கலகக்காரர் கோதார்
எல் ஜி – JLG – என்று பிரபலமான மூன்றெழுத்துக்களால் அறியப்படும் ஜான் லுக் கோதார் ஐம்பதுகளின் இறுதியில் உருவான பிரெஞ்சு ‘புதிய அலை’ திரைப்பட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். பாரம்பரியத் திரைப்பட விதிமுறைகளை மீறிப் படங்களை உருவாக்கியவர். பிரெஞ்சு சினிமாவைப் புதுயுகத்திற்கு நகர்த்தியதில் அவருடைய பங்கு முக்கியமானது.
பாரீஸில் 1930இல் பிறந்த கோதார் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை மருத்துவப் பணிக்காகக் குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் குடியேறினார். அங்கு கோதாரின் பள்ளிப்பருவம் கழிந்தது. பாரீஸின் ஸோபோர்ன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு. அந்த நேரத்தில் சினிமா அவரைக் கவர்ந்தது. உலகின் முக்கியப் படங்கள் பலவற்றை பாரீஸில் திரைப்படச் சங்கங்கள், சினிமாதெக் (Cinematheque) திரையிடல்களில் காணமுடிந்தது. சிறந்த இயக்குநர்களின் படைப்பாக்க முறைகளை அறிய முடிந்தது. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு முழுநேரத் திரைப்பட விமர்சகரானார்.
பிரெஞ்சு திரைப்பட விமர்சகரும் கோட்பாட்டாளருமான ஆந்த்ரே பாசான்(Andre Bazin) நண்பர்களுடன் இணைந்து கஹியே தூ சினிமா Cahiers du Cinema) திரைப்பட இதழை 1950களில் தொடங்கினார். கஹியே தூ சினிமா திரைப்படக் கலைநுணுக்கக் கட்டுரைகள், விமர்சனங்கள் கொண்ட மாற்று சினிமாவிற்கான இதழாக உருவானது. பழைய முறைகளையும் கதை சொல்லும் உத்திகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வெளிவந்துகொண்டிருந்த திரைப்படங்களால் மந்த நிலையிலிருந்த பிரெஞ்சு சினிமாவை மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட கோதார் போன்ற இளைஞர்கள் இந்த இதழில் எழுதத் தொடங்கினர். பாரபட்சம் இல்லாது அனைத்துப் படங்களும் தீவிரமாக விமர்சிக்கப்பட்டன. பல முக்கிய இயக்குநர்களின் படங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. எல்லாவற்றையும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் இந்த விமர்சகர்களுக்குப் படம் எடுப்பது எப்படி என்று தெரியுமா என்று எழுந்த கேள்வி இவர்களுக்குச் சவாலாக ஆனது. பிரெஞ்சு சினிமாவில் மாற்றங்களைக் கொண்டுவர வெறும் விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருந்தால் போதாது, நாமும் களத்தில் இறங்க வேண்டும் என்று கோதார், த்ரூஃபோ போன்ற இளம் விமர்சகர்கள் முடிவுக்கு வந்தனர்.
‘புதிய அலை’ இயக்கம் தொடங்கியது. கோதார், த்ரூஃபோ இருவரையும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருந்த எரிக் ரோமர், சாப்ரால், ரிவெத் ஆகியோரும் படமெடுக்க முடிவு செய்தனர். எவரையும் சாராது சுதந்திரமாகத் தனது படங்களை எடுத்துக்கொண்டிருந்த இயக்குநர் ஜான் பியர்ரே மெல்வில் இவர்களின் இயக்கத்திற்கு ஞானத் தந்தையானார். 1959இல் த்ரூஃபோவின் 400 Blows வெளிவந்தது. தொடர்ந்து 1960இல் வெளிவந்த கோதாரின் Breathless பிரெஞ்சு புதிய அலையின் முதற்படம் எனும் அடையாளத்தைப் பெற்றது. கதை, வசனத்தை கோதாரும் படக்காட்சிகளை நண்பர்கள் த்ரூஃபோவும் சாப்ரோலும் எழுதியிருந்தனர்.
