தனிப் பயணி தனித்துவப் பயணி
சில மாதங்களாகக் கொடும் நோயோடு போராடிவந்த ராஜ் கெளதமன், நவம்பர் 13ஆம் தேதி பாளையங்கோட்டையில் காலமானார். திறனாய்வு, தன் வரலாறு, புனைவு, மொழிபெயர்ப்பு வகைமைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கும் அவர் சிறுபத்திரிகைத் திறனாய்வு முறையிலிருந்து உருவானவர். பேராசிரியராகப் பணியாற்றிக் கல்விப்புல ஒழுங்கோடு எழுதினாலும், சுதந்திரமான எழுத்து முறையைக் கொண்டிருந்தவர். அவருடைய முதல் நூலான ‘எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம் (1990)’ பல்வேறு சிறுபத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாகவே இருந்தது. கல்விப்புலத்தினைத் தீவிரச் சிந்தனையுலகமும் நவீன இலக்கிய வாசிப்புகளும் சாடிவந்த காலத்தில் இனிய புறனடையாக அமைந்தார் ராஜ் கெளதமன்.
முன்னோடி
1991ஆம் ஆண்டு மதுரை IDEAS மையம் சார்பாக, ‘தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்’ என்ற தலைப்பிலான கட்டுரையையும், 1992ஆம் ஆண்டு புதுச்சேரி ‘ஸ்பார்டகஸ்’ பதிப்பகம் சார்பாக ‘வேதாகமக் கல்வியும் தலித்தும்’ என்ற கட்டுரையையும் வெளியிட்டார். அக்கட்டுரைகள்தான் தமிழில் தலித் இலக்கியம்பற்றி அமைந்த அறிமுக எழுத்துகள். இந்த வகையில் தமிழ் தலித் இலக்கியம் முதலில் திறனாய்வுத் துறையிலே உதித்தது. அதனை ராஜ் கெளதமன் நிகழ்த்தினார் அல்லது அவர்வழியாக அது நிகழ்ந்தது. தமிழின் முதல் தலித் படைப்பாக அறியப்படும் பாமாவின் ‘கருக்கு’ நாவல் அப்போது வெளியாகியிருக்கவில்லை. நிறப்பிரிகை முதல் இதழ் வெளியாகிவிட்டிருந்தாலும் (அக்டோபர், 1990) அதில் தலித் இலக்கியம்பற்றிய எழுத்துகளேதும் இடம்பெற்றிருக்கவில்லை. பிறகு அவர் வெளியிட்ட ஒவ்வொரு நூலும் அதுவரையில் தமிழ் இலக்கிய உலகத்திலும் தமிழ்த் திறனாய்வு உலகத்திலும் சந்தித்திராத கேள்விகளையும் விவாதங்களையும் கோணங்களையும் எழுப்பின. தமிழ்ச் சூழலே சூடாக மாறியது.
இவ்விடத்தில் அவருக்கு இயல்பாக அமைந்த இரண்டு வாய்ப்புகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவதாக, அவர் விட்டேத்தி மனம் கொண்டவராக இருந்தார். எல்லாவற்றையும் வேடிக்கையோடு கலைத்து அணுகும் அவரின் குணம் தலித் வாழ்வனுபவத்தால் தனக்குள் சாத்தியமானது என்று கருதினார். இரண்டாவதாக, கிறித்தவப் பின்புலத்திலிருந்து கல்லூரி இளங்கலையில் அறிவியலையும் படித்துவிட்டுத் தமிழ்த் துறைக்குள் நுழைந்திருந்தார். இந்தப் பின்புலத்தில் திறனாய்வாளராக உயர்ந்த பயணத்தை மூன்றுவிதமாகப் பார்க்க முடிகிறது.
1) கல்லூரியில் பயின்ற காலத்திலும், வேலை தேடிக் கொண்டிருந்த காலத்திலும் இடதுசாரி அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டிருந்தது. இக்காலத்தில் செயற்பாடுகளை விடவும் வாசிப்பு, விவாதம், எழுத்து போன்றவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டார்.
