இடைவெளியை நிரப்பும் ஆய்வு
மதுரைப் பதிப்பு வரலாறு
(1835-1950)
(கட்டுரைகள்)
பொ. ராஜா
வெளியீடு:
நீலம் பப்ளிகேஷன்ஸ்,
முதல் தளம், திரு காம்பளக்ஸ் மிடில்டன் தெரு, எழும்பூர்
சென்னை - 8
பக். 308
ரூ. 350
இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் நவீன நிருவாக முறைசார்ந்து பிரிட்டிஷ் இந்திய அரசு தம்மை நிறுவிக்கொள்ளத் தொடங்கியது. அதன் விளைவாகப் பல புதிய தொழில்கள் உருவாயின. அது நவீன முதலாளிகளையும் தொழிலாளிகளையும் உருவாக்கியது. அந்தப் பின்புலத்தில் உருவான தொழில்களுள் ஒன்றான அச்சுத்தொழில், அது சார்ந்து ‘பதிப்பித்தல்’ என்னும் துணைத்தொழில் உருவாகவும் காரணமானது. வசதி படைத்தவர்களும் அரசின் அணுக்கம் பெற்றவர்களும் அச்சக உரிமையாளர்களாக மாறினர். தமிழகத்தில் மரபான கல்வி மரபில் செல்வாக்குடையவர்களாக இருந்தவர்கள் பழைய நூல்களைப் பதிப்பிக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினர். பெரும்பாலும் பத்திரிகை நடத்தியவர்களே அச்சக உரிமையாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தமக்கான வேலைகளைச் செய்ததுபோக உபரி நேரத்தில் கூலிக்கும் வேலை செய்தனர். வசதி குறைவான, அதேநேரத்தில் பத்திரிகை நடத்துவதில் ஆர்வமுள்ளவர்கள் அச்சகத்தின் உபரி நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அப்போது நவீன கல்விமுறையும் உருவாகிவிட்டிருந்தமையால் ‘பாடநூல் விற்பனை’ என்னும் லாபம் கொழிக்கும் சந்தை உருவாகிவிட்டிருந்தது. மரபான தமிழ்க்கல்வியின் நீட்சியில் பழந்தமிழ் இலக்கியங்களையும் பதிப்பிக்க வேண்டிய தேவை உருவானது. அந்தச் சூழலை அச்சக உரிமையாளர்களும் பதிப்பாளர்களும் பயன்படுத்திக்கொண்டார்கள். இப்படித்தான் அச்சுத் தொழில் தமிழகத்தில் வேர்பிடித்தது.
அச்சு தவிர்த்து அக்காலத்தில் புதிதாக உருவான தொழில் வாய்ப்புகளால் கிடைத்த லாபத்தைவிட அச்சுத் தொழிலால் கிடைத்த லாபம் அதிகமாக இருந்தது. தொடக்கத்தில் இந்தியச் சாதியவாதிகளின் சிந்தனையை ஒட்டியே செயல்பட்டாலும் பிற்காலத்தில் கல்வியை ஜனநாயகமாக்கிய பிரிட்டிஷ் அரசும் மிஷனரிகளும் தங்களது பணியைத் திறம்படச் செய்வதற்கு அச்சுத் தொழில் பேருதவி புரிந்தது. ஆக, அச்சுத் தொழிலையும் பதிப்பிக்கும் செயல்பாட்டையும் லாபம்சார்ந்து பார்க்கும் அதேநேரம் அவற்றால் சமூகமும் தனிமனிதர்களும் பெற்ற பயன்களைக் கொண்டும் பார்க்க வேண்டும். இதை விரிவுபடுத்தியும் நுணுக்கமாகவும் பார்ப்பதற்கான தரவுகளைத் தொகுக்கும் முயற்சிகள் வட்டாரம் சார்ந்து அமையவில்லை. ஏற்கெனவே பெரும் பரப்புக்களின் பதிவாக அமைந்துள்ளவை வட்டாரப் பங்களிப்புகளை உதிரிகளாகவே பதிவுசெய்துள்ளன. இந்த இடைவெளிகளை நிரப்புகிற வேலையை முடிந்தவரை சிறப்பாகச் செய்திருக்கிறது பொ. ராஜாவின் ‘மதுரைப் பதிப்பு வரலாறு’.
