சோறும் கல்வியும் சமூக வளர்ச்சியும்
இந்திய விடுதலையின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவுநாளன்று மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட’த்தைத் தொடக்கிவைத்திருக்கிறார். இதன் ஆரம்பக் கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள்; வருங்காலத்தில் இது மாநிலம் முழுதுமுள்ள அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இப்போதைக்கு முதல்வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமான மாணவ மாணவிகள் இந்த ஊட்டச் சத்தினைப் பெறவுள்ளார்கள்.
தமிழ்நாட்டு அரசுக்கு இது பெரும் நிதிச்சுமையை அளிக்கப்போகின்ற திட்டமாகும். ஆனாலும் பள்ளியில் பயிலும் குழந்தைகள் பசியால் வாடக் கூடாது என்கிற அடிப்படையில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். ஒருவகையில் இது முதல்வரின் பிடிவாதமான குணமென்று சொல்லலாம். வெவ்வேறு முதல்வர்கள் தமிழ்நாட்டை ஆண்டுவந்தாலும், அம்முதல்வர்கள் அனைவருமே மாணவர்களுக்கான மதிய உணவையோ சத்துணவையோ அளிப்பதில் தொடர்ந்து பிடிவாதமான குணத்தோடுதான் அரசாண்டு வந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை முதல்வரின் இந்நாள் உரையின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையும்போது அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறியே தமிழக முதல்வர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1982இல் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் ஆட்சிக்காலத்தில் 6.93 லட்சம் செலவில் கொண்டுவரப்பட்ட எளிய மதிய உணவுத் திட்டத்தின் தொடர்ச்சியாக, அதன் பிரமாண்டமான வடிவமாக ரூ.175 கோடி செலவில் எம்ஜிஆரின் சத்துணவுத் திட்டம் இருந்தது. தமிழ்நாட்டில் ஏழைகளின் பெருக்கமும் கல்வி இடைநிற்றலும் அதிகமாக இருந்தன. அது பெரும் சவாலாக இருந்ததை காமராஜரும் எம்ஜிஆரும் தெளிவாக அறிந்திருந்தார்கள். தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமானால் மாணவர்களைக் கல்வி நிலையங்களில் தக்கவைப்பது அவசியம்; அதற்காகப் புதிய முன்னெடுப்புகள் தேவையென அவர்கள் புதிய வகைகளில் சிந்தித்தனர்.
அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவுத் திட்டத்தை எம்ஜிஆர் அரசு கொண்டுவந்தபோது அதற்கான நிதிவளம் இங்கு இல்லை. எனவே அதிகாரிகள் அதை எதிர்த்தார்கள்; எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி தமிழ்நாட்டைப் பெரும் நிதிச்சுமையில் அது ஆழ்த்தும் என்று எச்சரிக்கவும் செய்தார். பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தார்கள். ஆனால், எம்ஜிஆர் அசராமல் தன் திட்டத்தை முன்னெடுத்தார். நடுவண் அரசிடம் கூடுதல் நிதியுதவியைக் கோரிப் பெற்றார்.
திட்டம் அமல்படுத்தப்பட்டதும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை கூடியது. காடு மேடுகளிலும் வயல்களிலும் வயிற்றுப்பாட்டுக்காக உழன்றுகொண்டிருந்த சிறுவர்கள் பள்ளியை நோக்கிவரும் அதிசயம் நிகழ்ந்தது. தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றல் பெருமளவில் குறைந்தது. வளர் இளம் பருவத்தினரின் உடல்நலம் பெரிதும் முன்னேற்றமடைந்தது. செம்பட்டைத் தலைகளும் தோல் நோய்களும் மறைந்தன. சில ஆண்டுகளில் திட்டம் பரவலான பாராட்டைப் பெற்றது. உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் பாராட்டின. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் முதல்வரான கருணாநிதி, தானே எதிர்த்த திட்டத்துக்குக் கூடுதல் பொலிவேற்றிச் சத்துணவில் முட்டையையும் சேர்த்தாரே தவிர, அதனை நிறுத்திவிடவில்லை. ஜெயலலிதா சத்துணவுத் திட்டத்தில் எந்தச் சுணக்கமும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைய முதல்வர் ஸ்டாலினின் முன்னெடுப்பைப் பார்க்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்தக் காலை உணவுத் திட்டம் இளம் வயதினரின் உடல்நலத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றக்கூடியது. இலட்சக்கணக்கான வீடுகளில் காலை உணவு என்ற சங்கதியே இல்லாமல் பிள்ளைகள் பசியோடு பள்ளிக்கு வருகிறார்கள். காலை உணவின் மருத்துவ, உளவியல் பலன்கள் இனி அவர்களுக்குக் கிடைக்கும். பள்ளிக்கு வருவதற்கான அவர்களுடைய ஊக்கத்தை அது அதிகரிக்கும்.
