தேர்தல் 2019
பொதுத்தேர்தல் என்ற அரசியல் நடவடிக்கை இந்தியக் குடிமக்களின் முன்னால் நிறுத்தும் கேள்வி ‘உங்களை ஆளும் அதிகாரத்தை யாருக்கு அளிக்கப் போகிறீர்கள்?’ என்பதே. மக்களை ஆளும் வாய்ப்பு என்பது அவர்களை அடக்கி வைப்பதல்ல; மாறாக, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதுதான். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு நமது எதிர்பார்ப்பை முறையாக நிறைவேற்றாத ஆட்சியை அடுத்த தேர்தலில் மாற்ற விரும்புகிறார்கள். ‘இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்க வேண்டுமா,’ என்ற கேள்வி ஒவ்வொரு தேர்தலிலும் எழுகிறது. அந்தக் கேள்விக்கு இந்திய வாக்காளர்கள் தெளிவான பதிலையே இதுவரையிலும் வழங்கி வந்திருக்கிறார்கள்.
அவசரநிலைக்குப் பின்னர் நடந்த பொதுத்தேர்தலில் (1977) இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பெருந்தோல்வி கண்டது. ஜனதா கட்சி அரசு உருவானது. ஆனால் மக்கள் அளித்த மகத்தான வாய்ப்பைப் பாழ்படுத்திய ஆட்சியை அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் வீழ்த்தினார்கள். தங்களை ஆளும் வாய்ப்பை மீண்டும் இந்திராகாந்திக்கே வழங்கினார்கள். பெரும்பாலும் இருமுனைப் போட்டியாகவே நடைபெறும் தேர்தல் முறையில் இது தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால் ‘எங்களை ஆளும் வாய்ப்பை மீண்டும் உங்களுக்கு அளிக்கமாட்டோம்’ என்ற குடிமக்களின் பொது உணர்வை இந்த முன்னுதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
நடைபெறவிருக்கும் 17வது பொதுத்தேர்தலிலும் மக்கள் முன்னும் அரசியல் கட்சிகள் முன்னும் பேருருவம் கொண்டு நிற்பது இதே கேள்விதான்; இதுவரை ஆட்சியிலிருந்த அரசுக்கு - இன்னொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு மோடி தலைமையிலான ஆளும் அணி ‘வேண்டும்’ என்றும் ராகுல்காந்தி தலைமையிலான எதிரணி ‘கூடாது’ என்றும் பதில்களை மக்கள் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
ஐந்து ஆண்டுச் சாதனைகளாகப் பாஜக அரசு முன்வைக்கும் செயல்பாடுகளை எதிரணி விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்குப் பதிலாகத் திரிசங்கு சொர்க்கத்தில் தள்ளிவிட்டிருக்கின்றன. நாணய மதிப்பு மாற்றம் பணப் புழக்கத்தை முறைப்படுத்தாமல் பொருளாதார வீழ்ச்சியையே ஏற்படுத்தியது. கல்வித்துறையில் அரசு நிகழ்த்திய குறுக்கீடுகள் கற்றலின் சுதந்திரத்தைப் பறித்தன. பொது சுகாதாரத் துறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் நாட்டின் ஆரோக்கியத்தைப் பாதித்தன. வெளியுறவு விவகாரங்களில் நல்லுணர்வு பேணப்படாமையால் சந்தேகப் பார்வைக்கே வலுக்கூடியது. இவை மோடி அரசின் தோல்விக்குச் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. பாஜகவின் எதிரணியிலுள்ள காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் இவற்றையே மக்கள் முன் கவனப்படுத்துகின்றன. ஆனால் இவற்றைவிட அதிக அச்சத்தை அளிக்கக் கூடியவை இந்த ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராக நடைபெற்ற அச்சுறுத்தல்களே.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போதாமைகளையும் குறைகளையும் தாங்க முடியாத நிலையில்தான் ஒருமாற்றாக பாஜக அரசுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள். வெறும் 31 விழுக்காடு வாக்குகளே பெற்றிருந்தும் பாஜக ஆட்சியைப் பெற்றது. ஆனால் ஆட்சியின் அதிகாரம் உண்மையில் அரசியல் கட்சியான பாஜகவிடம் இல்லாமல் மதச்சார்பு அமைப்புகளிடமே இருந்தது. மோடி அரசின் முதலாவது ஆண்டு விழாவின்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பாகவத் உள்ளிட்ட மூன்று தலைவர்கள் தில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியதை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
ஜனநாயக ரீதியிலான செயல்பாடுகளுக்கும் உரையாடல்களுக்கு மான வெளிகளை மூடிவைத்தது மோடி அரசு. இது இந்திய அரசியல் அமைப்புக்கு முற்றிலும் எதிரானது. மோடிக்கு முன்னரும் பாஜக ஆட்சியில் இருந்தது. எனில் அது அரசியல் கட்சியின் ஆட்சியாகவே நடைபெற்றது. மதத்தின் அதிகாரம் முழு அரசியல் அதிகாரமாக மாற்றம் பெற்றதே மோடி அரசின் பலவீனங்களில் முக்கியமானது. இதன் விளைவாகவே பல்வேறு துறைகளிலும் குழப்பங்கள் விளைந்தன. இந்திய ஜனநாயகத்தின் மேலான அடையாளம் என்று கருதப்பட்ட பன்முகத்தன்மையும் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்துச் செல்லும் போக்கும் தடம்புரண்டன. மதம், சமூகப் பழக்கங்கள், பண்பாடு அனைத்திலும் ஒற்றைப் பரிமாணமே வலியுறுத்தப்பட்டது. இந்த அச்சத்தை எதிர்க்கட்சிகளோ முதன்மையான ஊடகங்களோ கருத்தில் கொள்ளவில்லை என்று சந்தேகிக்கவும் நேர்கிறது.
மோடி தலைமையிலான பாஜகவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைக் குடிமக்கள் வழங்குவார்களா என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் இது என்பது வெளிப்படை. அதன் பலன் என்னவென்பது தேர்தலுக்குப் பின்னரே தெளிவுபடக் கூடும். ஆனால் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையுமானால், அது கடந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியின் குறைகளையும் பிழைகளையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அங்கீகரித்தது போலாகும். சென்ற இரண்டு பதிற்றாண்டுகளாக நடைபெற்ற பொதுத்தேர்தல்கள் அந்த அங்கீகாரத்துக்கு இடமில்லை என்பதை நிறுவியுள்ளன. இதன் இன்னொரு பக்கம், தங்களால் விமர்சிக்கப்படும் மோடி அரசு நடவடிக்கைகளை எதிர் அணியினர் எப்படி மாற்றப் போகிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
‘உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்பச் செயல்படாத அரசை வீழ்த்துவதற்கான அதே காரணங்களை நீங்கள் வாய்ப்பளிக்க விருக்கும் அணியும் எதிர்கொள்ள நேரும்’ என்பதே தேர்தல்கள் முன்வைக்கும் எச்சரிக்கை. குடிமக்களின் இந்த எச்சரிக்கைக்கு ஆளும்கட்சியும் எதிரணியும் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்? வேறு எந்தத் தேர்தலையும்விட வரவிருக்கும் தேர்தலில் இதுவே ஆட்சியைத் தீர்மானிக்கும் அம்சமாகும்.