தலித் குரலைச் சர்வதேசமயமாக்கியவர்
1986ஆம் ஆண்டு ஒரு இதழில் வெளியான தலையங்கத்திற்காக அதன் ஆசிரியரை பஞ்சாப் போலீஸ் பெங்களூர் வந்து கைது செய்து விலங்கிட்டு சண்டிகர் அழைத்துச் சென்றது என்ற செய்தி பெங்களூரு பிரஸ் கிளப்பில் பரபரப்பாகியது. இந்தச் செய்தியை அறிந்த பிராமண, உயர்சாதிப் பத்திரிகையாளர்கள், “அந்தாளுக்கு இது தேவைதான், எப்ப பார்த்தாலும் நம்மையே சீண்டுவது, எதற்கெடுத்தாலும் பிராமணர்களையே குற்றம் சுமத்துவது. அடுத்தவரின் [உயர்சாதியினரின்] விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைப்பவர். இத்தோடு இவன் கதை முடிந்தது,” என்று மனத்திற்குள் மகிழ்ந்தனர். அந்த வெறுப்பிற்குரியவர் யாரென்றால் தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி. ராஜ்சேகர். வி.டி.ஆர். என்று அனைவராலும் அறியப்பட்ட அவரை இரயில் சன்னலில் பூட்டப்பட்ட கை விலங்குடன் போலீசார் அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் அடுத்த நாட்களில் நாளிதழ்களில் வெளியாகின. காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவாக எழுதிய தலையங்கத்தை மற்றொரு பத்திரிகை பிரசுரித்ததே போலீஸ் நடவடிக்கைக்குக் காரணம். ஆனால் அடுத்த சில நாள்களில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான பூட்டா சிங்கின் தலையீட்டால் வி.டி.ஆர். விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, பூட்டா சிங் வீ.டி.ஆரைத் தனது வீட்டிற்கு அழைத்து விருந்து உபசரித்து பெங்களூர் திரும்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இந்தியாவின் சாதிப் பிரச்சினைகளை வெளிநாட்டில் பேசியதற்காக ஒருமுறை அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இவையெல்லாம் அவரது எழுத்துக்குக் கிடைத்த வெகுமதிகள்.
அகில இந்திய அளவில் தலித் அரசியலைக் கவனித்துவருபவர்களுக்கு வி.டி. ராஜசேகரைத் தெரியாமல் இருக்க முடியாது. மாதமிருமுறை வெளியான தலித் வாய்ஸ்மூலம் தலித் பிரச்சினைகளை இந்தியா முழுமைக்கும் கொண்டுசென்றவர். ஆங்கிலப் பத்திரிகையாக இருந்ததால் வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களுக்கிடையிலான தலித்துகளின் இணைவைச் சாத்தியப்படுத்தியவர். அருகிலுள்ள மாநிலங்களில் உள்ள தலித் பிரச்சினைகள் மொழித்தடையால் கவனத்திற்கு வராமலிருந்த காலத்தில், தனது எழுத்தின் மூலம் இந்திய சாதிப் பிரச்சினைகளை உலகமயமாக்கினார்.
தெற்கு கர்நாடகம் உடுப்பி, மணிப்பால் அருகிலுள்ள ஒந்திபெட்டு கிராமத்தில் திம்மப்பா ஷெட்டி, வனஜாக்ஷி ஹெக்டே பெற்றோருக்கு மகனாக 1932, ஜூலை 17 இல் பிறந்தார். சாதியடுக்கில் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள பந்து சாதியில் பிறந்தவர். குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு உயர்பதவி வேலைகளைப் பெற்றிருக்க முடியும். சமூக மாற்றத்தின் மீது அக்கறை கொண்டு இதழியல் பணியைத் தேர்ந்தெடுத்தார். 25 ஆண்டுக் காலம் இதழாளராக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வேலைபார்த்தவர். 1981ஆம் ஆண்டு தலித் வாய்ஸ் பத்திரிகையை மாதமிருமுறை இதழாகத் தொடங்கினார்.
மைசூர் மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ் கர்நாடகத்தின் முதல்வராகப் பதவி வகித்த காலங்களில் (1972-77, 1978-80) தலித்துகளுக்கான பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தலித்துகளுக்கு இலவச நிலம் வழங்குதல், மலம் அள்ளுதலைத் தடை செய்தல் போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலமைச்சரின் சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் வி.டி.ஆர். கவரப்பட்டார். இது குறித்துத் தொடர்ந்து தான் பணியாற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிவந்தார். இந்தக் காலத்தில்தான் அவருக்கு அம்பேத்கர், பெரியார் நூல்களின் அறிமுகம் கிடைத்தது. அம்பேத்கர் வழியில் பௌத்தம் தழுவினார். இந்துத்துவத்திற்கு எதிராக தலித்-இஸ்லாமியர் ஒற்றுமை குறித்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார்.
