தமிழில் ஒடிய இலக்கியம்
காலச்சுவடு ஆகஸ்ட் 2022 (பக்: 24 – 26) இதழில் வெளியான பெருமாள்முருகனின் ‘கருத்துரிமை விருது’ குறித்த கட்டுரைக்கான கூடுதல் குறிப்புகள்
ஒடியமொழியில், கருத்துரிமை விருது தொடங்கப்பட்ட 2004இல் முதல் விருதைப்பெற்றவர் கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்தமூர்த்தி. அவருக்குப் பிறகு பதினெட்டு ஆண்டுகள் கழித்து இக்கருத்துரிமை விருதைப் பெறுபவர் தமிழ்மொழியின் சிறந்த எழுத்தாளரான பெருமாள்முருகன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு, மனதார மகிழ்ந்து வாழ்த்துவதில் கூடுதல் மனநிறைவுகொள்கிறேன்.
“பக்கீர் மோகன் சேனாபதியின் எழுத்து எதையாவது வாசித்துப் பார்க்க வேண்டுமென்று இந்தச் சந்தர்ப்பத்தில் முயன்றேன். தமிழ்மொழியில் மட்டும் வாசிக்கும் திறன்கொண்டவன் நான். பக்கீர் மோகன் சேனாபதியின் எழுத்துகள் எதுவும் தமிழில் கிடைக்கவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்கிறார் பெருமாள்முருகன் (பெ.மு).
பக்கீர் மோகன் சேனாபதியின் எழுத்துகளாகத் தமிழில் இரு படைப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.
1. பக்கீர் மோகன் சேனாபதி ஒடியமொழியில் Chhaman Atha Guntha 1898இல் எழுதியுள்ளதைக் ‘காணி நிலம்’ எனத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து ஹ. துரைசாமி 1971 இல் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 1985ஆம் ஆண்டு சமாண ஆட்ட குண்டா (1897), 2002 இல் சமாண ஆட்ட குண்டா, ஆறு புள்ளி முப்பத்திரண்டு ஏக்கர்கள் மொழிபெயர்ப்புக்காக அரங்க. சுப்பையா பெயரையும், 2012 இல் சமாண ஆட்ட குந்தே (1899), ஆறு ஏக்கரும் ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கும் மொழிபெயர்ப்புக்காக சிவசங்கரியின் பெயரையும் குறிப்பிடலாம்.
காணிநிலம் புதினம் எல்லாக் காலத்திற்கும் சிறப்புடையதாய்க் கருதப்பெறுகின்றது. இதை சரளாதாசரின் மகாபாரதத்தோடும் ஜகந்நாத தாசரின் பாகவதத்தோடும் ஒப்பிடலாம். ஆனால் எம் இளம்முனைவர் பட்ட ஆய்வில், ‘காணி நிலம்’ புதினத்தை, பாரதியின் பாஞ்சாலி சபதத்தோடு ஒப்பீடு செய்து விளக்கியுள்ளதோடு, பாரதிக்கும் பக்கீர் மோகனுக்கும் பிறப்புமுதல் இறப்புவரை பதினைந்து ஒற்றுமைகள் நிலவுவதை அட்டவணைப்படுத்தி விளக்கியுள்ளேன்.
2. ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்: பக்கீர் மோகன் சேனாபதி’ எனும் தலைப்பில் அவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூலை மாயாதர் மான்சின்ஹா ஆங்கிலத்தில் மொழிபெயத்துள்ளார். அதன்வழி க. சி. கமலையா 1985 இல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
ஒடியமொழியில் நாவல், சிறுகதை, தன்வரலாறு, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் பக்கீர் செயல்பட்டிருக்கிறார். ஒடிய இலக்கியத்தின் தந்தை, முன்னோடி என்றெல்லாம் பெரிதும் போற்றப்படுகிறார். ஒடியமொழி உரைநடைக்கு ஏற்றம் கொடுத்தவர் எனவும் குறிப்பிடப்படுகிறார். அத்தகைய ஒருவரின் எழுத்துகள் எதுவும் வாசிக்கக் கிடைக்கவில்லை என்றார் பெ.மு.
இங்கு பக்கீர் மோகன் சேனாபதியின் அறிமுகச் சுருக்கம் வருமாறு:
இவர் ஒடியமொழி நவீன இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்பெறுகிறார். ஒடியமொழியின் விடுதலைக்காகப் பாடுபட்டவர். இவருடைய காலமான 1843 முதல் 1918 வரை பல பள்ளிகளின் பாட நூல்கள் வங்காள மொழியில்தான் இருந்தன. இவருடைய செயல்பாடுகள் பலரை ஒடியமொழியில் இலக்கியங்களையும் பாடநூல்களையும் எழுதத் தூண்டின.
