நீதித்துறையைக் காலியாக்குவது
உச்சநீதிமன்றத்திற்கு 2019 ஜனவரி மாதம் மற்றுமொரு கொந்தளிப்பான காலமாகும். அப்போதைய தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு மூத்த நீதிபதிகள் கிளர்ந்தெழுந்ததை 2018 ஜனவரி பார்த்ததென்றால் அந்த நான்கு நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாகக் கொந்தளிப்பின் மையத்தில் இருப்பதை 2019 பார்க்கிறது. சமீபத்திய சர்ச்சைகள் அவரது நம்பகத்தன்மையை, அவர் பெற்றுள்ள நன்மதிப்பைப் பெரிதும் பாதித்துள்ளதுடன் நீதித் துறையையும் களங்கப்படுத்தியுள்ளது.
மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் (மபுக) இயக்குநர் அலோக் வர்மாவை இரண்டுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் இடைநீக்கம் செய்த உயர் அதிகாரக் குழுவில் நீதிபதி ஏ.கே. சிக்ரி இடம்பெற்று அக் குழுவில் அரசின் பிரதிநிதியாக இருந்த பிரதமரோடு கருத்துரீதியாக ஒத்துப்போனது முதல் சர்ச்சை. காமன்வெல்த் நிர்வாக நடுவர் தீர்ப்பாயத்திற்கு சிக்ரியைப் பரிந்துரைப்பது என்ற அரசின் முன்மொழிவு எந்த வகையிலும் சிக்ரி எடுத்த முடிவின் தாக்கத்தினால் அல்ல என்று நாம் யூகித்துக்கொண்டாலும், நீதித்துறை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்ட விரும்பும் கொள்கையான, “நீதி நிறுவப்பட்டால் மட்டும் போதாது, அது நிறுவப்பட்டது என்பது தெரியவும் வேண்டும்,” என்பதற்கு எதிரானது. உயர் அதிகாரக் குழுவின் செயற்பாட்டில் தலைமை நீதிபதியை (அல்லது அவர் பரிந்துரைப்பவரை) ஈடுபடுத்துவது நடுநிலைமையையும் சார்பின்மையையும் கொண்டுவரத்தான். இவ்வாறு கூறுவது நியாயமற்றதாகத் தோன்றக்கூடும், ஆனால் (நீதிபதியின் நடுநிலைமையை, சார்பின்மையைக் கேள்விக்குட்படுத்துவதற்கான சிறு வாய்ப்பையும் விட்டுவைக்காத) கோகாயின் முடிவு நீதித் துறையின் நம்பகத்தன்மையைப் பெரிதும் பாதித்துவிட்டது.
இதையடுத்து உடனே வந்த சர்ச்சைக்குரிய முடிவான நீதிபதிகள் ராஜேந்திர மேனன், பிரதீப் நந்த்ரஜாக்கின் பரிந்துரையை ‘மறுபரீசீலனை’ செய்வது நீதித் துறையின் மிகத் தீவிரமான ஆதரவாளர்களைக்கூட அத்துறைக்கு ஆதரவாகப் பேசமுடியாது செய்துவிட்டது. இந்த மறுபரீசீலனைக்குச் சொல்லப்பட்ட காரணங்களைப்போலவே நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தினேஷ் மகேஷ்வரியின் பரிந்துரைக்கான தீர்மானத்தின் விவரங்களும் மிகக் குறைவு. கலோஜியம் புதிதாக அமைக்கப்பட்டது, புதிய கலந்தாய்வுகள் தேவைப்பட்டன என்று சொல்லப்படும் நியாயங்கள் ஏற்புடையனவாக இல்லை. இது எல்லா வகையான யூகங்களுக்கும் இடமளிக்கிறது. ஒரு மாதத்திற்குள் கலோஜியம் ஏன் தனது மனத்தை மாற்றிக்கொண்டுவிட்டது என்று யாருக்குமே விளங்கவில்லை.
கலோஜியத்தின் எல்லாப் பலவீனங்களையும் இந்த முடிவு அம்பலப்படுத்துகிறது. கன்னா, மகேஷ்வரியின் ‘தகுதி’ பற்றிச் சில பலவீனமான சுட்டுதல்களைக் கொண்ட அறிக்கையைத் தவிர்த்து அவர்கள் உயர்த்தப்பெற்றதற்கான அளவுகோல் எதையும் கலோஜியம் விவரிக்கவில்லை. மேனனும் நந்த்ராஜாக்கும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் எவையும் தரப்படவில்லை. மறுபரீசீலனைக்குக் காரணமான தகவல்கள் என்னவென்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலர், வழக்கறிஞர்கள், குடிமக்கள் என பலரும் கவலைகள் தெரிவித்த பின்னரும் உச்ச நீதிமன்றத்திடமிருந்தோ தலைமை நீதிபதியிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை.
