சுரா பக்கங்கள் சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள்- பகுதி 2
ஓவியம்: றஷ்மி
மதுரையில் வசிக்கும் சிவராமன், சுந்தர ராமசாமியின் நீண்டகால நண்பர்களில் ஒருவர். ‘க்ரியா’ பதிப்பகத்தின் தொடக்கம்முதல் அதனுடன் இணைந்து செயல்பட்டுவந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவான வாசிப்பு கொண்டவர். கறாரான விமர்சகர். 1978ஆம் ஆண்டுமுதல் 1994ஆம் ஆண்டுவரை சு.ரா.வுக்கும் இவருக்கும் இடையே தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. அப்போது ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, காலச்சுவடு இதழின் வருகை, காகங்கள் சந்திப்பு உள்ளிட்ட சு.ரா.வின் முக்கியமான செயல்பாடுகள் பலவும் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தின் இலக்கியச் சலனங்கள், விவாதங்கள், ஆளுமைகள், க்ரியா பதிப்பகத்தின் செயல்பாடுகள் முதலானவை குறித்த முக்கியமான செய்திகள் இந்தக் கடிதங்களில் பதிவாகியிருக்கின்றன. நுட்பமான வாசிப்பில் உணர்ந்துகொள்ளத் தகுந்த பல்வேறு சங்கதிகளும் உள்ளன. சுந்தர ராமசாமி என்ற மனிதரையும் அவரது பார்வை, அணுகுமுறை இவற்றையும் இந்தக் கடிதங்கள்வழி அறியலாம்.
-ஆசிரியர்
சுந்தர ராமசாமி,
நாகர்கோவில்
10.11.1978
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 4/11/78 கடிதம்:
தில்லியில் 3/11இல் AIRஇல் ஒலிபரப்பு இருந்தது. அதை முடித்துக்கொண்டு தூத்துக்குடி போனேன். கூத்து நிகழ்ச்சி கடைசி நிமிஷத்தில் ரத்தாகிவிட்டது. ஏற்பாட்டில் ஏதோ குழப்பம். மற்றொரு தேதியில் நடத்தப் போவதாகச் சொன்னார்கள். நாகர்கோவிலிலிருந்து பத்மநாபன் உட்பட பல நண்பர்கள் வந்திருந்தார்கள். மீண்டும் எல்லோரும் போக வேண்டும் என்றுதான் இருக்கிறோம்.
1பேராசிரியர் ஜே-க்கு நானும் எழுதுகிறேன். பின் தேதியில் கட்டுரை எழுதி முடிப்பது சாத்தியம் என்றாலும்கூட அவருக்கு எழுதுங்கள். உங்கள் வசதிக்குக் கூட்டம்2 நடைபெறும் தேதியை மாற்றி வைத்துக்கொள்ள முடியும் என்று எண்ணுகிறேன்.
மோகன் ஜனவரி மாதக் கட்டுரை படிக்க முடியும் என்று எழுதியிருக்கிறார். திருவனந்தபுரம் பயணத்தை மேற்கொள்ளும்போது இங்கு ரமாவுடன் சில நாட்கள் தங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு எழுதியிருக்கிறேன். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும். கட்டுரை தயாரிக்க முடியாமல் போனாலும்கூட மோகனுடன் நீங்கள் திருவனந்தபுரம் போய் வரலாம்.
பேராசிரியரையும் அவருடைய மாணவர்களையும் சந்திக்கலாம். சற்று வித்தியாசமான, சந்தோஷமான அனுபவமாக இருக்கும்.
மதுரையிலிருந்து வந்த பின் நிம்மதியில்லை. பல பிரச்சினைகள். இப்போதுதான் சற்றுத் தேவலாம் என்றிருக்கிறது. எதுவும் எழுதவோ படிக்கவோ இல்லை. இனிமேல் கொஞ்சம் முடியும். ‘வைகை’க்கு எழுதுகிறேன். கூடுமானவரையில் தொடர்ந்து எழுதி அனுப்பப் பார்க்கிறேன்.
3பத்மநாபன் நேற்று Lawrence4 அனுப்பி வைத்திருக்கிறார். படிக்க வேண்டும் Writer at work – The Paris Review Interviews (Penguin) நான்கு தொகுதிகள் வாங்கியிருக்கிறேன். அங்கு நூல் நிலையத்தில் இருந்தால் பாருங்கள். முன்னாலேயே வெளிவந்த புத்தகங்கள்தான்.
அன்புடன்,
சுந்தர ராமசாமி
1. பேராசிரியர் ஜேசுதாசன். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரி. ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர்,
2. ‘காகங்கள்’ சந்திப்பு சுரா வீட்டு மாடியில் நடந்து வந்தது
3. ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்
4. DH LAWRENCE
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
5.1.1979
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 2-1-79 கடிதம்.
என் சின்னப் பெண்ணின் சிகிச்சையின் பொருட்டு ஆஸ்பத்திரியில் இருந்துகொண்டிருக்கிறேன். இன்னும் 2,3 நாட்களில் வீடு திரும்பிவிடலாம் என்ற எண்ணம். இவளுடைய சிகிச்சையைப் பற்றி டாக்டருடன் கலந்து ஆலோசனை செய்யவே நான் மதுரையில் வேலையை முடித்துக்கொண்டு அவசரமாக வந்தேன்.
*ஜி. சங்கரப்பிள்ளையின் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு (மா. ராஜாராம் செய்தது) பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். இப்போது மலையாளத்திலா அரங்கேறிற்று? இராமானுஜம் தமிழில் கடந்த 5, 6 மாதங்களாக வேகமாக அறியப்பட்டுவருகிறார் என்று உணருகிறேன். இவர் மூலம் நாடக இயக்கம் தமிழில் அதன் ஆரம்ப வெற்றிகளைக் கொள்ள இடமுண்டு என்று தோன்றுகிறது. சென்னையில் முத்துசாமி, ராமகிருஷ்ணன், சச்சிதானந்தன் போன்றவர்கள் முயன்றால் ஒரு நாடக வகுப்பு நடத்த முடியும். இவ்விஷயத்தில் ஈடுபாடுள்ள ஒரு பத்துப் பேர் அங்கு உண்டு. இவர்கள் இணைந்தால் ஒரு நாடக வகுப்பை நடத்துவது பெரிய விஷயமல்ல. இணைவதுதான் பெரிய விஷயம்.
