இதழ் 300
இது காலச்சுவடின் 300ஆவது இதழ். மாற்று இதழ் ஒன்று இந்த எண்ணிக்கையை எட்டுவது தமிழ்ச் சூழலில் முன்பு காணாதது; எண்ணிக்கையில் மட்டுமன்றிக் காலத் தொடர்ச்சியிலும் இந்த இதழுக்கு ஒப்பீடு இல்லை. காலச்சுவடு இதழின் பயணம் 36 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது; 30 ஆண்டுகளாக இடையறாது வெளிவருகிறது.
தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்துடனும் படைப்பு வெளியை விரிவுபடுத்தும் ஆர்வத்துடனும் சுந்தர ராமசாமி 1988இல் காலாண்டு இதழாகக் காலச்சுவடு இதழைத் தொடங்கினார். படைப்பு, விமர்சனம், வரலாறு, தத்துவம், கலைகள், சமூகம் போன்ற துறை சார்ந்த எழுத்துக்களுக்கான களமாக இதழை முன்னிறுத்தினார். எனினும் அன்று தமிழ்ச் சூழலில் நிலவிய பொதுப்போக்குக் காரணமாக மேலான படைப்புகளுக்கான தீவிர இதழாகவே காலச்சுவடு கவனம் பெற்றது.
காலச்சுவடின் முதற்கட்டப் பயணம் எட்டு இதழ்கள், 1992இல் ஒரு மலர் என்பதோடு நிறைவுபெற்றது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 1994 ஏப்ரலில் இதழ் புத்தாக்கம் பெற்றது. காலாண்டு இதழாகத் தொடங்கிய இதழ் தனது நோக்கிலும் போக்கிலும் மாற்றங்களைக் கொண்டிருந்தது. சீரிய இலக்கிய இதழ் என்ற நிலையிலிருந்து தீவிர மாற்று இதழ் என்ற பரப்புக்கு விரிந்தது. 2000இல் இருந்து இருமாத இதழாகவும், 2004முதல் மாத இதழாகவும் வெளிவரத் தொடங்கியது.
தமிழ்ப் பண்பாட்டுப் பின்புலத்தில் ஓர் இதழ் இத்தனை மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டது அரிது. முப்பத்தாறு ஆண்டுகளையும் 300 இதழ்களையும் கடந்திருக்கும் தருணத்தில் காலச்சுவடு இதழின் பங்களிப்பு என்னவென்று ஓரளவு அலசிப் பார்க்கலாம்.
காலச்சுவடை முதன்மையாக ஒரு மாற்று இதழாகவே வரையறுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் கருத்தாக்கங்களையும் படைப்புகளையும் விவாதங்களையும் மட்டுமே வெளியிடும் இதழாக இல்லாமல் பல்வேறு கருத்தாக்கங்களையும் நிலைப்பாடுகளையும் படைப்பு முறைகளையும் கொண்டவர்களுக்கான மேடையாகச் செயலாற்றியது, செயலாற்றுகிறது.
வெவ்வேறு சிந்தனை முறைமைகளுக்கும் நவீன படைப்புகளுக்கும் களமாகத் திகழும் அதே வேளையில் தனக்கே உரித்தான சில புதிய திறப்புகளையும் காலச்சுவடு உருவாக்கியுள்ளது. அவற்றை இந்த இதழின் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.
கருத்துரிமைசார்ந்த செயல்பாடுகளிலும் ஆக்கங்களிலும் காலச்சுவடு இதழ் செய்திருக்கும் பங்களிப்பிற்கு நிகராக வேறு ஒன்றைச் சுட்டிக்காட்டுவது கடினம். இந்த இதழ் வரித்துக்கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கு ஆதரவான கருத்துகளுக்கு மட்டுமல்ல அதற்கு நேரெதிரான கருத்துகளுக்கும் தொடர்ந்து இடமளித்திருக்கிறது. ‘பீப் சாங்’குக்கு எதிராகப் பெரும் கொந்தளிப்பு நிலவிக் கண்டனங்கள் வெடித்தபோது அப்படியொரு வெளிப்பாட்டுக்கு உரிமையுண்டு, ஜனநாயக அமைப்பில் எந்தக் கருத்துக்கும் விவாதத்தில் இடமுண்டு என்ற கண்ணோட்டத்தில் காலச்சுவடு கருத்துரிமைக்கு ஆதரவாக நிலைகொண்டது.