இவர் மிகவும் திறமை கொண்டவர்; முறையாகக் கல்வி கற்றவரில்லை. தொடக்கப் பள்ளியோடு நின்று விட்டவர். நவீன ஒடிய இலக்கியம், தேசிய உணர்ச்சி ஆகிய இரண்டிலுமே தலைசிறந்தவராக விளங்கியுள்ளார். சமூக நீதியை முன்னிறுத்தியும் ஆங்கில அரசை நையாண்டி செய்தும் கதைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து கதைப்பாடல்கள், பக்திப்பாடல்கள், விவரணைப் பாடல்கள், நகைச்சுவை ததும்பும் நிந்தனைக் கவிதைகள் ஆகியவற்றுடன் புத்தரைப் பற்றிய ஓர் இதிகாசமும் இயற்றியுள்ளார்.
பக்கீர் மோகன் சேனாபதிக்குக் குறைந்தது ஐந்து மொழிகளில் புலமையுண்டு என்பர்; ஆங்கிலத்திலும் பயிற்சி பெற்றவர். முதலில் நூல்களை அச்சுருவாக்கம் பெறச் செய்தவர். நூல் வெளியீடு, பத்திரிகைத்துறை ஆகியவற்றில் குறிப்பாகக் கூட்டுறவு முறையில் முன்வந்து பணியாற்றிய பெருமை இவருக்குண்டு. ஒடிசாவில் பணிபுரியும் பிற மொழியினரான இ. ஆ. ப. (IAS) அதிகாரிகள், இவருடைய புதினங்களில் ஒன்றிரண்டையாவது படித்தாக வேண்டும். ஏனெனில் மக்கள் கையாளும் மொழியில் அவை இயற்றப்பெற்றுள்ளன.
மகத்தான இலக்கிய ஆசிரியராக இருந்ததுடன் சிறுவயதிலேயே வங்கக் கலாச்சார மொழி ஆதிக்கப்போக்குகளை எதிர்த்துத் தம் தாய்மொழியின் உயிர்நாடியாகத் திகழ்ந்துள்ளார். அதனால் ஒடிய இலக்கியத்தில் இவருக்கு ஓர் இணையற்ற மதிப்பு எப்போதும் உண்டு.
“இந்திய மொழிகளுக்கு இடையேயான மொழிபெயர்ப்புகள் மிகக் குறைவு. சில மொழிகளுக்கு இடையே மொழிபெயர்ப்புகளே இல்லையோ என்று சந்தேகப்படுகிறேன். தமிழிலிருந்து நேரடியாக ஒடியமொழிக்கு வந்த நூல் ஏதேனும் இருக்குமா? அதே போல ஒடியாவிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஏதேனும் உண்டா?” என்று பெ.மு. கேட்கிறார். ஒடியமொழியிலிருந்து தமிழ்மொழிக்கு வெளியான நூல்கள் அனைத்தும் நேரடி மொழிபெயர்ப்புகளாக வெளிவரவில்லை. ஆங்கிலம், இந்தி மொழிகளின் வழியாகத்தான் வெளிவந்துள்ளன. ஒடிசாவிலுள்ள புவனேசுவர் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றும் தமிழறிஞர்கள் திருக்குறளைத் தமிழிலிருந்து நேரடியாக ஒடியாவில் மொழிபெயர்ப்பதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவின் கிழக்கு மாநில மொழிகளில் வங்க மொழியிலிருந்து ஏராளமான மொழிபெயர்ப்புகள் தமிழுக்கு வந்திருக்கின்றன. ஒடியா, அஸ்ஸாமி ஆகிய மொழிகளிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் மொழி பெயர்ப்புகள் வரவில்லை” என்கிற பெருமாள் முருகனின் கருத்து உண்மையே. புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பிரிவில் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர் கி. நாச்சிமுத்து தொடங்கி தற்போது அங்குள்ள பேராசிரியர்கள் இரா. தாமோதரன் (இரா. அறவேந்தன்), ந. சந்திரசேகரன் வரையிலான பேராசிரியர்களின் தொடர்முயற்சியால், அப் பல்கலைக்கழகத்தில், இளம் முனைவர் - முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளும் அனைத்து ஆய்வாளர்களையும் தமிழ், இந்திய, உலகமொழி நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள நெறிப்படுத்தி வருகின்றனர். அதனால் அங்கு இந்தியா உள்ளிட்ட உலகமொழிப் படைப்புகளின் அறிமுகத்தை எளிதில் அறிய ஏதுவாகின்றது. அந்தவகையில் ஒடியா, அசாமியைவிட வங்க மொழியிலிருந்துதான் மிகுதியான மொழிபெயர்ப்புகள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. மேலும் வங்காளி, அசாமியின் இலக்கிய வரலாறுகள்கூட மொழிபெயர்ப்பாகித் தமிழில் சாகித்திய அகாதெமி நிறுவனத்தில் கிடைக்கப்பெறுகின்றன. ஒடியாவிற்கு இத்தகைய இலக்கிய வரலாறு இல்லை. இக்குறையை சாகித்திய அகாதெமி நிறுவனம் மிக விரைவில் போக்கும் எனக் கருதுகிறேன்.