திருவனந்தபுரத்தில் ஒரு நாடக வகுப்பை நடத்த பேராசிரியர் ஜே-யின் கீழ் ஆராய்ச்சி செய்துவரும் மாணவர்களை நான் தூண்டினேன். திருவனந்தபுரம் சென்றிருந்த இராமானுஜத்தையும் சந்தித்து இவர்கள் பேசினார்கள். அதற்குமேல் எதுவும் நகரவில்லை இன்னும்.
திருவனந்தபுரம் கூட்டத்தில் கலந்துகொள்ள வருவதாகவும், வேலை கிடைத்துள்ள நிலையில் நாம் சேர்ந்துகொள்வது கடினம் என்றும் மோஹன் எழுதியிருக்கிறார். மோஹன் வரும்போது நீங்களும் அவசியம் வாருங்கள். பத்மநாபசுவாமி கோவிலும் Zoo-வும் Museumஇல் உள்ள சில Paintings-ம் நீங்கள் பார்த்ததில்லை என்றால் அவசியம் பார்க்க வேண்டியவை.
அன்புடன்,
சுந்தர ராமசாமி.
*ஜி. சங்கரபிள்ளை - மலையாள நாடக ஆசிரியர், இயக்குநர்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
27.1.1979
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 24-1-79 கடிதம்.
மோஹன் மதுரை திரும்பி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நானும் பதில் எழுதியிருக்கிறேன்.
கு.ப.ரா.வுக்கு *குமாரசாமி நினைவு மலர் போட முன்வந்துள்ளது வரவேற்கத் தகுந்த விஷயம். ஆனால் இதை விடவும் முக்கியமான விஷயம் அவர் எழுத்துக்கள் அனைத்தையும் சிறந்த அறிமுகங்கள்கொண்ட பதிப்புக்களாக இன்று வெளியிடுவது.
காசியபனின் ‘அசடு’ பற்றிய கட்டுரை – சிறிய கட்டுரை என்று பார்க்கும்போது – ரொம்பவும் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டொரு தினங்களில் முடித்து அனுப்பிவிடுகிறேன்.
உங்கள் மனசுக்கு உவந்த ஏதாவதொரு பெரிய வேலையைத் தேர்ந்தெடுத்து அதில் அன்றாடம் முடிந்த அளவு நேரத்தைக் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். என்னுடைய மிகச்சிறு வயதிலிருந்தே எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உறவுகள் கோணிவிட்டன. அறிவுபூர்வமாக நான் எவ்வளவு முயன்றும் இந்தக் கோணல்களை என்னால் சரிசெய்ய முடியவில்லை. சிடுக்குகள் அனேகம் உணர்வுப்பூர்வமானவை. இந்தத் தளத்தில் எண்ணெய் பிசின் அப்படியேயிருக்க அறிவு வழிந்து போய்விடும். நடைமுறைக்கு ஏற்ற காரியம், சிடுக்கை மேலும் சிடுக்காக்கும் மோதல்களைத் தவிர்த்து, சுயதர்மத்தில் ஆழ்ந்துபோவது.
‘காகங்கள்’ கூட்டத்தில் கட்டுரை படிக்க ஏற்றுக்கொண்டமைக்கு சந்தோஷம். ‘காகங்கள்’ கூட்டம் கொஞ்சமும் சம்பிரதாயங்கள் அற்றது. பல சமயம் நாம் திட்டமின்றிக் கூடிப் பேசுவதுபோலவே அது இருக்கும். விஷயமும் மாதமும் உங்களுக்கு வசதிப்படும்போது எழுதுங்கள்.
டால்ஸ்டாய் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் படித்திருக்கிறேன். இருபது வருடங்களுக்குமேல் இருக்கும். இருந்தாலும் இப்போதும் கதாபாத்திரங்களும் பல்வேறு சாட்சிகளும் நினைவில் இருக்கின்றன. நாவல் முழுக்கக் கசியும் அன்னாவின் துன்பம், அவருடைய தற்கொலை (தமிழில் படித்தபோது இந்த இடத்தில் தனி அறையில் உட்கார்ந்து அழுத நினைவு), கதாபாத்திரங்கள் கிட்டி, லெவின், விரான்ஸ்கி எல்லோரும் நினைவில் இருக்கிறார்கள்.
அன்புடன்,
சுரா.
* ‘வைகை’ சிற்றிதழ் ஆசிரியர்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
7.2.1979
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 5.2.79 கடிதம் கிடைத்தது. ராமகிருஷ்ணன் மதுரை வந்தது பற்றி எனக்கும் எழுதியிருந்தார்.
கு.ப.ரா.வின் கதைகளைக் கொண்டுவருவதென்றால் பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்பது தெரிய வேண்டாமா?
எல்லாச் சிறுபத்திரிகைகளும் ஏறத்தாழ ஒரே வாசகர்களைத்தான் போய் அடைகின்றன. இவர்களை அடைவதற்கான வாகனமாகவே பத்திரிகைகளைப் பார்க்கிறேன். எல்லாப் பத்திரிகைகளுக்கும் நான் எழுதுவது விரும்பத் தக்கதல்ல என்று ராமகிருஷ்ணனும் என்னிடம் கூறியிருக்கிறார். அவர் கண்ணோட்டம் எனக்குப் புரியாததால் அவர் யோசனையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுது அதே விஷயம் குறித்து நீங்களும் எழுதியிருப்பதால் நான் யோசிக்க வேண்டும். கடிதத்தில் நீங்கள் எழுதியுள்ள அளவில் உங்கள் நோக்கை முழுமையாக உணர முடியவில்லை. விளக்கி எழுதுங்கள்.
நான் அனுப்பி வைத்திருந்த ‘அசடு’ மதிப்புரை கிடைத்திருக்குமென்று நம்புகிறேன்.
கு.ப.ரா.வின் புத்தகங்கள் என்னென்ன என்னிடம் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு இவருடைய கதைகளில் ஈடுபாடு குறைவு. அவருடைய முக்கியமான புத்தகங்களை எல்லாம் சேர்த்துவிட்டேன் என்றால் ஒரு கட்டுரை எழுத முடியும்.
