பால்கனியில் காத்திருப்பவர்கள், குதிங்கால் வரைபடம்
பால்கனியில் காத்திருப்பவர்கள்
யாரோ நிறுத்திவைத்த காணொளியைப்போல
பால்கனியில் நிற்பவர்கள் பெரும்பாலும் அசைவதில்லை.
அதிலும் அந்திப் பொழுதென்றால் சொல்லவே வேண்டாம்.
அகத்தில் ஓயாத ஆர்ப்பாட்டம் – நிலையற்றவை மறைந்துவிடும்.
புத்திக்குள் தேவையற்ற யோசனை – மாயை அது தெளிந்துவிடும்.
கையிலொரு தேநீர் கோப்பை – சீக்கிரம் அது தீர்ந்துவிடும்.
உயரம்நோக்கிச் செல்லச் செல்ல
உலகமே மினியேச்சர் வடிவம்தான்.
சஞ்சலம்கொண்ட மனதினையும்
இவ்வளவு தூரத்தில்வைத்துக் காணும் சந்தர்ப்பமானது
எப்போதும் வாய்ப்பதில்லை கண்ணே.
ஆனாலும் சிலசமயம் எல்லாம் தெரிந்தே நடக்கின்றன.
உச்சியிலிருந்து தவறிவிழும் வெய்யோன்
இப்போது காலம் தாமதித்து
விழுகிறான்,
விழுகிறான்
பால்கனியிலிருந்தும்.
குதிங்கால் வரைபடம்
எண்ணங்களால் எடைகூடிய உடலைச் சுமக்கமாட்டாமல்
ஆங்காங்கே அப்படியே அமர்ந்துவிடுகிறேன்.
பின்னல் விடுபட்ட உள்ளங்கை ரேகைகள்
முழுவதுமாய் வழிந்து பாதங்களில் நிற்கின்றன.
உடலே தன்னைத் திறந்துகாட்டும் கடைக்கோடி விரிசல்களை
பித்தங்கள் பிளந்த வெடிப்பினை
இலக்கின்றி அலைந்து திரியும் குதிங்காலின் வரைபடத்தை
அவ்வப்போது மென்மையாக வருடிக்கொள்கிறேன்.
பிளேடுகளால் கீச்சப்பட்ட திரைச்சீலையொன்றில்
நேர்த்தியாக வரையப்பட்ட பின்னங்கால்களாய்
தேகம் நிறைவடையும் விளிம்பினில்
கண்கொட்ட விழித்திருக்கின்றன குறுகலான வாயில்கள்.
பொது இடங்களில் யாரும் பார்த்துவிடாதபடி அவ்வப்போது
கவனமாகப் பின் பாதங்களை மறைக்க முயன்றாலும்,
கரங்களால் முகத்தை மூடிக்கொண்டு
விரல்களின் இடுக்குகளிடையே காணும் கள்ள-உலகம்
யார் வியப்பதற்கு
யாரை வியப்பதற்கு.
மின்னஞ்சல்: rpk.vishnu@gmail.com