அயலாரையும் அரவணைக்கும் அரசியல்
பீகாரில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்தின் அடிப்படையில் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். நீக்கத்திற்கான காரணங்களாகத் தொழிலாளர்களிள் நிரந்தரமான இடப்பெயர்ச்சி, மரணமடைந்தவர்கள் குறித்த தகவல்களை முறையாகப் பேணாதது, வெளிநாட்டுச் சட்டவிரோதக் குடியேறிகளின் பெயர்கள் சேர்க்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களாலும், துல்லியமானதும் பிழையற்றதுமான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கத் இந்தத் திருத்தம் அவசியம் எனவும் விளக்கமளித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இதையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசு தேர்தல் ஆணையத்தோடு கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு ‘வாக்குத் திருட்’டின் மூலம் ஜனநாயகத்தை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்வதாகக் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பின்னணியில், பீகாரில் நீக்கப்பட்ட புலம்பெயர் வாக்காளர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிப்பதற்கான முயற்சி இதுவெனத் தமிழக அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.
பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம், ஜார்கண்ட், வட கிழக்கு மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தொழிலாளர்களின் வருகை 2000களின் தொடக்கத்திலிருந்து படிப்படியாக அதிகரித்து, 2010க்குப் பிறகு மிக வேகமாக உயர்ந்தது. கட்டுமானப் பணிகள், ஆடைத் தொழில், உற்பத்தித் துறைகள், உணவகங்கள் போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பு கணிசமானது. தமிழகத்தில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையால் குறைந்த ஊதியத்திலும் அதிக நேர உடலுழைப்புக்கும் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். அதையொட்டியே தொழிலாளர்கள் பலரும் தமிழகத்திற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்த வட மாநிலத்தவர் குறித்த உறுதியான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும் தொழிலாளர் நலத்துறை 2023இல் வெளியிட்ட அறிக்கையில் அதிகமான இடப்பெயர்வு நடந்த மாநிலமாக மகாராஷ்டிரத்தையும் இரண்டாவதாக ஆந்திரத்தையும் மூன்றாவதாகத் தமிழகத்தையும் குறிப்பிடுகிறது (79,01,819 - 37,37,316 - 34,87,974: 2011ஆம் ஆண்டுவரை). இந்த எண்ணிக்கை குறித்துதான் தற்போது வெகுமக்களின் மனதில் அச்சம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த அச்சத்தில் ஏதேனும் அர்த்தம் உண்டா என்பதே நம்முன் உள்ள கேள்வி.
இந்தியக் குடிமக்கள் இந்திய நிலப்பகுதிக்குள் எங்கும் குடியேறலாம். தமது வாழ்வு, பொருளாதாரம், சமூக இருப்பு ஆகியவற்றை அங்கேயே உறுதிசெய்துகொள்ளலாம். கூடவே தாம் நிரந்தரமாகத் தங்கிவிட்ட பகுதியில் வாக்குரிமை கோரலாம். இது இந்திய அடிப்படை ஜனநாயக நடைமுறை. ஆனால் வட மாநிலத் தொழிலாளர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படுகிறார்கள் என்பதே தமிழகத்தில் நிலவும் அச்சம். ஆனால் இந்தத் திட்டமிடலை மேற்கொள்வது தமிழக முதலாளிகள். இவர்களுக்கு ஆவன செய்வது தமிழக அரசு. இதற்குக் காரணம் தமிழகத்தின் அன்றாடச் செயல்பாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இவர்களுடைய இன்றியமையாத தேவை உள்ளது. இதில் சதித்திட்டங்களுக்கு எந்த இடமும் இல்லை. இக்குடியேற்றம் தமிழ்நாட்டின் அரசியல் நிலைத் தன்மையைப் பாதிக்கலாம் என்றும், மாநிலத்தின் அரசியல், பண்பாட்டுச் சமூகச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஒரு சிலர் எச்சரிப்பது அவசியமானதாகத் தோன்றினாலும் நியாயமற்றது. ஏனெனில் வட மாநிலத்தவர் அனைவரும் குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்குச் செலுத்துவார்கள் என்பது வட மாநிலத்தவர் பற்றிய தமிழ்நாட்டவரின் பொதுப்புத்தியில் ஊறிய மேலோட்டமான பார்வைதானே தவிர யதார்த்தம் அல்ல. முந்தைய வட மாநிலத் தேர்தல்களைப் பொருத்தமட்டில் பாஜக போட்டியிட்டு ஓட்டுகளைப் பெற்றுத் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் அந்த வெற்றிகள் இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. அதற்குக் காரணம் வட மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் எதிர்க் கட்சிகளும் கடுமையாகப் போட்டியிட்டு வாக்குகளைப் பெற்றதுதான். எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆதரவு வாக்குகளைப் போலவே எதிர்ப்பு வாக்குகளும் கணிசமாக இருக்கின்றன. எனவே எந்த ஒரு மாநிலத்தவரும் இந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்கள் என்று சொல்வது யதார்த்தத்துக்குப் புறம்பான பார்வை அல்லது பீதிவயப்பட்ட அச்சுறுத்தல் என்றுதான் சொல்ல வேண்டும்.