ரிஷிகேஷ் பாண்டாவின் இருநூல்களை ஆங்கிலம் வழி மொழிபெயர்த்த தமிழ்நாடன், ராஜ்ஜா பெயர்களைக் குறிப்பிட்ட பெ.மு. இன்னும் சில நூல்கள் நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அகாதெமி ஆகியவற்றின் வெளியீடுகளாக வந்திருக்கலாம் எனக் கருதுவதும் சரியே.
தமிழில் சாகித்திய அகாதெமி விருது, ஞானபீட விருது பெற்ற ஒடியமொழி நூல்களைத்தான் தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் மிகுதியாக மொழிபெயர்த்துள்ளனரே தவிர, ஏனைய மொழிபெயர்ப்புகளை நேரடியாக இல்லாமல் ஆங்கில, இந்தி மொழிகளின் வாயிலாகத்தான் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றில் இலக்கிய நூல்கள் குறைவாகவும் பிறதுறைகள் அதனினும் குறைவாகவும் காணப்பெறுகின்றன. தமிழில் கிடைக்கப்பெறுவது புதினங்கள் ஆறு, சிறுகதைத் தொகுப்புகள் ஐந்து, கவிதைத் தொகுப்புகள் நான்கு,நாடகம் 1, வாழ்க்கை வரலாறு 1 என மொத்தம் பதினேழு நூல்களேயாகும். இந்நூல்களை சாகித்திய அகாதெமி நிறுவனமும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனமும் வெளியிட்டுள்ளன. ஒடியமொழியிலிருந்து தமிழ்மொழிக்கு மொழிபெயர்ப்பான ஆறு புதினங்களில் மண் பொம்மை, காணி நிலம், யந்திர வாகனன் புதினங்களை சாகித்திய அகாதெமி நிறுவனமும் உயிரற்ற நிலா, நீலமலை, சோறு, தண்ணீர் ஆகிய புதினங்களை நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனமும் வெளியிட்டுள்ளன.
5 சிறுகதைத் தொகுப்புகளாவன: 1. மனோஜ் தாஸீன் மர்மக் குல்லாய் (1950,1972) – ராஜ்ஜா (மொ. ஆ) 2. ரிஷிகேஷ் பண்டாவின் ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் (1994) - தமிழ் நாடன் (மொ. ஆ) 3. கோபிநாத் மொஹாந்தியின் உள்ளம் நெகிழும் ஒடியக் கதைகள் (2012) - ஆனைவாரி ஆனந்தன் (மொ. ஆ) 4. சந்திரசேகர் ரத்தின் கனவுகள் (2012) - இரா. குமரவேலன் (மொ. ஆ) 5. ஜே. பி. தாஸீன் உயில் மற்றும் பிற கதைகள் (2014) - சுப்ரபாரதி மணியன் (மொ. ஆ).
கவிதைத் தொகுப்புகளாவன: 1. சீதாகாந்த மகாபத்ராவின் மகாபத்ரா கவிதைகள் (1994) - அசோகமித்திரன் (மொ. ஆ); ரங்கநாயகி மகாபத்ரா மற்றும் ரே. பாலகிருஷ்ணன் (மொ. ஆ) 2. சீதாகாந்த மஹாபாத்ராவின் ஒலியின் வானம் (2001) - விஜய பிரசாத் மகாபாத்ரா (மொ. ஆ); விஜயா தாஸ் (மொ. ஆ) 3. மனோரமா பிஷ்வால் மகாபத்ராவின் மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் (2003) - இந்திரன் (மொ. ஆ) 4. பிரதீபா சத்பதியின் வசீகரிக்கும் தூசி (2010) - மதுமிதா (மொ. ஆ).
ரிஷிகேஷ் பாண்டாவின் நானே கடவுள் நானே மிருகம் (2012) – ராஜ்ஜா (மொ. ஆ). வாழ்க்கை வரலாற்று நூலான: மாயாதர் மான்சின்ஹாவின் இந்திய இலக்கியச் சிற்பிகள் பக்கீர் மோகன் சேனாபதி (1985) – க. சி. கமலையா (மொ. ஆ).
மேலும் ஆய்வேட்டில், மேற்குறிப்பிடப்பெற்ற புதினங்கள் திறனாய்வு நோக்கில் விளக்கப் பெற்றுள்ளன. மண் பொம்மை புதினத்தை இராமாயணத்தோடும், காணி நிலம் புதினத்தைப் பாரதியின் பாஞ்சாலி சபதத்தோடும் ஒப்பிட்டு விளக்கப்பெற்றுள்ளன.
