காலம் நான்
ஓவியம்: மு. நடேஷ்
காலம் நான்
எல்லாவற்றையும்
காலத்தின்மேல்
சுமத்திவிடுவது
நல்லது-
சிக்கல்களை அவிழ்க்கும்
சூட்சுமம் இருக்கிறது.
இதில்-
காலம் எனின்
என்னவெனக் கேட்பான்
தத்துவவாதி-
இந்தக் கேள்விகள்
கொல்லும் தன்மையுடையவை-
மனித மகிழ்ச்சிக்கு
எதிரானவை-
இதுகுறித்துப்
பேசலாம் நிறைய
என்பான் வேதாந்தி-
அவனிடம் பதில்
இல்லையெனத் தெரியும்
கதை சொல்லிக்கு
வசதியான சொல்லது.
விரிவாகப் பயணிக்கலாம்.
இலக்கற்றும்
எல்லைதாண்டியும் கூட.
காலம் ஒருபோதும்
இவர்களுடையதன்று-
சோகங்களையும்
தோல்விகளையும்
விழுங்கிச் செரிக்கும்
அது
எப்போதுமே நிழல்தான்-
இப்போதும் சொல்வேன்
காலத்தோடு பயணிப்பதல்ல-
காலம்-
என் கைக்குள்ளல்ல
நான் மட்டுமே அது.