2) இத்தொடர்ச்சியில் அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற நவீன வாசிப்புக் கோட்பாடுகளின் அறிமுகம் அமைந்தது. இக்காலத்தில் அவர் எஸ்.வி. ராஜதுரை, தமிழவன் போன்றோரோடு பழகியிருந்தார். இதன் தாக்கத்தை முதல் நூலான ‘எண்பதுகளில் தமிழ்க் கலாச்சார’த்தில் காணலாம். தமிழ் விரிவுரையாளராகிவிட்ட இக்காலம் பெருமளவு காரைக்காலில் அமைந்தது.
3) நவீன வாசிப்புக் கோட்பாட்டுக் காலத்திலேயே அறிமுகமாகியிருந்த தலித் கண்ணோட்டம் அவரிடம் எழுத்துகளாக வடிவம் பெற்றது. காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு இடம்பெயர்ந்திருந்த இக்காலத்தில் நிறப்பிரிகை குழுவினரோடு தொடர்பும் ஏற்பட்டிருந்தது. தலித்பற்றிய அவரின் தொடக்க நூல்கள் ரவிக்குமார் தொடர்பில் வெளியாயின.
தனியான திறனாய்வு இயக்கம்:
ராஜ் கெளதமன் இவ்வாறான தொடர்புகள் மூலம் உருவாகி வந்தாலும், அவரின் பயணம் தனியாகவும் தனித்துவமாகவும் அமைந்திருந்ததைப் பார்க்க முடிகிறது. அவர் அம்பேத்கரையும் அவரின் வழிகாட்டல்களையும் மதித்தார் என்றாலும் தன்னுடைய ஆய்வு முறையியலை மார்க்சியத் தாக்கத்திற்குட்பட்டு அமைத்திருந்தார். இதற்காக அவரை மார்க்சியர் என்றும் கூறிக்கொள்ள முடிவதில்லை. ஆய்வில் மார்க்சியம் புறவயமான அணுகுமுறைகளையே வலியுறுத்தும். ஆனால் தலித் தன்னிலையானது, தன்னுடைய அனுபவத்தின் அணுகுமுறையைக் கைக்கொண்டு பேசும். அதாவது மார்க்சியத்தின் ‘தான் கலக்காத’ பண்பைக் கண்டிருந்த ராஜ் கெளதமன், அதேவேளையில் தலித்தியத்தின் ‘தான் கலக்கும்’ அனுபவத்தையும் சேர்த்துக்கொண்டிருந்தார். அது பார்வைக் கோணத்தை மட்டுமல்ல, சுயமான மொழியையும் உருவாக்கியிருந்தது. கல்விப்புல ஒழுங்கோடு எழுதினாலும் புதிய திறனாய்வு மொழி அவருடையது. கல்விப்புல நிர்ப்பந்தத்தைத் தளர்த்துவதும் அதிகாரத்தைக் கலைப்பதும்தாம். நூல் / கட்டுரையின் தலைப்பு (பொய் + அபத்தம் = உண்மை), வரிசை, எழுத்து நடை, மொத்த வடிவம் எனப் பலவற்றிலும் கட்டுடைப்பை நிகழ்த்திப் புதிய மொழியைக் கட்டமைத்தார்.
சிறுபத்திரிகைத் தொடர்ச்சி என்றாலும் அவர் அன்றைய சிறுபத்திரிகைக் ‘கட்டுடைப்பாளர்கள்’போல கவனயீர்ப்பு நோக்கிலோ, அதிர்ச்சி மதிப்பீட்டு நோக்கிலோ ஒரு வரியையும் எழுதியதில்லை. அவர் எழுதிய ‘அறம் அதிகாரம்’ நூல் அதுவரை அற இலக்கியம்பற்றி இருந்துவந்த பார்வையை மாற்றியது. இவற்றை இவ்வாறுகூடப் பார்க்க முடியும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது அந்நூல். தமிழ் அறிவுப் புலத்திலும் கல்விப் புலத்திலும் பெரும் கவனத்தை உருவாக்கிய நூல் அது. அவரின் விமர்சன மொழிக்கான தீவிரத்தை மார்க்சியத்திடமிருந்தும் உள்ளடக்கத்தைத் தலித்தியத்திடமிருந்தும் எடுத்திருந்தார். தலித் என்பதைப் பிறப்படையாளமாக மட்டும் சுருக்காமல் அதிகாரத்திற்கு எதிரான கலக மனமாக வரையறுத்தார். புதுமைப்பித்தனை விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகினாலும் அவரிடம் வெளிப்படும் கலக மனம், தலித் மனோபாவம்தான் என்றார். கலக மனமும் படைப்புக் குணமும் பிணைந்தவை. அவர் புதுமைப்பித்தன் போன்றோரின் படைப்புக் குணங்களைக் கண்டடைந்ததற்கும், தலித்தியக் கட்டுடைப்பு மொழியை உருவாக்கியதற்கும் அவரிடமிருந்த புனைவு மனம் முக்கியக் காரணமாக அமைந்தது.
