கடிதங்கள்
மதுரை - காமராஜர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பேரா.தெ.பொ.மீ. தான் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தொலை நிலைக் கல்வி அமைப்பினை உருவாக்கினார். அதன் முதல் இயக்குநராக அவர் தேர்ந்தெடுத்தது பேரா. சித்தலிங்கையாவை! இங்கி லாந்திலுள்ள திறந்தவெளி பல்கலைக் கழகம் போல் சமூக, குடும்ப, பொருளாதாரக் காரணங்களால் கல்வியைத் தொடர முடியாது இடைவிட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் தொலைநிலைக் கல்வி அமைந்தது. அதன் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பேறு பெற்றேன். பாடத்திட்டம் தயாரிப்பதிலும் பாடங்களை எழுதுவதிலும் ஈடுபட்டுள்ளேன். பேரா. சித்தலிங்கையா மிகுந்த கடமையுணர்வுடன் கடுமையான உழைப்பினை நல்கித் தொலைநிலைக் கல்வித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். இவ்வருமையான திட்டத்தைப் பிற பல்கலைக்கழகங்கள் வணிகமயமாக்கியது ஒரு துன்பியல் நாடகம் எனலாம். பேரா.சித்தலிங்கையாவின் நினைவிற்கு எனது அஞ்சலி.
ச.சீ. இராஜகோபாலன்
சென்னை - 93
தலையங்கம் வாசித்தேன். கல்வி ஒன்றினால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இன்னும் எத்தனை நாள் உயிர்ப்புடன் இருக்கும் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடத்தும் அரசின் முடிவு ஊர்ப்புறக் குழந்தைகளை மட்டுமின்றி மெதுவாகக் கற்கும் சிறப்பு வகைக் குழந்தைகளையும் பெரிதும் பாதிக்கக் கூடியது.
ஆரம்பக் கல்வி முதல் பள்ளி இறுதி வகுப்புவரை தனியார்ப் பள்ளிகளை நாடும் பெற்றோர் தமது குழந்தைகளின் உயர்கல்விக்கு மட்டும் அரசு நிறுவனங்களை நாடுவது மிகப் பெரிய முரண். தெரிந்தோ தெரியாமலோ விளிம்புநிலை மாணவர்களின் வாய்ப்பினைத் தட்டிப் பறிக்கும் செயல் இது.
உள்கட்டமைப்பு போன்ற காரணங்களினால் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்று முடிவெடுக்கும் இத்தகையோர் எப்பாடுபட்டாவது பணத்தைத் திரட்டித் தனியார்ப் பள்ளிகளில் போட்டுவிடுகின்றனர். அத்தனியார்ப் பள்ளிகளில் நாள் முழுவதும் உழைத்துச் சொற்ப வருவாயை ஈட்டும் ஆசிரியர்கள் குறித்த எந்தக் கவலையும் இது போன்றோருக்கு இல்லை.
ஐந்து வகுப்புகளுக்கு ஒற்றை ஆளாய்க் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் குறித்து இவர்கள் எதுவும் அறிந்துகொள்ள விரும்புவதில்லை. காசு இருந்தால்தான் கல்வி பெற முடியும் என்பது எவ்வளவு மோசமான நிலை? இது குறித்த எந்த உணர்ச்சியும் எவரிடமும் இல்லை.
ஆரம்ப வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை தம் பள்ளிகளில் பயின்ற மாணாக்கரைக் கற்றல் அடைவு போதவில்லை என்ற காரணம் கூறி, ஈவு இரக்கமின்றி வெளியேற்றும் மனப்போக்கு தனியார்ப் பள்ளிகளில் மட்டுமே உள்ளது. வட்டித் தொழில் செய்தவர்கள் கூட பள்ளிகள் நடத்த ஆரம்பித்துவிடுகின்றனர். நஷ்டம் இல்லாத தொழில் இது என்ற தெளிவு அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.
