காலச்சுவடும் நானும்
புத்தக வாசிப்பு அறிமுகமான ஆரம்பம்; 2003ஆம் ஆண்டு ‘போரின் மறுபக்கம்’ புத்தகத்தை எழுதி முடித்தேன். ஈழ அரசியலோ இலக்கிய அரசியலோ தெரிந்து இது எழுதப்படவில்லை. ஒருவேளை இன்று இப்பிரதி எழுதப்படுமாக இருந்தால் அதன் உள்ளடக்கம் வேறுவிதமாக மாறிவிடும்.
இது ஓர் அகதியின் கதை. நான் அகதியாகவே இருந்ததால் எழுதுவதற்குச் சிரமம் இருக்கவில்லை. எழுதியதைவிட இதை வெளியிடுவதற்கானப் பிரயத்தனம் கடுமையாக இருந்ததற்கு இரண்டு காரணங்களை முக்கியமாகச் சொல்லலாம்: அரசியல் சூழலும் என்னுடைய அறியாமையும்!
எந்தெந்தப் பதிப்பகங்கள் இந்தமாதிரிப் புத்தகங்களை வெளியிடுகின்றன என்ற அறிதல் எனக்குச் சுத்தமாக இருக்கவில்லை. அதனால் முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் பலவற்றைத் தேவையில்லாமல் அணுகவேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்று இருந்த இறுக்கமான புற அரசியல் சூழலில் தடா, பொடா சட்டங்கள் கடுமையாக இருந்தன. ஈழம்பற்றிப் பேசிய அரசியல் தலைவர்கள் வருடக்கணக்கில் சிறையிலிருந்தார்கள். அதனால் இதுபோல் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள்கூட அகதிகள் பிரச்சினை தொடர்பான புத்தகத்தை வெளியிடுவதற்குத் தயங்கின. “உங்களுக்காக நான் சிறை செல்ல முடியாது,” என்று கூறிய பதிப்பக முதலாளி இன்றும் நம்முடன் இருக்கிறார்.
புத்தகம் எழுதிய காலத்தில் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டு அது சார்ந்த பதிப்பகங்களை அணுகினேன். மாவீரர் உரைகளை வெளியிட்ட பதிப்பகங்கள் படுத்திய பாடு பற்றி ஒரு நாவலே எழுதலாம். குறிப்பாக, பழ நெடுமாறனிடம் “எப்ப முடியுமோ அப்ப வெளியிடுங்கள். அதுவரை இது உங்களிடம் இருக்கட்டும்,” என்று பைரல் பைண்டிங் பண்ணிய பிரதியைக் கொடுத்தேன்; கையில் வாங்கக்கூட மறுத்துவிட்டார். அவருக்கு நெருக்கடிகள் இருந்திருக்கலாம். அவரும் பொடா சட்டத்தில் நீண்டகாலம் சிறையில் இருந்தவர். ஆனால் நேரடி அனுபவம் கசப்பானது. மேடைப் பேச்சுக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி எனக்குப் புரியத் தொடங்கியது.
இவர்களை நம்பிப் பிரயோசனமில்லை, நானே வெளியிடுவது என்று முடிவுசெய்து சென்னையில் கூட இருந்த அறை நண்பர்களிடம் பேசினேன். அப்போது கப்பலில் வேலை பார்த்த, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நண்பர் முருகேசன் பதினெட்டாயிரம் கொடுத்தார்.
புத்தகம் வெளியிட எவ்வளவு செலவாகும், அதற்கான வேலைகள் என்ன, ஒன்றும் தெரியாது. சீலப்பிள்ளை விளையாட்டுப்போல பேசித்திரியும் என்னை நம்பி முருகேசனும் பணம் கொடுத்துவிட்டார். புத்தகம் முறையாக எழுதப்படவில்லை. எழுதிய பிரதிக்குள் ஊருப்பட்ட வேலை இருக்கிறது என்று தெரியும்போது நண்பன் குடுத்த காசு காணாது. என்ன செய்வது?