குமாரசாமிக்கு நான் தனியாக எழுதவில்லை. விவரம் சொல்லுங்கள். இன்று காலைத் தபாலில் ‘வைகை’ கிடைத்தது.
அன்புடன்
சுரா.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
9.2.1979
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 7.2.79 கடிதம்.
‘அசடு’ படித்த பின் உங்கள் அபிப்பிராயத்தை எழுதுங்கள்.
சற்று நீளமாக, விரிவாக எழுதலாம் என்ற எண்ணம் உண்டு. விமரிசனத் துறை எனக்குப் புதுசு. நான் ஏற்படுத்தும் விளைவுகள் எவ்விதமானவை என்பதை ஆராயும் பொருட்டே எளிய முயற்சிகள் மேற்கொண்டுவருகிறேன். பொருட்படுத்தத் தகுந்தது எனவும் மேலும் தீவிரமாக ஈடுபடுவது பயனுள்ளது எனவும் பிறர் மூலம் நான் தெரிந்துகொண்டால் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதனால் உங்கள் அபிப்பிராயம் அவசியம்.
சென்னை சென்று திரும்பியதும் எனக்கு எழுதுங்கள்.
அன்புடன்,
சுரா.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
11.3.79
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 9/3 கடிதம்.
இங்கும் என் நண்பரொருவர் பாளை சிறையில் இருந்தவர். அங்குள்ள அனுபவங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தபோது தன்னையறியாமல் ‘கைவிலங்கு’ நாவலில் ஜெயகாந்தன் சிறைச்சாலை பற்றிச் சொல்வதெல்லாம் பொய் என்றார். நமக்கு அனுபவங்கள் ஏற்பட ஏற்பட நம் எழுத்தாளர்களின் உலகம் நம்முடையதல்ல என்பது தெரிகிறது. உங்களையும் இந்த அனுபவம் ஏதோவொரு வகையில் பாதித்திருக்கும்.
நாவலின்* குறைகளைச் சுட்டிச் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வது சரிதான். என்னுடைய அழுத்தம் நாவலின் உண்மைக்குரல் பற்றியதுதான். சம்பாஷனை வடிவில் நாவலை எழுதியிருப்பது கதையின் தொனிக்கு ஏற்றதாக இல்லை என்கிறீர்கள். அந்த விஷயத்திலேயே என்னுடைய கவனம் போகவில்லை. இப்போது நீங்கள் சொல்லும் போதுதான் யோசிக்கிறேன். தொனிக்கு ஏன் ஏற்றதாக உங்களுக்குப் படவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை.
நடுவில் ஒரு வேலை குறுக்கிட, தொடர்ந்து வேறு வேலைகளும் பிடித்துக்கொள்ள மூன்று நாட்கள் கழித்து எழுதுகிறேன்.
நாவல் இந்த உலகத்தைச் சார்ந்து, ஆசிரியருக்கு முற்றிலும் தெரிந்த உலகத்தின் ஜீவனை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. வேறு ….. எதுவுமில்லை. இதைத்தான் நான் பிரதானமாக எடுத்துக்கொண்டேன்.
கதை சொல்லி என்பது என் பிரயோகமல்ல. எனக்குத் தெரிந்து இது செல்லப்பாவுடையது. இந்த வார்த்தையை ஸ்திரப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் – அதன் அவசியமும் பொருத்தமும் கருதி – நான் பயன்படுத்தினேன். ‘உங்களை போரடித்துவிட்டேனா’? என்று கதை சொல்லியைக் கேட்க வைத்திருப்பதன் பின் ஆசிரியருடைய பிரக்ஞை கிடையாது. ஏதோ பலவீனமான எதிரொலி இது. வேறு பிரபல சிறுகதைகள் இவ்வாறு சொல்லப்பட்டு முடிவுற்றிருக்கலாம்; இதில் இவர் அறியாத கவர்ச்சி இவர் கொண்டிருக்கலாம். ஆனால் எதிர்மறையான கூற்றுக்கள், இடம் அறிந்து பிரக்ஞையுடன் செயல்படுத்தினால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். பெரிய படங்களில் நிகழ்ந்து பார்த்த உணர்வு இருக்கிறது. காசியபன் அந்த அளவு பிரக்ஞை உள்ளவரல்ல. கணேசனை அன்னியோன்னியமாக உணர வைத்துவிட்டதுதான் பெரிய விஷயம். கடைசியில் அடுக்களைக் காட்சிகளும் – கதைசொல்லியும் கணேசனும் சங்கடப்படும் காட்சிகளும் – குறையானவைதான். இங்கு இச்சம்பவங்களை காமிக்கல் தரத்துக்கு விஸ்தரிக்கிறார். கணேசனின் அசட்டுத்தனத்திற்கு, இக்காட்சிகள் எழுப்ப உபயோகப்பட்டமைக்கு, ஆசிரியர் உள்ளூர சந்தோஷப்பட்டதுபோல் ஒரு உணர்வு. இந்த வகையில் கணேசன் மீது நாம் கொண்டுள்ள அக்கறை ஆசிரியர் கொள்ளவில்லை என்பது சரி.
பத்திரிகைகளுக்கு எழுதுவது பற்றி. இவற்றைப் பற்றி என்னுடைய அனுபவங்களும் அபிப்பிராயங்களும் உங்களுடையதைவிட மிக மோசமானவை; இன்னும் காரமானவை; அதிக உண்மைகளை உள்ளடக்கியவை. நீங்கள் சொல்வதை நான் யோசித்துப் பார்க்கிறேன். பத்திரிகைகளுக்கு எப்போதும் அதிகமாக எழுதாமல் இருந்தவன்தான் நான். இப்போதுதான் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்ற ‘கனவில் ஏதோ செல்கிறேன்’.
‘சுவடு’ பாலா ‘வைகை’யில் ‘அசடு’ பற்றி என் கட்டுரையைப் படித்ததாகவும் முதல் வாசிப்பில் புரியவில்லை என்றும், மீண்டும் படித்துப் பார்க்கப் போவதாகவும் எழுதியிருக்கிறார். ‘வைகை’ வெளிவந்துவிட்டதா? எனக்கு வரவில்லையே!
மதுரைக்கு வர முடியுமா என்று பார்க்கிறேன். இந்த வெயில்… நினைத்துப்பார்க்க முடியவில்லை.
அன்புடன்
சுரா.
