சி.வை.தா & உ.வே.சா எதிரெதிர் நிறுத்தித்தான் விவாதிக்க வேண்டுமா?
அக்டோபர் 2024 காலச்சுவடு இதழில் ‘சி.வை.தா. – உ.வே.சா.: யாருக்கு யார் வழிகாட்டி?’ என்னும் தலைப்பில் வெளியான என் கட்டுரைக்கு எதிர்வினையாக நவம்பர் இதழில் இரா. இராஜா ‘பதிப்பியல் வழித்தடங்களும் வழிகாட்டிகளும்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். குறிப்பிட்ட துறை சார்ந்து அறிவார்த்தமான உரையாடலை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு இக்கட்டுரை சான்று.
எதிரியாக ஒருவரை முன்னிறுத்திக்கொண்டு கடும்சொற்களால் தனிமனிதத் தாக்குதல் நடத்துவதன் ஊடாகவே விவாதத்தை மேற்கொள்ளும் போக்குத்தான் நம் சூழலில் பொதுவாக நிலவிவந்தது; வருகிறது. மிக எளிதாகக் கருத்திலிருந்து திசை திரும்பிச் சண்டையாக முடிந்துவிடும் தன்மை கொண்டது அது. தன்னகங்காரத்தைத் தூண்டிவிடும் விவாத முறையால் பகை விளையுமே தவிரப் பயன் விளைவதில்லை; தொடர்புடையோர் இருவரும் வாழ்நாள் எதிரியாவார்கள். அப்போக்கில் இணையாமல் பொருள் சார்ந்து உரையாடும் வகையில் கட்டுரை எழுதிய இரா.இராஜாவுக்கு நன்றி.
அவர் தம் கட்டுரை இறுதியில் ‘...இவர் அவருக்கு வழிகாட்டி, அவரும் இவருக்கு வழிகாட்டி எனக் கூறிக் கணக்கை நேர்செய்யப் பார்ப்பது, அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழில் நடந்துவரும் சி.வை.தா. – உ.வே.சா. குறித்த இருதுருவ விவாதச் சூட்டைக் குறையாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுமேயன்றி, முறையான தமிழ்ப் பதிப்பியல் வரலாற்றின் படிமுறை வளர்ச்சியை நோக்கி ஆய்வாளர்களைச் செலுத்தாது’ என்று குறிப்பிடுகிறார்.
இரண்டு பதிப்பாளுமைகள் தொடர்பான விவாதத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய போக்கைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சி.வை.தா.வையும் உ.வே.சா.வையும் ஒப்பிடும் கட்டுரையென்றால் யாராவது ஒருவர் பக்கம் நிலைப்பாடு எடுத்து நின்றுகொண்டுதான் கட்டுரை எழுத வேண்டும் என்னும் பழைய நிலை இப்போது மாறிவருகிறது. குறிப்பாக ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்த ‘உ.வே.சா. கடிதக் கருவூலம், தொகுதி 1’ வெளியான பிறகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உ.வே.சா.வுக்குச் சி.வை.தா. எழுதிய நாற்பத்திரண்டு கடிதங்கள் அக்கருவூலத்தில் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு ‘பதிப்பும் பூசலும்: சி.வை.தாமோதரம் பிள்ளையும் உ.வே. சாமிநாதையரும்’ கட்டுரையை ஆகஸ்டு 2018 காலச்சுவடு இதழில் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதினார். அது நல்ல தொடக்கமாக அமைந்தது.