சென்னை எழும்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான அம்பாசிடர் பல்லவாவில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக பார்த்த வேலையை இராஜினாமா செய்தேன். (எப்படி வேலைக்குச் சேர்ந்தேன் என்பது தனிக்கதை.) ஏனென்றால் என்னுடைய தொழிலாளர் வைப்புநிதிப் பணம் வரும், அதையும் நண்பருடை பணத்தையும் சேர்த்துப் புத்தகம் வெளியிடலாம் என்று திட்டமிட்டேன்.
வேலையும்போய், காசும்போய்ச் சென்னையில் பட்டினியாகக் கிடந்து வாழ முடியாமல் மறுபடியும் 2006 கடைசியில் உச்சப்பட்டி முகாமில் உடம்பு முடியாமல் வந்துசேர்ந்தேன்.
கியூபிராஞ்சுக்காரன் கேட்கிறான்:
“1998இல் முகாமிலிருந்து காணாமல் போன நீ எட்டு வருடங்கள் கழித்து 2006இல் வந்திருக்கிறாய்.இந்த இடைப்பட்ட காலத்தில் புலிகளிடம் பயிற்சி எடுத்துட்டு ஏதோ வேலைத்திட்டத்துடன் மறுபடியும் இங்கு வந்திருக்கிறாய்.” என்னத்தச் சொல்ல? இவனுக்கு எப்படிப் புரிய வைக்க?
இப்படியே பைத்தியக்காரனைப் போல் அலைந்துதிரிந்த நான், இலங்கை தொடர்பாக என்னென்ன புத்தகங்கள் தமிழகத்தில் வெளி வந்தி ருக்கின்றன, அவற்றை எந்தெந்தப் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன என்று தேட ஆரம்பித்தேன். கா. சிவத்தம்பி, கே. டானியல் போன்றவர்கள் இடதுசாரிகளால் அறிமுகமாகியிருந்தார்கள். ‘புதியதோர் உலகம்’, ‘லங்கா ராணி’, ‘கொரில்லா’ போன்ற சில நூல்கள் உதிரிகளாக வெளிவந்திருக்கலாம்; அவை என் கவனத்திற்கு வரவில்லை. சி. புஸ்பராசாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற புத்தக விமர்சனம் இந்தியா டுடேயில் வந்திருந்தது கண்ணில் பட்டது. இந்த புத்தகத்திற்குப் பிறகுதான் ஈழப்பிரச்சினை சார்ந்து தமிழகத்தில் சந்தையே உருவானது. பிறகு 2009ஐ நெருங்கநெருங்க ஈழம்சார்ந்து புத்தகம் வெளியிடாத பதிப்பகமும், செய்தி வெளியிடாத பத்திரிகைகளும் இல்லை என்ற நிலை உருவானது.
2006 முகாம் திரும்புவதற்கு முன்பே ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ வெளியிட்ட ‘அடையாளம்’ பதிப்பகத்தைத் தொடர்புகொண்டபோது புத்தகத்தை எடிட் பண்ண வேண்டும், அதனால் ந. முருகேசபாண்டியனைத் தொடர்புகொள்ள ஆலோசனை சொன்னார்கள். அதற்கு முன்புவரை முருகேசபாண்டியனை எனக்குத் தெரியாது.
சுமார் நூறுபக்கங்களுக்கும் மேல் எடிட் பண்ணி என்னை இன்னும் எழுதச்சொல்லி, அதையும் சேர்த்து நூல் வடிவமாக்கிக் காலச்சுவடுக்கு அவர்தான் பிரதியை அனுப்பினார். அதுவரை காலச்சுவடு இதழோ பதிப்பகமோ என் கவனத்திற்கு வரவில்லை.
2007 டிசம்பரில் ‘போரின் மறுபக்கம்’ புத்தகம் வெளிவந்தது. தமிழக ஈழ அகதிகள் பற்றி ஓர் அகதியே எழுதிய, தமிழில் வந்த முதல் புத்தகம் இது. புத்தகம் வந்திருச்சேன்னு மூச்சு விடவா முடியும்? மூன்றாம் நாள் கியூபிராஞ்ச் அதிகாரி வந்து என் ஓலைக்கோட்டில் கதவைத் தட்டினார்.