தமிழகத்தின் கல்விமுறை பற்றிய அக்கறையைக் காலச்சுவடு தனது பெரும்பாலான இதழ்களில் வெளிப்படுத்தியுள்ளது. தலையங்கங்கள், கண்ணோட்டங்கள், கட்டுரைகள், துறை சார்ந்தவர்களின் நேர்காணல்கள் ஆகியவற்றின் வழியாகக் கல்வி தொடர்பான சிந்தனையையும் விவாதத்தையும் முன்னெடுத்து வந்திருக்கிறது. அநேகமாகத் தமிழில் இன்று வெளியாகும் வணிக இதழ்கள், சிற்றிதழ்கள் உட்பட எந்த இதழும் இந்த அளவுக்குக் கல்விக்கு முதன்மை அளித்ததில்லை. விரிவானதும் பரவலானதுமான கருத்துச் செயல்பாட்டை மேற்கொண்டதுமில்லை.
காலச்சுவடு இதழில் வெளிவந்த நேர்காணல்கள் பல்வேறு துறை சேர்ந்த ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தின. எளிய மனிதர் முதல் மிகுந்த புகழ்பெற்றவர்வரை பலரது விரிவான நேர்காணல்கள் இதழின் வலுவான பங்களிப்பாக இருந்து வருகின்றன. முத்தம்மாளின் எளிய உரையாடல் முதல் ரொமிலா தாப்பரின் அறிவார்ந்த வெளிப்பாடுவரை நேர்காணல்களின் பட்டியலில் அடங்கும்.
தமிழ்ச் சிந்தனையை முதன்மைப்படுத்தியும் விரிவுபடுத்தியும் காலச்சுவடு வெளியிட்ட எழுத்துக்கள் உலகம் தழுவியவை. தமிழ்ச் சிந்தனை மரபை உலகச் சிந்தனை மரபுடனும் உலகச் சிந்தனை மரபைத் தமிழ்ச் சிந்தனை மரபுடனும் பிணைத்தவை. ஒருவகையில் முன்னோடித்தன்மை வாய்ந்தவை. உம்பர்த்தோ ஈகோவின் மொழிபெயர்ப்புக் கட்டுரை ஒன்று வாசகர்களால் கொண்டாடப்பட்ட விதம் இந்தப் பிணைப்புக்குச் சான்றாகும்.
சூழலியல் தொடர்பான காலச்சுவடின் பங்களிப்பு மிக நவீனமானது, மிக ஆதாரமானது. நதிநீர் மேலாண்மை தொடர்பாகக் காலச்சுவடு வெளியிட்ட சிறப்புப் பகுதி செலுத்திய பாதிப்பு நிகரற்றது. வணிக இதழாளர்களும் சூழலியல் செயற்பாட்டாளர்களும் கையேடாகக் கருதிப் பின்பற்றுமளவுக்கு அந்தக் கட்டுரை அமைந்தது.
மாற்றுச் சிந்தனைக்கும் செயலுக்குமான இதழ்களாக வெளிவந்த பலவும் நெடுங்காலம் தொடர முடியாமல் போயிருக்கின்றன. அத்தகைய சூழலில் காலச்சுவடு 300ஆவது இதழை எட்டியிருப்பது சிறப்பானது, பெருமிதத்திற்குரியது. இந்தச் சிறப்புக்கு வாசகர்களும் படைப்பாளர்களும் பல்வேறு பங்காற்றுநர்களும் உரியவர்கள்.
காலச்சுவடு இதழின் பயணம் மேலும் தொடரும். மாற்றத்தை விழையும் எல்லா மனங்களும் மாற்றுகளை உருவாக்கும் எல்லாத் கரங்களும் மேலும் துணைபுரியும். இந்த மகத்தான நம்பிக்கையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறோம்.