1996ஆம் ஆண்டு ‘தலித் பத்திரிகையாளரைத் தேடி’ என்று சந்திரபான் பிரசாத் கட்டுரை எழுதும் நிலையில்தான் பத்திரிகைத் துறையில் தலித்துகளின் பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் 90களில் வி.டி.ஆரின் எழுத்துக்கள் தலித்துகளின் பிரச்சினையை மிகத்தீவிரமாகக் கவனப்படுத்தின. அவர் முதல் தலைமுறைச் சாதி எதிர்ப்புக் கருத்துநிலை கொண்டவர். அதாவது சாதியைத் தோற்றுவித்தவர்கள் பிராமணர்கள். பிராமணியம் என்பது பிராமணர்கள், உயர்சாதியினரிடம் மட்டுமே இயங்கக்கூடியது. ஆகவே பிராமண மேலாதிக்கத்தை ஒழிப்பதன் மூலம் பிராமணியத்தை ஒழிக்க முடியும் என்று நம்பினார். பிராமணர்கள் கம்யூனிஸ்ட் முகமூடி அணிந்துகொண்டு தங்களின் சாதிய முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள பிராமணர்களை விமர்சித்தார். சாதி அமைப்பை ஒழித்துக்கட்டாமல் கம்யூனிஸம் இந்தியாவில் வேலை செய்யாது என்னும் கருத்துச் செல்வாக்கின் அடிப்படையில் ‘How Karl Marx Failed in Hindu India?’ என்ற நூலை எழுதினார்.
இந்திய தலித்துகளின் பிரச்சினைகளை உலகின் பிறபகுதிகளில் ஒடுக்கப்படும் பாலஸ்தீனியர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஈழத்தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருடன் இணைத்துப் பார்த்தார். வி.டி.ஆர். எழுதுவதோடு நில்லாமல் புரட்சிகர இயக்கங்களின் தலைவர்களான யாசர் அராஃபத், கடாஃபி, அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி ஜெஸ்ஸி ஜாக்சன், அமெரிக்காவின் கறுப்பர் விடுதலையின் புரட்சிகர இயக்கமான ‘நேஷன் ஃஆப் இஸ்லா’மின் தலைவர் லூயி ஃபரக்கான் ஆகியோரோடு நேரடி அறிமுகம் கொண்டிருந்தார். எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறதோ அங்கெல்லாம் விசயங்களைத் தேடி வாசித்தார். அவற்றை தலித் வாய்ஸ் பத்திரிகையில் சாதி எதிப்புப் போராட்டத்துடன் இணைத்து எழுதினார். இதன்மூலம் தலித் போராட்டத்தை உலகளாவிய பார்வையில் விளக்க முற்பட்டார்.
கோலார் தங்கவயல் சட்டமன்ற உறுப்பினராக 1978-83 காலங்களில் பதவி வகித்த இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கே. ஆறுமுகம், கர்நாடகச் சட்டமன்றத்தில் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலையை நிறுவவும், சட்டமன்றப் பிரதான வீதிக்கு அம்பேத்கர் வீதி என்று பெயரிடவும் கோரிக்கை வைத்துவந்தார். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக வி.டி.ஆரும் தனது எழுத்தின் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 1987ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தேசிய அளவிலான தலித் இலக்கிய மாநாட்டை நடத்தினார் வி.டி.ஆர். இவர் எழுதிய ‘Brahminism; Why Godse Killed Gandhi?’; ‘Caste a nation within the nation’; ‘Dalit: The Black Untouchable of India’; ‘Know the Hindu Mind’ போன்ற ஆங்கில நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. தோராயமாக 30 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ‘India’s Intellectual Desent’ என்ற நூலுக்காக London Institute of South Asia (LISA) என்னும் அமைப்பின் 2018ஆம் ஆண்டிற்குரிய சிறந்த நூலுக்கான விருதையும் பெற்றார்.
தலித்துகளின் சமஸ்கிருதமயமாதலைத் தொடர்ந்து சாடி வந்தார். தலித்துகள் வரதட்சணை பெறுவது, பெண் சிறு தெய்வங்களை வணங்காமல் ஆண் பெருங்கடவுள்களை வணங்குவது போன்ற மாற்றங்கள் சமஸ்கிருதமயமாக்கத்தால் விளைந்தவை என்றார். முப்பது ஆண்டுகள் வெளியான தலித் வாய்ஸ் வி.டி. ஆரின் உடல் நலிவால் 2011ஆம் ஆண்டில் நின்றுபோனது. கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தவர் தனது 93ஆவது வயதில் நவம்பர் 20இல் விடைபெற்றார்.
தலித் பத்திரிகைகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் கடந்த அக்டோபர் மாதம் உடுப்பியிலுள்ள மணிபால் பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். அகில இந்திய அளவில் வெவ்வேறு மொழிகளில் தலித் பத்திரிகைகளை நடத்தியவர்களிடம் பேட்டி எடுக்கத் திட்டமிட்டோம். அப்போது உடனே நினைவுக்கு வந்தவர் வி.டி. ராஜ்சேகர். அவருடன் தொடர்பில் இருந்த மங்களூர் பல்கலைக்கழக இதழியல் துறைப் பேராசிரியரான நண்பர் உமேஷ் சந்திராவிடம் வி.டி. ஆரைப் பார்க்கலாமா என்றபோது, அவரின் உடல் நிலை விருந்தினர்களைச் சந்திக்கும் நிலையில் இல்லை என்று அவர் தெரிவித்தார். அடுத்த முறை நீங்கள் வரும்போது அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் உமேஷ் சந்திரா உறுதியளித்தார். ஒரு மாதத்திற்குள் அவரின் இறப்புச் செய்தி வரும் என்று நினைக்கவில்லை. தனது எழுத்தின் மூலம் சாதியவாதிகளைக் கலங்கடித்த வி.டி. ஆரை ஒரு முறை பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.
மின்னஞ்சல்: balumids@gmail.com