எப்பவும்போல் மிரட்டலான விசாரணை முடித்த கையோடு என்னிடமிருந்த ஒரே புத்தகத்தையும் எடுத்துச் சென்றார். விசாரணையில், புத்தகம் வெளியிட்ட பதிப்பக விவரங்களைக் கேட்டு எழுதிச் சென்றதால், எனக்கும் வேறு வழியே தெரியாததால் காலச்சுவடு கண்ணனிடம் தொலைபேசிவழி தகவலைத் தெரிவித்தேன். “இனிமேல் வந்தால் என்னிடம் பேசச் சொல்லுங்க,” என்றார். அதன்பின்புதான் என் தொடை நடுக்கம் சற்றுத் தணிந்தது. கட்டியிருந்த சாரம் மறைத்திருந்ததால் தொடை நடுக்கம் வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தப் புத்தகத்திற்காக மதுரை தமிழ்நாடு ஓட்டலில் வெளியீட்டு விழாவைக் காலச்சுவடு ஏற்பாடு செய்தது. அப்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரவிக்குமார் வெளியிட்டு உரையாற்றினார்.
2008வரை அகதிகள் முகாமிலிருந்த நான் அதன்பின்பு முறையான அரசு அனுமதியுடன் முகாமிற்கு வெளியே பதிவை மாற்றிக்கொண்டு மதுரையில் வாடகை வீட்டில் வாழ்ந்தேன்.
அங்க இங்க சுத்தி வேறு வழியில்லாமல்… 2011இல் காலச்சுவடில் முழு நேரப் பணியாளராகச் சேர்ந்து கொண்டதும், என்னைப்போல் அகதி ஒருவனை நம்பி வேலைக்குச் சேர்த்தது இன்றுவரை எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஏன் இவ்வாறு குறிப்பிடுகிறேன் என்றால், ‘போரின் மறுபக்கம்’ என்னுடைய கதை. அதைப் படித்தவர்கள் பெரும்பாலும் ஐயத்தோடுதான் என்னை அணுகுவார்கள் என்றதற்கான அனுபவங்கள் எனக்கு இருந்தன.
என்னைத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் நிராகரிப்பதற்கான சூழலைப் போரின் மறுபக்கம் உருவாக்கியிருந்தது. ஆகவே புத்தகம் வெளியிட்ட காலச்சுவடே என்னை ஏற்றுக்கொள்வது என்னளவில் ஆச்சர்யம்தான்.
நெய்தல் கிருஷ்ணன் சொல்லி, 2008இல் இருந்து அவ்வப்போது காலச்சுவடு இதழ் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்; ஆரம்பத்தில் ஒரு மண்ணும் புரியல.
காலச்சுவடில் சேர்ந்ததும் இலக்கியம் குறித்துப் பெரும் மலைப்பாக இருந்தது. ஒன்றும் தெரியாமல்தான் புத்தகம் எழுதியிருக்கிறேன் என்பதும், போரின் மறுபக்கம் வந்ததும் அகதிகள் பிரச்சினை எல்லாம் ஒரே இரவில் சரியாகிவிடும் என்று நினைத்ததும், இலக்கியம் குறித்த மதிப்பீடுகளும் விளங்க ஆரம்பித்தன.
எழுதுவதற்கான அகதி அழுத்தம் ஒரு பக்கமாக விரட்டினாலும் எப்படி எழுதுவது என்று தெரியாததால் எழுதுவதற்கான பயமும் தயக்கமும் உருவாகியிருந்தது.
2008இல் இருந்து 2015வரை ஏழு வருடங்களில் அகதிகள் குறித்து ஓரிரு கட்டுரைகள் மட்டுமே தட்டுத்தடுமாறி காலச்சுவடில் எழுதியிருக்கிறேன். இந்தக் காலத்தில் ஈழவாணி கொண்டுவந்த பூவரசி இதழில் ஒரு நேர்காணலும் ஓரிரு கட்டுரைகளும் வந்திருந்தன.
கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும் அகதிகள் பிரச்சினை குறித்துப் புத்தகம் வெளிட வேண்டுமென்ற அழுத்தம் மறுபடியும் வந்தது. பெருமாள்முருகனின் நேரடிப்பார்வையிலும், பின்னட்டைக் குறிப்புடனும் காலச்சுவடு பதிப்பகம் 2015இல் ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’ புத்தகத்தைவெளியிட்டது. அதன் வெளியீட்டு விழாவைக் காலச்சுவடு சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. சுப. உதயகுமாரன் வெளியிட்டு உரையாற்றினார். புத்தகத்தைப் படித்த நண்பர் “விசாரணை படம் ஞாபகத்தில் இருக்கட்டும்,” என்றார். அந்தப் படம் அப்போதுதான் வெளியாகியிருந்தது
2015ல் ஐபிசி சானலில் ஒலிபரப்பான ‘யாழினி’ சீரியலை ராதிகாவின் ராடன் மீடியா தயாரித்தது. இது அகதிகளின் கதையாக இருந்ததால் சீரியலுக்கு வசனம் எழுத ராடனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. கண்ணனிடம் தகவல் சொன்னேன். யோசிக்காமல் ஒரு வருடம் விடுமுறை கொடுத்தார். நான் ஆறு மாதத்தில் காலச்சுவடுக்குத் திரும்பிவிட்டேன்.
ராடனில் இருந்துவந்த ஆர்வத்தில் ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதிக்கொண்டு பேரா. பிரபாகரை அமெரிக்கன் கல்லூரியில் பார்த்தேன். அவர் “இதில உங்க கத எங்க பத்தி,” என்று கேட்டார். “உயிரக்குடுத்து கத ரெடி பண்ணினேன்,” என்று சொல்லவா முடியும்? பிறகு அந்தக் கதையை பிரபாகர் சொன்ன மாதிரி மாற்றி எழுதி காலச்சுவடு பொறுப்பாசிரியர் சுகுமாரனுக்கு அனுப்பினேன். ஒரு நாள் அவர் கூப்பிட்டுப் பேசினார். 2016 டிசம்பர் இதழில் ‘நாளையும் நாளையே’ என்ற தலைப்பில் சிறுகதை வந்தது. சுகுமாரன் எடிட் செய்து கவித்துவமான தலைப்பும் வைத்திருந்தார். பிரபாகர், சுகுமாரன், காலச்சுவடுக்கு மத்தியில் நின்று நான் சும்மா கையக்கால ஆட்டி என் பேரைப் போட்டுக்கொண்டேன். அது என்னுடைய முதல் சிறுகதை.
2019இல் ‘தகிப்பின் வாழ்வு’ (தலைப்பு செந்தூரனுடையது) புத்தகத்தையும் காலச்சுவடு வெளியிட்டது.
2015க்குப் பின் சுகுமாரன் உபயத்தில் கதையும் கட்டுரைகளுமாய் இதழில் எழுதியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் அரிபாபு எடுத்த நீண்ட விரிவான நேர்காணல் நான் 2019இல் இலங்கை வந்தபின் காலச்சுவடு இதழில் வந்தது. அகதிகள் பற்றி அதிகமாக எழுதியதும் காலச்சுவடு இதழில்தான். அகதிகள் பிரச்சினையை, என் சூழலைப் புரிந்துகொண்ட தமிழ்த்தேசிய எழுத்தாளர்கள் சிலர் “பத்தி, நீ காலச்சுவடில் இருப்பதுதான் உனக்குப்பாதுகாப்பானது” என்றார்கள்.
காலச்சுவடில் பணி செய்துகொண்டு, காலச்சுவடில் கற்றுக்கொண்டு, காலச்சுவடு இதழில் எழுதிக்கொண்டு, காலச்சுவடு பதிப்பகத்தில் புத்தகம் வெளியிட்டு, அதே புத்தகத்தை விற்பனையும் செய்திருக்கிறேன், அத்தனையும் அகதிகள் பிரச்சனை.
காலச்சுவடு எங்கெல்லாம் போனதோ அங்கெல்லாம் நானும் போனேன். நான் எங்கெல்லாம் போனேனோ அங்கெல்லாம் அகதிகள் பிரச்சினையும் போனது. அத்தனைக்கும் தளம் அமைத்துக் கொடுத்தது காலச்சுவடு.
மின்னஞ்சல்: pathixyz@gmail.com