ஔவையின் கவித்துவம்
சங்கப் பாடல்களைப் பாடிய பெயர் தெரிந்த புலவர்களின் எண்ணிக்கை 473; இதில் பெண்கள் ஏறக்குறைய 41 பேர். எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு உண்டு. சங்கப் பெண் கவிஞர்கள் குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற ஔவை நடராசன் பெண் கவிஞர்களின் எண்ணிக்கை 41 என்கிறார்; ‘மகடூஉ முன்னிலை’ எழுதிய தாயம்மாள் அறவாணன், 45 என்கிறார். தோராயமாக நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் சங்க இலக்கியத்திற்குப் பங்களித்திருக்கிறார்கள். இவர்களுள் மிக முக்கியமானவர் ஔவையார். சங்க இலக்கியத்தில் இவர் மட்டுமே 59 பாடல்களைப் பாடியுள்ளார். கபிலர் 235 பாடல்களுடன் முதலிடத்தில் உள்ளார். பெண்களில் ஔவைதான் அதிகப் பாடல்களைப் பாடியவர். ஒட்டுமொத்த சங்கப் புலவர்களில் இவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ஐங்குறுநூறு, கலித்தொகையில் பாடல்கள் பாடிய புலவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது கபிலர், பரணருக்கு அடுத்து ஔவையே அதிகமான பாடல்களைப் பாடிய பெருமைக்குரியவராகிறார்.
தமிழறிஞர் தாயம்மாள் அறவாணன் தொடர்ச்சியாக ஔவையார் குறித்து எழுதிவருகிறார். அவராலும் ஔவையார்மீது போர்த்தப்பட்டுள்ள கதை