கேட்கப்படுகிற மெல்லிய குரல்
கருவளையும் கையும்
கு.ப.ரா கவிதைகள்
பதிப்பாசிரியர்: பெருமாள்முருகன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. சாலை
நாகர்கோவில்- 1
பக். 104 ரூ. 130
குரல் தணிவும் சொற்களின் இடையே உள்ள மௌனமும் இயல்பாக வாய்க்கப்பெற்ற கு.ப.ரா.வின் சிறுகதைகள்மீது பெரிய ஈர்ப்பு இன்னும் இருக்கிறது. எனக்கு அதற்கப்பால் அவருடைய ஆளுமையின்மீது மென்மையும் பிடிவாதமும் கலந்த அவரது உருவம் ஆழ்மனத்தில் உறைந்திருக்கிறது. தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, சிட்டி முதலானவர்களின் பதிவுகள் கட்டமைத்த அகச்சித்திரம் அது. அதே சமயம் உதிரியாகப் படித்திருந்த அவரது கவிதைகளில் மனம் லயிக்கவில்லை. ‘அவருடைய கவிதையில் வாசகனைத் தீண்டும் நுண்தருணம் குறைவானதுதான்,’ என்ற பாலைநிலவனின் கருத்து உடன்பாடாகத் தோன்றியது. ஆனால் இன்றைய கவிதைவெளியை 1930, 40களில் தேடும் அபத்தமும் புரிகிறது. எது எவ்வாறாயினும் புதுக் கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் என்ற அளவில் அவருடைய வரலாற்று ஸ்தானத்தை மறுக்க முடியாது. அதை உறுதி செய்கிறது, பெருமாள் முருகன் பதிப்பித்துள்ள ‘கருவளையும் கையும்-கு.ப.ரா. கவிதைகள்’ என்னும் இந்நூல்.
“கருவளையும் கையும்’ என்பதைத் தலைப்பாகக் கொண்ட வசன காவிய நூல் அவர் காலத்திலேயே வெளிவரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார் கு.ப.ரா” என்று நினைவு கூர்கிறார் கரிச்சான்குஞ்சு. ‘அது அப்படி வெளியாகியிருந்தால் புதுக்கவிதை வரலாற்றிலே அதுவே முதல் நூலாக இடம் பெற்றிருக்கும்’ என்று அவதானிக்கிறார் பெருமாள் முருகன். கு.ப.ரா. மறைந்து 78 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அது சாத்தியமாகியிருக்கிறது. அதை பெருமாள் முருகன் சாத்தியப்படுத்தி இருக்கிறார். ‘‘நவீன கவிதை முன்னோடி ஒருவரின் கவிதைகள் எந்த வகையில் வெளியாக வேண்டுமோ, அந்த வகையில் செம்பதிப்பாக இந்த நூல் உருவாகியுள்ளது’’ என்ற பின்னட்டைக் குறிப்பு சரியானதே. கு.ப.ராவின் 31 கவிதைகளும், அவற்றின் மாற்று வடிவங்களுடன் கால வரிசைப்படி இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பெருமாள் முருகனின் பதிப்புரை, ‘இசைக்கு மிஞ்சின இன்பம்’ என்ற அவரது விரிவான ஆய்வுரை, 1943ஆம் ஆண்டில் வெளியான கு.ப.ரா.வின் ‘வசன கவிதை’ கட்டுரை, பின் அவரது 31கவிதைகள் மாற்றுப்பிரதிகளுடன், பிறகு பின்னிணைப்புகள் என்று பூரணமாக வந்துள்ளது இந்தத் தொகுப்பு.
ஒருவகையில் கு.ப.ராவின் கவிதை ரசனையானது. ஷெல்லி, கீட்ஸ் முதலான கற்பனைவாதக் கவிஞர்கள், காளிதாசர், பவபூதி போன்ற செவ்வியல் கவிஞர்கள், வால்ட் விட்மன், ரவீந்திரநாத் தாகூர், பாரதியார் போன்ற அவருடைய அண்மைக் காலக் கவிஞர்கள் என இப்படிப் பலரால் உருவாக்கப்பட்டது.
