கொம்பு
ஓவியங்கள்: செல்வம்
கிழவனை இறக்கிவிட்டு டிராக்டர் போய்விட்டது. கடப்பாரை, மண்வெட்டி, சித்தாள்ச்சட்டி எல்லாம் செட்டாகப் புதரோரமாகக் கிடந்தன. கேட் பூட்டியிருக்க, வீடு உள்ளே தள்ளி இருந்தது. எங்கும் சருகு இலைகளின் குவியல். கிழவன் துண்டை எடுத்து உதறியபடி வீட்டைப் பார்த்தான். பழைய வீடென்றாலும் ஒரு திருத்தம் இருந்தது. சுற்றிலும் இடம் விட்டு, மையமாகக் கட்டியிருந்த அளவான வீடு. நல்ல பொறுமைசாலி மனிதர்கள் வசித்திருப்பார்களென கிழவனுக்குத் தோன்றியது. அது எப்படி என்றெல்லாம் கிழவனிடம் கேட்க முடியாது. அது அப்படித்தான். கேட்டைப் பற்றியபடி உள்ளே பார்வையைப் போட்டான் கிழவன். இடதுபுறம் செல்லும் பாதை முடிவில் ஏதோ பறவைக்கூடு இருக்க, வலது பக்கம் பாதை வளையுமிடத்தில் ஒரு கிணறு இருந்தது. கிணற்றுக்குள் இன்னமும் செடிகள் வேர