கடிதங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த கலைஞர் இந்திரா காந்தி அறிவித்த 20 அம்சத் திட்டத்தை வரவேற்றுப் பேசியபோது அவர் தெரிவித்த குறிப்பிடத்தக்க செய்தி ஒன்றை ராகவ ராஜ் பார்வைக்கு (அது ஓர் இருண்ட காலம்) முன்வைக்க விரும்புகிறேன்.
“நான் பல மாதங்களுக்கு முன் தொழில்துறையில் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்களிக்கும் சட்டத்தைக் கொண்டுவருமாறு பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இதுகுறித்து அவர் எனக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் அறிவித்துள்ள 20 அம்சத் திட்டத்தில் எனது கோரிக்கை இடம்பெற்றுள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவர் எழுதி அனுப்பிய கதையை ஒரு பத்திரிகையாளர் தனது பெயரில் வெளியிடும் திருட்டுத்தனத்தைப் போன்றதாகும்” என்றார்.
அன்றைய இந்திய சட்டப் பேரவைகளில் இதுபோன்று எந்த ஒரு மாநில முதல்வரும் பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தி. அன்பழகன்
திருச்சி
இந்த மாத கல்வி பற்றிய பத்தியில் தற்போதைய அரசு பள்ளி, கல்லூரிகள், விடுதிகள் மாணவர் கழிவறைகள்பற்றிய நிலையை உள்ளது உள்ளபடி பதிவுசெய்கிறது. உளப்பூர்வமாகப் பாராட்டி மகிழ்கிறோம். மிகவும் பொருத்தமான தலைப்பு ‘தூய்மைக் கலை’. நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்.
தமிழ்நாட்டில், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக ஜிதேந்திர நாத் ஸ்வைன் என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். அப்போது அவர் எப்போது எந்தக் கல்லூரியைப் பார்வையிடச் சென்றாலும் மாணவர் கழிவறையைப் பார்வையிடுவது வழக்கம். அதேபோல. நல்ல, பொறுப்புள்ள, உண்மையான, நியாயமான NBA, NAACதேசிய உயர்கல்வித் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் பேராசிரியர்கள், ISO 9000 தரச் சான்று நிபுணர்கள் வரும்போது மாணவர்கள் கழிவறையை நிச்சயம் பார்வையிட்டுக் குறிப்புகள் எழுதுவது இன்றும் உள்ளது. பிஏசி ராமசாமி ராஜா பாலிடெக்னிக் ஸ்ரீ வில்லிபுத்தூர் (அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம்) மாணவர்கள் கழிவறைகள் நிர்வாகம், ஆசிரியர்கள் 7 ஆண்டுகாலத் தொடர் முயற்சியின் காரணமாக, சுகாதாரத்துடன் விளங்குவதை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இதேபோல, ஆங்காங்கே சில அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள் முயற்சியால் கழிவறைகள் மட்டும் அல்ல, முழுக் கல்வி வளாகமே சுத்தமாக இருப்பதைத் நாம் அனைவரும் காண முடியும்.திருப்பராய்த்துறை தபோவனக் கல்வி நிலையங்கள் கழிவறைகள், சமையல் அறைகளின் சுத்தம் சுயம்பிரகாசமாக இருக்கும்.
ஏன், எப்படி? தலைமைச் சாமியார் அந்தப் பணியில் அவ்வப்போது ஈடுபடுவார். தலைமை சரியாக இருந்தால் மட்டுமே, கழிவறைகள் சுத்தமாக இருக்கும்.
இரா. சி. தனசேகர்
மின்னஞ்சல்
ஜெ. கிருத்திகாவின் கட்டுரை சிறப்பாக இருந்தது. நெருக்கடி / அவசர நிலைபற்றிய ஆத்மநாம் கவிதையும் அ. சவுந்தரராஜன், ராகவ ராஜ், வண்ணநிலவன் ஆகியோரின் கட்டுரைகள் மிகவும் சிறப்பாகவும் ஐம்பதாண்டுக்கு முன்னர் பால்ய வயதில் அறிந்தவற்றைத் தற்போது முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவியது.
சிங்கை ந. மனோகரன்
கோவை
•••
ஆகஸ்ட் இதழின் அட்டைப்படம், 1975 அக்டோபர் 2ஆம் நாளுக்கும், நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜுன் 25 ஆம் நாளுக்குமான இடைப்பட்ட காலத்தில், இந்தியாவிற்கு இரண்டு பிரதமர்களை உருவாக்கிக் கொடுத்த தலைவனின் மனச்சஞ்சலங்களை நோக்கி எனது கவனத்தைத் திருப்பியது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையையும், மோடி அரசில் கடந்த 11 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையையும், பாரபட்சமின்றி எடுத்துக் கூறியுள்ள தலையங்கத்துக்குப் பாராட்டுகள்.
காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன தவறுகள் நடந்தன என்பதையும், அன்று அதை எதிர்த்த பாஜகவின் ஆட்சியே இன்று மிகப் பகிரங்கமாகச் செயல்படுத்துவதையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது தலையங்கம். ‘குருவை மிஞ்சிய சிஷ்யர்’ என்று இந்திராவையும் மோடியையும் ஒப்பிட்டது மிகச் சரியே.