வாக்குரிமை வழங்கப்படுவதன் மூலம் அரசியலைத் தீர்மானிக்கும் ஒரு குழுவினராகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாறுவார்கள், அவர்கள் தங்கள் வாக்குகளை ஒரே குழுவாக, தங்கள் இன அல்லது பண்பாட்டுப் பின்னணியின் அடிப்படையில் பயன்படுத்தும்போது சமூகத்தில் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், புதிய பண்பாட்டு முரண்பாடுகளுக்கும் வழிவகுக்கும், இதன் மூலம் வன்முறைகள், மோதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு, இந்தச் சாத்தியங்கள் அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்றெல்லாம் குற்றச்சாட்டுகளைச் சிலர் அடுக்குகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களில் இனவாதக் கண்ணோட்டம் அப்பட்டமாகவே தெரிகிறது. சமகாலத்து வெறுப்பு அரசியல் போக்கின் மற்றொரு வடிவமென்றும் இதைக் கருதலாம். இஸ்லாமியர்கள் இன்னும் சில பதிற்றாண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய மதமாகப் பெருகி இந்துக்களைச் சிறுபான்மையாக்கிவிடுவார்கள் என்பது இஸ்லாமியச் சமூகத்தைக் குறித்து முன்னெடுக்கப்படும் ஒரு விஷமப் பிரச்சாரம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாக்குரிமையையொட்டி முன்வைக்கப்படும் வாதங்களும் அதோடு ஒப்பிடக்கூடிய பிரச்சாரம்தான்.
பெரும்பான்மைச் சமூகம் அரசியல் அதிகாரமற்ற சிறுபான்மையினர்மீது அச்சத்தை வெளிப்படுத்துவது செயற்கையான எதிரியைக் கட்டமைத்து அரசியல் ஆதரவைத் திரட்டுவதற்கான பெரும்பான்மைவாதப் போக்கு. மற்றமைமீது வெறுப்பைக் கட்டமைத்து அதிகாரம் பெற விழையும் அரசியலின் ஒரு கண்ணி. இது சக மனிதர்கள் மீதான காழ்ப்புக்கும் வன்முறைக்கும் இடமளிக்கக்கூடியது.
புறவாசல் வழியாக அரசியல் முன்னெடுப்புகளை ஜனநாயகத்தின் பெயரால் செயல்படுத்திவரும் அரசாக பாஜக அரசு இருந்துகொண்டிருக்கும் நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாநிலங்களில் வாக்களிக்கும் உரிமை எனும் திட்டம் அரசியல் காய்நகர்த்தல்களோடும் தேர்தல் கணக்குகளோடும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. திட்டமிட்டுச் செய்யப்படும் இந்தக் குடியேற்றம் தமிழக அரசியலில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற புகார்களும் முன்வைக்கப்படுகின்றன. இவையும் உள்ளீடற்ற வாதங்கள். வட மாநிலத் தொழிலாளிகள் மட்டுமே வாழ்க்கைப் பொருளாதாரத்திற்காகப் புலம்பெயர்வதில்லை. இந்தியா முழுவதும் பொருளாதாரக் காரணங்களுக்காகத் தமிழர்கள் உள்ளிட்ட பல மாநிலத்தவர்களும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உரிமைகள் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. தாங்கள் புலம்பெயரும் நிலங்களில் தமிழர்களும் அனுபவித்துவரும் உரிமைகள், கிடைக்காதபட்சத்தில் கோரிவரும் உரிமைகள் இவை. எனவே இந்த உரிமைகளுக்கு எதிரான குரலில் இனவாதமே அதிகம் எதிரொலிக்கிறது. உழைக்கும் மக்களை பான்பராக் வாயன்கள் என்று இழித்துரைக்கும் வெறுப்பரசியலின் இன்னொரு முகம் இது.