மார்க்சிய ஆய்வுமுறையின் செல்வாக்குக் கொண்டவர் என்றாலும், பின்நவீனத்துவம் உள்ளிட்ட நவீன வாசிப்பு முறைகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வாசிப்பை அமைத்துக்கொள்ள அவர் தயங்கவில்லை. அமைப்பியல், அமைப்பியலுக்கு அடுத்து எழுந்த சிந்தனைகள், குறிப்பாகப் பின் நவீனத்துவச் சிந்தனைகள் தலித்துகளுக்குச் சாதகமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். நீட்ஷே, பூக்கோ வழியாக அறங்களின் அதிகாரத்தையும், பக்தின் வழியாகக் கலகத்தின் அரசியலையும் எடுத்தாண்டார். இதனால் அவரைப் பின்நவீனவாதி என்றும் கூறிக்கொள்ள முடிவதில்லை. கலகம் போன்றவை அவர் அனுபவமாக (அதுவே தலித் அனுபவமாகவும்) இருந்தது. அதனை அவரின் தன்வரலாற்றுப் புனைவான ‘சிலுவைராஜ் சரித்திரம்’ மூலம் அறியலாம். மார்க்சியத்தின் தீவிரமும் வாழ்வனுபவத்தின் விட்டேத்தித்தனமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இருந்தாலும் சிறுபத்திரிகை மரபும் நவீன வாசிப்பு முறைகளும் அவற்றை ஒருங்கிணைத்துத் தலித்தியத்திற்குள் பொருள்படுத்திக்கொள்ள உதவின. அவருடைய தலித்திய எழுத்து பல்வேறு கலவைகளின் ஊடாக உருவானது. எவற்றைப் படித்தாலும் பார்த்தாலும் அவற்றில் தனக்கானதை அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
ராஜ் கௌதமன் புதுமைப்பித்தனைப் பற்றிக் கூறும்போது எந்த ஒன்றிலும் கூடாரம் போட்டுத் தங்காதவர், எதையும் நிரந்தரமாய்ப் பிரதிபலித்தவர் இல்லை என்று குறிப்பிடுவார். புதுமைப்பித்தனின் அப்பண்பு ராஜ் கௌதமனுக்குப் பிடித்திருப்பதற்குக் காரணம், அவரே அப்பண்பு கொண்டவராய் இருந்ததுதான். வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்காமல் விளையாட்டுத்தனமாக, விட்டேத்தித்தனமாகப் பார்க்கும் மனப்போக்கு தனக்கிருப்பதாகக் குறிப்பிட்ட அவர் அதனாலேயே எந்தவொரு இயக்கத்தோடும் நிறுவனத்தோடும் செயல்பட முடிந்ததில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டார். அம்மனப்போக்கினால்தான் புதுமைப்பித்தன், அ. மாதவையா ஆகியோரைப் பிடித்தது என்கிறார். மேலும் “அவர்களுடைய இலக்கியத் தகுதி, திறமையை வைத்துப் பிடித்ததாகப் பலர் சொல்வதுண்டு. அவர்களுடைய குணமென்று ஒன்று தெரியவருகிறது இல்லையா, அது என்னுடன் ஒத்துப்போகிறது” என்று கூறியிருப்பதையும் பார்க்கலாம். சிறுபத்திரிகை மரபே பிராமணர்களின் சூழ்ச்சி என்பதான பார்வை இன்றைக்குக் கட்டமைக்கப்படுகிறது. அவற்றை விமர்சனப்பூர்வமாகப் பார்ப்பதைத் தவிர்த்து முற்றிலும் ஆதரவு, எதிர்ப்பு என்றாக்குவது சரியல்ல. ராஜ் கௌதமன் போன்றோரின் பயணத்தில் சிறுபத்திரிகை மரபுக்கு இடமிருக்கிறது. அதேவேளையில் அவர் முற்றுமான