Magic casements, opening on the foam
Of perilous seas, in faery lands forlorn
என்ற கீட்ஸின் Ode to a Nightingale கவிதை வரியைத் தம்முடைய மெல்லிய குரலில் கு.ப.ரா. இசைத்ததைக் கேட்ட சுவையனுபவத்தை சிட்டி பதிவு செய்திருக்கிறார்.
சங்க இலக்கியப் பரிச்சயம் கு.ப.ராவுக்கு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ‘சுடர்த் தொடீஇ கேளாய்’ என்று தொடங்கும் கபிலரின் கலித் தொகைப் பாடலை அவருக்குச் சொல்லி வந்தபோது,
கடைக்கணால் கொல்வான் போல் நோக்கி
நகைக் கூட்டம் செய்தான். அக் கள்வன் மகன்
என்ற முடிவு வரியையும், ‘அந்தத் திருட்டுப்பயல் சிரிப்பிலேயே என்னைக் கூடி விட்டான்’ என்ற அதன் பொழிப்புரையையும் சொன்னதும் ‘ஆஹா’ என்று கு.ப.ரா. அதை அனுபவித்ததாகப் பதிவு செய்கிறார் கரிச்சான் குஞ்சு.
மற்றபடி பாரதியாரின் கவிதைகளில் ஈடுபாடும், அவருடைய ‘காட்சி’ வசன கவிதை தந்த உந்துதலும், யாப்பிலிருந்து விலகிச் சில சோதனை முயற்சிகளைச் செய்து பார்க்கும் வேகத்தை கு.ப.ரா.வுக்குக் கொடுத்திருக்கின்றன. வசன கவிதை குறித்த, இன்று எளிமையாகத் தோன்றக்கூடிய சில கருத்துகளையும் அவர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
‘கவிதை என்ற வஸ்து நேரசை நிரையசையில் மட்டும் இல்லை’ ‘செவிநுகர் கவிதை என்று கம்பன் சொன்னதைத் திரித்துச் செவி நுகர்வது தான் கவிதை என்று கொள்வது தவறு.’ ‘வசன கவிதையைச் செவி நுகருமா என்றால் நுகரும்’, ‘வசன கவிதைக்கு என்று ஒரு ரிதும் உண்டு’, ‘வசனகவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம்’
இப்படிச் சில அபிப்பிராயங்களை 1943ல் கலாமோகினி இதழில் ‘வசனகவிதை’ கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கு.ப.ரா. இதுபோல் இன்னொரு முக்கியமான பதிவு 1959 சரஸ்வதி ஆண்டு மலரில் க.நா.சு.வின் கவிதை பற்றிய கட்டுரை. இன்று கவிஞர்கள் சுதந்திரமாக இயங்குகிற கவிதை நிலப்பரப்பை கு.ப.ரா.வும் ந. பிச்சமூர்த்தியும் உருவாக்கிக் கொடுத்ததே முக்கியமானது. அவர்களின் கவிதை இன்றைய வாசகனுக்கு உவப்பாக இல்லையென்பது வேறு விஷயம்.
கு.ப.ரா.வே தம் கவிதையில் குறிப்பிடுகிற ‘துன்பம் கசியும் இன்பம்’ ஒரு வகையான Romantic Agony - என்பதே அவரது பாடுபொருள். காமத்தின் விளிம்பில் நிற்கும் காதல் அவரது களன். இவற்றைச் சாரமாகக் கொண்டு ‘கருவளையும் கையும்’ என்ற தலைப்பில் மணிக்கொடியில் 18.11.1934இல் தொடங்கி 13.01.1935 வரை எட்டுக் கவிதைகளைத் தொடராக எழுதியுள்ளார் கு.ப.ரா. பின்னர் அதே தலைப்பில் ஒரு கவிதை 1944 கிராம ஊழியன் மலரில் வெளியாகியுள்ளது. ஆகக் ‘கருவளையும் கையும்’ தலைப்பில் ஒன்பது கவிதைகள் எழுதியுள்ளார் என்று குறிப்பிடும் பெருமாள் முருகன் அவற்றை அந்தக் கால வரிசையில் முதன்முறையாகப் பதிப்பித்திருக்கிறார். இதனால் இந்தக் கவிதைச் சரம் வாசகரின் ஒருமுகக் கவனத்தைப் பெறுகிறது. வாசிப்பு அனுபவமும் முழுமை அடைகிறது.
