கடிதங்கள்
‘மதுவிலக்கும் இராஜாஜியும்’ கூடுதல் தகவல்கள்
நவம்பர் 2024 இதழில் ஜெ. பாலசுப்ரமணியம் எழுதிய ‘மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்’ கட்டுரையின் மூலம் அக்காலச் செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் இராஜாஜி 1925இல் அன்றைய சேலம் மாவட்டம் புதுப்பாளையத்தில் (தற்போது நாமக்கல் மாவட்டம்) காந்தி ஆசிரமத்தை ஆரம்பித்து, 1929வரை அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மது ஒழிப்பிற்காகச் செய்த பிரச்சார யுக்திகளையெல்லாம், கவனக்குறைவாக உப்புச் சத்தியாகிரக நடைப்பயணத்தோடு தொடர்புபடுத்திவிட்டார் கட்டுரையாளர்.
1926இல் சுயராஜ்யக் கட்சியின் ஆதரவில் டாக்டர் பி. சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது இராஜாஜி பகுதி அளவிலான மதுவிலக்கு அமுல்படுத்தும் மசோதா ஒன்றைச் சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆனால் சென்னை மாகாண அரசாங்கத்தால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
1929இல் அகில இந்திய மதுவிலக்குச் சங்கத்தின் கௌரவப் பொதுச் செயலாளரானார். விமோசனம் என்ற தமிழ் மாத இதழுடன், இந்திய மதுவிலக்குச் சங்கத்தின் ஆங்கில இதழான புரொஹிபிசன் என்ற மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தார். தொடர்ந்து இராஜாஜி எடுத்துக் கொண்ட முயற்சிகளை ஒட்டி, திருச்செங்கோடு தாலுகாவில் 31 கடைகளையும், ராசிபுரம் தாலுகாவில் 22 கடைகளையும் 1929 இறுதியில் அரசு மூடியது. சுமார் மூன்று ஆண்டுகள் மூடியிருந்த கடைகள் அரசால் மீண்டும் திறக்கப்பட்டன.
1937இல் சென்னை மாகாண ஆட்சியில் அமர்ந்த இராஜாஜி, 1937 அக்டோபர் 1 முதல் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை அமுலுக்குக் கொண்டு வந்தார். தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார். சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதை கவர்னர் எர்ஸ்கைன் இங்கிலாந்து அரசருக்கு எழுதினார். அரசரின் காரியதரிசி கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், ‘அரசர், இராஜாஜியைப் பாராட்டியதைக் குறிப்பிட்டு மதுவிலக்கைப் பற்றிய செய்தி அவரை மிகவும் கவர்ந்தது’ என்றும் எழுதியிருந்தார்.
மாகாணம் முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தும் முன்பே, இரண்டாம் உலகப் போரில், இங்கிலாந்து அரசின் தன்னிச்சையான போக்கை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவின்படி 1939, அக்டோபர் 30ஆம் நாள் இராஜாஜி அமைச்சரவை பதவி விலகியது.
அதன் பிறகு சுதந்திர இந்தியாவில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராகப் பொறுப்பேற்ற பின், சென்னை மாகாணம் முழுவதிலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு தனது வாழ்நாளில் மதுவிலக்கை அமுல்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுத்த இராஜாஜி 1971ஆம் ஆண்டு, திமுக அரசு மதுவிலக்கைத் தளர்த்துவதாக அறிவித்ததும், கொட்டும் மழையிலும் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று, அரசின் முடிவைத் திரும்பப் பெறுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். ஆனால் அது பயன் தரவில்லை. மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டிருந்த காலத்திலேயே அவர் இயற்கை எய்தினார்.
சீ. இளங்கோவன்
சேலம்.
இரா. திருநாவுக்கரசுவின் ‘அறச்சீற்றத்தின் அழியா முகம்’ ஃபாசிசத்தின் கோர நடவடிக்கைகளுக்கு ஆளாகி உயிரை இழந்த பேராசிரியர் சாய்பாபா அவர்களின் மரணம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாகும். கடுமையான வினாக்களை எழுப்பி வந்த இன்னும் சில அறிவுஜீவிகள் சிறையில் உள்ளனர்.
வெளியில் இருந்தால் இவர்கள் உருவாக்கும் கருத்துகள் தங்கள் கோர முகங்களைக் கிழித்தெறியும் என்பதாலேயே ஆட்சியாளர்கள் இவர்களை வெளியில் வரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
தாமதப்படும் நீதி என்பார்கள். இங்கோ சட்டத்தை வைத்துக்கொண்டு அநீதி கைகளை விரித்துப் பரந்து நிற்கிறது. அறிவுஜீவிகள்மீதான கொடுமைகளுக்கு எதிரான செயல்பாடுகள் பரந்த அளவில் இல்லை. ஒரு குறிப்பிட்ட பகுதி, அதுவும் மிகச் சிறிய அளவில், மட்டுமே அதன் தாக்கத்தை உணர்ந்தது. இது துரதிர்ஷ்டவசமானது.
தனது கட்டுரையின் நிறைவுப் பகுதியில் இடதுசாரிகள் மீதான விமர்சனத்தைக் கட்டுரையாளர் வைத்துள்ளார். பின்பகுதிக்கு முதலில் வருகிறேன். “ஜோதிபாசு பிரதமர் ஆவதை மிக உக்கிரமாகத் தடுத்த அவரது கட்சியின் அறிவுஜீவிகளுக்கு” என்கிறார். அக்கட்சியின் நிலைப்பாடு என்ன? தங்களால் கொள்கைரீதியான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றால் அந்த ஆட்சியில் பங்கேற்க முடியாது.
1996ஆம் ஆண்டில் அக்கட்சிக்கு இருந்தது வெறும் 32 மக்களவை உறுப்பினர்கள்தான். அந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு எப்படி ஆட்சி அதிகாரத்தில் கொள்கைரீதியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டும்தான் இதுவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றுள்ளது. ஆட்சியில் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அளவிலான எண்ணிக்கை இருந்ததால் அந்தப் பங்கேற்பு இருந்தது. மத்தியில் அல்லது வேறு எந்த மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றதே இல்லை. கட்சியின் நிலைப் பாட்டை உக்கிரமாக அல்ல, உறுதியாகப் பின்பற்றியது.
மேலும், மதவாதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு குறுங்குழு முதலாளித்துவத்தை மானசீகமாக வரவேற்பதா என்று வினா எழுப்புகிறார். ஜோதிபாசு யாருடைய ஆதரவில் பிரதமராக ஆகவிருந்தார்? அங்கும் பிற முதலாளித்துவக் கட்சிகள்தானே? மதவெறியை எதிர்க்க முன்வரும் முதலாளித்துவக் கட்சிகளோடு கைகோத்துச் செயல்படும் உத்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமல்ல, பிற இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு தனி நபர்களும் கடைப்பிடிக்கிறார்கள். இன்றைக்கு பிகாரில் மக்களின் பிரச்சினைகளைப் பல்வேறு தளங்களில் சிபிஐ (எம்.எல்) விடுதலைக் கட்சியினரால் ஓங்கி ஒலிக்க முடிகிறதென்றால், அதற்கு இந்த உத்திதான் காரணமாகும்.
இப்போது சிறையிலுள்ள அறிவுஜீவிகளின் விடுதலைக்காக மைய அரசியல் தளத்திலிருந்து எழுப்பப்படும் குரல்கள் இடதுசாரிகளுடையதேயாகும். அவற்றை நிராகரிப்பது நியாயத்திற்கான குரல்களை மட்டுப்படுத்துவதில்தான் முடியும்.
கணேஷ்
கோவை.