‘…தமிழ்ப் புலமை உலகில் சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோரின் இடம், பங்கு, பணி ஆகியன தொடர்ந்து கருத்து மோதலுக்கு உரியதாகவே இருந்து வருகின்றன. சாதி (பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்; பார்ப்பனர் - வேளாளர்), சமயம் (இந்து/சைவம் - கிறித்தவம்; ஸ்மார்த்தர் - சைவர்), பிராந்தியம் (ஈழம் - தமிழகம்; யாழ்ப்பாணம் - தமிழகம்) என்ற அச்சுகளில் இந்தக் கருத்து மோதல்கள் சுழன்று வந்திருக்கின்றன’ என்று கருத்து மோதலுக்கான காரணங்களைக் கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிடும் அவர் பல்வேறு கருத்துகளை விவாதித்த பிறகு கட்டுரையை இப்படி முடிக்கிறார்:
‘சி.வை.தா - உ.வே.சா. கடிதப் போக்குவரத்தின் ஒரு பக்கம் மட்டுமே கிடைத்துள்ள நிலையிலும் கிடைத்துள்ள கடிதங்கள் இருவர் உறவின் மீதும் ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சுகின்றன. இவற்றின் பயன் அதோடு நின்றுவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் தமிழ்ப் புலமை உலகின் தன்மைகளையும், பண்டைத் தமிழ் நூல்களின் அச்சேற்றத்தின் அசைவியக்கங்களையும், அதன் விளைவான தனிமனித உராய்வுகளையும் பூசல்களையும் பற்றியும் பல புரிதல்களைத் தருகின்றன. உ.வே.சா. தம் இறுதி நாள்களில் எழுதிய தன்வரலாற்றால் விளைந்த பல சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கவும் வழிகோலியுள்ளன எனலாம்.’
இருவர் சார்ந்தும் சாதி, சமயம், நாடு ஆகிய காரணங்களின் அடிப்படையில் நிலைப்பாடு எடுத்த பழைய போக்கிலிருந்து மாறி அறிவுத்துறை சார்ந்து ஆய்வுசெய்யும்வகையில் சலபதி முன்னெடுத்த முறையியலைப் பின்பற்றியே நானும் எழுதிவருகிறேன். ஆகவே கணக்கை நேர்செய்ய வேண்டிய தேவை ஏதுமில்லை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எரிந்துவரும் தணலைத் தணித்து அடுத்த கட்டத்திற்குப் பதிப்பாய்வை நகர்த்துவதே அடிப்படை நோக்கம்.
உ.வே. சாமிநாதையர் தம் பதிப்புகளில் பயன்படுத்திய நெறிமுறைகள் பலவற்றிற்கு முன்னுதாரணங்களாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புகளிலிருந்து சிலவற்றை இராஜா குறிப்பிட்டுக் காட்டுகிறார். தமக்கு முந்தைய பதிப்புச் சூழல் உ.வே.சா.வை எப்படிப் பாதித்தது, அவற்றிலிருந்து எவற்றைக் கைக்கொண்டார், மேம்படுத்தினார் என்பதைப் பற்றிய தனி ஆய்வுக்கான சான்றுகள் அவை. முந்தைய பதிப்புகளில் இருந்து ‘நற்கூறுகளை எடுத்துக்கொண்டதோடு அவற்றை ‘நல்ல முன்மாதிரியாகக்’ கொண்டிருப்பார் என்பதில் எனக்கும் ஐயமில்லை. மேலும் உ.வே.சா.வின் பதிப்பு நெறிமுறைகளை உருவாக்கியதில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் கற்பித்தல் முறைக்கும் பெரும்பங்கிருக்கிறது என்றுகூட ஒரு கருதுகோள் எனக்குண்டு.
முந்தைய பதிப்பாசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மளவில் செய்தவற்றிலிருந்து எடுத்தும் ஆங்கிலப் பதிப்புகளிலிருந்து அறிந்து கொண்டவற்றைச் சேர்த்தும் மகாவித்துவானின் கற்பித்தல் முறை மூலமாகவும் சுயமாகவும் தாம் உருவாக்கியவற்றைக் கொண்டும் உ.வே.சா. தம் பதிப்புகளைச் செய்தார். அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி ஒரு முறையியலை உருவாக்கினார். உ.வே.சா.வின் பதிப்புகளுக்குப் பிறகுதான் பழந்தமிழ் இலக்கியப் பதிப்பு நெறிமுறைகள் நிலைபெற்றன. அந்நெறிமுறைகளின் தாக்கம் சி.வை.தா.வுக்கு மட்டுமல்ல, அதன் பின் பதிப்பிக்க வந்த எல்லோருக்கும் இருந்துள்ளது.