நவீனத் திரைப்படங்களின் ஆரம்பமாக Breathless கொண்டாடப்படுகிறது. அறுபதுகளின் இளைய சமுதாய எழுச்சியை வெளிப்படுத்தும் கதை. குற்ற உணர்வு சிறிதும் அற்று வாழ்க்கையைக் கொண்டாட்டமாக எடுத்துக்கொண்ட திருடனையும் அவனுடைய காதலியையும் பற்றிய கதை. முதலிலிருந்தே தன்னுடைய முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இருபத்தாறு வயது இளைஞனாக ஜான் பால் பெல்மாண்டோவும் அவன் காதலி அமெரிக்கப் பெண்ணாக ஜீன் செபெர்க்கும் நடித்திருக்கிறார்கள்.
சார்த்தரும் கோதாரும்
இருபத்துமூன்று நாட்களில் கோதார்Breathlessஐ எடுத்து முடித்தார். படத்தொகுப்பில் jump cut நவீன சினிமாவுக்கு அறிமுகமானது. இந்த jump cutஐ ஜியார்ஜஸ் மெலியஸ், வெர்ட்டோவ் போன்ற ஆரம்பகாலப் படைப்பாளிகளின் படங்களில் காணலாம். அறுபதுகளில் நிலவிய வழக்கமான படமெடுக்கும் முறைகளை கோதார் நிராகரித்தார். படம் முழுவதும் கையில் எடுத்துச் செல்லும் காமெரா கொண்டு ஒளிப்பதிவாளர் ராவுல் கூட்டர்ட் பதிவுசெய்திருக்கிறார். காமெரா நகர்வுக்குப் பயன்படுத்தப்படும் dollyக்குப் பதிலாகச் சக்கரநாற்காலியில் காமெராவை வைத்து கோதார் நகர்த்திச் செல்ல நீண்ட காட்சிகளைப் படமெடுத்தனர். செயற்கை விளக்குகளை முடிந்தவரை பயன்படுத்தவில்லை. செயற்கை அரங்குகள் தவிர்க்கப்பட்டு நிஜ இடங்களில் படமெடுக்க எவ்வித அறிவிப்பும் செய்யாது, பார்வையாளர் அறியாதவகையில் படப்பிடிப்புகளை நடத்தினர். முறையாகப் படமெடுக்க வில்லை என்று கோபமடைந்த தயாரிப்பாளர், கோதாருடன் நடத்திய பேச்சுவார்த்தை கைகலப்பில் முடிந்தது. Breathless பிரான்ஸில் வெளிவந்தபோது மகத்தான வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.
Breathless குற்றப்பகுப்புப் படமாக இருந்தாலும் அது எடுக்கப்பட்டிருக்கும் முறையில் வித்தியாசமானது. அடுத்த நொடியைப் பற்றியும் சுற்றியிருப்போரைப் பற்றியும் எவ்விதக் கவலையும் மரியாதையும் அற்று உத்வேகத்துடன் வாழ்வை நுகரத் துடிக்கும் இளைஞர்களை கோதார் காட்டியிருக்கும் விதம், அவர் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகள், பின்னணியில் ஜாஸ் இசை, படத்தின் வித்தியாசமான நகர்வு என ஒவ்வொன்றும் அதுவரை பார்வையாளர் அனுபவித்திராத ஒருவித அழகையும் இலகுவான போக்கையும் அனுபவிக்கச் செய்துவிடுகின்றன.
