தமிழ் மறுமலர்ச்சியின் முகம்
தொ.மு.சி. ரகுநாதன் (1923 - 2001)
இலக்கிய ஆர்வலர்களான நண்பர்கள் சிலரின் கூட்டு முயற்சி ‘பொருநை,’ அதன் ஒரு பகுதியே காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ‘பொருநை பக்கங்கள்.’ தமிழின் மகத்தான படைப்பாளிகளைப் புதிய தலைமுறை வாசகர்களுக்கு எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவதே இந்தப் பக்கங்களின் குறிக்கோள். இந்த இதழில் இடம்பெறுபவர் நூற்றாண்டைக் காணவிருக்கும் தொ.மு.சி. ரகுநாதன்.
“இரண்டுபேரும் என் எதிர்கால நம்பிக்கைகள்” என்று புதுமைப்பித்தனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூறப்பட்ட இரு படைப்பாளிகளின் நூற்றாண்டு இந்த 2022இல் தொடங்குகின்றது. சமகாலத்தவர்களான அவர்களில் ஒருவர் கு. அழகிரிசாமி, மற்றொருவர் தொ.மு.சி.ரகுநாதன்.
நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்ந்ததோடல்லாமல், தன்னுடைய படைப்புகளின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையை வளப்படுத்திய பெருமை தொ.மு.சி.ரகுநாதனுக்கு உண்டு. தொ.மு.சி. என்று சுருக்கமாக நண்பர்களால் அழைக்கப்படும் தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன், முத்தையா – முத்தம்மாள் தம்பதியரின் மகனாக 20-10-1923இல் பிறந்தார். அவரது இலக்கிய வாழ்வானது பள்ளிப்பருவகாலத்திலேயே தொடங்கிவிட்டது. இதற்குக் காரணமாக அவர் பிறந்த குடும்பம், ஊர், காலம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ரகுநாதன் பிறப்பதற்கும் முன்பே பாரதி அவரது வீட்டிற்கு வந்து அவர் தந்தையோடு அளவளாவிச் சென்றிருக்கிறார்.
ரகுநாதனுடைய தாத்தா ஒரு கவிஞர்; திருப்புகழ் சாமி என்ற முருகதாச சுவாமிகளின் சிஷ்யர். நெல்லை பள்ளு என்ற பிரபந்தத்தைப் பாடியுள்ளார். அவரின் தந்தை தொண்டைமான் முத்தையா ஒரு கலைஞர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிகுந்தவர்; சில நூல்களும் எழுதியுள்ளார். ரகுநாதனுடைய கலையுணர்வையும் கவிதைப்பற்றையும் வளர்ப்பதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் அவரது தந்தைதான். ரகுநாதரின் சகோதரர் பாஸ்கரத் தொண்டைமான் பெரும் கலா ரசிகர்; கம்பராமாயண பக்தர்; ரசிகமணி டி.கே.சி.யின் சிஷ்யர். மேலும் ரகுநாதன் பிறந்து வளர்ந்த நெல்லை நகரம் அந்நாளில் இலக்கியச் சூழல் கொண்டதாயிருந்தது. அவரது குடும்பம் பல இலக்கிய விழாக்களையும் கூட்டங்களையும் முன்னின்று நடத்துவதில் பெரும்பங்கு வகித்தது. இதன் மூலம் அ. சீனிவாசராகவன், டி.கே.சி போன்ற எத்தனையோ இலக்கியப் பிரமுகர்களின் பேச்சுக்களைக் கேட்பதற்கும் அவர்களோடு பழகுவதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ரகுநாதனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கலை, இலக்கிய ரசனை மிகுந்திருந்ததால் அவர்கள் நிறைய புத்தகங்களைச் சேமித்துவைத்திருந்தனர். அதையெல்லாம் இளம்பிராயத்தில் படிக்கின்ற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால் தொடக்க காலத்திலேயே இலக்கியம் பற்றிய சில தீர்க்கமான, திடமான சிந்தனைகள் அவருள் உருவாகிவிட்டன. அதே சமயத்தில் நெல்லை இலக்கியச் சூழலில் நிலவிவந்த பொதுவான போக்குக்கு மாறுபட்ட, வேறுபட்ட பாதையில் செல்ல வேண்டும், செல்ல முடியும் என்ற உணர்வும் அவருள் எழுந்திருந்தது. பாரதியின் பாடல்களும் புதுமைப்பித்தனின் கவர்ச்சியும், அரசியல்மீது ஈடுபாட்டால் உருவான சமுதாயக் கருத்துக்களும் இதற்கு முக்கிய காரணிகளாகத் திகழ்ந்தன. இலக்கியச் சூழலோடு அவர் வளர்ந்துவந்த அந்தக் காலம் அரசியல் விழிப்பு மிகுந்த காலமாக இருந்தது. அரசியல் வேகமும் கருத்துக்களும் ஒரு நெருப்பைப் போன்று அவரைப் பற்றிக் கொள்ள, பின்னாட்களில் அதுவே அவருடைய சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்கும் சிறைவாசத்துக்கும் கல்லூரி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் காரணமாகிவிட்டது. பின்னாட்களில் தனது சிறை அனுபவத்தைக் ‘கூண்டுக்கிளி’ என்கிற சிறுகதையாக அவர் படைத்தார்.