ஆண்டுதோறும் முக்கியப் பிரமுகர்களை அழைத்துவந்து விழாக்கள் நடத்தியும் நாள் முழுவதும் மாணாக்கரைப் பள்ளியில் அடைத்துவைத்தும் தம்மைக் கல்வித் தந்தைகளாகக் காட்டிக்கொள்கின்றனர். கல்வி என்பது மனித ஆத்மாவின் உள்முகத் தரிசனம் என்பதைக்கூட அறியாத நபர்கள் இவர்கள்.
வயிற்றில் உணவின்றியும் காலில் செருப்பின்றியும் நெடுந்தூரம் நடந்துசென்று கல்வி பயிலும் ஏழை மாணாக்கரின் நிலைகுறித்துச் சமூகம் சிந்திக்க வேண்டும்.
சுப்பிரமணிய சரவணன்
மின்னஞ்சல் வழி
சிற்பி தனபால் என்றொரு பெரும் கலை ஆளுமையின் நூற்றாண்டையொட்டிக் காலச்சுவடு வெளியிட்டுள்ள சிறப்புப் பகுதி வாசகர்களின் பார்வை வீச்சை வடிவங்கள் ஊடான சமூகத்தின் அழகியல் முகத்தை நோக்கி வெகுவாகத் திருப்பியுள்ளது. நான்கு கட்டுரைகளும் தனபால் என்ற முற்றிலும் சுயம்சார்ந்த ஆளுமையின் கலை வெளிப்பயணத்தைத் தெளிவாக விவரிப்பதுடன் அன்னாரது வரலாற்றுப் பின்னணியையும் அவரது ஆத்மார்த்தமான கலைப்பணியையும் தமிழ் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை ஒருபொருட்டாகவே கருதத்தெரியாத இக்காலச் சூழலிலும் இவ்வளவு கால இடைவெளிக்குப் பின்னும் தனபால் என்ற கலைவெளிச்சத்தில் பரிணமித்த அவரது ஆற்றல்மிகு மாணவப் படைப்பாளிகள் அவரை நினைவுகூர்ந்து படைத்துள்ள கட்டுரைகள் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு வாய்த்த தமிழ்ச் சான்றோர் உ.வே.சா. போன்ற வாரிசுகள் எக்காலச் சூழலிலும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை இவ்விதழ் மெய்ப்பித்துக்காட்டியுள்ளது.
ஆசிரியர் என்பவர் பாடம் கற்றுத் தருபவர் மட்டுமே என்ற மேலோட்டமான கூற்று அப்பழுக்கற்ற ஆசிரியப் பணிக்கு முற்றிலும் பொருந்தாது. உற்ற நண்பனாக, தத்துவப்போதகராக, தக்க வழிகாட்டியாக விளங்க வேண்டிய மகத்தான ஆசிரியப் பணிக்கு மிக உயர்ந்த சான்றாகச் சிற்பி தனபால் தம்மை உட்படுத்திக்கொண்ட விரிந்த மனிதப்பாங்கைக் கட்டுரைகள் தமது உள்ளார்ந்த உணர்வுகளுடன் வெளிப்படுத்தியுள்ளன.
ஒரு கலை நிறுவனத்தின் மாணவராக, ஆசிரியராக, முதல்வராகத் தமது பேராற்றலின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்ந்துசென்றாலும் பல மாணவ ஆளுமைகளை உருவாக்கிவிடுவதிலிருந்தும் அவர்களுக்கு உற்றுழி உதவுவதிலிருந்தும் என்றென்றும் விலகிச்சென்றுவிடாத பெருமையை நிலைநாட்டிய சிற்பி தனபாலுக்கு இதுபோன்ற மாணவருலகம் என்றும் கடப்பாடுடையதே. அவரது கற்றலுக்கும் தேடலுக்குமான இடைவிடா முயற்சியும் இரவுபகல் பாராது உழைக்கும் மனப்பாங்கும் அத்துடன் எளிமையும் பணிவும் இக்கால உலகிற்கு நல்ல படிப்பினைகள். சிற்பி தனபால் இடம்பெற்றுள்ள பழைய புகைப்படங்கள், அவரது அரிய சாதனைகளுக்குச் சான்றுகளாய் விளங்கும் புகழ்வாய்ந்த சிற்பங்களின் படங்கள் ஆகியன கட்டுரைச் செய்திகளுக்கு மேலும் வலிவும் பொலிவும் கூட்டுகின்றன. சிற்பி தனபாலுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்; அவரது மாணவப் படைப்பாளர்களுக்கு நமது உளமார்ந்த வாழ்த்துகள்.
