ஒரு நாள் போதுமா?
டிஸ்கவரி புக் பேலஸும் பரிசல் புத்தக நிலையமும் இணைந்து நவம்பர் 2ஆம் நாள் சென்னையில் நடத்திய ‘அரவிந்தன்-60’ நிகழ்ச்சியில் பேசியவர்கள் அரவிந்தனின் படைப்பு, இதழியல், மொழியாக்கம், நட்பு முதலான பரிமாணங்களை நினைவுகூர்ந்தார்கள். “அரவிந்தனுக்கு வயது 60 ஆகிவிட்டது என்று கேட்டபோது வியப்பாக இருந்தது. பின்னாளில் அவர் இதை மறுத்துவிடக் கூடாது இல்லையா, அதற்குத்தான் இந்த நிகழ்வு,” என்று சொல்லிக் கூட்டத்தைக் கலகலப்பாக்கினார் ‘பரிசல்’ சிவ. செந்தில்நாதன்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் இதழாளர் ச. கோபாலகிருஷ்ணன். இலக்கியம், அரசியல், கிரிக்கெட், திரைப்படம், சமூகம் சார்ந்து 1990 முதல் எழுதிவருகிறார் அரவிந்தன். நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட வகைமைகளில் இதுகாறும் 27 நூல்கள் வெளியாகியுள்ளன என்ற அறிமுகவுரையோடு அவர் கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
‘அரவிந்தன் என் நண்பர்’ என்கிற தலைப்பில் முதல் உரையை நிகழ்த்தியவர் ஷங்கர்ராமசுப்பிரமணியன். அரவிந்தனுடன் 30 வருடத்துக்கும் மேலான தனது நட்பை ஒரு கதையைப் போல விரித்துரைத்தார். சுந்தர ராமசாமி நாகர்கோவில் பாம்பன் விளையில் ஆண்டுதோறும் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்பில், தனது 19 வயதில் அரவிந்தன் அறிமுகமானார் என்று தொடங்கினார் ஷங்கர். கவிதா முரளிதரன், முரளிதரன், தளவாய் சுந்தரம், அஜயன் பாலா, பாண்டியராஜன் முதலானோரும் அவரது கதையில் அடுத்தடுத்து வந்தனர். இந்தியா டுடேயின் இலக்கிய மலர்களின் உள்ளடக்கத்தில் அதன் ஆசிரியராக இருந்த வாஸந்தியோடு அரவிந்தனுக்கும் முக்கியப் பங்கு இருந்தது என்றார். இந்து தமிழ் திசையில் அரவிந்தன் பொறுப்பு வகித்த இணைப்பிதழ் பிரிவில் பணியாற்றியது தன் வாழ்வின் முக்கியமான காலகட்டம் என்றும், அரவிந்தன் தன்னை மிகுந்த மதிப்போடு நடத்தினார் என்றும் நினைவுகூர்ந்தார் ஷங்கர்.
‘படைப்புகளினூடே ஒரு பயணம்’ என்கிற தலைப்பில் மண்குதிரை உரையாற்றினார். அரவிந்தன் எழுதியிருக்கும் இரண்டு நாவல்கள் குறித்தும் பேசினார். ஆன்மிக நாட்டமுடைய ஓர் இளைஞனின் லௌகீக வாழ்க்கையை மையமாகக் கொண்ட நாவல் ‘பயணம்’ என்றும், சென்னையின் குடிசைப் பகுதி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது ‘பொன்னகரம்’ என்றும் குறிப்பிட்டார். இரண்டு நாவல்களின் சொல்முறையும் வெவ்வேறு விதமானது என்றார். காலம் கருதி அரவிந்தனது சிறுகதைகளைக் குறித்து அவர் அதிகம் பேசவில்லை. ஆனால் அரவிந்தன் எனும் எடிட்டர் மேலதிகாரி என்கிற தோரணையின்றி நண்பனாக வேலை வாங்குபவர் என்றும், அரவிந்தன் எனும் மொழிபெயர்ப்பாளர் அதிவேகமாக மொழிபெயர்க்கக் கூடியவர் என்றும் பாராட்டினார்.
‘அரவிந்தனின் இதழியல் பயண’த்தைக் குறித்துப் பேசியவர் பழ.அதியமான். இந்தியா டுடே, காலச்சுவடு, நம்ம சென்னை, இந்து தமிழ் திசை, மின்னம்பலம்.காம், காலச்சுவடு பதிப்பகம் என்று தொடரும் அவர் பயணத்தை வெகு சுருக்கமாக விவரித்தார். அரவிந்தன் வானொலியில் நிகழ்த்திய உரைகள் செறிவானவை என்றும் குறிப்பிட்டார். பிரதி செம்மையாக்கத்தில் கட்டுரையின் கட்டுமானத்தைச் சீராக்குவதில் அரவிந்தனின் தேர்ச்சியை அதியமான் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
மேடையிலும் அரங்கத்திலும் அதிகமும் ஆண்களே இருப்பதால் அரவிந்தனுக்குப் பெண் வாசகர்கள் இல்லையென்று கருதிவிடக் கூடாது என்றார் சித்ரா பாலசுப்பிரமணியன். உரையாடலின்போது வாதங்களைச் சீராக அடுக்கும் அரவிந்தனின் திறமை தன்னை மிகவும் கவர்ந்தது என்றார்.