* அசடு
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
6.10.1979
அன்புள்ள சிவராம்,
சென்ற மாதம் காகங்கள் கூட்டத்தில் திரு. வேதசகாய குமார், கு.ப.ரா. கதைகள் பற்றி ஒரு கட்டுரை படித்தார். இந்தக் கட்டுரை நன்றாக இருக்கிறது. ‘வைகை’யில் நீங்கள் இந்தக் கட்டுரையை வெளியிடலாம். உங்கள் விலாசம் தந்து உங்களுக்கே கட்டுரையை அனுப்ப திரு. குமாரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
சென்னை சென்றிருந்தீர்களா? திரு. ராமகிருஷ்ணனைச் சந்தித்தீர்களா? பல வாரங்களாக எனக்கு அவரிடமிருந்து கடிதம் இல்லை. பிற விஷயங்கள் உங்கள் பதில் பார்த்து எழுதுகிறேன்.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
15.3.1980
அன்புள்ள சிவராமன்,
பெங்களூர் சென்றிருந்தேன். நேற்று ஊர் வந்தேன். நடுவில் இரண்டு நாட்கள் சென்னை. 1பத்மாவின் நாட்டியம் பார்த்தேன். முதல் தடவையாக. பேரனுபவமாக இருந்தது. அத்துடன் பின்பாட்டு மிக நேர்த்தி. இத்தாலியன் பாலே ஒன்று பார்த்தேன். ஆச்சரியத்தை ஏற்படுத்திற்று. அனுபவிக்க முடியவில்லை, அவ்வளவாக.
ராம், முத்துசாமி, சச்சி எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ‘சுவரொட்டிகள்’2 அச்சேறிக்கொண்டிருக்கிறது. அரங்கேற்றத் திற்கான ஒத்திகைகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஓவியர் கிருஷ்ண மூர்த்தி இயக்குநராக இருக்கிறார்.
‘வைகை’யில் வெளிவந்த என் மதிப்புரைக் கட்டுரையும் – நாஞ்சில் நாடன் நாவல் பற்றி – மறுபிரசுரமான அகிலனின் நாவல் பற்றிய குறிப்பும் அவசரத் தேவையாக இருக்கிறது. உடனடியாக அனுப்பிவைத்து உதவுங்கள். என் கட்டுரைகளைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த இரண்டு கட்டுரை தவிர மீதி அனைத்தையும் தொகுத்துவிட்டேன்.
‘வைகை’ அச்சில் இருக்கிறதா? குமாரசாமி அச்சகத்தை விற்றுவிட்டதாக ராம் சொன்னார்.
அன்புடன்
சுரா.
1. பத்மா சுப்ரமணியம்
2. ந. முத்துசாமியின் நாடகம்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
2.7.80
அன்புள்ள சிவராமன்,
உங்கள் கடிதம். ‘வைகை’ கிடைத்தது. வெங்கடரமணியின் கட்டுரை திருப்தியைத் தந்தது. மனநிறைவைத் தரவில்லை. திருப்தி அதிகமும் புதிய பெயரொன்று தமிழ் கருத்துலகிற்கு வருகிறதே என்பதில். அதிகமாகத் தரக்கூடும் எனக் கற்பனை செய்துகொள்ளவேனும் இடந்தரும் ஒரு பெயர். கட்டுரை, ஆழம் நோக்கிக் குறிவைக்கவில்லை. ஆனால் வெங்கடரமணியின் நோக்கு என்ன? தெரியவில்லை. இருப்பினும்கூடக் கட்டுரை சுருக்கப்படாமல் வெளியிட்டிருக்கலாமோ என்று நினைத்தேன். வேங்கடரமணியை ஒத்த ஒரு விவேகமான வாசகனின் பதிவுகள், குறைகள் இருப்பினும், முடிந்த அளவுக்கு அதிகமாக நமக்கு வேண்டும் என்பதால். இ.பா.வின் எழுத்துப் பட்டியல் அட்டவணை சிறிது பயமுறுத்தினாலும் உபயோகமானது. ரொம்பவும் சுத்தமான தயாரிப்பு. இவரைத் தொடர்ந்து எழுதும்படி நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.
1ஆங்கிலப் பேராசிரியரின் கட்டுரை அவருடைய கோணத்தைக் காட்டுகிறது. பேராசிரியர் குறிப்பிடும் நைப்பாலின் இரு புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். அதனால் குறைகளைச் சுட்டிக்காட்டும் நைப்பாலின் மனோதத்துவ சந்தோஷத்தையும் உணர்ந்திருக்கிறேன். பேராசிரியரின் விமர்சன நோக்கின் நியாயம் எனக்குப்பட்டது. ஆனால் நைப்பாலின் நூல்களில் சில உண்மையான அதிர்ச்சிகள் இல்லையா? நமது தாழ்வுற்ற நிலையின் அருவருப்பூட்டும் காட்சிகள் இல்லையா? நம்முடைய எழுத்தாளர்கள் நம் கவனத்திற்கு இப்பிரச்சினைகளைக் கொண்டுவந்திருக்கிறார்களா? இச்சரிவுகளை மெய்யான அக்கறையோடும் கவலையோடும் நம் கவனத்திற்குக் கொண்டுவரத் தெரியாத சிந்தனையாளர்களால்தானே நைப்பால் போன்றவர்கள் பரபரப்பு நோக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த முடிகிறது. நம்முடைய மோசமான கனவுகள். எதிர்த் தரப்பில் இதுபோன்ற அம்பலப்படுத்தல்கள். கனவைவிட இது தேவலை என்று தோன்றிவிடுகிறது. பேராசிரியரின் புத்தகத்தை முழுமையாகப் படித்துப் பார்க்க நான் விரும்புகிறேன். எனக்கு ஒரு பிரதி அனுப்பிவையுங்கள். பணம் அனுப்பிவைக்கிறேன். வைகைக்குச் சந்தா பாக்கி இருந்தால் அதையும் பார்த்து எழுதுங்கள்.
2நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். படைப்பின் உற்சாகத்தோடு. முதல் பதிவை இம்மாத இறுதிக்குள் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.