சி. பாலையா
புதுக்கோட்டை
‘தேடு கல்வி இலாது’ தலையங்கம் படித்தேன். ஐந்து, எட்டாம் வகுப்புப் படிக்கும் சின்னப் பிள்ளைகளுக்குக் கட்டாயத் தேர்வு மிகவும் வேதனை அளிக்கக்கூடியது. பலரது கல்வியையே தடுத்து நிறுத்திவிடும் சூழல் ஏற்படும். மீண்டும் அக்குழந்தைகள் படிப்பறிவின்றித் தங்கள் அப்பா, பாட்டன் செய்த குலத்தொழிலைச் செய்ய வழிவகுக்கும். மேலும் பள்ளிப்பருவம் வாழ்வின் வசந்தகாலம் என்பேன். துளிர்விட்டுத் தளிர்க்கிறபோதே கிள்ளி எறிவதுதான் இந்தக் கட்டாயப் பரிட்சை.
‘ஆங்கில அகராதிகள் - மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட பெண் பங்களிப்புகள்’ கட்டுரை அருமை. அன்றுதொட்டு இன்றுவரை இதுதானே உண்மை நிலை. பெண்டாட்டிக்கு மட்டுமல்ல ‘தேவடியாள்’ என்ற வார்த்தைக்கும் ஆண்பால் இல்லையே! விதவை, கைம்பெண் என்ற சொற்களுக்கும் கூட ஆண்பால் இல்லைதானே. ஆனால் கொஞ்சம் அதிகம் பேசும் பெண்களை ‘அகராதி’ என்றே ஆண்கள் திட்டுவார்கள். இதில் நானும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
ஞா. சிவகாமி
சென்னை - 116
‘நம் குழந்தைகளின் பால்யத்தையும் அதன் வெகுளித்தன்மையையும் பறித்துக்கொண்டோட மத்திய அரசு முனைவதில் சமூகம் பெறப்போகின்ற ஆதாயங்கள் என்னவாக இருக்க முடியும்? இன்றைய அரசின் நடைமுறைகள் நலிவுற்றோர் மீது நடத்திவரும் தாக்குதல்களின் மறுவடிவமாக இப்போதைய கல்விமுறை மாறிவிட்டது. தனியார்ப் பள்ளிகளுக்கு வழங்கப்பெறும் சலுகைகள், கருணைப் பார்வைகளை அரசு, தாமே நடத்தும் பள்ளிகளுக்கு வழங்குவதில்லை. ஐந்து, எட்டாம் வகுப்புத் தேர்வுகளைக் கட்டாயமாக்குவதன் மூலம் படிப்பைக் கைவிடுகின்ற குழந்தைகளின் வாழ்க்கை நிலை குறித்த சிந்தனைகள் எவையும் அரசுக்கு இல்லையா’ போன்ற பொருள் பொதிந்த கேள்விகளை எழுப்பி, அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது ஆசிரியர் அகவுரை!
இந்த ஆண்டில் பொதுத்தேர்வு இல்லையெனில், அடுத்தடுத்த ஆண்டுகளில் இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையனின் பதில்! குறைந்த பட்சம் எட்டு ஆண்டுகளாவது ஒரு குழந்தை பள்ளியில் இருத்தல் அவசியம் என்பதை உணர்ந்தே, எட்டாம் வகுப்புவரைக்கும் அனைவரும் தேர்ச்சி என்பதை நடைமுறைப்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற வழிவகுத்துச் செயல்படுத்திய தலைவர்களையும் அற்றைநாள் ஆட்சியாளர்களையும் உதாசீனப்படுத்தும் செயலல்லவா இது! ஒருகாலகட்டத்தில் மேல்தட்டு மக்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய கல்வியை வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளோரும், வருணாசிரமக் கொள்கை அடிப்படையில் நிராகரிக்கப்பட்டோரும் எட்டியே பார்க்க முடியாத நிலையில் இருந்தது. ஏழைகளின் குடிசைக் கதவுகளைத் தட்டித்திறந்து, சிறார் தொழிலாளர்களாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்துவந்த மக்களுக்குக் கல்வியை இலவசமாக வழங்கி, பசியைப் போக்கி, கல்விக் கண்ணைத் திறந்து தேச நலன் காத்த காமராஜரை நினைக்க மறந்ததும் ஏனோ?