என்னளவில் சென்னையை அடுத்து அதிகமான பதிப்பு முயற்சிகள் நடந்த இடமாகக் கும்பகோணத்தைச் சொல்வேன். பதிப்பு வரலாற்றில் பலரும் கவனிக்காத இடம் அது. நவீன கல்வியையும் தொழில்களையும் மரபின் மீதான தாக்குதலாகக் கருதிய, மரபை நவீனத்திற்குள் நுழைப்பதற்கான மேட்டிமைப் பண்பாட்டு அறிவுசார் வேலைகள் நடந்த இடமாகக் கும்பகோணம் இருந்தது.
கும்பகோணத்திற்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்கும் அளவுக்கு மதுரையிலும் வேலை நடந்திருப்பதை ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூல் ஏராளமான சான்றுகளின் வழி நிறுவியிருக்கிறது. நாயக்க மன்னர்களின் தலைநகராகவும் தமிழறிஞர்கள் கூடிக் கலையும் இடமாகவும் பின்னாளில் தமிழ்ச் சங்கம் உருவான இடமாகவும் இருந்த மதுரையில் அச்சகம், பாடநூல்கள், புத்தகச் சந்தை ஆகிய இயல்பாகவே அமைந்துவிட்டிருக்க வேண்டும். இதில் இருக்கும் வரலாற்றையும் அதற்குப் பங்களிப்புச் செய்தவர்களையும் மதுரைப் பதிப்பு வரலாறு நிரல்படுத்தித் தந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் பதிப்பு சார்ந்து குறிப்பாக வட்டார அளவிலான பதிப்புச் செயல்பாடுகளை ஆய்வுசெய்ய வருகிறவர்களுக்கு உதவக்கூடும்.
மதுரையின் பதிப்புச் செயல்பாடுகளை நிறுவனம், நிறுவனம் சாராத பதிப்புகள், இஸ்லாமியப் படைப்புகள், மீனலோசனி அச்சியந்திரம் என்னும் பகுப்பில் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். மதுரை ஆதீனம், சோழவந்தான் கிண்ணிமடம், நொபிலி அச்சகம், அமெரிக்கன் மிஷனரிகள், தமிழ்ச் சங்கம் முதலிய நிறுவனம்சார் பதிப்புச் செயல்பாடுகளைக் காலநிரல்படுத்தித் தருமிடத்து, திருப்பூவண மடம், பிரம்மானந்த மடம் என்கிற வேதாந்த மடங்களைப் பற்றிய செய்திகளை அறியத்தருகிறார். இம்மடங்களின் பணிகள் ஒப்பீட்டளவில் மதுரையின் மற்ற நிறுவனங்களின் பதிப்புகளைவிட அதிகமாக இருக்கின்றன.