ஆங்கிலக் கவிஞர் ஜான் டன்னின் காதல் கவிதைகளைப் போல வசீகரமான தொடக்க வரிகள் கொண்டவை இந்தக் கவிதைகள்.
‘உன்னை ஏன் நான் இப்படிப் போற்றுகிறேன் கண்களாலும் கைகளாலும்?’
‘என் ஊக்கம் உன் உயிரில் பற்பதிவு கொண்டு இனிமையைச் சுவைக்கிறது’
‘உன் மன எழுச்சி என்ன அவ்வளவு மட்டற்றதா?’
என்று அமையும் தொடக்க வரிகள், தூண்டில்போல் அமைந்து கவிதையைத் தொடர்ந்து செல்ல வாசகனை அழைக்கின்றன.
‘கருவளையும் கையும்’ மூன்றாவது கவிதையில் சில வரிகளை நரம்புகளால்தான் வாசிக்க முடியும்.
இந்த ஆகர்ஷணத்துக்கு மேற்போன ஒரு சக்தி,
இந்த மாயை நிழலுக்கு மிஞ்சின ஒரு மதுவனம்
இருக்கிறதா?
இசைக்கு மிஞ்சின ஒரு இன்பம்?
இருக்கிறது!
கிளையை மீறின கனிபோன்ற ஒரு ருசி;
தந்தியை மீறி மிதக்கும்
கமகம் போன்ற ஒரு நாதம்;
பார்வையை மீறிப் பறக்கும்
பட்சியைப் போன்ற ஒரு உண்மை;
சந்தனத்திலிருந்து கிளம்பி
வாசனை விசிறும் ஒரு உணர்ச்சி;
உடலை மீறிப் போகும்
உயிரைப் போன்ற ஒரு நிலை
இந்தக் கவிதை தரும் கிளர்ச்சி விசித்திரமானது. ‘சதையை மீறியது’ என்ற தலைப்பில் இந்தக் கவிதை ‘சிறிது வெளிச்சம்’ தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது. அதைப் படித்தபோது பெற்ற அகக்கிளர்ச்சியை இன்னும் மறக்க முடியவில்லை. ‘கிளையை மீறிய கனிபோன்ற ஒரு ருசி’ என்ற வரி, ‘விலக்கப்பட்ட கனிக்குத் தனித்த ருசி ஒன்று உண்டு’ என்ற எமிலி டிக்கின்ஸன் கவிதை வரியை நினைக்கவைத்தது.
கு.ப.ரா. கவிதைகளின் தலைப்புகள் மறுபிரசுரத்தில் மாற்றம் பெற்றிருக்கின்றன. ஒரு கவிதைத் தலைப்பு மாற்றம் பற்றி ஒரு ஊகம் செய்ய முடிந்தது - ‘பொன் ஏர்’ என்ற தலைப்பில் கு.ப.ரா.வின் கவிதை பாரத மணியில் 1941ஆம் ஆண்டில் பிரசுரமாகியுள்ளது. அதே கவிதை கு.ப.ரா.வின் மறைவுக்குப்பின் 1944ஆம் ஆண்டில் கிராம ஊழியன் இதழிலும், 1969ம் ஆண்டில் ‘சிறிது வெளிச்சம்’ தொகுப்பிலும் ‘ஏர் புதிதா?’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ந. பிச்சமூர்த்தியும் ‘பொன் ஏர்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி இருப்பதைப் படிக்க நேர்ந்தது. அதன் பிரசுர ஆண்டு விவரம் தெரியவில்லை. கு.ப.ரா. கவிதையின் தலைப்பு மாற்றத்துக்குப் பிச்சமூர்த்தி அதே தலைப்பில் கவிதை எழுதியிருந்தது காரணமாக இருக்கலாமோ என்று தோன்றியது. அந்த இரண்டு கவிதைகளையும் அடுத்தடுத்துப் படித்தபோது, இன்றையத் தமிழ்க் கவிதை வந்துள்ள தொலைவை உணர முடிந்தது.