உ.வே.சா. உருவாக்கிய பதிப்பு நெறிமுறைகளை அப்படியே பின்பற்றியோ சிலவற்றைச் சேர்த்தோ சிலவற்றைத் தவிர்த்தோதான் பிந்தைய பதிப்புகள் உருவாகின. பல பதிப்புகள் அவரது ஆலோசனை பெற்றும் அவரது மேற்பார்வையிலும் வெளியாகின. பதிப்பு நெறிமுறைகளில் உ.வே.சா. கொண்டிருந்த அதீதக் கவனமும் தொடர்பதிப்புகளும் அவரது நெறிமுறைகள் நிலைபெற்றமைக்குக் காரணம். இருபதாம் நூற்றாண்டின் பெரும்பதிப்பாசிரியரான ச.வையாபுரிப் பிள்ளைதான் சுயபார்வையோடு உ.வே.சா.வின் நெறிமுறைகளிலிருந்து விடுபட்டுப் பதிப்புகளை அடுத்த கட்டத்தை நோக்கி நகரச் செய்தவர்.
சீவக சிந்தாமணிப் பதிப்பும் அடுத்தடுத்து அவர் செய்த பதிப்புகளும் தமிழ்ச் சூழலில் பெரும் அசைவை உண்டாக்கின. அவற்றை முன்னுதாரணமாகக் கருதியே அக்காலத் தமிழறிஞர்கள் விதந்து பேசினர். எந்த நூலாக இருந்தாலும் உ.வே.சா. பதிப்புபோல இருக்க வேண்டும் என்னும் எண்ணமும் எதிர்பார்ப்பும் நிலவின. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத்தான் சி.வை.தா.விடம் ‘சீவக சிந்தாமணிப் பதிப்பில் இருப்பது போலச் சூளாமணிக்கும் கதைச் சுருக்கம் வேண்டும்’ என்று ‘இஷ்டர்கள்’ கோரிக்கை வைத்ததைக் காண வேண்டும். சீவக சிந்தாமணிப் பதிப்பின்போது நடந்த கடித உரையாடலும் சீவக சிந்தாமணிப் பதிப்பு வருகையும் உ.வே.சா.வின் ஆளுமையை உணர்த்தியிருக்கின்றன. பதிப்பு தொடர்பான விஷயங்களில் அவரைப் பின்பற்றச் சி.வை.தா. விரும்பியிருக்கிறார்; முயன்றிருக்கிறார்.
சி.வை.தா. முன்னோடிப் பதிப்பாசிரியர்தான். எனினும் சீவக சிந்தாமணிப் பதிப்பு வெளியான பிறகு எழுதிய ஒரு கடிதத்தில் இப்படிக் கேட்கிறார்: ‘கையெழுத்துப் பிரதி அளித்தவர்கட்கு யாது பதிலுபகாரஞ் செய்கிறீர்களென்பதை அறிய விரும்புகின்றேன். தாங்கள் யாது செய்கிறீர்களோ அப்படியே சரவணப்பெருமாளையர் பேரன் குருசாமியையருக்கும் யான் செய்ய வேண்டியது. யான் கொடுத்த ஏட்டுப் பிரதி அவரதாதலின். ஏட்டுப்பிரதி அளித்தவர்களுக்கு அவரவர் பிரதியும் இரண்டு அச்சுப் பிரதியும் கொடுப்பது என் வழக்கம்’ (ப.175)
இதில் மட்டுமல்ல, பலவற்றில் உ.வே.சா.வை வழிகாட்டியாகக் கருதியுள்ளார். கலித்தொகைப் பதிப்புரையில் திருவாவடுதுறை சந்நிதானம் பற்றி எழுதிய பகுதி இருக்கலாமா கூடாதா என்று உ.வே.சா.வின் கருத்தைக் கேட்டிருக்கிறார். ‘தங்கள் கருத்துப்படியே நடக்கிறதென்று தீர்த்துக்கொண்டு தங்களுக்கனுப்பினேன்’ (ப.177) என்றும் சொல்கிறார். புறப்பாட்டியல் பாடல் ஒன்றின் அடிவகுப்பைச் செய்து தருமாறு கேட்டுப் பெற்றுள்ளார். அதன் பாடவேறுபாடு பற்றி விவாதித்துள்ளார்.