ஏழை மக்களின் நலன்களுக்காகச் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் ‘இலவசம்’ என்று வர்ணிக்கவே இந்தியாவின் அதிகார வர்க்கம் விரும்புகிறது. வறுமைக்கான காரணிகளைக் களைய வேண்டுமே தவிர இலவசங்களை எதிர்பார்ப்பவர்களாக மக்களை ஆக்கிவிடக் கூடாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால் வறுமையைப் போக்குவதற்கான வழிமுறைகளைத் தன்னகத்தே வைத்திருக்கும் அரசுகளும் அதிகாரவர்க்கமும் அதில் போதிய முனைப்புக் காட்டவில்லை என்னும் உண்மையை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். வறுமை ஒழிப்பு என்னும் மாபெரும் சவாலில் வெற்றிபெறும்வரை, அரசுத் திட்டங்களின் சாதகங்கள் எதையும் பெற இயலாமல் இருக்கும் மாபெரும் மக்கள் திரளுக்கான நலன்களை யார் கவனிப்பது என்னும் கேள்விக்கும் நிபுணர்களிடம் உரிய பதில் இல்லை. பெருமுதலீட்டாளர்களின் நலன்களைக் காப்பதில் முனைப்புக் காட்டும் அதிகாரவர்க்கம் ஏழைகள் விஷயத்தில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. இத்தகைய சூழலில் சத்துணவுத் திட்டம் போன்ற திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
பள்ளிகளில் அமலாக்கப்படும் உணவுத் திட்டங்கள் சாதீய ரீதியிலான பாகுபாட்டை ஓரளவேனும் நீக்குகின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. கல்வி பெறுவோரின் எண்ணிக்கை கூடுவதால் வேலை வாய்ப்புக்குத் தகுதி பெறுவோரின் எண்ணிக்கையும் கூடுகிறது. கல்வியறிவு பெற்றவர்கள் அதிகரிப்பது மனிதவள மேம்பாட்டிற்கு மிக முக்கியமானது. மனிதவள மேம்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியை இந்தப் பின்னணியில் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
பள்ளியில் பெற்ற சத்துணவு மாணவர்களின், குறிப்பாகப் பெண்களின் உடல்நிலையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது அவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கும் நன்மை பயப்பதாக இருப்பதை வாஷிங்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வொன்று கூறுகிறது. இந்த ஆய்வறிக்கை Nature Communications என்னும் ஆய்விதழில் கடந்த ஆண்டு பிரசுரமானது.
1993 முதல் 2016 வரையிலான நிலவரத்தின்படி பள்ளிக்கூடங்களில் இலவச உணவு சாப்பிடும் குழந்தைகளில் உயரக் குறைபாடு என்னும் பிரச்சினை குறைந்திருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் உணவு உட்கொண்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை, அப்படி உட்கொள்ளாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதை அந்த ஆய்வு காட்டுகிறது. 2005இல் மதிய உணவுத் திட்டம் அமலாக்கப்பட்ட இடங்களில் 2016ஆம் ஆண்டில் உயரக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
தாய்மார்களின் உடல்நலம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்று சத்துணவு நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பெண்கள் தாய்மார்களாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுடைய சுகாதாரத்தில் கவனம் செலுத்தப்பட்டால்தான் மகப்பேற்றின்போது அவர்களுடைய உடல்நலம் நன்றாக இருக்கும்; அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் பள்ளிப் பருவத்தில் பள்ளிகளில் உணவு உட்கொள்வதற்கும் சில ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவு அவர்களுக்கு மட்டுமின்றி அடுத்த தலைமுறையினருக்கும் பலனளிக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதன் இலக்குகளைத் தாண்டிக் கல்விச் சுரண்டலுக்கு வழிவகுத்திருக்கிறது. இதன் மாயவலையில் வீழ்ந்துள்ள ஏழைப் பெற்றோர்களும் ஏராளம். தங்களின் முதுகொடிக்கும் பொருளாதாரச் சுமையை வலியோடு சுமந்தபடித் தம் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளிகளில் சேர்க்கும் அந்தப் பெற்றோர்கள் இத்தகைய காலை உணவுத் திட்டத்தால் அரசு பள்ளிகளின் பால் ஈர்க்கப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன; அவர்கள் தம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம், சிறு கிராமங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்படும் அவல நிலையையும் தடுக்க முடியும்.
இன்றைய நடுவண் அரசு, நாடெங்கும் ஏழைகளைச் சென்றடையும் இலவசத் திட்டங்களை நிறுத்திவிட விரும்புகிறது. அதற்கேற்ற பிரச்சார வலைப்பின்னல் ஊடகங்களோடு நின்றுவிடாமல், உச்ச நீதிமன்றம் வரை செல்லும்வகையில் நடுவண் அரசு மிகத் தீவிரமாகச் செயல்படுகிறது. அதற்கொரு எசப்பாட்டாகத் தமிழ்நாட்டரசின் காலை உணவுத் திட்டம் இலட்சக்கணக்கான ஏழைப் பெற்றோர்களின் மனக்குளுமையுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசியலும் பொருளாதாரக் கணக்குகளும் எப்போதுமே சமூகநீதியோடு இணைந்து வருவதால், அது இயல்பாகவே இம்முடிவை எடுத்திருக்கிறது. பிற மாநிலங்களின் கண் திறப்புக்கும் இது ஏதோ ஒருநாளில் உதவலாம்.
வயிற்றுக்குச் சோறு, கல்வி ஆகிய இரண்டையும் தருவதை நம் செயல்திட்டமாகக் கொள்ள வேண்டுமென்று பாரதி கட்டளையிட்டிருக்கிறார். இதன் மூலமாகவே இந்தப் பாரினை உயர்த்த முடியும் என்று அவர் கனவுகண்டார். பள்ளிகளில் அமலாக்கப்படும் உணவுத் திட்டங்கள் இந்தக் கனவின் செயல்வடிவங்கள். சோறு, கல்வி ஆகிய இரண்டையும் உத்தரவாதப்படுத்துபவை. இவற்றால் ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள பலன்களைக் கண்கூடாகக் கண்ட நிலையில் மிகுந்த நம்பிக்கையுடனும் சிறந்த எதிர்காலம் குறித்த கனவுடனும் தமிழக அரசு இந்தக் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. ‘இலவசங்கள்’ குறித்த எதிர்மறைப் பிரச்சாரங்கள் ஓங்கிவரும் இன்றைய சூழலில் இது மிக முக்கியமான, ஆணித்தரமான முன்னெடுப்பு. இதைச் செயல்படுத்திய தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.