இயல் விருது 2024
தமிழ்ப் பங்களிப்பிற்காக இந்தியாவுக்கு வெளியே வழங்கப்படும் விருதுகளில் புகழ் பெற்றது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது. 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பாகத் தோன்றி இயக்கமாக வளர்ந்திருக்கும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ மூலம் ஆண்டுதோறும் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கியச் சேவையாளர் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கியr் சாதனை விருது வழங்கிக் கௌரவித்து வருகிறார்கள்.
2001 இல் சுந்தர ராமசாமி தொடங்கி மணிக்கொடி காலத்து கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜார்ஜ் எல். ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ். பொன்னுதுரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், டொமினிக் ஜீவா, தியடோர் பாஸ்கரன், ஜெயமோகன், இ. மயூரநாதன், சுகுமாரன், வண்ணதாசன், இமையம், ஆ.இரா. வேங்கடாசலபதி, பாவண்ணன், லெ. முருகபூபதி என நீள்கிறது இப்பட்டியல்.
இயல் விருது பாராட்டுக் கேடயத்துடன் 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. 2023 க்கான விருது ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.க்கு வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்டது.
2024 அக்டோபர் 20இல் இவ்விருது விழா டொரொண்டோ நகரில் நடைபெற்றது. விழாவைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புரவலர்களில் ஒருவரான ஏ.ஜே.வி. சந்திரகாந்தன் தொடங்கிவைத்தார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தலைவர் மேனுவல் ஜேசுதாசன் வரவேற்புரையாற்றினார்.
படைப்புக்கான புனைவு விருதை ஏ.எம். றஷ்மி ‘சற்றே பெரிய கதைகளின் புத்தகம்’ படைப்புக்காகவும் அல்புனைவுக்கான விருதை பி.வி. விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ படைப்புக்காகவும், கவிதைக்காக இளவாலை விஜயேந்திரனின் ‘எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?’ நூலுக்காகவும், மொழியாக்கத்துக்காக ஜெகதீஷ் குமார் கேசவனின் தனது ‘எ ஜர்னி த்ரோ வோர்ட்ஸ்’ (A Journey Through Words) நூலுக்காகவும், முனைவர் பார்வதி கந்தசாமி இலக்கியம், சமூகப் பணிக்காகவும் பெற்றார்கள்.
இவ்விழாவில் கனடாவில் வாழும் கவிஞரும் பேராசிரியருமான சேரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது ஆர். பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
விருதாளர் ஆர். பாலகிருஷ்ணன் பேசும்போது,“நிறைவால் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது என் நெஞ்சம். நான் ஒரு தமிழ் மாணவன் அதுதான் எனது அடிப்படை அடையாளம். தமிழ் நெடுஞ்சாலையின் எண்ணற்ற பயணிகளில் நானும் ஒருவன். பிடித்ததைவிட மாட்டேன், பிடிக்காததைத் தொட மாட்டேன் என்ற என் இயல்புதான் தமிழின்பால் என்னை ஆற்றுப்படுத்தியது.எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இலக்கியத்தைத்தான் நேசித்துப் படித்தேன். தமிழை மட்டுமே பற்றிக்கொண்டு என்னளவில் பயமின்றி இருந்தேன். தமிழ் இலக்கியம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று என்னை அச்சுறுத்தினார்கள். ஆனால் எனது முதுகலைத் தேர்வு முடிவுகள் வருவதற்கு 30 நாட்கள் முன்னதாகவே மதுரை தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்
எனது வாழ்க்கையில் நான் எழுதிய ஒரே ஒரு தேர்வு இந்தியச் குடிமைப்பணித் தேர்வு மட்டுமே. அதையும் முதன்முறையாகத் தமிழில் எழுதினேன். அதையும் முதல் முயற்சியிலேயே எழுதி வெற்றி கண்டது எனது வாழ்நாள் பெருமிதம். ஆனாலும் தமிழ்நாட்டில்தான் என்னைப் பணியமர்த்த வேண்டும் என்ற சலுகை கேட்காமல் 1984இல் தமிழ்நாட்டை விட்டு ஒடிசா சென்றேன். 34 ஆண்டுகள் ஒடிசா மாநில அரசிலும் புதுதில்லியில் இந்தியத் துணைத்தேர்தல் ஆணையராகவும் பணியாற்றி 2018இல் ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பின்னரும் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராகப் பணியமர்த்தப்பட்டு இறுதியாகப் பணியிலிருந்து விடைபெற்று இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் புவனேஸ்வரத்திலிருந்து சென்னை வந்தேன். நேற்றுபோல் இருக்கிறது, ஆனால் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன.
நான் எழுதிய நூல்களின் முகப்பு அட்டையில் என் பெயருக்கு எந்த முன்னொட்டும், குறிப்பாக ஐஏஎஸ் என்ற பின்னொட்டும் இல்லாதவாறு கவனமாகப் பார்த்துக்கொண்டேன்.ஆனாலும் இந்திய ஆட்சிப் பணியை நெஞ்சார விரும்புகிறேன். காலம் அளித்த வாய்ப்பு அது. உலகின் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள ஏராளமான நாடுகளுக்கும் இந்தியாவில் 97 விழுக்காடு மாவட்டங்களுக்கும் ஆட்சிப் பணியே என்னை அழைத்துச் சென்றது. தமிழ் நெடுஞ்சாலையில் எனது நெடிய ஆய்வுப் பணியையும் கவனக் குவிப்பையும் அதுவே சாத்தியப்படுத்தியது. “ஐஏஎஸ் தேர்வு எழுதி கலெக்டர் ஆகிவிடு” என்று என்னை நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். அப்போது எனக்கு வயது 15கூட ஆகியிருக்கவில்லை. இப்போது நினைத்தாலும் என்னை நெகிழவைக்கிறது பெருந்தலைவருடன் நான் சென்ற அந்த நள்ளிரவுக் கார்ப் பயணம்,” என்று பேசினார்.
நிறைவாக எழுத்தாளர் முத்துலிங்கம் நன்றியுரையாற்றினார். அவர் பேசும்போது, இந்தப் பணியில் விருதாளர்களைத் தேர்வுசெய்வது மிகவும் கடினமான காரியம். விருதாளர்களுக்கான தகுதியுரைகளை வாசிப்பவர்களின் வயதைக் கணக்கிட்டுப் பார்த்தபோது அவர்களுக்கும் வயது கூடியிருந்தது. ஏனென்றால் அவர்களும் 23 ஆண்டுகளாகத் தகுதியுரை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த முறை புதிய ஆட்களைக் கண்டுபிடித்தோம்.
இங்கே ஆர். பாலகிருஷ்ணன் வருவதற்குக் கடைசி நேரம்வரை விசா கிடைக்கவில்லை. நாங்கள் இங்கே பதற்றத்தில் நடுங்கிக் கொண்டிருந்தோம். இங்கே வந்திருக்கும் பலரையும் பல்லாண்டுகளாகத் தெரியும். ஆனால் இப்போதுதான் நேரில் முகம் பார்க்கிறேன்.அனைவருக்கும் நன்றி” என்றார்.