கல்வி வளர்ச்சியே சமுதாயத்தை மாற்றவல்லது; தனிமனிதனோ சமூகமோ உயர வேண்டுமெனில் அதனைத் தொடக்க நிலையிலிருந்தே கற்பிக்கவும் கட்டமைக்கவும் வேண்டுமென சமூக விஞ்ஞானி தந்தை பெரியார், கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு உள்ளிட்ட ஆளுமைமிக்க தலைவர்கள் அறிவுறுத்தியதை மீளவும் உயிர்ப்பிக்க, சமூகச் செயற்பாட்டாளர்களும் ஊடகங்களும் உரத்துக் குரல்கொடுக்க முன்வருதல் காலத்தின் கட்டாயம். அப்போதுதான் ‘நம் குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்’ என்ற ஆசிரியரின் அறைகூவலுக்கு வெற்றி கிட்டும்.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
‘தேடு கல்வி இலாது’ தலையங்கம் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு கொண்டு வரப்படுவதன் உள்நோக்கத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிட்டது. வறுமையின் பிடியில் வாடும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதன் மூலம் வளமான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையால் தம் கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர்.
பெண் கல்வி முன்பு வளராததற்குக் காரணம் வயதுக்கு வந்ததுமே பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தும் வழக்கமே. அதையும் மீறி அனுப்பினால் ஒன்பது, பத்து வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால் அதுதான் சாக்கு என்று நிறுத்திவிடுவார்கள். பதினொன்றாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்குச் செல்வது உத்திரவாதம்
இல்லை.
நாற்பது ஆண்டுகளுக்குமுன் என் மாணவர் பழனிச்சாமி மணப்பாறை வட்டம் பண்ணைப்பட்டி கிராமத்திலிருந்து நாள்தோறும் போகவர எனப் பதினாறு கிலோமீட்டர் நடந்துதான் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். விடுமுறை நாட்களில் கிணறு வெட்டும் வேலை போன்ற கடினமான வேலைகளுக்குச் செல்வார். அவருடைய உழைப்பு அவர் குடும்பத்துக்குச் சோறு போட்டது.
1971-72 முதல் 1978-79 முடிய நான் பணியாற்றிய வையம்பட்டி அரசுப் பள்ளியில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாணவிகளை எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்குப் போகும்வரை இடையில் தேர்வுசெய்யாது விட்டதில்லை. மாணவர்களைப் பொறுத்த அளவில் ஒரு வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிப்போரை மீண்டும் அந்த வகுப்பிலேயே வைத்ததில்லை.
ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் படித்து அரசு வேலைகளுக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது, அவர்கள் கோவணத்துடனே அலைய வேண்டுமென்பது மோடிக்கு நியாயமாகத் தோன்றலாம். ஆனால் காமராஜரின் காலத்தில் அருமையான கல்வி பெற்ற தமிழகம் இன்றைய தமிழ்நாட்டு அமைச்சர்களின் நினைவுக்கு வராதா? பெரியாரின் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தால் பயன்பெறாத அமைச்சர்கள் எவரேனும் உண்டா?
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு - 626 132
மார்ச் மாத இதழில் சந்நியாசமும் தீண்டாமையும் என்ற ராமாநுஜம் எழுதிய நூலுக்கு மதிப்புரை வெளியாகியிருந்தது. அந்த நூல் கீழ்க்காணும் முகவரியில் கிடைக்கும்: பரிசல் புத்தக நிலையம், எண் 216 - முதல் தளம், திருவல்லிக்கேணி
நெடுஞ்சாலை, சென்னை - 5. விலை ரூ.200.