தன்னுடைய பதினாறாவது வயதில் மின்னல் என்கிற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி, தனக்காக மட்டுமே நடத்தினார். ‘இது நினைத்தபோது தோன்றும் மறையும்...!’ என்பதே மின்னலின் மேல் தலைப்பில் இடம்பெற்ற மணிவாக்கு. இதில் முழுக்க முழுக்க அவரது எழுத்துக்கள் மட்டுமே இடம்பெற்றன. நண்பர்களிடையே மட்டும் தனிச்சுற்றுக்கு விடப்பட்ட இக்கையெழுத்துப் பத்திரிகை, அவரது இலக்கியப் பயிற்சிக்கான நடைவண்டியாகவும், பிந்திய காலங்களில் சாந்தி என்ற கலை, இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்துவதற்கு அச்சாரமாகவும் விளங்கியது.
1940வாக்கில் அவரது படைப்புகள் பத்திரிகைகளில் வரத் தொடங்கிய காலக்கிரமத்தில், இந்த மின்னல் நின்று போனது. கலை, இலக்கியம் குறித்து விவாதிப்பதற்கும், எழுதும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதற்கும் 1941இல் நெல்லை நகர வடக்கு ரதவீதியில் ‘ஜவஹர் வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். 1944இல் சென்னைவாசியானாா்; தினமணியில் துணை ஆசிரியராக 1944முதல் 1945வரை பணியாற்றினார். இக்காலகட்டத்தில் புதுமைப்பித்தனோடு நேரடியாகப் பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒருநாள் அவரிடம் தன்னுடைய ‘பிரிவு உபசாரம்’ கதையை ரகுநாதன் வாசித்துக் காட்ட, அதைக் கேட்டுவிட்டு, ‘ரகுநாதா! நான் உன்னில் என்னையே காண்கிறேன்!’ என்று பாராட்டியிருக்கிறார் புதுமைப்பித்தன். செப்டம்பர் 1945இல் அவரது முதல் நாவலான ‘புயல்’ வெளிவந்தது. இளம் பெண்ணொருத்தியின் மென்மையான உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் கவிநயத்தோடு சித்திரித்த இந்நூல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுப் பின்னாட்களில் பல பதிப்புகளைக் கண்டது.
தினமணியிலிருந்து விலகிய பிறகு, முல்லை இதழின் ஆசிரியராக 1946-1947 வரையிலும், அதன் பின்பு 1948-1952 வரையில் சக்தி இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். இவ்விதழில் பணிபுரிந்த சமயத்தில் சக துணை ஆசிரியராகப் பணிபுரிந்த கு.அழகிரிசாமியுடன் இணைந்து வெளிக்கொணர்ந்த ‘சக்தி மலர்’ என்ற ‘மாதம் ஒரு புத்தகம்’ நல்ல இலக்கியப் படைப்புகளைத் தாங்கி வந்து வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் அவரது ‘இலக்கிய விமர்சனம்’ நூலானது ஏப்ரல் 1948இல் வெளிவந்தது. இரண்டுமாத இடைவெளியில் அவரது திருமணமும் (ஜூன் 24, 1948) நடந்தேறியது. 1949இல் வெளிவந்த அவரது ‘முதல் இரவு’ நாவல் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. முறை தவறிய உறவுகள் குறித்தும், பாலியல் சார்ந்தும் எழுதப்பட்ட இந்நாவலுக்கு அப்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தடை விதித்தார். இதனை எதிர்த்து ரகுநாதன் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தார்; அது தோற்றுப்பொனதும் கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றம் விதித்த அபராதத்தினைச் செலுத்தி வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து, 1950இல் ‘கன்னிகா’ நாவலையும், 1951இல் ‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூலையும், 1953இல் ‘பஞ்சும் பசியும்’ நாவலையும் எழுதினார். தமிழிலிருந்து ஐரோப்பிய மொழியில் (செக் மொழி) மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் என்ற பெருமை ‘பஞ்சும் பசியும்’நாவலுக்கு உண்டு.