கோதாரின் படமெடுக்கும் முறை பல இளைஞர்களுக்குப் படமெடுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அறுபதுகளில் இளைய சமுதாயத்தைக் கவர்ந்த பாப் டிலன், அண்டி வார்ஹால்போல கோதாரும் அவருடைய பாணி சினிமாவிற்கான புகழையும் அடையாளத்தையும் பெற்றவர். விமர்சகர், கோட்பாட்டாளர், அதி நவீன பரிசோதனை முறைகளின் ஆர்வலர் மட்டுமின்றித் தீவிர இடதுசாரி அரசியல் ஈடுபாடுகொண்டவர். கோதார் தொடர்ந்து அயராமல் தான் நேசித்த சினிமாவுக்காக உழைத்தவர். 2018வரை முழுநீளப் படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் என அவர் எடுத்திருக்கும் படங்களின் நீண்ட பட்டியல் உண்டு. அவருடைய குறிப்பிட்ட சில படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
Breathlessஐ தொடர்ந்து கோதார் இயக்கிய படம் A Woman Is a Woman. இரவு கேளிக்கை விடுதியின் நடன மாதுவிற்குக் குழந்தை வேண்டும் என்ற ஆசை எழுகிறது. நண்பன் அத்ற்குச் சம்மதிக்கவில்லை. நண்பனின் நண்பனை அவள் நாடுகிறாள் என்று செல்லும் கதை. கோதாரின் மனைவி நடிகை அன்னா கரினா கதாநாயகி. கணவரின் ஏழு படங்களில் அன்னா கரினா நடித்திருக்கிறார். Vivre Sa Vie (1962) நடிகை ஆவதற்காகக் கணவனைப் பிரியும் பெண் நானாவின் கதை. பன்னிரண்டு பாகங்களாகத் திரையில் காண்கிறோம். வேறுவழியின்றிப் பாலியல் தொழிலாளியாக மாறவேண்டிய நிர்ப்பந்தம். அவளுடைய அவல வாழ்க்கையின் முடிவைக் காண்கிறோம். Le Petit Soldat (1963) பிரான்ஸ் – அல்ஜீரியா அரசியலை அடிப்படையாகக் கொண்ட படம். ஜெனீவாவில் இருக்கும் பிரெஞ்சு கதாநாயகன் எதிர்த்தரப்பு அல்ஜீரிய விடுதலைப் போராளி ஒருவனைக் கொல்வதற்கான ஆணையை நிறைவேற்றக் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அழகிய பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். இரு பக்கமும் அவனுக்கு எதிராக ஆகிவிட அதன் விளைவுகளைக் கொண்டு கதை விரிகிறது.
Contempt (1963) ஆல்பர்ட்டோ மொரோவியாவின் நாவலின் அடிப்படையில் கோதார் எழுதிய கதை. மோசமான அமெரிக்கப் படத் தயாரிப்பாளர் ஒருவர் இயக்குநர் ஃபிரிட்ஜ் லாங்கின் ஸ்கிரிப்ட்டைத் தனது படத்திற்குக் கதையாக்க ஒரு கதாசிரியரை நியமிக்கிறார். அவரின் அழகிய மனைவிமீது தயாரிப்பாளருக்கு ஒரு கண். ஃப்ரிட்ஜ் லாங் பாத்திரத்தில் அவரே நடித்திருக்கிறார். கார்லோ பாண்டி , ஜோசப் இ லிவின் போன்ற பெரிய தயாரிப்பாளர்களின் படம். கோதாரின் படங்களில் இந்தப் படம் ஒன்றுதான் வழக்கமாகத் திரையிடப்படும் மற்ற படங்களை ஒத்திருப்பது. அறுபதுகளில் வெளிவந்தவற்றில் Weekend, Masculin Fminin, Pierrot le Fou, Band of Outsiders, 2 or 3 Things I Know About Her போன்றவை முக்கியமானவை.
