பாஸ்கரனின் தேடலும் பரிசோதனையும்
இந்தியத் தொன்மையும் மரபும் ஆழ்ந்த கவனத்துடன் உலகளவில் வைத்துப் பார்க்கப்படுகின்றன. இந்திய மொழிகள், இலக்கியங்கள், இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புறக் கலைகள் எனப் பல பிரிவுகளும் இதில் அடக்கம். கலைத் தேடலில் நிகழ்ந்த என்னுடைய உலகப் பயணங்களில் சந்தித்த நபர்களுடனான உரையாடலில் அதை உணர்ந்தும் இருக்கிறேன். மேற்குறிப்பிட்ட கலைகளின் தொன்மையும் மரபும் பற்றிய ஆய்வுகள் கல்விப் புலங்களில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதனதன் அளவில் இக்கலைகள் யாவும் செவ்வியல் தன்மை கொண்டனவாய் இருப்பதும் வரலாற்றுத் தெளிவு. அதேபோல மரபின் உள்ளடுக்கில் நவீன பாணியின் போக்கு ஒவ்வொரு காலத்திலும் ஊடாட்டம் நிகழ்த்துகின்றது. பின்னாளில் அந்த ஊடாட்டமும் மரபின் குவியலில் இன்னோர் அடுக்காகப் போர்த்தப்படுகிறது. மீண்டும் ஊடாட்டம், மீண்டும் அடுக்கு எனக் கலை நகர்வும் அமைகின்றது. அதன் பயனாகப் பளிச்சிடும் கலைப் படைப்பும் மகத்தான கலைஞர்களும் காலத்தில் நி