கண்ணிற்குப் புலனாகா காலத்தின் புதிர்
காற்றைச் சுமந்துகொண்டு
தீரா வாசத்து ஜீவநதி
பூமியைத் துளைக்கிறார்கள்
துளைத்துக்கொண்டே
ராட்சஸ போர்வெல் இயந்திரம்
முப்போகம் நெல்லை வேலி கட்டிய நகரம்
நீர்மிதக்கும் அமலைகள்
வெங்காயத் தாமரைகள்
மீன்கள் கொழுத்தலையும்
நயினார் குளம்
குளத்தெதிர்
காய்கறி மார்க்கெட்
காத்திருக்கிறது லாரிகள் இரவெல்லாம்
லாரி செட்டுகள். டாஸ்மாக்.
உடல் கறுத்த பாரத்தோடும் முதுகுகளோடும்
நெஞ்சு விரிந்த மார்புகளோடும்
இடுப்புக்குக் கீழ் என்னவென்றே
சதை திரண்ட தொடைகளோடும்
உந்தித் தள்ளுகிறார்கள்
முதுகில் கனக்கும் பாரத்தை
குளத்தோரம் சுடலைகளும் இசக்கிகளும்
பேச்சிகளும் காத்துக் கருப்புகளும்
ஆலமரத்து விழுதுகளோடு
அப்பன் தன் சகதர்மிணியுடன்
நாலுரத வீதியும் கோட்டை கட்டி
வனப்பரிவாரங்களாக