இம்மாதம் காகங்கள் கூட்டத்தில் ‘நண்டு’ என்ற நாவலைப் பற்றி – டாக்டர் பட்டத்திற்கு என்று நினைக்கிறேன் – ஆராய்ச்சி செய்துவரும் தமிழ் விரிவுரையாளர் ஒருவர் கட்டுரை படித்தார். இதனால் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஆஹா! என்ன அருமையான நாவல்! பல்கலைக்கழகப் பேரறிஞரான வழிகாட்டி நாவலை அக்கு வேறு ஆணி வேறாக அலசி வெவ்வேறு கடைகளில் அள்ளிப் பட்டியல் போடவும் சொல்லிக் கொடுத்திருக்கிறாராம். மதிப்பீடுகளின் தளத்திற்கு நுழைய வேண்டிய அவசியமே இல்லை என்றும் சொல்லப்பட்டுவிட்டதாம். கேட்கக் கேட்க எல்லாம் விசித்திரமாக இருக்கிறது.
மு. தளையசிங்கம் படித்திருக்கிறீர்களா? படிக்கவில்லை என்றால் நீங்களும் மோஹனும் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். ரொம்பவும் பிந்தி கவனிக்க நேர்ந்த வெட்கத்துடன், பரவசத்துடன், பொருட்படுத்தத் தகுந்தவர்கள் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற கோபத்துடன் படித்தேன். ஆத்மார்த்தமான ஒரு மனிதன். தன்னை வந்து எட்டிய சகல சிந்தனைகளையும் கணக்கிலெடுத்துக்கொண்டு அவற்றைத் துளியும் விரோத பாவம் இல்லாமல் ஆராய்ந்து, அவற்றைத் தாண்டி மனித விடுதலைக்கு விடைகாணத்துடிக்கிறார். மூன்று புத்தகங்கள் கிடைத்தன. 1. ஒரு புதுயுகம் பிறக்கிறது. 2. போர்ப்பறை 3. மெய்யுள். நாவலின் முதல் பதிவு முடிந்ததுமே நான் இவரைப் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதி உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். படித்துப் பாருங்கள்.
இதேபோல் ‘அலை’ என்ற சிறு பத்திரிகை. பார்த்தீர்களா? கவனிக்க வேண்டிய பத்திரிகை. பழைய இதழ்களின் பைண்ட் வால்யூம் எனக்குக் கிடைத்தது. லட்சிய நோக்கோடும் பொறுப்புணர்ச்சியோடும் ஆழமான கண்டுபிடிப்புகளுக்கு ஆசைப்பட்டும் நடத்தியிருக்கிறார்கள். இப்பத்திரிகையைப் பற்றி ஒரு குறிப்பு ‘வைகை’யில் வெளிவர வேண்டும் என்று தோன்றுகிறது.
நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் கதைசொல்லி ஓரிடத்தில் இந்திய மொழி இலக்கியங்களை ஒவ்வொரு மொழியிலும் அறிமுகப்படுத்தத் தனித்தனியான பத்திரிகைகள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் இதற்கு 13X13= 169 பத்திரிகைகள் தேவைப்படும் என்றும் சொல்கிறான். ஆனால் உண்மையில் இப்போது பார்க்கும்போது, ஈழத்துத் தமிழ் எழுத்தை நம் அருமைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவே ஒரு தமிழ்ப் பத்திரிகை தேவை என்று தோன்றுகிறது. என்ன வேடிக்கையான நிலை.
அன்புடன்,
சுரா.
1. டி.வி. சுப்பா ராவ், தியாகராஜர் கல்லூரி, மதுரை
2. ஜே.ஜே. சில குறிப்புகள்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
29.8.80
அன்புள்ள சிவராமன்,
நீங்கள் அனுப்பிவைத்த ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் இரண்டு புத்தகங்களும் கிடைத்தன. இந்த இதழ்களைப் பற்றி நீங்கள் மதுரையில் என்னிடம் சொன்னதும் ‘குமுதம்’ பத்திரிகையில், கண்ணதாசனைத் தாக்கி இவர்கள் எழுதியிருக்கிற குறிப்பு மறு பிரசுரம் பெற்றிருந்ததும் என் நினைவிலிருக்கிறது. ஓய்வு கிடைக்கும்போது படித்துப் பார்க்கிறேன். இந்தப் பத்திரிகையின் மேலட்டை எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது! ஆண்டாள், பெரியாழ்வார், கம்பன் இவர்கள் வெளிப்படுத்திய அழகுணர்ச்சியுடன் இதை எப்படி ஒப்பிட முடியும்? ரொம்பவும் அருவருப்பாக இருக்கிறது.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் அச்சுதன் கூடலூர், ஆதிமூலம் ஆகிய ஓவியர்களின் பேட்டிகள் பார்த்தீர்களா? அச்சுதனின் பேட்டி ஒரு கலைஞனின் பொறிகள் நிறைந்தவை. ஆதிமூலத்தின் கருத்துக்கள் தெளிவும் கட்டுப்பாடும் கொண்டவை. இருவருடைய பர்ஸனாலிட்டியும் இப்பேட்டிகளில் வெளியாகியிருக்கின்றன என்ற அளவில் இவை வெற்றிகள்.
*‘வாஷிங்டன் ஸ்குயர்’ மொழிபெயர்க்கப் போவதாக எழுதியிருந்தீர்கள். என்ன காரணத்திற்காக நீங்கள் இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்ற யோசனை அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது. நாவல் ஒன்றும் எனக்கு நினைவில்லை. நீங்கள் மொழிபெயர்ப்பதை உறுதிபடுத்திக்கொண்டுவிட்டால், விரைவிலேயே நான் இந்த நாவலைப் படித்து ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும்படி என்னைத் தயாரித்துக்கொள்வேன். இது என்னுடைய சந்தோஷத்துக்காக. இனிமேல் எனக்கு எழுதும்போது இதுபற்றி எழுதுங்கள்.
‘அலை’ பத்திரிகை நீங்கள் அவசியம் பார்த்துவர வேண்டிய ஒன்று. விலாசம்: அலை, 48 சுய உதவி வீடமைப்புத் திட்டம், குருநகர், யாழ்ப்பாணம். மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் ஆத்மார்த்தத்துடனும் இந்தப் பத்திரிகையை நடத்துகிறார்கள்.
அன்புடன்
சுரா.
