்காலிக நிழல்களாக இருக்கின்றன. குடும்ப நபர்களின் எண்ணிக்கை பலம் சாதி அமைப்புகளின் அரசியல் அதிகாரத்திற்கான வாக்குகளாக மாற்றப்படுகின்றன.
சாதியமைப்பில் அக மண உறவுக்கு இருக்கும் இம்முக்கியத்துவம் கருதியே அக மண உறவை சாதியின் பிரதான தோற்றுவாயாகத் தன் ஆய்வில் அறுதியிட்டார் அம்பேத்கர். அதனால்தான் சாதி மறுப்பு பற்றிப் பேசியபோது சாதியைத் தாண்டிய மணத்தையும் அவர் வலியுறுத்தினார். அம்பேத்கரின் சிலைகளும் பிம்பங்களும்கூட சிதைக்கப்படும் தேசத்தில் அவரின் சிந்தனைகள் தீண்டப்படாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்?
நவீன அரசியல் புரிதல்களுக்கும் வாழ்வியல் மாற்றங்களுக்கும் எதிரான கௌரவக்கொலைகளும் அதற்கு ஆதரவான சாதி அமைப்புகளின் கூட்டியக்கங்களும் தமிழகத்தில் அதிகரித்திருப்பது நமக்கு அதிர்ச்சியை தருகின்றன. தமிழகம் ஈட்டியிருக்கும் சமூக நீதி அடையாளத்திற்கும் இப் போக்கிற்கும் நெடிய இடைவெளி இருக்கிறது. இதுவரையிலான சமூக அரசியல் செயல்பாடுகளால் ஏற்பட்டிருப்பதாக நாம் நம்பிவரும் மாற்றங்களை நிஜமாகவே பரிசீலனை செய்து பார்ப்பதற்கான அவசியத்தை இச்சூழல் ஏற்படுத்தியுள்ளது. அதிகமாகச் சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இல்லை என்பது கசப்பான உண்மை. இக்கொலைகள் வெறுமனே அரசியல் பிரச்சினை மட்டுமல்ல. நம் சமூக அமைப்பின் நிகழ்கால எதார்த்தம் பற்றிய பிரச்சினை இது. நவீன மாற்றங்களுக்கும் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கும் தேவையான பக்குவத்தை நம் சமூகம் எந்த அளவிற்குப் பெற்றுள்ளது என்பதற்கு இது உதாரணம்.
பெருகி வரும் கௌரவக் கொலைகளுக்கு சாதி அமைப்புகளின் ஆதரவு ஒரு புறமென்றால் நம் அரசியல் கட்சிகளின் மௌனம் மற்றொருபுறம் உதவுகிறது. தருமபுரி போன்று பெரும் கலவரங்கள் எழும்போது ராமதாஸுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டுமே இதற்கான எதிர்ப்பாக இருக்க முடியாது. தங்களின் அறிக்கைவிடும் லாபிக்கு பயன்படுமென்று அடிதடி கொலைகளை மட்டும் அரசியல் கொலைகளாகக் காட்டி அறிக்கை எழுதும் பிரதான கட்சிகள் கௌரவக் கொலைகளைக் கண்டுகொள்வதே இல்லை. சாதி சார்ந்த ஓட்டுகளின் பக்கம் இக்கட்சிகள் தலை சாய்த்து தெண்டனிட்டு கிடப்பதே இதற்குக் காரணம். கட்சிகளின் இந்நடைமுறையை இயல்பாகப் பார்க்கும் நிலைதான் இங்கிருக்கிறது. பிரதான கட்சிகளிடம் இக்கொலைகள் பற்றிக் கேள்வி எழுப்பும் ஊடக அறம்கூட இங்கில்லை. உசிலம்பட்டி விமலாதேவி கொலைக்கான சிபிஐ விசாரணை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டால்தான் ஏற்பட்டது. அவர் களின் முயற்சியும் செயல்பாடும் பாராட்டுக்குரியது.
கௌரவக் கொலைகள் என்பது நம் சமூகத்தில் புதிதாக ஏற்பட்ட ஒன்றல்ல. இங்கு நெடுங்காலமாக நிலவிவரும் கேடுகளுள் ஒன்றே அது. இப்போதுதான் அவை பரவலாக வெளியே தெரியவருகின்றன. ஓரளவு புள்ளி விவரங்களும் கிடைக்கின்றன. ஆனால் எதார்த்த நிலை, கிடைத்து வரும் புள்ளி விவரங்களையும் தாண்டிய வீச்சு கொண்டுள்ளது. இவற்றை வழக்காகப் பதிவதற்கேகூட இங்கு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அண்மையில் பழனிக்கு அருகில் கொல்லப்பட்ட முத்துகுமார் என்ற இளைஞரின் வழக்கு அவ்வாறுதான் இருக்கிறது. இதுபோன்ற நிலைகளில் அரசு இயந்திரங்களின் போதுமான அக்கறை இருப்பதில்லை. இதைப் பற்றிய ஆக்கபூர்வ விவாதங்கள் ஊடகங்களிலோ அறிவுத்தளத்திலோ நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலித் அமைப்புகளும் கோரியுள்ள கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் என்ற கோரிக்கை முக்கியமானது. முறைப்படியான வழிகாட்டுதல்களோடு விவாதித்து அத்தகைய சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் . அதே நேரம் சமூகமும் தன்னைக் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ளும் பக்குவம் பெறவேண்டும் என்பது அதற்கும் மேற்பட்ட உண்மை.