முதலில் கு.ப.ரா.வின் ‘பொன் ஏர்’ (ஏர்புதிதா?) கவிதை :
முதல் மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகிவிட்டது.
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ நண்பா!
காளைகளை ஒட்டிக் கடுகிச் செல், முன்பு!
பொன் ஏர் தொழுது புலன் வழிபட்டு
மாட்டைப் பூட்டிக்
காட்டைக் கீறுவோம்
ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது
காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்.
கை புதிதா, கார் புதிதா? இல்லை.
நாள்தான் புதிது, நட்சத்திரம் புதிது
ஊக்கம் புதிது, உரம் புதிது!
மாட்டைத் தூண்டிக் கொழுவை அழுத்து.
மண் புரளும், மழை பொழியும்
நிலம் சிலிர்க்கும்; பிறகு நாற்றும் நிமிரும்
எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்;
கவலையில்லை !
கிழக்கு வெளுத்தது.
பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில்
நல்ல வேளையில் நாட்டுவோம் கொழுவை.
ந. பிச்சமூர்த்தியின் ‘பொன் ஏர்’ கவிதை இவ்வாறு அமைகிறது:
காலையில் ரவி வந்து
படம் விரித்து ஆடினான்
கரிச்சான்கள் குரல்கொண்டு
ஒளியைத் துதித்தன
நாளொன்று பூத்ததும்
பொன் ஏர் வந்து நின்றது.
நுகத்தடி ஏற்றோம்.
பொன் ஏரைப் பூட்டி
எங்கெங்கோ கீறினோம்.
ரவியையும் மலரையும்
மீனையும் மனத்தையும்
இசையையும் ஒளியையும்
பொன்னையும் பெண்ணையும்
எருவாக்கிப் போட்டோம்
தழையுடன் உழுதோம
ஸ்ரீதேவி கண்டோம்
கண்கண்ட கோலத்தைக்
களவுபோல் ருசித்தோம்.
தேவியை வணங்கி
முடிகீழே தழைத் தோம்
மலர்ப்பாதம் தன்னில்
மலரிட்டுத் தொழுதோம்.
சுரம் கண்ட வேகத்தில்
அள்ளி விதைத்தோம்
அழகின் கதிர்கள் அறுவடையாயின;
அள்ளிப் புசித்தோம்.
வழக்கமான பாடுபொருள்தான் என்றாலும், வடிவக் கச்சிதம் கு.ப.ரா.விடமும், பாரதியாரின் சக்தி வணக்க வேகம் பிச்சமூர்த்தியிடமும் இருப்பதைக் காண்கிறோம்.
உழவு, அறுவடை தாண்டிப் பிறிதொன்றை உணர்த்த முயல்கிறார்கள் இருவரும். “கு.ப.ரா.வின் பொன் ஏர் கவிதை புரட்சியைப் பேசுவது போல் அர்த்தமாகிறது” என்ற பெருமாள் முருகன் குறிப்பு, சற்று எட்டிப் பொருள் கொள்வது போல் தோன்றுகிறது.
மரபில் நின்றுகொண்டு மரபை மீறியவர் கு.ப.ரா. ஆனால் அவராலும் மீற முடியாத மரபின் அழுத்தங்கள் சில இருக்கத்தான் செய்தன. நாட்டுப்புறப் பாடல் சாயல் படிந்த ‘ராக்கி நெனப்பு’ கவிதையின் குரல், தலித் பெண்ணுடல் மீதான உயர்சாதி ஆணுடைய குரல் தான் என்று சரியாகவே அடையாளப்படுத்தி இருக்கிறார் பாலை நிலவன். கு.ப.ரா.வைப் புனிதப் பசுவாகக் கருதாத நவீன வாசக மனம் அவரை நளினத்துடனும் மருக்களுடனும் சேர்த்தே ஏற்றுக்கொள்கிறது.
