முதிர்கனல்
உறக்கம் வராமலிருப்பது சமீப நாட்களாகவே ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருந்தது. வயது செல்லச் செல்ல இப்படித்தானோ என்று மனதைச் சாந்தப்படுத்த தனக்குத்தானே சொல்லிக் கொண்டபோதும் காரணம் வேறாக இருக்குமோ என்றும் சம்சயிக்கும்படியான நிகழ்வுகள் சலனப்படுத்திக்கொண்டேயிருந்தன. இரவு மெல்ல நீண்டுசெல்வதான தோற்றம் தினந்தோறும் விஸ்தாரமாகிக்கொண்டே போகிறது. சில்வண்டுகள் துணையைத்தேடி விடுக்கும் அழைப்புகள் அபாயமணிகளாகக் காதுகளில் ரீங்கரிக்க, சாரனை இழுத்துக் கவட்டுக்குள் சொருகியவாறு மெல்லப்புரண்டு, தலையணை ஓரத்தில் மடித்துவைத்திருந்த வெள்ளை சால்வைக்குக் கீழே விரல்களைச் செலுத்தித் துழாவிக் கைக்கடிகாரத்தை எடுத்து அதன் கண்ணாடிப்பரப்பை உள்ளங்கையால் தேய்க்க, ரேடியத்தின் ஒளியில் நேரம் பளிச்சிட்டது. பனிரெண்டே முக்கால். முன்பெல்லாம் பத்து மணிக்கே தூக்கம் கண்களைச் சுழற்றும். இதென்ன நாளுக்குநாள் உறக்கம் தள்ளிக்கொண்டே செல்கிறது? ஒருவேளை நேரம் பிசகோ? இருக்காது. நேரத்தைத் துல்லியமாகக் காட்டும் ஸ்விஸ் கடிகாரம் அது. மொத்த வயதில் பாதிக்கும் மேல் பிசகின்றி உழைத்திருக்கிறது. மம்முக்காசின் சேர்மனின் மருமகன