1954இல் ரகுநாதனின் அண்ணன் பாஸ்கரத் தொண்டைமான் மாவட்ட ஆட்சியாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சமயத்தில், இருவருக்கும் பாகப்பிரிவினை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. வீட்டிலுள்ள இத்யாதிகளைப் பிரித்துப் பெண்களுக்குக் கொடுத்தது போக, ரகுநாதனின் பங்காக அவரது சகோதரர் மூவாயிரம் ரூபாயைக் கொடுத்தார். அந்தப் பணத்தை மூலதனமாகக் கொண்டு, 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாந்தி கலை, இலக்கிய மாத இதழை அவர் தொடங்கினார். இவ்விதழ் தொடங்கப்பட்டதன் முதன்மை நோக்கம் தென்மாவட்டத்திலுள்ள இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதுதான். ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்’ என்கிற பாரதியின் வரிகள் சாந்தியின் மணிவாக்காக இடம்பெற்றிருந்தது.
முதல் இதழில் திருச்சிற்றம்பல கவிராயர் என்கிற புனைப்பெயரில் ரகுநாதன் எழுதிய கவிதையும், கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதையும், சுந்தர ராமசாமி, அகிலன், சி.வி.எஸ்.ஆறுமுகம் ஆகியோர் எழுதிய கதைகளும், கே.ஏ.அப்பாஸின் மொழிபெயர்ப்பும், வேறு சில கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. சாந்தியின் முதல் இதழை வரவேற்று அன்றைய பிரபல பத்திரிகைகளும் இலக்கியப் படைப்பாளிகளும் கடிதங்கள் எழுதியிருந்தனர். இரண்டாவது இதழிலே அவை பிரசுரிக்கப்பட்டிருந்தன. இவ்விதழின் அட்டைப் படமாக வண்ண ஓவியம் மலர்ந்திருந்தது. அத்தோடு இதழின் உள்ளடக்கமாக டிசம்பர் 5, 1954இல் கல்கி மறைந்ததையொட்டி அவர் குறித்தும், சென்னையிலே கூடவிருந்த உலக சமாதான மாநாட்டை வரவேற்றும், சென்னை அரசாங்கம் நாடகத்திற்கு விதித்திருந்த தடைச் சட்டத்தைக் கண்டித்தும் தலையங்கம் இடம்பெற்றிருந்தது. திருச்சிற்றம்பல கவிராயரின் ‘சாந்தி நிலவுக’,அருளரசனின் ‘பொங்கப்போமோ..’ கவிதைகளும், புதுமைப்பித்தனின் பாராட்டைப் பெற்ற முரளி எழுதிய ‘இன்றையச் சந்தையில்’ கதையும், ரகுநாதனின் ‘விச்சுளி’, கிருஷ்ணசந்தரின் ‘பௌர்ணமி நிலவிலே’ கதைகளும், புதுமைப்பித்தன் ரகுநாதனுக்கு எழுதிய ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ என்கிற தலைப்பிலான கடிதமும், ‘கவிமணி தந்த கருத்துக்கள்’ என்ற தலைப்பிலே ‘எஸ்.ஆர்’ (சுந்தர ராமசாமி) எழுதிய கட்டுரையும், மேலும் சில புத்தக விமர்சனங்களும் வெளியாகியிருந்தன.
சாந்தியின் ஜூலை 1955ஆம் இதழ் புதுமைப்பித்தன் மலராக உருவாக்கம் பெற்றிருந்தது. புதுமைப்பித்தன் குறித்து ரகுநாதன் எழுதிய நீண்ட தலையங்கமும், ‘வெட்டரிவாள் பாட்டுண்டு’ கட்டுரையும், வையாபுரிபிள்ளை எழுதிய ‘புதுமைப்பித்தன்’ கட்டுரையும், ‘புதுமைப்பித்தனும் இளம் எழுத்தாளரும்’ என்ற கு. அழகிரிசாமியின் நினைவுக் குறிப்புகளும், எஸ்.சிதம்பரத்தின் ‘கடைசி நாட்களில்’ கட்டுரையும், ‘பித்தன்’ என்கிற தமிழ் ஒளியின் கவிதையும், புதுமைப்பித்தனின் ‘அன்னை இட்ட தீ’ நாவலின் முதல் அத்தியாயமும், திருச்சிற்றம்பல கவிராயரின் ‘உன்னைத் தான் கேட்கிறேன்’ கவிதையும் இவ்விதழிலே இடம்பெற்றிருந்தன. இவ்விதழின் நடுப்பக்கங்களில் ரகுநாதனின் பால்ய காலப் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்க, முன்னட்டையைத் திருவரங்கம் வேணுகோபால் ஆலயத்திலுள்ள சிற்பத்தின் புகைப்படம் அலங்கரித்திருந்தது.
