குரலில் எதிரொலிக்கும் வாழ்வின் கதை
அது இதமான கோடைக்கால மதியப் பொழுது. லாயிட்ஸ் சந்தில் அமைந்திருந்த கர்னாடக இசை ஜாம்பவான் செம்மங்குடி சீனிவாச அய்யரின் வீடு. விசாலமான அந்த வீட்டில் இசை வகுப்புக்காக நான் செல்லும்போதெல்லாம் மதியம் அங்கேயே சாப்பிடுவேன். அன்றும் அப்படித்தான். சாப்பிட்டு முடிந்ததும் செம்மங்குடி மாமா குட்டித் தூக்கம் போட்டார். அவர் எழுந்ததும் வகுப்பு தொடங்கியது. பைரவி ராகத்தில் அமைந்த ‘கொலுவையுன்னாடே’ என்னும் தியாகராஜர் கீர்த்தனையைப் பயின்று கொண்டிருந்தேன். அவர் அப்போதுதான் அதை எனக்குச் சொல்லிக் கொடுத் திருந்தார். சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடியபடி என்னுடைய கமகம் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துத் திருத்தங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் அனுபல்லவியை ஆரம்பித்தபோது எம்.எஸ். அம்மா மெல்ல அந்தக் கூடத்துக்கு வந்தார். உடன் அவருடைய உதவியாளர் ஆத்மநாதனும் வந்தார். எனக்கு வியப்பு, மலைப்பு. என்ன நடக்கிறது என்று புரியாமல் பாட்டை அப்படியே நிறுத்திவிட்டேன். மாமா கண்களைத் திறந்து பார்த்தார்.
மாமாவின் முகம் ஒளிர்ந்தது. தன் சிஷ்யையும் இசைக்குயில