* ஹென்றி ஜேம்ஸின் நாவல்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
30.5.81
அன்புள்ள சிவராமன்,
வசதியாக ஊர் வந்து சேர்ந்தேன். ஊருக்கு வந்ததும் ஒரு பிரச்சினை காத்துக்கொண்டிருந்தது. கடையில் ஷட்டர் சரியாக வேலை செய்யவில்லை. உடனடியாகக் கவனிக்காவிட்டால் கடை திறக்க/சாத்த சிக்கல் ஏற்படும் என்று எண்ணித் திருவனந்தபுரம் போனேன். அதைச் சரிவரப் பழுதுபார்ப்பவர்கள் அங்குதான் இருக்கிறார்கள். அங்கு பாக்டரியில் வேலைநிறுத்தம். அதோடு நான் அங்கு போய்ச் சேர்ந்த அன்று ஆட்டோ, டாக்சிகள் வேலைநிறுத்தம். ரொம்பச் சிரமமாக இருந்தது. வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டு நேற்று வந்து சேர்ந்தேன்.
இன்று ராமகிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். மதுரையில் கிளை திறப்பது பற்றி என் கருத்தையும் எழுதியிருக்கிறேன். கே.கே. நகர் விலாசத்திற்கு என்னை எழுதும்படி நீங்கள் கேட்டுக்கொண்டதும் இன்னும் சில தினங்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு அதன் பின் போகலாமே என்று இருந்தேன். அப்போது சொல்ல வாய்வரவில்லை. இப்போது 1பவானிக்கு உடம்பு எப்படி இருக்கிறது? வீட்டுக் காரியங்கள் பார்ப்பதில் சிரமம் இராது என்று நம்புகிறேன்.
மதுரையிலிருந்து வந்த பின் 2லட்சுமணனின் முகபாவங்களும் பேச்சும்தான் மனதில் நிற்கிறது. எல்லோரையும் பார்த்தேன் என்றாலும் தனித்தனியாகப் பலருடன் பேச முடியவில்லை.
அன்புடன்,
சுரா
1. பவானி - சிவராமனின் மனைவி
2. பத்திரிகையாளர் மணா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
16.7.81
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 15/7 கார்டு.
ராமகிருஷ்ணனும் திலீப் குமாரும் வரும் நேரத்தில் நீங்களும் சேர்ந்துகொள்ளுவது மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. காகங்கள் திலீப் குமாரை சந்திக்க 19 ஞாயிறு ஏற்பாடு செய்திருக்கிறேன். ராமகிருஷ்ணன் 21ஆம் தேதி டிக்கெட் புக் செய்ய எழுதியிருப்பது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. பிற விஷயங்கள் நேரில் பேசிக்கொள்ளலாம்.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
8.1.82
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 1.1.82 கடிதம்.
கடையில் என்னுடன் வேலை பார்த்துவந்த என் மாமா சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டுப் போய்விட்டார். இது சில பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அதனால்தான் நான் உங்களுக்கு உடனடியாகக் கடிதம் எழுதவில்லை.
கடைப் பிரச்சினைகளாலும், வீட்டில் கட்டிட வேலை நடந்துகொண்டிருப்பதாலும் இப்போது எனக்குத் தில்லி கிளம்ப முடியாது. ஆனால் நீங்கள் ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து போகலாம். இது ஒரு அரிய சந்தர்ப்பம். தில்லியில் இப்போது நல்ல சீதோஷ்ண நிலை இருக்கும். பவானியும் தாய்வீடு போய்விடுவதும் . . .
ஜே.ஜே. வந்து சேர்ந்தது. இப்போதைய முகப்போவியம் எங்கள் எல்லோருக்கும் வெகுவாகப் பிடித்திருக்கிறது. பழைய அட்டை எங்களுக்கும் சரி, நண்பர்களுக்கும் சரி பிடிக்கவில்லை.
இப்போது உத்தமபாளையத்தில் கிடைக்கும் ஓய்வைப் பயன்படுத்திக்கொண்டு மோஹனின் பத்திரிகைக்காக நீங்கள் சில எழுத்துக்கள் தயார் செய்யலாமே. இது பின்னால் மிக்க உதவியாக வந்தமையும். மோஹனின் பத்திரிகை பற்றித் தில்லியிலிருந்து திரும்பியதும் நாம் கூடியோசிக்கலாம் என்று ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். 82இல் எப்படியும் ஒரு பெரிய பத்திரிகையைத் தொடங்கிவிட வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது.
நீங்கள் தில்லி போகவில்லை என்றால் எழுதுங்கள். நான் ஒரு வசதியான நேரத்தில் உத்தமபாளையம் வருகிறேன்.
பிற உங்கள் கடிதம் பார்த்து எழுதுகிறேன்.
அன்புடன்
சுரா.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
27.1.82
அன்புள்ள சிவராமன்
உங்களிடமிருந்து கடிதம் இல்லை. அல்லது எனது கடிதத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்களோ என்னவோ? ராமகிருஷ்ணனிடமிருந்தும் கடிதமே இல்லை. பம்பாய் போய்ச் சேர்ந்து மோஹன் குட்டிக் கடிதம் எழுதியிருந்தார். அவர் பத்திரிகை விஷயமாக ஊர் திரும்பியதும் நாம் எல்லோரும் சந்தித்துக்கொள்ள வேண்டும்.
ஜே.ஜே.யில் லம்போதராவை நான் வர்ணம் என்று எழுதியிருப்பது தவறு. அது கீதம். வர்ணம் அல்ல. நேற்று முன்தினம்தான் இந்த விஷயம் எனக்குத் தெரிந்தது. தவறு தெரியாத நிலையைத்தான் அனேக சமயம் தவறு இல்லாத நிலையாக எடுத்துக்கொண்டுவிடுகிறோம்.
பரீக்ஷா ஞாநி ‘சண்டே’, ‘இந்தியா டுடே’ வகையில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறோம். ஒரு இதழ் ஒன்றரை ரூபாய். மாதம் இருமுறை. பெயர் ‘தீம்தரிகிட’ பாரதியின் மீசையையும் கண்களையும் முத்திரையாகக் கொண்டிருக்கிறார். நல்ல முயற்சி. ஆனால் பயங்கரமான தயாரிப்புத் தேவையானது. ஞாநியின் தோள்கள் தாங்குமா என்பது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.