புலம்பெயர்ந்தோருக்கு வாக்குரிமை என்பதை ஆரோக்கியமான ஜனநாயகச் செயல்முறையாகவே கருத வேண்டும். ஏனெனில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவற்றில் பின்தங்கிய நிலையிலுள்ள வட மாநிலத் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்த இந்தச் செயல்முறை பயன்படும். குறைந்த ஊதியம், உழைப்புச் சுரண்டல் தொடர்பிலும் கவனம் ஏற்படும். பண்பாட்டுரீதியில் பல்லினச் சமூக வாழ்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும். இவையெல்லாம் முற்போக்கான அரசியல் நடவடிக்கைகள். வரவேற்கப்பட வேண்டியவை. வேற்றுமையில் ஒற்றுமை கேள்விக்குள்ளாக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் பிற மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்குவதென்பது தமிழ்நாட்டை ஜனநாயகப் பண்புள்ள முன்னோடி மாநிலமாக முன்னிருத்தும். இங்கு ஏற்கெனவே வசித்து ஓட்டுரிமை பெற்றிருக்கும் பிற மொழி, இன மக்களோடு பல மொழிகளில் பிரச்சாரம் செய்வதும் அவர்தம் பிரதிநிதிகளைத் தமது கட்சிகளில் சேர்த்து ஓட்டுச் சேகரிப்பதும் தமிழகக் கட்சிகளுக்குக் கைவந்த கலை. அப்பணி மேலும் பரவலாகி வட இந்தியத் தொழிலாளர்களையும் உள்ளடக்கி விரிவு பெறும் என்பதில் ஐயமில்லை.
வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும் பட்சத்தில் அவர்களின் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கண்காணிக்கவும் கட்டுக்குள் வைத்திருப்பதற்குமான கட்டமைப்பு உருவாகும். அதன் மூலமாக நேர்த்தியான சமூகத் தொகுதியாக அவர்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்கு ஏற்படுத்தப்படும். அவர்கள் மீதான பொதுப்புத்திக் கற்பிதங்களை (திருடர்கள், கொள்ளையர்கள், அசுத்தமானவர்கள்) மாற்றுவதற்கான முன்னெடுப்பாகவும் இது அமையும். இந்த நடைமுறை பாதுகாப்பான சமூக வாழ்வுக்குத் தளம் அமைப்பதாக மாறக்கூடும்.
வாக்குரிமைப் பிரச்சினையில் இனவாதப் பார்வையையும் யதார்த்தத்திற்குத் தொடர்பில்லாத பீதிகளையும் கைவிட்டுத் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தம் உழைப்பால் வலுச்சேர்க்கும் வட மாநிலத் தொழிலாளர்களையும் இணைத்துத் தமிழக மக்களின் சமூக வாழ்வையும் அரசியலையும் மேம்படுத்த வேண்டும். இந்தியா பல்லின மக்களின் நிலம் என்பதை வெறுமே பாஜகவுக்கு எதிரான அரசியல் கோஷமாகப் பயன்படுத்துவதை விடுத்து, அதை அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. அதுவே பாஜக போன்ற ஒற்றை மைய அதிகார நாட்டம் கொண்ட கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கான வழிமுறையாகவும் அமையும். இந்தியா எனும் பல்லின மக்களையும் ஒன்றிணைத்துப் பல பண்பாடுகளை ஏற்றும் அங்கீகரித்தும் பக்கச்சார்புகளை மறுத்தும் முன்செல்லக்கூடிய அரசியல் நிகழ்ச்சிநிரலே இன்றைக்கு பாஜகவுக்கு எதிராக முன்னிருத்த வேண்டிய ஜனநாயக ஆயுதம். அதை உணர்ந்து எதிர்க்கட்சிகள், மாநிலக் கட்சிகள் அயலாரையும் சேர்த்து அரசியல் பழக வேண்டியது காலக் கடமை.