ஆகஸ்ட் 1955 இதழிலிருந்து ‘நெஞ்சிலே இட்ட நெருப்பு’ என்ற தொடர்கதையை எழுத ஆரம்பித்திருந்தார் ரகுநாதன். செப்டம்பர், 1955 இதழ் பாரதி மலராக வெளிவந்தது. இவ்விதழில் சாமி சிதம்பரனார், ப.சீனிவாசன் ஆகியோரின் பாரதி குறித்த கட்டுரைகளும், ‘சூரியன் பேசுகிறதா?’ என்ற நா.வானமாமலையின் விஞ்ஞானக் கட்டுரையும் இடம்பெற்றிருந்தன. டிசம்பர்,1955 இதழ் ஆண்டுமலராக வெளிவந்தது. வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி, ரகுநாதன், டி.செல்வராஜ், அகிலன் ஆகியோரது கதைகளும் சாமி சிதம்பரனார், எஸ்.சிதம்பரம், நா.வானமாமலை, க.கைலாசபதி, ப.ஜீவானந்தம் ஆகியோரின் கட்டுரைகளும் குயிலன், திருச்சிற்றம்பல கவிராயர், கே.சி.எஸ்.அருணாசலம் முதலியவர்களின் கவிதைகளும் தி.க.சி.யின் ஓரங்க நாடகமும், புத்தக விமர்சனமும் திரை விமர்சனமும் இடம்பெற்றிருந்தன.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுதேசமித்திரன், ஈழகேசரி, சுதந்திரன், தேசாபிமானி, பிரசண்ட விகடன் ஆகிய இதழ்களின் வரிசையில் இடம்பெற்ற சாந்தி பொருளாதாரப் பின்னடைவு காரணமாக 1956 ஏப்ரல் மாத இதழோடு நிறுத்தப்பட்டது. தமிழிலக்கியத்திற்கு வளம் சேர்த்த சாந்தி குறித்துக் குறிப்பிடும்போது, அவ்விதழின் பதிப்பாசிரியர் என்கிற முறையில் ரகுநாதன் தவிர்த்து, அவ்விதழின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி, தி.க.சி, டி.செல்வராஜ் ஆகியோரின் பணிகளையும் நினைவில் கொள்ள வேண்டும். இதழ் நிறுத்தப்பட்ட பிறகு, 1967இல் மீண்டும் சென்னைக்குத் திரும்பி, சோவியத் செய்தித்துறையில் ஆசிரியராக 1988ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார் ரகுநாதன். அவரது இலக்கியத் திறனாய்வு நூலான ‘பாரதி: காலமும் கருத்தும்’ நூலுக்கு 1983இல் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. மனைவி ரஞ்சிதத்தின் மறைவிற்குப் பின்னர், மகளோடு நெல்லையில் வசித்து வந்த அவர் 31-12-2001இல் மறைந்தார். அவரது படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
நெல்லை இந்து கல்லூரியில் பயில்கின்றபோது தன்னை விட இரண்டு வருடம் மூத்தவராக, சீனியர் இண்டர்மீடியட் மாணவராகப் பயின்ற தொ.மு.சி. குறித்துத் தன்னுடைய கட்டுரையொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார் தி.க.சி: ‘ஆன்மாவை விலை பேசாத அபூர்வ எழுத்தாளருள் ஒருவர் ரகுநாதன். அவரிடம் ஆணவமுண்டு. ஆனால் அது அரை வேக்காட்டு இலக்கிய அறிவிலோ எழுத்துத் திறனிலோ பிறந்ததல்ல. அது பழுத்துக் கனிந்த தமிழ்ப் பண்பாட்டிலும் தன்மானத்திலும், நாட்டுப் பற்றிலும் மக்கட் பற்றிலும் பிறந்த ஆணவம். ஒவ்வொரு எழுத்தாளனிடமும் இருக்க வேண்டிய தூய முனைப்பு. ரகுநாதனின் ஆணவத்தை இலக்கிய ஆண்மை என்றே கூற வேண்டும். இந்த ஆண்மையை அவருக்கு அளித்த மாபெரும் குற்றவாளிகள் - கம்பனும் பாரதியும் புதுமைப்பித்தனுமேயாவர்...’
மின்னஞ்சல்: velayuthamuthukumar@gmail.com