நீதிபதி நியமனத்தின் தன்னிச்சையான போக்கு, வெளிப்படைத்தன்மையின்மை, பதிலளிக்கும் கடமையின்மை ஆகியவற்றால் நிரம்பியுள்ளதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. கொஞ்சம் வேறு மாதிரியான பின்னணியில் என்றாலும், 2018 ஜனவரி 12ஆம் தேதி ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக நான்கு நீதிபதிகள் ஏறக்குறைய இதே புகார்களை வைத்தனர்.
2019 ஜனவரியில் கலோஜியம், நீதிபதி நியமன செயல்பாடுகளில் உருவான சர்ச்சை கன்னா, மகேஷ்வரி ஆகியோர் உயர்த்தப்பட்டதுடன் மட்டும் நிற்கவில்லை. அவர்கள் உயர்த்தப்பட்ட ஒரு வாரம் கழித்து, வேறு பல உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமன விஷயத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகள் கலோஜியத்தின் சுதந்திரம் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகின்றன. இந்த முடிவுகள் பலவும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென கலோஜியத்திடம் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் கேட்டது. இத்தகைய கோரிக்கை வைக்கப்பட்டது இம்முறை மட்டும் நடந்த விஷயமல்ல. நியமனம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் திருப்பியும் அனுப்பாமல், ஏன் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென்பதற்கான வலுவான ரணங்களையும் கோராமல் செயல்முறைக்கான ஆவணத்தைப் பின்பற்றுவதிலிருந்து வெகுதூரம் விலகியது கலோஜியம். அது மத்திய அரசின் காரணங்களை ஏற்றுக்கொண்டு பதினொரு பெயர்களில் பத்து பேரின் நியமனத்தை நிராகரிக்கின்றது.
நீதிபதிகள் நியமனத்தில் சுதந்திரத்தை உறுதிப்படுத்த கலோஜியம் முறைதான் ஆகச் சிறந்த முறை என்று மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றம் கூறும் நியாயத்தை கோகாய் தலைமையிலான கலோஜியத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையம் அமைக்கப்படுவதற்கான அரசமைப்புச்சட்ட திருத்தத்தை நான்காவது நீதிபதிகள் வழக்கில் (2015) செல்லாததாக்கித் தள்ளுபடி செய்து கலோஜிய நியமன முறை எவ்வாறு நீதித் துறையின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது என்று பெரும்பான்மை நீதிபதிகள் பெரும் முயற்சிகள் எடுத்து விளக்கினர். தீர்ப்பிற்கு இணக்கமாகச் சொல்லப்பட்ட நீதிபதி மதன் லோகூரின் கருத்தைப் படிக்கிற ஒருவர் கலோஜியம் முறை மட்டுமே அரசமைப்புச்சட்டத்தின்படி நீதிபதிகள் நியமனத்திற்கான அனுமதிக்கப்பட்ட முறையென்றும், தேவைப்படுவதெல்லாம் அதில் சிறு மாற்றங்கள் மட்டுமே என்றும் நினைப்பார். கலோஜியம் முறை நீடிப்பதற்கான நியாயத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த நீதிபதி நியமனங்களும் மாற்றல்களும் அழித்திருக்கவில்லையெனில் கோகாய் தலைமையிலான கலோஜியம் கொஞ்சநஞ்சம் மீதமுள்ள நியாயத்தையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.
பொதுமக்களின் கூர்ந்தாய்வும் அரசின் அழுத்தமும் நீதித் துறையின் பலவீனத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது. இதுவொன்றும் யாரோ ஒரு தனிநபரின் அற வீழ்ச்சியோ அல்லது ஒரு சிலரின் தவறான மதிப்பீடுகளினால் ஏற்பட்ட பின்விளைவுகளோ அல்ல. ஒரு நிறுவனத்தால் தனது அமைப்பின் பலவீனத்தை ஒப்புக்கொள்ள முடியாத நிலைக்கான உதாரணம் இது. இதில் கூடுதலான ஓர் ஏமாற்றம் என்னவெனில் இப்போது இந்த நிறுவனத்தை வழிநடத்துபவர் அமைப்பின் இத்தகைய பலவீனங்களை அறிந்தவர் என்பதுடன் அதை சரிசெய்ய உறுதிபூண்டவரும் ஆவார் என்பதுதான்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி,
ஜனவரி 26, 2018
தமிழில்: க. திருநாவுக்கரசு