சிறுபத்திரிகைக் குணம் கொண்டவரும் இல்லை. எந்த இதழோடும் பதிப்பகத்தோடும் நிரந்தரமாக இருந்ததில்லை. அவற்றின் அரசியலோடு தன்னைப் பிணைத்துக்கொண்டதில்லை. ராஜ் கௌதமன்பற்றிய பிம்பம் எழுத்திலும் நேரிலும் வேறுவேறானதல்ல. எழுத்தை மட்டுமே வாழ்வாகக் கொண்டிருந்தவர். அவர்பற்றிய அடையாளம் எழுத்தின் வழியாக உருவானதாகும். அதேவேளையில் எழுதுவதைத் தாண்டி எந்த உரிமைக் கோரலிலும் ஈடுபடாதவர். அவருக்கு விருதுகள் கிடைத்தபோது சிரித்தபடி வாங்கிக்கொண்டு கடந்துசென்றார்.
ராஜ் கௌதமனின் தலித் கண்ணோட்டத்திலான திறனாய்வு சங்க இலக்கியங்களிலிருந்து தொடங்கியது. அவர் ஒரு நூலை எழுதி, அத்தலைப்பின் தொடர்ச்சியில் அடுத்தடுத்த நூல்களை எழுதியிருக்கிறார். அந்தவகையில் அவரது நான்கு நூல்கள் முக்கியமானவை: ‘தலித் பண்பாடு’, ’அறம் அதிகாரம்’, ‘பாட்டும் தொகையும்’, ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘புதுமைப்பித்தன் என்னும் பிரம்மராக்ஷஸ்’. இவற்றைப் படித்துவிட்டால் பிற நூல்களுக்குள் நுழைய முடியும். ராஜ் கௌதமன் பல கோட்பாடுகள் வழியாகச் சிந்தித்திருந்தாலும் அடிப்படையில் நவீனத்துவர். தனிமனித ஒழுக்கம், புற ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர். தலித்துகளுக்குக் கல்வியும் தன்மதிப்பும் முக்கியம் என்று கருதியவர். பெரியார்பற்றிய விவாதம் நடந்தபோது தனிநபர்களின் மோதலாகப் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து விலகியிருந்த அவர், அந்த விவாதத்தின்போது ரவிக்குமார்மீது சாதிய வசை வீசப்பட்டபோது அப்போக்கை மறுத்தெழுதியது இந்த வகையில்தான்.
தலித்தியம் என்னும் லட்சிய முன்மாதிரி
மார்க்சியம் தன் இறுதி லட்சியத்தைப் பொதுவுடைமை உலகமாக முன்வைத்ததுபோல், தலித் விடுதலையின் லட்சியம் எல்லாவகை அதிகாரத்தையும் நொறுக்குவதாகவும் மறுப்பதாகவும் இருக்க வேண்டும் என்று வரையறுத்தார் ராஜ் கௌதமன். அவருடைய தலித்தியம் லட்சிய வகைமாதிரியிலானது. ஆனால் அவர் கண்முன்னே தலித் அரசியல் மைய நீரோட்டத்தோடு போராடி அதன் பகுதியாக மாறியது. தங்களைச் சாதிகளாக நிலைநிறுத்திக்கொள்வதன் வழியாகவே தாக்குப் பிடிக்க முடியும் என்கிற குரல்கள் தலித் சாதிகளிலிருந்து எழத் தொடங்கியுள்ளன. அவற்றை அவர் கவனித்தாரா? தீவிரமான தலித்திய வரையறைகளை முன்வைத்த அவருக்கு இவற்றைப் பற்றி எத்தகைய கருத்துகள் இருந்தன என்று தெரியவில்லை. இக்காலகட்டத்தில் அவர் தன்னை முற்றிலும் சங்க இலக்கிய ஆய்வுகளுக்கு ஒப்புக்கொடுத்திருந்தார். அவருடைய முந்தைய தலித்திய நூல்களுக்குக் கிடைத்த ஓரளவிலான கவனம் இப்போது கல்விப்புல வட்டத்திற்குள்ளேயே நின்றுபோனது.