1எழில் முதல்வனின் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற தமிழ் உரைநடைபற்றிய புத்தகத்தை நீங்கள் படித்தீர்களா? படித்து நீங்கள் ஒரு மதிப்புரை எழுதலாம். மோஹனின் புதிய பத்திரிகையில் வெளியிட.
இம்மாதக் ‘காகங்கள்’ கூட்டத்தில் காரை சிபி, ‘நாடகாசிரியர் சார்தர்’ என்ற தலைப்பில் கட்டுரை படிக்கிறார்.
சொல்லும்படி ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு சில நாட்களாகக் கவிதை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன். ஐந்தாறு கவிதைகள் மொழிபெயர்த்திருக்கிறேன்.
சிவராமகிருஷ்ணனும் மாலாவும்2 இங்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போனார்கள்.
அன்புடன்
சுரா.
1. பேராசிரியர் ராமலிங்கம், திருச்சி பல்கலை.
2. சுரா, சிவராமன் ஆகியோரின் நண்பர்கள்.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
12.2.1982
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 29.1.82 கடிதம். இத்துடன் நீங்கள் இணைத்திருந்த ராமகிருஷ்ணனின் கடிதமும்.
1மனோவின் அபிப்பிராயம் கவனிக்கும்படி இருக்கிறது. நாவலைப் பற்றி இன்னும் அவர் பட்டுக்கொண்டுவிடவில்லை. முழுமையாகப் படித்து முடிந்த பின்பு என்ன அபிப்பிராயம் கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். சம்பத்தின்2 கூற்றில், ‘நான் ஜே.ஜே.யில் துருத்துகிறேன்’ என்று சொன்னால் அது விமர்சனமாகாது. ‘பாலு’ ஜே.ஜே.யில் துருத்துகிறான் என்று சொன்னால்தான் விமர்சனமாகும். சம்பத்துக்குத் தான் செய்துவிட்டிருக்கக்கூடிய மாதிரியில் ஒன்றை நான் செய்துவிட்டதான ஆயாசம் இருக்கக்கூடும். அவருடைய குணமும் கனவும் திறனும் அறிந்த அளவில் என் கற்பனை இது. சுந்தரராஜன் என்ற நண்பன் தனக்கு மலையாளம் தெரியும் என்பதை எனக்கு நினைவூட்டி, ஜே.ஜே.யின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று கேட்டு எழுதியிருக்கிறார். இவர் வெகுளி அல்ல. சற்று ஆழமானவர். புத்தகம் நாவல் என்ற உணர்வும் இவருக்கு இருக்கிறது. என்ன மர்மம்? எனக்கு விளங்கவில்லை. ஞானி, இங்கு வந்த அவர் நண்பர் மூலம், ஜே.ஜே. பற்றி விரிவான கடிதம் ஒன்று கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவரது பார்வை நாவலைச் சார்ந்து இல்லை. முழுமையாகவும் இல்லை. முல்லைக்கல் ஜே.ஜே.யைவிட சமூகக் கடமைகொண்டவன் என்று அவர் வாதம். இதுவரையிலும் காதில் விழுந்த – இங்கு என்னைச் சுற்றிலும் – அபிப்பிராயங்களிலிருந்து நாவல் போதிய சிரத்தையுடன் படிக்கப்படவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. இதையே ராமகிருஷ்ணனும் உணருகிறார்.
நீங்கள் திருவேடகத்துக்குப் போவது எப்படி? உறுதியாகிவிட்டதா? அப்படியானால் நான் திருவேடகம் வருகிறேன்.
3மூர்த்தி ஸ்ரீலங்கா போயிருக்கிறான். இன்னும் ஒரு வாரத்திற்குள் திரும்பி வரக்கூடும். அவன் வந்ததும் கிளம்ப வேண்டும். அவன் வரப் பிந்திவிட்டது என்றால், இம்மாத இறுதியில் ‘காகங்கள்’ கூட்டத்தை முடித்துவிட்டுக் கிளம்ப வேண்டும்.
‘கரமசோவை’ நீங்கள் படித்துக்கொண்டிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதனைத் தமிழில்கொண்டுவர வேண்டும் என்பது எனது கனவு. சமீபத்தில் ராமகிருஷ்ணன் ருஷ்ய மொழியிலிருந்தே இதை மொழிபெயர்க்க வேண்டும் என்றார். தெரிந்து உதறிக்கொண்டிருந்த இக்கருத்து அவர் மூலம் வெளிப்பட்டதும் ரொம்பவும் உள்ளே போய்விட்டது. எப்படியும் தமிழில் வர வேண்டும்.
நடுவில் ஒரு வாரம் கவிதைகள் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். அன்டோனியோ மக்கடோ இத்தாலியில் எழுதியவை. ரெஜி சிரிவர்த்தனா என்ற சிங்களவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இம்மாதம் ஸ்ரீலங்காவிலிருந்து பல எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். ஏ.ஜி. கனகரெட்னா, பத்மநாபன், நித்தியானந்தன், நிர்மலா, யேசுராஜா. இவர்கள் நாகர்கோவிலும் வரக்கூடும். மதுரை வரும்போது நீங்கள் இவர்களைச் சந்திக்க வேண்டும். மதுரை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சந்திக்க முடிந்தால் நல்லது.
ராமகிருஷ்ணன் டில்லி போகும் முன் எழுதியிருந்தார். எப்போது வருகிறார் என்பது தெரியுமா?
மோஹன் வந்துவிட்டாரா?
பவானியின் உடல்நிலை எப்படியிருக்கிறது?
இங்கு நாங்கள் எல்லோரும் சுகம்.
கமலாவும் தங்குவும் கோவையில் ஒரு கல்யாணத்திற்குப் போயிருக்கிறார்கள். நாளை / மறுநாள் வரக்கூடும்.
மிக்க அன்புடன்,
சுரா
1. எஸ்.வி. ராஜதுரை
2. எழுத்தாளர் சம்பத்
3. சுராவின் மருமகன்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
04.6.1982
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 1/6 கடிதம் ஆச்சரியப்படும் வகையில் இரண்டாம் தேதியே எனக்குக் கிடைத்தது. *கொடையிலிருந்து நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் எண்ணியிருக்கவில்லை. இதனாலும், கடிதத்தின் உள்ளடக்கத்தினாலும் நான் மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். கொடை விட்டபின் என் மூளை, ‘சிந்தனை வரிசை’ வெளியிடுவது பற்றிய கனவுகளில் நிரம்பி இசைவான புறச்சூழலில் மிகத் தொலைவான லட்சியக் கனவுகள் வந்துகொண்டிருக்க, மோஹனிடம் சரிவரப் பேசவில்லை என்பதுகூட மதுரையிலிருந்து பஸ் ஏறிய பின்புதான் தெரிந்தது.