‘சூளாமணி’ பதிப்பு பற்றிய உரையாடலின் போது ‘என் பதிப்பிலுந் தங்கள் பதிப்பே சிறப்புற்றதாயிருக்கு மென்பதிலுஞ் சந்தேகமிலது’ (ப.191, 192) என்று கூறுகிறார். தொடர்ந்து பதிப்புகளில் உ.வே.சா. ஈடுபடுவதைப் பற்றித் ‘தளரா முயற்சி சாதிக்கிறீர்களென்றே நம்புகின்றேன்’ (ப.221) என்கிறார். தொல்காப்பியம் நச்சினார்க்கினியம் சொல்லதிகார அச்சுப் பிரதியை உ.வே.சா.வுக்கு அனுப்பும் செய்தியை எழுதும்போது ‘அதில் ஒரு பிரதியைத் தங்களுக்கு இஷ்டமானால் இடையிடையே வெள்ளைத்தாள் வைத்துக் கட்டச் செய்து அனுப்புவேன். அதற்குத் தங்கள் உத்தரவை எதிர்பார்ப்பேன்’ (ப.1892) என்கிறார்.
அவ்வாறு இடைத்தாள் வைத்துக் கட்டடம் செய்யும் பிரதி நூலாசிரியருக்கே வழங்கப்படும். அடுத்த பதிப்பில் திருத்தம் செய்வதற்கான குறிப்புகளை எழுதி வைக்க அத் தாள் உதவும். உ.வே.சா.வுக்கு அப்படி இடைத்தாள் வைத்த பிரதியை அனுப்புவதன் நோக்கம் அவர் எழுதும் குறிப்புகள் தமது அடுத்த பதிப்புக்குப் பயன்படும் என்னும் நோக்கத்தில்தான். ‘அதற்குத் தங்கள் உத்தரவை எதிர்பார்ப்பேன்’ என்று பெரும் அடக்கத்தோடு சொல்கிறார். உ.வே.சா. சம்மதத்துடன் இடைத்தாள் பிரதியை அனுப்பினார் என்பதையும் அதில் அவர் குறிப்புகள் எழுதினார் என்பதையும் அவை பயன்பட்டன என்பதையும் பிந்தைய கடிதம் ஒன்று (470) காட்டுகிறது. யார் எதைப் பதிப்பிப்பது என்னும் பிரச்சினை தொடர்ந்து இருவருக்குள்ளும் நடந்து வந்தது. அதனால் 1894இல் எழுதிய கடிதத்தில் ‘அகநானூறு யான் பரிசோதிக்கலாமா? தங்களுக்கு அதைப் பரிசோதனை செய்யக் கருத்துண்டா?’ (ப.394) என்று கேட்கிறார்.
1898இல் எழுதிய கடிதத்தில் ‘அகநானூறு 107ஆம் செய்யுளைக் குறித்து மறந்துவிட்டாற் போல் இருக்கிறது. தயைசெய்து முதலிரண்டடியின் பாடத்தைத் தங்கள் அபிப்பிராயப்படி எழுதியனுப்பவும்’ (ப.454) என்று நினைவூட்டுகிறார். அக்கடிதத்திலேயே இறையனார் அகப்பொருள் தொடர்பான பாடல் ஒன்றின் பாடம் தொடர்பாகவும் வினவுகிறார். இன்னொரு கடிதத்தில் ஒரு சந்தேகத்தை எழுதிவிட்டு ‘…என்று எடுத்து ஆண்டதாகவே பாடங்கொள்ளல் சிறப்பா என்பதைச் சற்றே ஆலோசித்து எழுதுக’ (ப.465) என்கிறார். இன்னும் சில சான்றுகளையும் காட்ட முடியும். இவையெல்லாம் உ.வே.சா.வை வழிகாட்டியாகச் சி.வை.தா. கொண்டதற்கான சான்றுகளே.