மிகப் பழைய சைவ மடங்களுள் ஒன்றான மதுரை ஆதீனம் தமிழகத்தின் பிற சைவ மடங்களின் அளவுக்குப் பதிப்பில் ஈடுபடவில்லை. குறைந்தபட்சம் மதுரையில் இருந்த வேதாந்த மடங்களின் அளவுக்குக் கூட இல்லாமல் பதிப்பில் பின்தங்கியிருக்கும் காரணம் ஆய்வுக்குரியது. அதேபோல பெளத்த, சமண எச்சங்கள் இன்றளவும் அதிகமிருந்துகொண்டிருக்கும் மதுரையில் வேதாந்த மடங்களின் பணிகள் அதிகமிருப்பதும் கவனத்திற்குரியதாக இருக்கிறது. திருப்பூவண மடத்தின் வெளியீடுகளான ஹரி தத்வ முக்தாவலீ, கதா சரித் சாகரம், வேதாந்த சித்தாந்த முக்தாவலி வசநம், வேதாந்த சாஸ்திர ரத்நத் திரயம், வேதாந்த சஞ்ஞா வசநம் முதலியனவற்றைப் பார்க்கும்போது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதுரையில் புழக்கத்தில் இருந்த அவைதிகக் கருத்தியலுக்கு எதிர்முகமாக வேதாந்த மடங்கள் செயல்பட்டிருக்குமோ என்கிற கோணத்திலும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
‘மதுரைப் பதிப்பு வரலாறு’ தரும் விவரங்களின்படி மதுரையைப் பொறுத்த மட்டில் மிகுதியான பொருள்வளம் படைத்த மதுரை ஆதீனம், பதிப்பில் போதிய அளவு கவனம் செலுத்தாததும் பிற மடங்களின் உதவியோடு சுயாதீன மற்றுச் செயல்பட்ட வேதாந்த மடங்கள் சமரச மற்று களமாடியிருப்பதும் வியப்பளிக்கிறது. இந்நூல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் நுண்பொருளாக, வாய்மொழி வழக்காறாக மாறிவிட்ட அவைதிகத்தின் கருத்தியலை எதிர் கொள்ள வைதிகத்தின் கருத்தியலைத் தாங்கி மதுரை ஆதீனமும் வேதாந்த மடங்களும் இணைந்தும் விலகியும் செயல்பட்டிருப்பதைக் கண்டடையும் மற்றொரு ஆய்வுக்கான தொடக்கநிலை ஆதாரங்களைப் பேரளவில் தந்திருக்கிறது.
சவுத் இந்தியன் அச்சுக்கூடம், பாண்டியன் பிரஸ், காஸிம் பிரஸ், சண்முகவிலாஸ் முத்திராசாலை, மீனாம்பிகை பிரஸ், மனோன்மணி அச்சியந்திர சாலை, மீனாக்ஷி விலாஸ் அச்சியந்திர சாலை, ராஜேஸ்வரி அச்சியந்திரசாலை, ஷம்ஸியா பிரஸ், முருகன் புக் டிப்போ, மகாலெக்ஷிமி விலாசம் பிரஸ், திருமங்கலம் ஸ்ரீகிருஷ்ணவிலாஸ் அச்சியந்திரசாலை முதலிய அச்சகங்களின் பணிகளை விரிவாகக் குறிப்பிடும் நூல், தனிமனிதர்களின் பதிப்புச் செயல்பாடுகளை அரிய செய்திகளின் வாயிலாக விவரிக்கிறது. குறிப்பாக, இ.ராம. குருசாமிக் கோனார், இ.மா. கோபாலகிருஷ்ண கோனார், இ. ராமசாமிக் கோனார், ஜெகதீசக் கோனார், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், மா. கோபாலகிருஷ்ணையர், ஆ. அரங்கராமாநுஜம், மு. கிருஷ்ண பிள்ளை, மழவை மகாலிங்கையர், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி ஆகியோரின் நூலாக்கங்களும் பதிப்புச் செயல்பாடுகளும் பற்றிய தகவல்கள் அவர்கள்தம் காலத்தினுடைய தமிழ் இலக்கிய, அச்சு வரலாற்றின் வட்டார முகமாக அமைந்திருக்கின்றன.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருளை நேர்த்தியாக அணுகியிருப்பதோடு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தரவுகளோடு தொடர்புடைய வட்டார அளவிலான சமய, சமூக ஆய்வுகளுக்கும் பிரதியாக்கம், எழுத்துச் செயல்பாடு சார்ந்து புதிய களத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் விதத்தில் ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ முன்மாதிரியான நூலாகும்.
மின்னஞ்சல்: jeyaseelanphd@yahoo.in