கொடையில் நாம் தங்கியிருந்தபோது கொஞ்சம் நல்லபடியாக யோசித்திருக்கிறோம். முழுத் திட்டத்தைப் பற்றியும் குழப்பிக்கொள்ளாமல் இப்போது 24 சிந்தனையாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து உரிய எழுத்தாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த 24 பேர்களின் விரிவான பட்டியல் உங்கள் பரிசீலனைக்கு நான் இரண்டொரு நாட்களில் தயார் செய்து அனுப்புவேன். முதல் பட்சமானதும், வாசகர்களின் ஆவலைத் தூண்டக்கூடியதாகவும், திட்டத்தின் வெற்றியை முன்கூட்டி அறிவிக்கக் கூடியதாகவும் இவை அமைய வேண்டும். 25 புத்தகங்களை ஒரு பகுதியாகக் கணக்கிட்டு மொத்தத் திட்டத்தையும் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கடிதப்போக்குவரத்துகளில் தி.1. தி.2. என்று குறிப்பிட்டுக்கொள்ளலாம். தி. 1ஐ எழுத்துப் பழக்கமும் கிரகிப்பு சக்தியும் குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்துக்கொடுக்கும் ஒழுக்கமும் கொண்ட எழுத்தாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னால் எழுதுபவர்களுக்கு நாம் சொல்லிப் புரியவைக்க முடியாத பல விஷயங்களை இப்புத்தகங்கள் முன் மாதிரியாக நின்று விளக்க வேண்டும். அ.மி., வெங்கட் சாமிநாதன், என். சிவராமன், சு.ரா., மோஹன், மனோ போன்ற ஒரு சிலருக்கு இரண்டு புத்தகங்கள் கொடுக்கலாம். தி. 1ஐச் சேர்ந்த புத்தகமாகவும், தி.3.ஐச் சேர்ந்த புத்தகமாகவும் இது இருக்கும். இரண்டு புத்தகம் எழுதுகிறவர்கள் தி. 2இல் இடம் பெறும்போது தி. 4இலும் இடம் பெறுவார்கள்.
திட்டத்தில் பங்குகொள்ளும் எழுத்தாளர்களின் பெயர்கள். நாம் முதலில் சேர்க்காதவர்கள்: 1. வேதசகாயகுமார், 2. காக்கும் பெருமாள் / பத்மநாபன். 3. ஜனார்த்தனன் (எஸ்.சி. கல்லூரி, நாகர்கோவில்) 4. ஜேம்ஸ். (எஸ்.சி. கல்லூரி, நாகர்கோவில்) 5. பேராசிரியர் ஜேசுதாசன் 6. மிஸிஸ். ஜேசுதாசன். 7. எஸ்.டி. லஷ்மணன் (மதுரை) 8. பிலோமிநாதன் (பாண்டிச்சேரி) 9. ப.நா. பாலசுப்பிரமணியம். (சச்சியின் நண்பர் – அறிவுத் துறை நூல் ஒன்று எழுதியுள்ளார். சுத்தமான தொழிலாளி) 10. எம்.எஸ். 11. ராஜேந்திரன். 12. ‘பசப்பல்’ ராஜகோபாலன் 13. திருச்சிக் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத் துறையில் வேலை பார்ப்பவர். இவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பெயர் நினைவுக்கு வரவில்லை. (இந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்த்தாலும் நினைவுக்கு வரும்.)
எஸ்.என். நாகராஜனுக்கு இரண்டு புத்தகங்கள் கொடுக்கலாம். ஒரு தத்துவ ஆசிரியரும் ஒரு விஞ்ஞானியும். வால்ட் விட்மனை தி. 1இல் சேர்த்து ‘பசப்பல்’ ராஜகோபாலனிடம் கொடுக்கலாம். இவர் எழுதுவாரா என்று சச்சியிடம் கேட்டால் தெரியும். எலியட் பற்றி இ.ஆர். பாலகிருஷணன் எழுதட்டும். அர்னால்டு அல்லது ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் பற்றி சிவராமன் எழுதலாம். இரண்டாவது புத்தகமாக டி.எச். லாரன்ஸ் பற்றி சிவராமன் எழுதலாம். ஹெகல் மீது சுப்புராவுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வே.சா.வுக்கு புஷ்கின் ஏற்ற ஆசிரியர் இல்லை. ஒரு சினிமா இயக்குநர் பற்றியும் ஒரு இலக்கியவாதி பற்றியும் இவரை எழுதச் சொல்லலாம். இலக்கியவாதி கொசோல், துக்கனேவ், தாமஸ் மன், ஸ்டேந்தால் இவர்களில் ஒருவராக இருக்கலாம். டிக்கன்ஸ் அல்லது பால்சாக் பற்றி திலீப்குமாரை எழுதச் சொல்லலாம். ஹைகுவுக்கு ஞானக்கூத்தன் ஏற்ற தேர்வு. தஸ்தாவஸ்கி பற்றி ஒரே யோசனையாக இருக்கிறது எனக்கு. மேற்கொண்டு பரிசீலனைக்கு 76 ஆசிரியர்கள்கொண்ட பட்டியல் ஒன்றை இணைத்திருக்கிறேன். விஜயகிருஷ்ணனுக்கு இன்று/நாளை எழுதுகிறேன்.
என் உடல்நிலை நன்றாக இருக்கிறது. கொடையிலிருந்து வரும்போது எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் வந்தேன். சிவராமன் இப்போது எப்படி இருக்கிறார்? ஏதும் பிரச்சினை இராது என்று நினைக்கிறேன்.
ஜெயாவின் உடல்நிலை பற்றிக் கமலாவிடம் பேசினேன். எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் எங்களுக்கும் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் டாக்டர் இந்திராவிடம் சிகிச்சை பெற முடியும் என்கிறாள். ஜெயாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதுவதாக இருக்கிறாள்.
அன்புடன்
சுரா.
* கோடைக்கானல்