தொடக்கக் காலத்தில் வேதாகமக் கல்லூரி மறுப்பு போன்ற சமகாலப் பிரச்சினைகளை ஒட்டி எழுதிய அவர் போகப் போகச் சமகாலத்திலிருந்து விலகி முற்றிலும் ஆய்வுப் பொருள் ஒட்டிச் சிந்திப்பவராக மாறிப்போனார். எனவே அவர் பேசிவந்த விஷயம் சார்ந்து நடந்த மாற்றங்களைப் பற்றியும் கண்டுகொள்ளத் தவறினார். ஒரு பிரச்சினையைச் செய்திக் கட்டுரையின் தன்மையோடு நிறுத்திவிடாமல், புறஉலகின் நிர்ப்பந்தத்தைப் பற்றி யோசிக்காமல் விரிவான பின்புலத்தில் ஆய்வு செய்தது முக்கியமானது என்றாலும் சமகாலத்தைப் போதுமான அளவு விவாதித்திருக்க வேண்டும். நிகழும் யதார்த்தத்திலிருந்து ஆய்வுக்குப் போவதைக் காட்டிலும், வரலாற்றுரீதியாக நிகழ்ந்தவற்றைத் தொகுத்துக்கொண்டு அவற்றிலிருந்து தலித்திய லட்சியத்தை முன்வைத்ததே அவரிடம் அதிகம் செயற்பட்டிருக்கிறது. அமைப்புகளோடு தன்னை இணைத்துக்கொள்ளாத பண்பு இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த லட்சியவாதத்தை நிறைவேற்ற வேண்டுமானால் மீண்டுமொரு நிறுவனவாதம் வந்துவிடுவதைப் பற்றியோ, குறைந்தபட்சம் சமகாலத் தலித் அரசியல் அத்தகைய சிக்கல்களில் சிக்குண்டதைப் பற்றியோ பேச வேண்டிய தருணத்தில் அவர் வேறொரு ஆய்வுப் பொருளுக்குச் சென்றுவிட்டிருந்தார். ‘அது என் வேலை இல்லைப்பா’ என்பதாகவே இருந்தார். முற்றும் முழுதான ஆய்வாளராக இருந்துகொண்டார்.
பொதுவான தமிழ்நாட்டு வரலாற்றில் தலித்துகளின் இருப்பைப் பிரதிகளினூடே ஆய்வு செய்தவர், தலித்துகளின் வரலாற்றை, குறிப்பாக, அவர்களின் போராட்ட வரலாற்றைப் பெரிதும் தெரிந்தவராக இல்லை. தலித்துகள்பற்றிய அவரின் பார்வை முற்றிலும் நவீன சிந்தனையால் அமைந்தது. அதனால்தான் வரலாற்றில் ‘ஏதுமற்றவர்களுக்கான’ லட்சிய தலித்தியத்தை அவர் வடிவமைத்தார். ராஜ்கௌதமன் போன்ற முன்னோடிகளின் நிலை இதுவென்றால், மறுபுறமாகத் தலித் இயக்கங்கள் இதுபோன்ற ஆய்வு முன்னோடிகளையும், அவர்களின் ஆய்வு முடிவுகளையும் தங்களுடைய அரசியல் புரிதலுக்குள் கிஞ்சிற்றும் இணைத்துக்கொண்டதில்லை. இந்த நிலையில்தான் ராஜ் கெளதமன் முன்வைத்த பரந்துபட்ட தலித்திய உலகையும் அதற்கான ஞானத்தையும் வரித்துக்கொண்டு முன்னிலும் தீவிரமாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. காலமெல்லாம் தன்னை எல்லாவற்றிலிருந்தும் விலக்கிவைத்துக்கொண்ட ராஜ் கௌதமன் தன்னுடைய நூல்களின் வழியாக நம்மோடு இணைந்திருக்கிறார். அவை வழி காட்டட்டும்
மின்னஞ்சல்: stalinrajangam@gmail.com