பதிப்புக்கு விரிவான முன்னுரை எழுதும் முறையைத் தொடங்கி வைத்தவர் சி.வை.தா.தான் என்னும் எண்ணத்தில் எனக்கு மாற்றமில்லை. இராஜா சுட்டிக் காட்டும் சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகத்திற்கு அதன் வெளியீட்டுப் பின்னணி பற்றிப் பவர் சிறிய முன்னுரை ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து அறிமுகம் என்னும் தலைப்பிலான பகுதி சற்றே விரிவானது. நூல், நூலாசிரியர், உரையாசிரியர், இலம்பகங்கள் பற்றிய அப்பகுதியும் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதியதுதான். மூன்றாவதாகிய ‘ஜைநசமய சித்தாந்தம்’ என்பதன் தொடக்கப் பகுதியை இரண்டு கலமாகப் பிரித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அதன் பின்பகுதியில் மேற்கோள் பாடல்கள் தவிர முழுவதும் ஆங்கிலம்.
பவர் எழுதியுள்ள இப்பகுதிகள் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமானவையே. எனினும் தமிழ் நூல் ஒன்றுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதும் இவ்வழக்கம் பின்னர் பல்லாண்டுகள்வரை தமிழர் பலருக்கும் இருந்தது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே சி.வை.தா. தம் முன்னுரையை முழுவதுமாகத் தமிழில் எழுதினார். மேலும் பவர் பாடநூல் தேவைக்கான வகையில் தம் முன்னுரையை எழுதியிருக்கிறார். சி.வை.தா.வின் முன்னுரை பழந்தமிழ் நூலுக்கான பதிப்புரை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேறுபாடு விளங்கும். சி.வை.தா.வுக்கு முன் சில பதிப்புகளுக்குச் சிலர் எழுதியவை முயற்சி என்னுமளவில் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும். ஆகவே இன்னும் வலுவான சான்று கிடைக்கும்வரையில் தமிழில் எழுதிய வகையிலும் பதிப்புரை என்னும் தன்மையிலும் சி.வை.தா.வே முன்னோடி.
உரைப்பாயிரம் பற்றிய என் கருத்தில் ‘குறுந்தொகை, நானூறு பாடல்கள் கொண்ட நூல் என்பது உ.வே.சா.வுக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று எழுதியிருந்தேன். சீவக சிந்தாமணி, என் சரித்திரம் ஆகியவற்றைக் குறுக்கீட்டுச் சான்றுகளாகக் காணாமல் விட்டதால் நேர்ந்த என் தவறு அது. குறுக்கீட்டுச் சான்றுகளைக் கொண்டு விளக்கிய இராஜாவுக்கு நன்றி. அதையொட்டியும் எனக்கு இன்னொரு ஐயம் எழுகிறது. இருவருக்குமான கடித உரையாடலுக்குப் பிறகும் ‘குறுந்தொகை இருபது’ என்று ஒரு நூல் இருக்கலாம் என்று உ.வே.சா. கருதியிருக்கக் கூடுமோ? நச்சினார்க்கினியர் பற்றிய அறிமுகத்தில் குறுந்தொகை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்பதற்கான காரணம் அந்த ஐயமாக இருக்கலாம்.
‘பேராசிரியர்’ பற்றிய செய்திகளை இராஜா எடுத்துக் காட்டியிருப்பதும் நன்று. தம் பிந்தைய பதிப்புகளிலும் ‘பேராசான்’ என்றே உ.வே.சா. பாடம் கொண்டிருக்கிறார்; மாற்றவில்லை. ஆகவே என் ஊகப்படி யாப்பு அடிப்படையில் அதை அவர் பாடமாகக் கருதியிருப்பார் என்றே நினைக்கிறேன். சி.வை.தா. – உ.வே.சா. தொடர்பிலும் பதிப்பியல் வரலாறு குறித்தும் மேலும் சிந்திக்க இத்தகைய உரையாடல் உதவும் என்று நம்புகிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்பு வரலாறு தொடர்பாக இரா.இராஜா தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
பயன்பட்ட நூல்கள்
ஆ.இரா. வேங்கடாசலபதி (ப.ஆ.), உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி 1 (1877 – 1900), 2018, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
ஆ.இரா. வேங்கடாசலபதி, பதிப்பும் பூசலும் : சி.வை. தாமோதரம் பிள்ளையும் உ.வே. சாமிநாதையரும் (கட்டுரை), ஆகஸ்டு 2018, காலச்சுவடு இதழ், நாகர்கோவில்.
மின்னஞ்சல்: murugutcd@gmail.com