‘அலைவாய்க்கரையில்’ நாவலை முன்வைத்து
1977ஆம் ஆண்டு செப்டம்பரில் எட்டையபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் நடத்திய பாரதி விழாவில்தான் ராஜம் கிருஷ்ணனை முதல் முறையாகச் சந்தித்தேன். தோழர் அழகிரிசாமி வீட்டில் தோழர் எஸ்.எஸ். தியாகராசன் அவரை அறிமுகம் செய்து வைத்தார். உரையாடிக்கொண்டே காலை உணவை உண்டு கொண்டிருந்தோம். குறிப்பிட்ட நிலம் சார்ந்து இலக்கியத்தை வகைப்படுத்தலாமா என்ற விவாதம் அப்போது உருவானது. சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள அய்ந்து திணைகளில் தொடங்கி கரிசல் இலக்கியம்வரை பல கருத்துக்கள் விவாதத்தில் இடம்பெற்றன.
நானும் என் பங்கிற்கு நெய்தல் திணை சார்ந்த சங்க இலக்கியப் படைப்புகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் நெய்தல் நிலப்பகுதியை மைய மாகக் கொண்டு பெரிய அளவில் இலக்கியங்கள் உருவாகாமை குறித்த என் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன்.
உணவுநேர உரையாடலை நிறுத்திவிட்டு விழா அரங்கை நோக்கிச் செல