1968இல் பிரான்ஸில் எழுந்த மாணவர், தொழிலாளர் புரட்சியை கோதார் முழுமையாக ஆதரித்தார். அதன் காரணமாக அவ்வருட கான் திரைப்பட விழாவை நிறுத்தியதில் அவர் பங்கு முக்கியமானது. அவ்வருடத்திலிருந்து அவருக்கு சோசலிசக் கோட்பாடுகளில் ஈடுபாடு அதிகரித்தது. ‘தெசிகா வெர்ட்டோவ் குழு’ என்ற மார்க்சிய திரைப்படக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். அதில் ஆறு படங்களுக்கும் மேல் உருவாகின. 1970இல் இந்த அமைப்பு கலைக்கப்பட்டது. எழுபதுகளிலிருந்து கோதாரின் படங்களில் அவருடைய அரசியல் நிலைப்பாடு அதிகமானது. தீவிர இடதுசாரி, போர் எதிர்ப்புப் படங்களைத் தனது பாணியில் உருவாக்கலானார். அன்னா கரினாவுடனான திருமணம் 1964இல் விவாகரத்தில் முடிந்தது. மூன்று வருடம் கழித்து நடந்த இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
1971இல் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்திற்குப் பிறகு அவருடன் பணிபுரிந்திருந்த புகைப்படக் கலைஞர் ஆன் மாரி மெய்வில்லுடன் வாழ்ந்தார். வீடியோவில் அவர் கவனம் திரும்பியது. பின்னர் இருவரும் ஸ்விட்ஸர்லாந்தில் ரோல் என்ற ஊருக்குச் சென்றுவிட்டனர், இருவரும் இணைந்து உருவாக்கிய குறும்படங்கள் காணக்கிடைக்கின்றன.
அறுபதுகளில் வெளிவந்த படங்களுக்குப் பிறகு கோதாருடைய பார்வை, பாணி, அரசியல் அனைத்தும் தீவிரமாகின. அவருடைய படங்களுக்கு இருந்த ரசிகர் கூட்டம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. அவருடைய புதிய படைப்புகளில் பலவற்றிற்குச் சரியான வரவேற்பில்லை. ஆரம்பகால ரசிகர்கள் அவரை முழுவதுமாக மறந்துவிட்ட நிலை; இருந்தும் உலகம் முழுவதும் அவருடைய கலையால் கவரப்பட்ட திரைப்பட அறிஞர்கள் ஆங்காங்கே அவருடைய படைப்புகளுக்காகக் காத்திருந்தனர். எதைப் பற்றியும் கவலைப்படாத கோதார் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையோ பாணியையோ புகழுக்காகவும் பணத்திற்காகவும் மாற்றிக்கொள்ளவில்லை. அதி நவீன – avant garde- வகைமையையும், பரிசோதனை முயற்சியையும் இறுதிவரை விடவில்லை. கான் திரைப்பட விழா போன்ற உலகத் திரைப்பட விழாக்கள் அவரைக் கைவிடவில்லை. அவர் படங்களைத் திரையிட்டுக் கவுரவித்தன. கோதார் என்கிற கலகக்காரர் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறார் என்று உலகெங்கும் அறியச் செய்தன.
Histoire(s) du cinema என்ற திரைப்படச் சரித்திரம் பற்றி எட்டுப் பகுதிகள் கொண்ட வீடியோ தொகுப்பை எண்பதுகளின் இறுதியில் தொடக்கி, 1998இல் முடித்தார். திரைப்படங்களின் ஒலி, ஒளிப்பகுதிகள் கொண்டு அவற்றிற்கான வர்ணனையுடன் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் சரித்திரத்தை சினிமாவின் வழியாகச் சொல்வதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் திரைப்பட அறிஞரும் விமர்சகருமான ஜோனத்தான் ரோஸென்பாம் . 266 நிமிடங்கள் ஓடும் Histoire(s) du cinema அவருடைய சிறந்த படைப்பாகத் திரைப்பட அறிஞர்களால் கருதப்படுகிறது. கோதார் தொடர்ந்து ஓய்வின்றித் திரைப்படங்கள், குறும்படங்கள், வீடியோ படங்கள் உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தனது 88ஆவது வயதுவரை தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருந்தார்; அவருடைய இறுதிப் படங்களில் முக்கியமான மூன்றைப் பற்றிப் பார்க்கலாம்.