தமிழில் கிடைக்கப்பெறுகின்ற ஒடிய நூல்கள் ஏன் நேரடியாக ஒடியமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்படவில்லை?
இதற்கு முக்கியக் காரணமாய் இருப்பது ஒடிய மொழியில் புலமையில்லாமல் இருப்பதேயாகும். மேலும் ஒடியமொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், ஓரளவிற்காவது வங்காளி, இந்தியைக் கற்றிருக்க வேண்டும். அங்குள்ள பல்வேறு தொல்குடி, ஆதிவாசி மக்களின் பண்பாடு சார்ந்த வாழ்வியலை அறிந்திருக்க வேண்டும். அதில் சிரமங்கள் சில இருப்பதாலேயே நேரடியாக மொழிபெயர்க்கப்பெறவில்லை எனக் கருதுகின்றேன்.
பக்கீர் மோகன் சேனாபதி
தமிழ்நாடு, ஒடிசா அரசுகளும் தத்தமக்குரிய ஒரு பல்கலைக்கழகத்திலாவது இம்மொழி இருக்கைகளை நிறுவுவதற்கான அல்லது மொழிச் சங்கங்களில் இம்மொழிகளைப் பயில்வதற்கான வழிவகைகளை அமைத்தளிக்க முன்வரவேண்டும்.
ஒடியாவிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஒடியாவுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பற்றிய கணக்கெடுப்பு, ஆய்வு என எவையும் இருப்பதாகத் தெரியவில்லை.
புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மேலேகுறிப்பிடப்பெற்றுள்ள இரு ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. என் இளம்முனைவர் பட்ட ஆய்வில், 1959 இலிருந்து 2014 வரை அதாவது 55 ஆண்டுகளில் பதினேழு நூல்களே கிடைக்கப்பெற்றிருப்பதை மேலே சுட்டிக்காட்டியுள்ளேன். மேலும் தனிநூல் - தொகுப்பு நூல்கள், சில கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளுடன், பிற இதழ்களில் தனித்தனியாக வெளிவந்தவற்றையும் வகைமை அடிப்படையில் நூலடைவு செய்துள்ளேன். இதன்பிறகு, கிடைக்கப்பெறும் நூல்களைத் தொகுக்கும் பணியில் முயன்று வருகின்றேன். தமிழிலிருந்து ஒடியாவுக்கு மொழிபெயர்க்கப்பெற்ற இலக்கியங்கள் பற்றிய கணக்கெடுப்பும் ஆய்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இனி அவற்றைத் தொகுக்கவும் ஆராயவும் முற்படுகின்றேன்.
ஒடிசாவுக்கும் தமிழகத்திற்கும் ஏற்பட்டுள்ள உறவுகள் வாணிகம், போர், அரசியல், மதம், மொழி முதலிய தொடர்புகளினால் ஏற்பட்டுள்ளன. மேலும் ஒருவர் இருமொழிகளையும் கற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் குறித்து மேலே சிறிது குறிப்பிட்டேன். ஒடியமொழியைக் கற்றுக்கொள்வதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறேன்.
பக்கீர் மோகன் சேனாபதியின் ‘காணிநிலம்’ புதினத்தைத் தமிழ்மொழியின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திர’ (1879)த்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென பெ.மு. ஆவல் கொண்டிருக்கிறார்.
ஒப்பிட்டுப் பார்க்கலாம்; ஆனால் ஒற்றுமைகளைவிட வேற்றுமைகளே மிகுதியாக நிலவும் எனக் கருதுகிறேன். ‘காணிநிலம்’ பெரும்கொடுமைகளால் சுரண்டப்பெற்று, நிலம் இழந்த உழைக்கும் வர்க்கத்தினர் அவ்வாதிக்க அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து நிலத்தை வென்ற விடுதலையை நிலைநிறுத்துகின்றது. ஆனால் ‘பிரதாப முதலியார் சரித்திரமோ’ நிலபுலமுள்ள ஜமீனின் அரசு அதிகார வரலாற்றினை முன்னிறுத்துகின்றது.
பக்கீர் மோகன் சேனாபதியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் க. சி. கமலையா 1985 இல் மொழிபெயர்ப்புச் செய்ததை சாகித்திய அகாதெமி நிறுவனம் இந்திய இலக்கியச் சிற்பிகள் பக்கீர் மோகன் சேனாபதி எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. அந்நூல் வெளியிடப்பெற்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளதால், அந்நூல் கிடைப்பதற்கு அரிதாகவுள்ளது. அந்நூலை மீண்டும் அதே நிறுவனம் மறுபதிப்பாக வெளியிட்டால் வாசகர்கள் கையில் தவழும் என்பதில் ஐயமில்லை.