இத்தொகுப்பின் பதிப்பாசிரியராகப் பெருமாள் முருகனின் பொறுப்புணர்ச்சியைக் குறிப்பிட வேண்டும். ‘வாழ்க்கை’ என்னும் கு.ப.ரா. கவிதை பாரத தேவி இதழில் 1939ஆம் ஆண்டு வெளியானபோது ‘ஃபிராங்க் டவுண்ஷெண்ட் என்ற ஆங்கிலக் கவியின் மூலத்திலிருந்து கு.ப.ரா’ என்று கவிதையின் முகப்பிலேயே அடைப்புக் குறிக்குள் குறிக்கப்பட்டிருந்தது. கு.ப.ரா.வின் மறைவுக்குப் பின் 1945இல் கிராம ஊழியனில் அந்தக் கவிதை மறுபிரசுரமானபோது, மொழிபெயர்ப்பு என்று சொல்வதற்கான குறிப்பு விடப்பட்டு கு.ப.ரா. எழுதிய கவிதையாகவே அச்சிடப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து ‘சிறிது வெளிச்சம்’ தொகுப்பிலும் கு.ப.ரா. கவிதையாகவே இடம்பெற்றது. கு.ப.ரா.வின் முக்கியமான கவிதையாக இது கொள்ளப்பட்டுப் பரவலாகவும் பேசப்பட்டு வந்துள்ளது. இந்த வரலாற்றுப் பிழையை முதலில் சுட்டிக் காட்டியவர் ய. மணிகண்டன். அதை நேர்செய்து டவுன்ஷெண்ட் கவிதையின் மூல வடிவத்தையும் சேர்த்துப் பிரசுரித்து, பின்னிணைப்பில் ‘கவிதைகள்: வெளியீட்டு விவரம்’ என்ற பகுதியில் மற்றத் தகவல்களையும் இணைத் துள்ளார் பெருமாள் முருகன். சிறு பிழை ஒன்று தரவாகி, வரலாற்றுத் தவறாகி விடக்கூடாது என்பதற்காக அவர் எடுத்துக் கொண்டுள்ள சிரத்தைக்கு இது ஒரு சான்று. ஒரு சிறு பதிப்புவேண்டுகிற உழைப்பையும் கவனத்தையும் நம்மால் உணர முடிகிறது.
“கு.ப.ரா.வின் மெல்லிய குரல் கேட்கப்படாமலே போகக் கூடும்” என்ற அச்சத்தைத் தெரிவிக்கிறார் அசோகமித்திரன். ஆனால் கு.ப.ரா.வின் குரல் காலம் தாழ்த்தியேனும் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. நான் அறிந்த அளவில், ‘வாசகர் வட்டம்’ 1969இல் கொண்டுவந்த ‘சிறிது வெளிச்சம்’ தொகுப்பு; 2004இல் பெருமாள் முருகன் தொகுப்பாசிரியராகக் கொணர்ந்த ‘உடைந்த மனோரதங்கள் கு.ப.ரா. படைப்புலகம்’ என்ற ‘காலச்சுவடு’ வெளியீட்டு நூல்; 2014இல் அவர் பதிப்பித்த ‘கு.ப.ரா. சிறுகதைகள்’; இப்பொழுது அவர் பதிப்பாசிரியராகக் ‘காலச்சுவடு’ பதிப்பகம் மூலம் கொண்டுவந்துள்ள ‘கருவளையும் கையும் - கு.ப.ரா. கவிதைகள்’ என்ற நூல்; இவை யாவும் கு.ப.ரா.வின் மெல்லிய குரலைப் பொறுப்புடன் பதிவுசெய்திருக்கின்றன. கு.ப.ரா.வின் கட்டுரைகளையும் அவர் தொகுத்துவிட்டால், கு.ப.ரா.வின் முழு ஆளுமையும் நவீன வாசகருக்குத் தெரியக் கிடைக்கும்.
மதுரையில் 3.9.2022 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.