2010 கான் திரைப்பட விழாவில் கோதாரின் Film socialisme திரையிடப்பட்டு உலக கவனத்தைப் பெற்றது. மத்திய தரைக்கடலில் சென்றுகொண்டிருக்கும் சொகுசுக் கப்பலின் பயணிகள், அதிலிருக்கும் சிறு குடும்பம் பற்றிய கதை. மூன்று பகுதிகள் கொண்ட சிம்பனி –symphony – போன்று அமைக்கப்பட்டுள்ள படப் பகுதிகளை கொலாஜ் - collage – ஓவியப்பாணியில் காண்பிக்கிறார். 2014இல் கோதாரின் Goodbye to Language கான் திரைப்பட விழாவிலும் வேறு சில உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. முழுக்க 3D வீடியோவில் சர்ரியல் பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம். திரைப்பட அறிஞர் டேவிட் போர்ட்வெல் போன்ற கோதாரின் விசிறிகள் இப்படத்தைக் கொண்டாடிவிட்டனர். 2018இல் கோதாரின் The Image Book கானில் திரையிடப்பட்டது. கோதார் தனது அரசியல், உலக சரித்திரம் பற்றிய எண்ணங்களைப் படிமங்களாகக் கனவு நனவோடை வகையில் பதிவுசெய்திருக்கும் ஆவணப்படம். இதற்கு அடுத்து ஒரு குறும்படத்துடன் கோதாரின் படப் பட்டியல் முடிகிறது.
சினிமா என்ற காட்சி ஊடகத்தின் எல்லைகளை எந்த அளவு விரிவாக்க முடியும் என்று துணிந்து முயன்ற இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் கோதார் முக்கியமானவர். படத்தில் வழக்கமான மூன்று பகுதிக் கதை சொல்லலாகக் கதை சொல்லப்படுவது அந்த வரிசையில் இருக்கவேண்டிய தேவையில்லை என்றார். திரைப்படம் இப்படித்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற கட்டாயங்களை உடைத்தவர். அனைத்தையும் கேள்விகளுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாக்கியவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சினிமாவைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்தியாது வாழ்நாட்களைக் கழித்தவர்.
கோதார் என்றால் பல இயக்குநர்களுக்கு ஆகாது; இருந்தும் அவரை மரியாதையுடன் பின்பற்றிய இயக்குநர்களில் குவெண்ட்டின் டரண்ட்டினொ, மார்ட்டின் ஸ்கார்ஸெசி, ராபர்ட் ஆல்ட்மன் போன்றவர்களைச் சொல்லலாம். ஜோனத்தான் ரோசன்பாம், டேவிட் போர்ட்வெல், காலின் மக்கபே, மைக்கேல் டெம்ப்பிள் போன்ற திரைப்பட அறிஞர்கள் அவரின் தீவிர ரசிகர்கள்.
கோதார் எப்போதும் தனக்கான தனிவழியைப் பின்பற்றியவர். அவர் மரணமும் அவ்வாறே அவர் திட்டப்படி நிகழ்ந்தது. 91 வயதில் நிம்மதியாக வாழமுடியாத உடல் உபாதைகளுடன் இருந்தார் கோதார். வாழமுடியாத அளவு உடல், மனரீதியான குறிப்பிட்ட காரணங்கள் கொண்டவர்கள் வாழ்க்கையின் முடிவை தாங்களே தீர்மானித்துகொள்வதற்கான அரசு விதிமுறைகள் ஸ்விட்சர்லாந்தில் உள்ளன. இந்த இருபதாம் நூற்றாண்டின் கடைசி நவீனத்துவவாதியான கோதார், சட்டப்படியான அனுமதியைப் பெற்ற நிலையில், 2022 செப்டம்பர் 13 அன்று மருத்துவ உதவியுடன் தன் உயிரை முடித்துக்கொண்டார்.
மின்னஞ்சல்: anandsiga@gmail.com