இந்து தமிழ் திசையில் அரவிந்தனின் அணியில் பணியாற்றிய அனுபவத்தை ஆர்.சி. ஜெயந்தன் பகிர்ந்துகொண்டர். ஒரு திரைப்படத்திற்கு உதவி ஆசிரியர்கள் எழுதிக் கொடுக்கும் விமர்சனங்களைத் தொகுத்து எல்லோரது கருத்துகளும் பிரதிபலிக்கும் விதமாகவும், கட்டுரை ஒரே தொனியில் அமையும் விதமாகவும் அரவிந்தன் எழுதிவிடுவார் என்றார் ஜெயந்தன். கதையையோ முக்கியத் திருப்பங்களையோ வெளிப்படுத்தாமல் விமர்சனம் அமைய வேண்டும் என்பதில் அரவிந்தன் குறியாக இருந்ததை ஜெயந்தன் நினைவுகூர்ந்தார்.
அரவிந்தனின் ஏற்புரை சிறப்பாக அமைந்திருந்தது. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோருக்கு 60 வயது நிறைவடைந்தபோது வெளியான கனவு சிற்றிதழின் சிறப்பிதழ்களில் அவர்களைப் பற்றி எழுதிய அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், தனக்கும் 60 வயதாகும், அதுபற்றி யாரேனும் பேசுவார்கள் என்று அப்போது நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என்றார். படைப்புலகிலும் இதழியலிலும் மொழியாக்கத்திலும் தன்னைக் கூர்தீட்டிய ஆளுமைகளை நன்றியோடு நினைவுகூர்ந்தார். ஆதர்ச எழுத்தாளர்களாக புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, மார்க்கேஸ் ஆகியோரைக் குறிப்பிட்டார்.
மொழிபெயர்ப்பு என்றால் அது வார்த்தைக்கு வார்த்தை பெயர்ப்பதல்ல, மூலத்தின் உட்கருத்தை வெளிக் கொணர்வது என்பதற்குத் தனது அனுபவங்களிலிருந்து பல சுவையான எடுத்துக்காட்டுளைத் தந்தார்.
இந்தியா டுடேயில் செய்திக் கட்டுரைகள் எழுதிய நாட்களைக் குறித்துப் பேசிய அரவிந்தன், தமிழிதழ்களில் கருத்துக் கட்டுரைகள் வருகின்றன, ஆனால் சர்வதேசத் தரத்திலான செய்திக் கட்டுரைகள் வருவதில்லை என்றார். இந்து ஆங்கில ஏட்டில் சனிக்கிழமைதோறும் வருகிற Ground Zero செய்திக் கட்டுரைகளுக்கு இணையாகத் தமிழில் கட்டுரைகள் வெளியாவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார்.
தனது இரண்டு நாவல்களின் விவரிப்பு முறையை அவற்றின் கருப்பொருளே தேர்ந்துகொண்டன என்றார். நீண்ட காலத்திற்குப் பிறகு தான் புனைவெழுத்தின் பக்கம் திரும்புவதற்கு, ஆனைக்கட்டியில் நடைபெறும் எழுத்தாளர்களுக்கான வதிவிடத் திட்டத்தில் இரண்டு வார காலம் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பே காரணம் என்றார். அவ்வமயம் எழுதிய ஒன்பது கதைகளும் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பேசுகின்றன. இந்தக் கதைகள் அவரது சமீபத்திய சிறுகதைத் தொகை நூலான ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்வில் ஆர். சிவகுமார், வெளி ரங்கராஜன், கரு. ஆறுமுகத் தமிழன் முதலான மூத்த எழுத்தாளர்கள் பங்கேற்றனர். ஆனந்த் செல்லையா, கே. முரளிதரன், முருகேஷ் பாபு, சுப்பிரமணி இரமேஷ், தி. பரமேஸ்வரி, கவுதம் முதலான பல படைப்பாளிகளும் பங்கேற்றனர். அரங்கு நிறைந்திருந்தது. அனைவருக்கும் நன்றி நவின்றார் டிஸ்கவரி எம். வேடியப்பன்.
டிஸ்கவரி புக் பேலஸ் விற்பனையகத்தில் காலச்சுவடு பதிப்பகத்திற்குத் தனியான உள்ளரங்கம் இருக்கிறது. நிகழ்வன்று அரவிந்தன் எழுதிய நூல்களைக் கடையின் முகப்பில் காட்சிப்படுத்தியிருந்தார் வேடியப்பன். அந்த நூல்களுக்குச் சிறப்புக் கழிவும் வழங்கினார்.
தனது உரையில் பழ. அதியமான் குறிப்பிட்ட ஓர் அம்சம் கருதத்தக்கது. அரவிந்தனுக்கு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பிரதி மேம்படுத்துநர் எனப் பல முகங்கள் உண்டு. இந்த நிகழ்வு நடைபெறும் இரண்டு மணிநேரத்திற்குள் எல்லாப் பரிமாணங்களுக்கும் நியாயம் செய்துவிட முடியாது, ஒரு நாள் கருத்தரங்கு நடத்தினால் மட்டுமே அவரது பன்முக ஆளுமையை வெளிக்கொணர முடியும் என்றார் பழ. அதியமான். அப்படி ஒரு கருத்தரங்கு ஒருவேளை சாத்தியப்படாமலே போகலாம். ஆனால் பல சாதனையாளர்கள் தாங்கள் வாழும்போதே உரிய அறிந்தேற்பைப் பெற இயலாத தமிழ்ச் சூழலில் அதன் அவசியம் குறித்துப் பேசப்பட்டதே முன்னேற்றம்தான்.
அரவிந்தன் இன்னும் பல ஆண்டுகள் நீடு வாழ்ந்து தமிழ் இலக்கியத்தில் புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
மின்னஞ்சல்: Mu.Ramanathan@gmail.com