கடந்தகாலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை, ‘மக்களைப் பயத்துடன் இருங்கள்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தது. மோடி அரசின் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையோ, அப்படிப்பட்ட அறிவிப்பு இல்லாமலே மக்களைப் ‘பயத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்பதே உண்மை.
அ. சவுந்தரராஜனின் கட்டுரையில் ஆசிரியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில்தான் சேர்ந்ததையும், தொழிற்சங்கப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதையும் விவரித்துள்ளார். 1970 முதல் நடந்த தொழிற்சங்கப் போராட்டங்கள் குறித்தும், 1975இல், போக்குவரத்துத் துறையில் நடந்த வேலைநிறுத்தம், அதன் விளைவாகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் விவரித்தவர், தலைவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று கூறிவிட்டு, அவசரநிலையின்போது இதேபோன்ற ஆள் தூக்கிச் சட்டத்தைத்தான் காங்கிரஸ் ஆட்சி ஏவியது என்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ‘ஆள் தூக்கிச் சட்ட’த்தைப் பயன்படுத்தியது கருணாநிதியின் திமுக அரசு என்பதை, இன்றைய மா. கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி காரணமாகத் தவிர்த்துவிட்டார் என்று தோன்றுகிறது. ஆனால், வரலாற்றுச் சம்பவங்களைக் கூறும்போது, நடந்தவற்றை ஒளிவுமறைவின்றிச் சொல்வதே வரலாற்றிற்கு நாம் செலுத்தும் மரியாதை.
ராகவ ராஜின் கட்டுரை, நேருவின் மறைவுக்குப் பிறகு இந்திய அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. இன்றைய முதல்வர் ஸ்டாலின் ‘மிசாவில் கைது’ என்று ஆதரவாளர்களும், ‘மிசாவில் அல்ல’ என்று எதிர்ப்பாளர்களும் களமாடிவருகையில், கட்டுரையாளர் ‘ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை. சாதாரண சட்டத்தில்தான் கைது செய்யப்பட்டார்’ என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அப்போதே கட்டுரையாளர் கூறியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது என்பதை அறிவேன். இவரது கட்டுரையில் இரு தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. (ஒருவேளை அவை அச்சுப் பிழைகளாகவும் இருக்கலாம்.)
1) இந்திரா காந்தி, 1977 ஜனவரி மாதத்தில் நெருக்கடி நிலையைத் தளர்த்தி, மார்ச் மாதத்தில் தேர்தல் நடக்கும் என்றார். (கட்டுரையாளர் மே மாதம் என்று கூறியுள்ளார்.) 2) முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து ஜனதா என்ற கட்சியைத் தொடங்கி ராட்டை சின்னத்தில் போட்டியிட்டார்கள் என்று கூறுவது தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும். மற்ற மாநிலங்களில், எதிர்க்கட்சிகள் சரண்சிங்கின் பாரதிய கிஸான் தளம் கட்சியின் சின்னமான ‘ஏர் உழவன்’ சின்னத்தில் போட்டியிட்டனர். ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய கிஸான் தளம், ஜன சங்கம், சுதந்திராக் கட்சி, சோசலிஸ்டு கட்சிகள், ஜெகஜீவன் ராமின் ஜனநாயகக் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து, 1977 மே முதல் நாளில்தான் ‘ஜனதாக் கட்சி’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர். ஜனதாக் கட்சியின் தலைவராக ‘இளந்துருக்கியர்’ சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3) 1977, பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் மார்ச் 21 அன்று எண்ணப்பட்டு, பெரும்பாலான முடிவுகள் அன்று இரவுக்குள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்திரா போட்டியிட்ட ரேபரேலி தொகுதி முடிவும் 21ஆம் நாள் நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது. மறுநாள் இந்திரா தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார். 22ஆம் நாள் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. மொரார்ஜி தேசாய், மார்ச் 24 அன்று பிரதமராகப் பொறுப்பேற்றார். (கட்டுரையாளர் தேசாய் பதவி ஏற்றது மார்ச் 24 என்று கூறிவிட்டு, இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதி முடிவு அறிவிக்கப்பட்டதும் மார்ச் 24 நள்ளிரவு என்று கூறியுள்ளார்.)
தேசாயின் அமைச்சரவையில் சரண்சிங்கும். ஜெகஜுவன் ராமும் துணைப் பிரதமர்களாக இருந்தனர். ஜெகஜீவன் ராம் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
இவர், கருணாநிதியின் நெருக்கடி நிலை எதிர்ப்புபற்றிக் கூறியதும் உண்மையே.
சீ. இளங்கோவன்
சேலம்
ஆகஸ்ட் இதழில் பக்.14இல் வெளியான புகைப்படத்தில் “இந்திரா காந்தியுடன் ஆர்.டி. பரூவா” என்று அச்சாகியுள்ளது. அவர் தேவகாந்த் பரூவா; டி.கே. பரூவா எனவும் அழைக்கப்பட்டவர். தவறுக்கு வருந்துகிறோம்.
- பொறுப்பாசிரியர்